Quantcast
Channel: அனுபவம் –எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 311 articles
Browse latest View live

ஜிப்மர்தினங்கள் -கடலூர் சீனு

$
0
0

செய்க தவம், அன்பிற்சிறந்த தவமில்லை.

-சுப்ரமண்ய பாரதி-

இனிய ஜெயம்,

தங்கைக்கு எடை மிக குறைவாக இருக்கிறது. எடை கூட்டும் முயற்சிகள், மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விரைவில் அவளுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும். காலை டாக்டர் ”நீங்கதான் உங்க தங்கச்சிக்கு கான்பிடன்ட் அப்டின்னு பாத்தாலே தெரியுது. கொஞ்சம் கூடவே இருங்க” என்றுவிட்டு சென்றார். வேறு எங்கே போகப் போகிறேன்? அவள் வலியில் கொஞ்சத்த வாங்கிக்கங்க என்று சொன்னால்தான் சிக்கல். அம்மா தங்கைக்கு துணையாக உடன் இருக்கிறார்கள். அம்மா யாருக்கும் கிடைக்காத என் அபூர்வ அம்மா. இந்த ஜிப்மர் தினங்களில் என் அம்மா இன்னும் அணுக்கமாகத் தெரிகிறார்கள். நேற்று அம்மா வீட்டில் இருக்கும் தங்கை குழந்தைகளுக்கு [மகள் ஐந்தாவது, மகன் இரண்டாவது படிக்கிறார்கள்] கடிதம் எழுதித் தந்தார்கள். பதிலுக்கு குழந்தைகள் அம்மாவுக்கு கடிதம் எழுதித் தந்தார்கள். அந்தக் கடிதம் இப்படி முடிகிறது. பாட்டிக்கு உம்மா உம்மா உம்மா. எழுத்து முத்தத்தின், அன்பின் ஈரம் சுமந்த கடிதம். ஜிப்மரில் அம்மா எப்போதும்போல தனது அன்பு ராஜாங்கத்தை ஸ்தாபித்து விட்டார்.

தங்கை வார்டில் வசிக்கும் அத்தனை நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் இப்போது அம்மாவின் நண்பர்கள். நர்சுகள் டாக்டர்கள் என அனைவருக்கும் அம்மாவின் மீது தனி கரிசனம். காரணம் நர்சுகளுக்கு துணையாக நோயாளிகளை பராமரிப்பது, பணியாளர்களுக்கு துணையாக அவர்கள் பணிகளை பகிர்ந்துகொள்வது என அம்மா அவர்களின் இயல்பால் அங்குள்ளோருக்கு நெருக்கமாக ஆகி விட்டார்கள்.பாண்டேஜ் துணிகள் வெட்டுவது, குப்பைக் கூடைக்கான பாலித்தின் பைகளை மடிப்பது, வலியில் முனகும் குழந்தயை உறங்கவைப்பது, அதன் அம்மாவுக்கு ஆறுதல் சொல்வது, ஏதேனும் முதியவருக்கு மருந்தளிப்பது என நான் பார்க்கும்போதெல்லாம் அம்மா எதோ ஒரு பணியை செய்துகொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் இந்தியாவின் பெரும்பான்மை நோயாளிகள் வந்து கூடும் இடம். எத்தனை பணியாளர்கள் இருந்தாலும் போதாது.

தினமும் எதோ ஒரு மக்கள் வரிசையில், எதோ ஒரு பரிசோதனை அறிக்கையை வாங்கவோ, அப்பாயின்மென்ட் வாங்கவோ, விண்ணப்பத்தை அனுப்பவோ மணிக்கணக்காக நிற்கிறேன். நின்றுகொண்டே வாசிக்கிறேன். பொதுவாக இருளை நோக்கி நிற்கையில் சுந்தர ராமசாமி வசீகரமாக இருக்கிறார். சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய உள் கட்டமைப்பில் மிக முக்கிய சாதனை இந்த ஜிப்மர். இத்தனை கடன் உள்ள ஒரு தேசம், இத்தனை ஊழல் மிகுந்த தேசம், இத்தனை கருப்புப்பணம் பதுக்கப்படும்,புழங்கும் தேசம்,இத்தனை ஏழைகள் உள்ள தேசம் இதில் கிடைக்கும் வரியில் இதனை பெரிய அரசு நிர்வாகம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறது, அதுவும் மிக மிக வெற்றிகரமாக என்பது எந்த தேசத்துடன் ஓப்பு நோக்கினாலும் இணையற்ற செயல்.

ஜிப்மர் அமைய வேண்டிய இடத்தை அரவிந்த அன்னைதான் குறிப்பிட்டுத் தந்தார் என சிவாத்மா சொன்னார். இந்தியாவில் மொழிகளும், கலாச்சாரமும் மட்டும்தான் வேறு. நோயும் வலியும் நம் பண்பாடு போல , இந்தியாவின் மொத்த மொழிகளையும் சில தினங்களில் ஜிப்மரில் கேட்டுவிட முடியும். [சில தினங்கள் முன்பு வார்டில் அம்மா, சும்மா விளையாட்டுக்கு ஒரு குழந்தையை ஏமி காவலா? என்று கொஞ்சினார்கள். புதிதாக வந்திருக்கும் ஹைதிராபாத் டாக்டர் நூவு தெலுகா என்றபடி ஆவலுடன் ஓடி வந்தார்]. நோயில் இணையும் குட்டி இந்தியா. பா மா கா அரசியல் மீது பூ தூவுவது போல இருந்தாலும், இதை சொல்லாமல் இருக்க முடியாது இன்று ஜிப்மரில் இருக்கும் பல வசதிகள் ,புற்றுநோய் சிகிச்சைக்கான தனி கட்டிடம் உட்பட பலவற்றை , அன்புமணி அவர்கள் பதவியில் இரும்போது தனது தனி ஈடுபாடு வழியே கொண்டுவந்தார்.

தினமும் புதிய புதிய மனிதர்கள், புதிய புதிய முகங்கள், புதிய புதிய நோய்கள். மனிதர்கள் கூட, காத்திருக்க, கழிப்பறை வசதி கொண்ட ஒரு பெரிய திடல். திடல் முழுக்க, உணவுக் குப்பைகளும், துப்பிய எச்சிலும், அதன்மீதே அட்டை விரித்து அமர்ந்து, படுத்து, குழந்தைகள் தவழ்ந்து…. இத்தனைக்கும் திடலை சுற்றி எண்ணிப் பார்த்தேன் பிரும்மாண்டமான ஆறு குப்பைத் தொட்டிகள். இந்தியர்களுக்கு, எங்கே ருசியுள்ள ,காசு குறைவான உணவு கிடைக்கும் என்று தெரிகிறது, கீழே விழுந்த உணவை நாய் மட்டுமே தின்னும், நாம் தின்னக்கூடாது என்று தெரிகிறது, ஆனால் உண்ட மிச்சிலை எழுந்துசென்று குப்பைத் தொட்டியில் போடத் தெரியாது . இது அறியாமை அல்ல. நாய்க்கும் லபிக்காத தடித்தனம். இந்த வார விகடனில் சென்னை கொடுங்கையூர் பகுதியில் மலை போல் குவிந்த குப்பைகளால் பாதிக்கப்பட்டு கதறும் ஏழை மக்கள் குறித்து அறம் பொங்கும் கட்டுரை ஒன்று வந்துள்ளது. இன்று சொல்கிறேன் இந்த தடித்தனம் நம்முள் உறைந்திருக்கும் வரை, குப்பைகளால் வரும் நோயில் நாம் சாவது சாலவும் சரியே. முந்தா நாள் எவனோ கழிப்பறை கோப்பையில் சாராய போத்தலை உடைத்து குமித்து வைத்திருந்தான். நேற்று ஒருவன் தனது உள்ளாடையை கோப்பைக்குள் செருகி வைத்து மொத்த கழிவும் வெளியேறா வண்ணம் கழிப்பிடத்தை முடக்கினான். இத்தனைக்கும் மேல் மருத்துவம் வேண்டி காத்திருக்கும் மக்கள்.

உறுப்பிலிருந்து நீளும் குழாயின் முனையில் தொங்கும் தனது மூத்திரப் பையை இடதுகையில் பற்றியபடி வலது கையில் உணவு உண்ணும் முதியவர், வயிற்றில் நேரடியாக துளை போட்டு உணவுகள் கரைக்கப்பட்டு இறங்கும்
தொண்டை நோயாளி, வேதனை முனகல்கள் வேதனையின் உச்சத்திலும், உவகையின் உச்சத்திலும் உடல் ஒரே விதமாகத்தான் முனகுகிறது. நேற்று காலை ஒருவரை பார்த்தேன். தனது மகளை அழைத்து வந்திருந்தார். இருபது வயது இருக்கும். இடது கண், கை, கால் யாவும் ஊனம், மூளை வளர்ச்சி குறைவு. ஆகவே அத்தகையோருக்கு இருக்கும் அபரிமிதமான ஆற்றலும் உடல் பலமும் கொண்டவள். மகளுக்கு ஐஸ் க்ரீம் வாங்கித் தந்திருந்தார். முகத்தில் ஐஸ் க்ரீம் வழிய சிரித்தபடி, அப்பாவின் தலையை வலதுகையால் மாறி மாறி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . பின்பு மருத்துவமனைக்குள் சென்றனர். மாலை ஒரு மருத்துவரின் அறையில் அவர்களை பார்த்தேன். எதோ சிகிச்சை. அது அந்த மகளுக்கு பிடிக்கவில்லை. அமானுஷ்யமாக கிரீச்சிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தால். செக்யுரிட்டி இருவர் பிடித்தும் அவளை சமாளிக்க முடியவில்லை. அவர்களிடமிருந்து துள்ளி துள்ளி அப்பாவை வலதுகையால் அவரது தலையில் அடித்துக் கொண்டிருந்தாள். விளைந்த மரத்தில் கட்டையால் அடித்தால் எழுவதுபோல ஒலி எழுந்தது. அப்பா தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. வெறுமனே குனிந்து அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார்.

நேற்று ஒரு நண்பர் கேட்டார். இந்த நாட்களை எப்படி கடக்கிறீர்கள் என்று. ஒன்று. அவ்வப்போது மொபைலை எடுத்து நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை வாசித்துக் கொள்வேன். இரண்டு, ஏதேனும் வாசித்துக் கொண்டிருப்பேன். மூன்று பிடித்த பணியை எந்த மடையனும் செய்வான். பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் ,சிறப்பாகவும் முழுதாகவும் செய்தே ஆக வேண்டியது கடமை. கடமை தவம் போன்றது. கடமையை செய்ய வாருங்கள் சகோதரர்களே இது விவேகானந்தர் சொன்னது. அல்லது அப்படி அவர் சொன்னதாக நான் நம்புவது. அதை மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொள்வேன். நான்கு கொஞ்சம் நடந்து அடுத்த கட்டிடம் சென்றால் பிரசவ கட்டிடம். மாலையில் புல்வெளியில் மூச்சு சீற, கீழ் உதட்டை மடித்துக் கடித்தபடி நிறைசூலிகள் நடை பயிலுவார்கள், ஏதேதோ பாட்டிகளும், அப்பாக்களும் அன்றலர்ந்த குழந்தைகளை சுமந்தபடி , ஓரிடம் விட்டு வேறிடம் செல்வார்கள், அந்த நிறை சூலி முகங்களையும், குழந்தைகளின் முகங்களையும் அள்ளி அள்ளி என் அகத்துக்குள் பதுக்கிக் கொள்வேன். ஐந்து. இந்த பிரும்மாண்ட நோய் வெளிக்குள் உள்ளே எங்கோ என் அம்மா எங்கோ எவருக்கோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அன்பே தவமாகக் கொண்ட அம்மா. அவர்களை நினைத்துக் கொள்வேன்.

கடலூர் சீனு

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

மலையுச்சியில்

$
0
0

இந்திரநீலம் முடிந்ததும் ஆரம்பத்திலிருந்தே நாவலை நினைவில் ஓட்டினேன். நான் செவ்வியல் ஒழுங்கில் நம்பிக்கை கொண்டவன். வெண்முரசு நாவல் வரிசையும் செவ்வியல் படைப்புகள்தான். ஆனால் முற்றிலும் திட்டமிடாமல்தான் அத்தனை நாவல்களும் எழுதப்படுகின்றன. முதலில் ஒரு திட்டம் இருக்கிறது, தொடங்குவதற்கான ஒரு தைரியத்துக்காக மட்டுமே அது தேவைப்படுகிறது. தொடங்கியபின் அது தன்பாட்டுக்கு இழுத்துச்செல்கிறது. கதைப்போக்கை, படிமக்கோப்புகளை, மொழியை என்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடிவதில்லை.

ஆகவே அதில் திட்டமிடல், விவாதம் எதற்கும் இடமில்லை. உண்மையில் நாவல் எழுந்துவிட்டபின் எழுதுவதைப்போல சுலபமான வேலையே வேறில்லை. மூச்சு போலத்தான். ரயில்நிலையங்களில், விமானநிலையங்களில் எங்குவேண்டுமானாலும் எழுதலாம். முந்தைய அத்தியாயம் முடிந்ததுமே அடுத்த அத்தியாயம் வந்து நின்று துடிக்கும். எழுதாமல் தவிர்த்து அடுத்த வேலைக்குப் போவது மட்டுமே இம்சை. அமெரிக்கப்பயணம் முழுக்க வெண்முரசு உள்ளே வந்து நின்று இழுத்துக் கொண்டே இருந்தது. நண்பர்கள், நிலக்காட்சிகள் அனைத்திலும் என்னை இழுத்துப் பிடுங்கி செலுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஓரளவு அரைக் கவனமாகவே எப்போதும் இருந்தேன்.

ஆனால் ஒரு நுணுக்கமான தெளிவான திட்டம் என் ஆழ்மனதுக்கு இருந்திருக்கிறது என்பதை நாவல் முடிந்தபின் உணர்கிறேன். முதலிலேயே விருத்தகன்யகையின் தவம் வந்துவிட்டது. ஆகவே இது கண்ணனுக்கான தவத்தின் கதை மட்டுமே என என் அகத்துக்குத்தெரியும். ஒவ்வொரு பகுதியும் நுணுக்கமாக ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருக்கிறது. இறுதி அத்தியாயங்களில் ஸ்ரீசகஸ்ரத்தில் பாற்கடலில் இருக்கிறார் கிருஷ்ணன். அலைகடல் கொந்தளிப்பு பால் பால் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது. அதைவிட முக்கியமாக அதை நெருங்கும்போது ஆக்ஞா சக்கரத்தில் உருவாகும் கள்வெறி , மதுநமக்கு மதுநமக்கு என பாரதி பாடிய நிலை, அமைந்திருக்கிறது. அதை வெளியாகி இருநாட்கள் கழித்தே நானே அறிகிறேன்.

இவ்வாறு அமைவது பெரும் கொந்தளிப்பை அளிக்கிறது. ஆனால் என்ன பிரச்சினை என்றால் அதிலிருந்து இறங்கியதுமே மீண்டும் அமையுமா என்னும் பதற்றம் வந்து சூழ்ந்துகொள்கிறது. அமையாவிட்டால் ஒன்றுமே செய்யமுடியாது. இது முழுக்க முழுக்கத் தற்செயலான ஒன்று, கனவுபோல. இதை நான் நிகழ்த்தமுடியாது. என் திறமை பயிற்சி என எதற்குமே இங்கு பங்கேதுமில்லை. அப்படியென்றால் வராமலாகிவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் செய்யமுடியாது என்ற உணர்தலில் எழும் பதற்றம் இனிமேல் வராதோ என்னும் ஐயமாக மாறுகிறது. ஓரிருமுறை முயன்று தோற்றுவிட்டால் பிறகு எழுத அமர்வதற்கே பயமாகிவிடும். அதைத்தவிர்க்கவே தோன்றும்.

கிருஷ்ணனிடம் பேசினேன். ‘எழுதுங்க ஜெ, இதுவரை வந்தது இனிமேலா வராம இருந்திரப்போகுது” என்றார். நான் சொன்னேன், மலையுச்சியிலிருந்து குதிக்கவிருக்கிறேன். நூறடியில் வலுவான வலை இருக்கிறது என புத்திக்குத்தெரியும். ஆனால் அதை கண்ணால் பார்க்க முடியவில்லை. அந்தத் தயக்கம்தான். புத்தி மனதை சமாதானப்படுத்தவேண்டும். அது முடியாது. சிறந்த வழி கண்ணைமூடிக்கொண்டு குதிப்பதுதான்’

ஆகவே முதலில் தலைப்பை வைத்துவிட்டேன். தினமும் கணிப்பொறி முன் அமர்ந்து ஆனால் உள்ளே நுழையாமல் திரும்பிக்கொண்டிருக்கிறேன். பதற்றமும் எரிச்சலும் தனிமையும் பயமுமாக அலைக்கழிகிறேன். இந்த பத்துப் பதினைந்துநாள் இருட்டைக் கடந்துவிட்டால் எல்லாம் வெளிச்சம்தான்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கடலடியில்

$
0
0

இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விவாதம் இது. ஒரு பெண்ணெழுத்தாளரைப் பற்றிய விமர்சனத்தில் சு.சமுத்திரம் எழுதினார் ‘இப்போதெல்லாம் பெண்ணெழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிக்கிறார்கள்’. கீழ்த்தரமான உள்ளர்த்தம் கொண்ட வரி. நான் அப்போதைய இந்தியா டுடேயில் அதற்குக் கடுமையாக எதிர்வினையாற்றினேன்.

தமிழிலக்கியத்தின் ஆயிரமாண்டுக்கால வரலாற்றில் சங்ககாலம் தவிரப் பெண்கள் எப்போதுமே தீவிரமாக எழுதியதில்லை. ஔவையும் ஆண்டாளும் காரைக்காலம்மையும் விதிவிலக்குகள். ஔவை முதுமையைத் தருவித்துக்கொண்டார். ஆண்டாள் இளமையை அடையவேயில்லை. காரைக்காலம்மை பேயுருக்கொண்டார். நவீன இலக்கியம் உருவானபின்னரும் பெண்கள் அதிகம் எழுதவரவில்லை. எல்லா மொழிகளிலும் இதுவே நிலை.

இந்தியவரலாற்றில் அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் பெண்களுக்கு கௌரவமான ஒரு நுழைவாயிலைத் திறந்தது காந்திய இயக்கம்தான். அதிலும் குறிப்பாக காந்தி பெண்களை நோக்கி நேரடியாக அறைகூவல் விடுப்பவராக இருந்தார். பெண்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவராமல் இந்தியா விழிக்காது என ஆத்மார்த்தமாக நம்பி அதற்காகத் தொடர்ந்து முயன்ற ஒரே இந்தியத்தலைவர், அனேகமாக  கடைசித்தலைவர், அவர்தான்

இந்தியா எங்கும் அதிகமான பெண்கள் பொதுவெளியில் அறிமுகமானது காந்திய அலையின்போதுதான். இந்தியாவில் இன்றும் புகழ்மிக்க சாதனையாளர்களாக விளங்கும் பெண்எழுத்தாளர்கள் பாடகிகள் கலைஞர்கள் சமூகசேவகிகள் அதிகபட்சம் முப்பதாண்டுக்காலம் நீடித்த அந்த அலையில் எழுந்து வந்தவர்கள் மட்டுமே. தமிழகத்திலும் அதுதான் வரலாறு. வை.மு.கோதைநாயகி அம்மாள், லட்சுமி போன்ற எழுத்தாளர்கள், பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற பாடகிகள், சௌந்தரம் ராமச்சந்திரன், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போன்ற சமூகசேவகர்கள்,ருக்மிணி அருண்டேல் முதலிய கலைஞர்கள் என ஒரு நூறுசரித்திரநாயகியரை நாம் பட்டியலிடலாம்.

பின்னர் உருவான கம்யூனிச இயக்கமும் அதன்பின்னர் வந்த திராவிட இயக்கமும் பெண்களுக்கான இடத்தை மிகமிகக் குறைவாகவே அளித்தன. அந்த தரப்புகளில் இருந்து பெண் ஆளுமைகளை மிக அரிதாகவே காணமுடியும். அதன்பின் இன்றுவரை பெண்கள் பொதுவெளிக்கு வருவது பெரிய அளவில் நிகழ்வதுமில்லை. நவீன இலக்கியத்திலேயேகூட பெண்களின் பங்களிப்பு ஒப்புநோக்க குறைவுதான். தொண்ணூறுகளில்தான் பெண்கள் ஒரு சிறிய அலைபோல இலக்கியத்துக்குள் நுழைந்தனர். அதிகமும் எளிய கவிதைகள் எழுதிக்கொண்டு.

அவரது தரமற்ற சொற்களால் சமுத்திரம் அவமதித்தது அந்த சிறிய அலையைத்தான். நான் அதற்குக் கடுமையாகவே எதிர்வினையாற்றியிருந்தேன். அதில் சாகித்ய அக்காதமி ’வாங்கிய’ சமுத்திரம் என்ற ஒரு வரி இருந்தது. அது சமுத்திரத்தைக் கடுமையாகப் புண்படுத்தியது. அவர் வேறு ஒரு இதழில் என்னை மேலும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதன்பின் அவர் நினைத்து நினைத்துப்பார்த்தபோது என்பெயர் தட்டுப்பட்டது.

எங்கிருந்தோ என் விலாசத்தைத் தேடி எடுத்து அவர் எனக்கு பதில் போட்டிருந்தார். ‘டேய் நான் சாகித்ய அக்காதமிக்குத் தகுதியற்றவன் என்று சொல் . ஆனால் வாங்கியவன் என்று சொல்லாதே. நான் எப்போதும் எதற்கும் அலைந்தவன் கிடையாது. திமிராக இருக்கவேண்டும் என்றே திமிராக இருந்து கிடைத்தவற்றைக்கூட இழந்தவன் நான். திமுக தலைவருக்கே நெருக்கமானவன். ஆனால் அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள மறுத்தவன் ’ என்று ஆரம்பித்து ஒரு நீண்ட வசை

‘நீ யார்? நீ என் கதைகளை வாசித்து வளர்ந்தவன். ஒரே –யில் இருந்து பிறந்தவர்கள் நாம். நீ இளையவன் நான் மூத்தவன். பெரிய — போல பேசினால் பத்மநாபபுரத்த்துக்குத் தேடிவந்து உதைப்பேன். எனக்கு உன் வீடு விலாசம் எல்லாம் தெரியும். எனக்கு எல்லா இடத்திலும் ஆளிருக்கிறார்கள்’ என்று சமுத்திரம் எழுதியிருந்தார். நான் அவருக்கு சுருக்கமாக ‘எல்லாரையும் உருவாக்கும் அந்த — பற்றிய உணர்வு உங்களுக்கும் இருந்தால் சரி’ என்று எழுதி விட்டுவிட்டேன்.

ஏழெட்டு மாதம் கழித்து கோவையில் விஜயாபதிப்பகத்தின் ஒரு புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். விஜயாவேலாயுதம் வந்து ‘இப்பதான் சமுத்திரம் வந்துட்டு போனார். அந்தப்பக்கம் நிக்கிறார்’ என்றார். ‘என்னைப்பார்த்தாரா?’ என்றேன். ‘பாத்ததனாலதானே போனார்’ என்றார். ”போய்ப்பேசலாமா?” என்றேன். ’கண்டிப்பா. அவரு நல்ல மனுஷனுங்க’ என்றார் வேலாயுதம்

நான் நேராக சமுத்திரம் நின்றிருந்த இடத்தை நோக்கிப்போனேன். எனக்குப் பின்பக்கம் காட்டி எவரிடமோ பேசிக்கொண்டிருந்த சமுத்திரத்தின் அருகே சென்று ’அண்ணாச்சி’ என்று அழைத்தேன். அவர் திரும்பியதும் ‘அண்ணாச்சி, நான் ஜெயமோகன். ஒரு காலத்திலே உங்க எழுத்துக்களை வாசித்து உருவானவன்’ என்றேன்.

‘டேய் நீ என்னடா பெரிய -யா?’ என சமுத்திரம் ஆரம்பித்தார். நான் சிரித்துக்கொண்டு ‘விடுங்கண்ணாச்சி, நான் கணக்குப்படி உங்க தம்பியில்ல? தம்பி அண்ணனை ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? மன்னிச்சிருங்க’ என்றேன். சமுத்திரம் சட்டென்று என்னை அப்படியே கட்டிக்கொண்டார். ‘டேய் நீ என் தம்பிடா…இப்ப சொன்னியே இது போரும்’ என்றார்.

சமுத்திரம் கரிய நெடிய மனிதர். ஏதோ கரிசல்காட்டு விவசாயி என்று தோற்றமளிப்பார். ஆனால் எப்போதும் சஃபாரிதான் உடை. எண்ணைபூசிப் படிய வைத்த சுருள்முடி. எச்சில்தெறிக்கும் உரத்த பேச்சு. கிட்ட்டத்தட்ட கத்தல்தான் அது. ஒரு விரோதம் என்றால் அவரிடமிருக்கும் எல்லா முட்களும் சிலிர்த்துக்கொள்ளும். அவரளவுக்கு ஆவேசமான உயிராற்றல் கொண்ட மனிதரை நான் பார்த்ததே இல்லை. அன்று நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ‘சாயங்காலம் நீ என்னைப் பாக்க வரே’ என்றார். ‘இல்லை, நான்…’ என்றேன். ‘டேய் எதுத்துப்பேசாதே’ என்றார்

மாலை அவர் தங்கியிருந்த விடுதிக்குப் போனேன். சஃபாரியைக் கழட்டிவிட்டு பனியனுடன் இருந்தார். நான் மது அருந்துவதில்லை என அறிந்து மனமுடைந்தார். எனக்காக அவரும் குடிக்கவில்லை. பேசிக்கொண்டே இருந்தார். அவருக்கு அந்தரங்கமென்பதே இல்லை. விமர்சனங்கள் ,கோபங்கள், நக்கல்கள் எனக் கொட்டிக்கொண்டே இருந்தது. பேசப்பேச நெருங்கி வந்து, ஒரு கட்டத்தில் நம் ஆன்மாவில் அவரே ஒரு நாற்காலியை பயங்கர சத்தத்துடன் இழுத்துப்போட்டு அமர்ந்து , காலைத்தூக்கி சப்பணம் போட்டுக்கொண்டு நம்மை அதட்ட ஆரம்பிக்கும் மனிதர் அவர்.

’டேய் நான் சரியான கரிசல்காட்டான். எங்க தலைமுறையிலேதான் படிச்சு பரீட்சைகள் எழுதி இந்தா இப்டி வந்து சேர்ந்திருக்கோம்.நீ சும்மா குமாஸ்தா வேலைசெய்றே. உனக்கு சொன்னா புரியாது. ஆபீசரா இருந்தா தெரியும்…டேய், நம்மள பாக்குற ஒவ்வொருத்தனும் வீட்டுக்குள்ள நுழைஞ்ச நாய பாக்கிற மாதிரி பாப்பானுங்க. நம்ம கலரு நம்ம உருவம் எல்லாம் அதுக்கேத்தமாதிரி இருக்கு…நல்ல அவமானம்லாம் பட்டிருக்கேன். செருப்ப கழட்டி மூஞ்சியில அடிச்சதுமாதிரி பேச்சுகேட்டிருக்கேன்.டேய் காறி மூஞ்சிலே துப்புற மாதிரி பேச்சு கேட்டிருக்கேன் தெரியுமா…’

‘சீனியர்கிட்ட கேட்டாக்க பணிஞ்சுபோன்னு சொன்னாங்க. நம்ம காலம்னு ஒண்ணு வாரது வரை எல்லாத்தையும் தாங்கிட்டுபோன்னு சொன்னாங்க. மனசிலே குறிச்சு வச்சுகிட்டு சிரிச்சுட்டு இருன்னு அட்வைஸ் பண்ணினாங்க…..அது நம்ம சாதிக்குள்ள புத்தி இல்ல. எனக்கு அதெல்லாம் சரிவராது…குமுறிட்டிருந்தப்ப ஒருவாட்டி அய்யா வைகுண்டர் கோயிலுக்கு உங்கூருக்கு வந்தேன். அப்ப ஒரு வெளிச்சம் கிடைச்சுது. நான் எப்டியோ அதுதான் என் வழின்னு தெரிஞ்சுட்டுது…அதோட ஆளே மாறிட்டேன்’’

‘பாத்தியா சஃபாரி….இதைத்தான் போடுவேன். எனக்கு என்ன மரியாதையோ அதைக் குடுத்தாகணும். இல்லேன்னா அவன் நார்நாரா ஆகிற வரைக்கும் விடமாட்டேன். என் பேரைக்கேட்டாலே அலற வச்சிருவேன்…சமுத்திரமா அவன் ஓநாய்லான்னு சொல்லுவானுக…பணிஞ்சு போக மாட்டேன். ஒரு இஞ்சுகூட விட்டுக்குடுக்க மாட்டேன்…. அப்டி ஒரு ஆங்காரத்த மனசிலே ஏத்திக்கிட்டேன்.. எத்தன பேர கதறிட்டு ஓட அடிச்சிருப்பேன். சர்வீஸிலே கையில கருக்குமட்டையோட அலைஞ்சவன் நான்…எவ்வளவு டிரான்ஸ்பர்.எவ்வளவு சஸ்பென்ஷன்… என்னை ஒரு மண்ணும் செய்யமுடியாதுன்னு காட்டினேன்’

‘ஆனா நானே உருவாக்கிக்கிட்ட அந்த ஆங்காரத்த என்னாலேயே தாங்கமுடியல்லை. ஒரு கட்டத்திலே எப்ப பாத்தாலும் கால்படி வத்தல மென்னுட்டிருக்கிற மாதிரியே இருந்தது. அலைமோதிட்டிருந்தேன். அப்ப நான் செண்டிரல் கவர்மென்ட் செர்வீஸிலே இருந்தேன். நெறைய வாசிப்பேன். எனக்கு புதுமைப்பித்தன்தான் ஆதர்சம். ஒருநாள் ஒரு கதை எழுதினேன். கடல்மணிங்கிற பேரிலே அதைக் குமுதத்துக்கு அனுப்பினேன். அப்டியே பிரசுரமாச்சு. அதான் என் மொதல் கதை…’

நான் புன்னகைசெய்தேன். ‘அந்தக்கதைக்கு எட்டு லெட்டர் வந்திச்சு. ஒரு சின்னப்பையன் லெட்டர் போட்டிருந்தான். அஞ்சாம்கிளாஸோ ஆறாம்கிளாஸோ படிக்கிற பையன்…கொழந்தைமாதிரி கையெழுத்து. நல்லா இருக்கு கதைன்னு. லெட்டர கையிலே வச்சுகிட்டு நான் அழுதேன்’

நான் சிரித்தேன். ‘ -க்காளி நீ எழுதின லெட்டர் அது’ என்றார் சமுத்திரம் . ’கதை எழுதல்லேன்னா எவனையாவது வெட்டிப்போட்டுட்டு ஜெயிலிலே இருந்திருப்பேன். எழுதி எழுதி ஆத்திக்கிட்டு இதுவரை வந்துட்டேன். எனக்கு எலக்கியம் ஒரு மண்ணும் தேவையில்ல. என் எழுத்து வேற…’

இளமையில் சமுத்திரத்திற்கு நான் நிறைய வாசகர்கடிதங்கள் எழுதியிருக்கிறேன். தொடர்சியாகப் பல வருடங்கள். ஆச்சரியமென்னவென்றால் கடல்மணியும் சமுத்திரமும் ஒருவரே என்றுகூட ஊகித்து எழுதியிருந்தேன். அவரது கதைகளின் முகத்திலறையும் அப்பட்டம் எனக்கு மனவிலகலைக் கொடுத்தது. ஆனால் அவற்றின் நேர்மையான உணர்ச்சிவேகம் இன்றும் என்னைக் கவர்கிறது.

சமுத்திரம் மறுமுறை நாகர்கோயில் வந்தபோது சதங்கை ஆசிரியர் வனமாலிகை என்னைக் கூப்பிட்டனுப்பினார். நான் வனமாலிகையுடன் மீனாட்சிபுரம் ஆசாரிமார் சாலையில் சமுத்திரம் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றேன். செல்லும்வழியில் ’அண்ணாச்சிக்கு நீங்கதான் என்னோட அட்ரஸைக் குடுத்ததா?’ என்றேன். ’ஆமா, ஏன் கேக்கிறியோ?’ என்றார்.

இரவு ஏறுவது வரை சமுத்திரத்திடம் பேசிக்கொண்டிருந்தேன் என்றால் அது பிழை. அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்தபோது வனமாலிகை சொன்னார் ‘தப்பா நினைச்சுக்கிடாதீய…அவரு இப்பிடித்தான். ஆனா நல்ல மனுசனாக்கும்’ .நான் புன்னகைசெய்தேன். மறுநாள் அவர்கள் சாமிதோப்புக்குச் செல்வதாக இருந்தது.

அதன்பின் பலமுறை நான் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் வரும்போது வனமாலிகைதான் தகவல் தருவார். பின்னர் அவர் நாகர்கோயில் வருவது நின்றுபோனது. விஷ்ணுபுரம் நாவலை ஒரு பிரதி அனுப்பி வைத்தேன். ’பசிச்சு எலையிலே ஒக்காந்திட்டிருக்கிறப்ப ஆத்துமணலக் கொண்டாந்து முன்னால வச்ச மாதிரி இருக்கு’ என்று சொல்லிக் கடுமையாகத் திட்டி போன்செய்துவிட்டு அதையே எழுதி ஒரு கடிதமும் அனுப்பியிருந்தார்

அதன்பின்னர் ஒருமுறை நான் எங்கோ படிமம் என்று சொன்னதை வாசித்துவிட்டு ‘படிமம்னா என்ன? அக்கானி காய்ச்சுறப்ப அடியிலே தங்குறத நாங்க படிமம்னு சொல்லுவோம். அதுவா? இதெல்லாம் பம்மாத்து. ஏழைகளை ஏமாத்துற பசப்பு. சொல்றதுக்குண்டானத வெட்டித்தெறந்து சொல்லாம என்ன படிமமும் மத்ததும்?’ என்று ஃபோனில் சத்தம்போட்டுவிட்டு அதை ஏதோ இதழில் எழுதவும்செய்தார்.

‘வாயாடியாக இருந்த என்னை சில பத்திரிகையாசிரியர்கள் ஊமையாக்கிவிட்டார்கள்’ என்று தொண்ணூற்றி மூன்றில் எனக்குக் கடிதம் எழுதினார் சமுத்திரம். ஆனால் கொஞ்சநாள் கழித்து ஆனந்த விகடனில் அவர் வாடாமல்லி என்ற நாவலை எழுதினார். சமுத்திரத்தின் கதைகளில் மனித இயல்புமீதான அவதானிப்புகளோ வாழ்க்கை நுட்பங்களோ இருக்காது. சமூகப்பிரச்சினைகளின் கொந்தளிப்பான வெளிப்பாடுதான் அவரது கலை. அவ்வகையில் வாடாமல்லிதான் அவரது நல்ல படைப்பு.

அந்நாவலை நான் 2000 த்தில் புத்தக வடிவில்தான் வாசித்தேன். என் எண்ணத்தை எழுதி அனுப்பினேன். உணர்ச்சி மேலிட்டு எனக்கு ஃபோன் செய்தார். ‘நீ இந்த மாதிரி ஒண்ணு எழுதணும்…நம்ம நாட்டு பஞ்சப்பராரிகளப்பத்தி எழுதணும்… கலைன்னா அதுதான்யா’ என்றார். அதுதான் நான் கடைசியாக அவரிடம் பேசியது..

திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் அருகே திப்பண்ணம்பட்டி என்ற சின்ன கிராமத்தில் 1941இல் பிறந்தவர் சமுத்திரம்.மக்கள் தொடர்பாளராக மத்திய அரசில் பணியாற்றினார். கொஞ்சகாலம் திட்டம் என்ற மத்திய அரசின் செய்தி இதழின் ஆசிரியராக இருந்தார். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் வேலைபார்த்தார். அடிப்படையில் அவர் காங்கிரஸ்காரர். திமுகவிலும் கம்யூனிஸ்டுக்கட்சியிலும் அவருக்கு நண்பர்கள் அதிகமிருந்தாலும் குடும்பப் பாரம்பரியம்போல காங்கிரஸ்பற்றைப் பேணிவந்தார்

2003இல் ஒருநாள் தினமணியில் செய்தி வாசித்துத்தான் சமுத்திரம் காலமான தகவலை அறிந்தேன். உடனே இதழாளர்களான நண்பர்களிடம் விசாரித்து நடந்ததைத் தெரிந்துகொண்டேன். சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம்பெருகக் கிடந்திருக்கிறார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டுசென்று சேர்த்திருக்கிறார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்கமுடியாது என எண்ணி அவசியமான அறுவைசிகிழ்ச்சை செய்யாமல் இரண்டரை மணிநேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருக்கிறார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர் இறந்திருந்தார்.

சமுத்திரத்தின் கதைகளில் வருவது போன்ற ஒரு நிகழ்ச்சி. மனித மனத்தின் சிறுமையை, நம் அமைப்புகளின் ஈவிரக்கமற்ற தன்மையைப் பிடித்து நிறுத்திக் கன்னத்திலறைவதுபோன்ற நடையில் எள்ளலும் எரிச்சலுமாக எழுதியவர் அவர். வாசக ஊகத்துக்கோ கற்பனைக்கோ ஒரு துளிகூட மிச்சம் வைப்பதில்லை. பல கதைகள் ரத்தம் கொதிக்கச்செய்பவை. ஊமை ஜனங்கள், கைவிடப்பட்ட மக்கள் – அவருடைய மொழியில் சொல்லப்போனால் சோற்றுப்பட்டாளம்- தான் அவருடைய கதைமனிதர்கள். ஒவ்வொரு கதையும் அந்த மனிதர்களுக்காக நரம்பு புடைக்க தொண்டை தெறிக்கக் குரலெழுப்புகிறது. அவர் கடைசிவரை அவர்களில் ஒருவராகவே இருந்தார்.

‘நான் காட்டானாக்கும் தம்பி’ கைகளை முஷ்டி பிடித்து சமுத்திரம் சொல்வார். ‘நம்ம பாட்டு காட்டான் பாட்டாக்கும். இதிலே பல்லவி அனுபல்லவி சங்கீதம் ஒண்ணும் கெடையாது…’அவரைக் கோவையில் சந்தித்த முதல்நாள் முதல் நான் கேட்க முனைந்து இடைவெளியே கிடைக்காமல் தவித்ததை நாகர்கோயிலில் சந்தித்த முதல்நாள் கேட்டேன். ‘அண்ணாச்சி , நீங்க எழுதினது சரியா? பொண்ணுங்க இப்பதானே எழுதவே வராங்க?’

சமுத்திரம் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்பவரல்ல. உரத்த குரலில் கத்த ஆரம்பித்தார். ‘மனுசன் செத்திட்டிருக்கான் தம்பி…வாங்க காயாமொழி இட்டமொழிக்கு வந்து பாருங்க…முள்ள நட்டு வெள்ளாம பண்றான். கரி எடுத்து வித்துக் கஞ்சி குடிக்கான். இவளுக என்னத்த எழுதறாளுக? எனக்குப் பத்தலைன்னு எழுதறாளுக”

மீண்டும் கொஞ்சம் இடைவெளி கிடைத்தபோது நான் சொன்னேன் ‘ நீங்க எழுதறது உங்க பிரச்சினை அண்ணாச்சி, ஏன் அது அவங்க பிரச்சினையா இருக்கக்கூடாது?’

‘கொழுப்பு. நல்ல கருக்கு மட்டையால குண்டியிலே போட்டா புத்திவரும்’ என்று மேலும் கத்தினார் சமுத்திரம்.

‘அண்ணாச்சி மனுஷனுக்கு வயிறு நெறைஞ்சா அடுத்த பிரச்சினை ஆண்பெண் உறவுதானே? அது அவங்களுக்குப் பெரிய விஷயமா தோணினா அவங்க ஏன் அதை எழுதக்கூடாது?’

‘அப்ப நீ ஏண்டா அதை எழுதல?’

நான் சிரித்து ‘அது எனக்குப் பெரிய விஷயமா இல்லியே’.

அவர் அதைப்பிடித்துக்கொண்டார்.’பாத்தியா நீயே சொல்லிட்டே”

ஒருவழியாக அவர் கத்தவேண்டியதை எல்லாம் கத்தியபின் நான் கிளம்பும்போது கார் பார்க்கிங்கில் அரை இருட்டில் வைத்துக் கேட்டேன் ‘சரி அண்ணாச்சி, எண்ணைக்காவது நம்ம சோத்துப்பட்டாளத்துக்கு வயிறு நெறைஞ்சபிறவு நம்ம பொண்ணுக இதை எல்லாம் எழுதினா என்ன சொல்லுவீங்க?’

சமுத்திரம் சட்டென்று என் தோளைப் பிடித்தார். இருட்டில் ஈரக்கரிய முகம் மிளிரச் சொன்னார். ‘தம்பி,டேய், நம்ம சனம் சோத்தைவிட அதைப் பெரிய பிரச்சினையா நினைக்கிற அளவுக்கு ஆயிடுச்சின்னா அதைவிட அண்ணனுக்கு என்னடா வேணும்?’

Aug 15, 2012 முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஓர் எளிய கூழாங்கல்

$
0
0

பதினான்குவருடம் காட்டில் உழன்றாலும் அவன் சக்ரவர்த்தித் திருமகன். இடையர்குடிலில் வளர்ந்தாலும் அவன் யாதவர்களின் மன்னன். அரசு துறந்து சென்றாலும் அவன் சாக்கிய குலத்தரசு. ஆம், மகதி கோசாலனும் வர்த்தமான மகாவீரனும் கூட பிறப்பால் மன்னர்களே. பெரும் ஜனக்ககூட்டங்களை ஆள்வதற்காகவே அவதரித்தவர்கள். கோடிக்கணக்கான மனிதர்கள் நடுவே கூழாங்கல்வெளியில் வைரமென ஒளிவிடுபவர்கள்…

 காஜதான் தேவாலயம்,கோவா

ஆனால் தச்சன்மகன் எளியவன். அவனை நெரிசலான சாலையில் ஒருவருமே அடையாளம் காணமுடியாமல் போகலாம். அவன் நம் வீட்டுவாசலில் வந்து நின்றானென்றால் நாம் ஒருவேளை அதிருப்தியுடன் முகம் சுளிக்கக்கூடும். மாட்டுத்தொழுவில் பிறந்த அவன் ஒருவேளையேனும் நல்ல உணவு உண்டிருக்க வாய்ப்பில்லை. புழுதியில்லாத உடை ஒன்றை அவன் அணிந்திருக்க மாட்டான். பாம்புகளுக்கு வளைகளிருந்தன பறவைகளுக்கு வானமிருந்தது, மனிதகுமாரன் தலைசாய்க்க இடமிருந்ததில்லை.

 அவனுக்காகவா இந்த மாபெரும் ஆலயம்? அவன் இங்கே எப்படி உணர்கிறான்? இந்த மாபெரும் சிற்ப வளைவின்கீழ், இந்த நீரலை மின்னும் பளிங்குக்கல்தரையில், இந்த ஒளி நடனமிடும் வண்ணக் கண்ணாடிச் சில்லுகளில் அவன் எப்படி தன்னை உணர்கிறான்? இந்த ஆலயத்து மையத்தில், வானுருவம் கொண்ட கன்னியொருத்தியின் பிரம்மாண்டமான நகை போல பொன்னொளி சுடர நின்றிருக்கிறது தேவாலய மையபீடம். அதன் நடுவே பொன்னிற தேவதைகள் சூழ்ந்து வாழ்த்த, பொன் மின்னும் கன்னங்களுடன் தூயவள் அவனை கையில் ஏந்தி நிற்கிறாள். பேரழகுடன் பூத்த இளமரம் ஒன்றில் இருந்து எழும் பூங்குருத்துபோல அவன் குழந்தையாக கைநீட்டி நம்மை அழைக்கிறான்.

 எத்தனை கம்பீரம்! சக்ரவர்த்தியொருவரின் களஞ்சியம் திறந்ததுபோலிருக்கிறது. பூதங்கள் கைவிட்டு விலகிய பொற்புதையல் போலிருக்கிறது. ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குரியவற்றில் மேன்மையானவற்றையெல்லாம் பொன்னென உணர்ந்த மரபில் பூத்துவந்த என் கண்கள் இவ்வெழிலை விட்டு விலக மறுக்கின்றன. ஆனால் இது கடையர்களுக்காக மண்ணுக்கு வந்த கருணையாளனின் இடம்தானா?

 

 

பழைய கோவா ‘கிழக்கின் ரோமாபுரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த சுத்தமான அழகிய நகரத்தில் எங்கு பார்த்தாலும் மனிதர்களை சிறியதாக்கி மண்ணுடன் சேர்த்து அழுத்திவிடும் மாபெரும் தேவாலயங்கள் உள்ளன. உதிரிச் சுற்றுலாப் பயணிகள் அன்றி அதிகம்பேர் கண்ணில்படாத கடற்கரையில் இருக்கிறது காஜதான் தேவாலயம்.  [Church of St. Cajatan] தியேட்ரின் குருமரபைச் சேர்ந்த தந்தையர் அவர்களின் முதல் குருவான புனித. காஜதான் அவர்களின் நினைவுக்காக விரும்ப 1651ல் இத்தாலியச் சிற்பிகளால் ரோமாபுரியின் புனிதபீட்டர் தேவாலயத்தை மாதிரியாக்கிக் கட்டப்பட்ட ஆலயம் இது.

 பீட்டரின் தேவாலயம்  இதைவிட ஆறுமடங்கு பெரிது என்றார்கள். ஆனால் காஜதான் தேவாலயமே உள்ளே நுழைபவர்களின் பிரக்ஞையை ஒரு புறாவாக ஆக்கிப் பறக்கச் செய்யுமளவுக்கு பிரம்மாண்டமானது. புனித உபகார அன்னையின் தேவாலயம் இது. மேற்குநோக்கிய மாபெரும்  கூடத்தில் தியேட்ரின் மரபைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திருத்தந்தையரின் கல்லறையைமூடிய மேற்கற்களே தரையாகியிருக்கின்றன. அவர்களின் புனிதப் பெயர்களின் மீது மீது நடந்து சென்றுதான் நாம் எதிரே பொற்குன்றம் போல் ஓங்கி நிற்கும் உபகார அன்னையின் ஆல்டரை எதிர்நோக்கி விழிதூக்க முடியும்.

மைய ஆல்டருக்கு இருபக்கமும் பகுதிக்கு ஒன்று வீதம் மூன்று ஆல்டர்கள் உள்ளன. இடதுபக்கத்தின் மூன்று ஆல்டர்களில் ஒன்றில் தன் தாய்தந்தையுடன் சிரிக்கும் மனிதகுமாரன். இன்னொரு ஆல்டரில் பக்தியுள்ள அன்னை. புனித கிளேரின் சிலை மூன்றாவது மறுபக்கம் மூன்று ஆல்டர்களில் புனித ஜான், புனித காஜதன் மற்றும் புனித ஆக்னஸ். கைதூக்கி அருள்புரிந்து தலைசரித்து தாங்களும் பிறிதொரு பேரருளில் நனைந்து நிற்கும் சிற்பங்கள்.

 கண்கள் நிறைக்கும் பொன்னொளியில் ஒருகணமேனும் அந்தப்பொன்னிறம் அவன் கிடந்த மாட்டுத்தொழுவின் வைக்கோல் நிறத்துக்கு ஈடாகுமா என்ற எண்ணம் எழாமலிருக்காது. விசித்திரமானதோர் தத்தளிப்பு அங்கே உருவாகிறது. இதுவல்ல, இவ்வளவல்ல என்று மனம் சொல்லிக்கோண்டே இருப்பது போல. ஆனால் அந்த இடத்திலிருந்து விலகிச்செல்ல முடியாமல் பிரக்ஞை ரீங்கரித்துக்கொண்டு சுற்றிச் சுற்றிப்பறக்கிறது.

 எந்த தேவாலயத்திலும் எந்த கோயிலிலும் நான் எதையும் கேட்டு பிரார்த்தனைசெய்வதில்லை. பிரார்த்தனை என்பது எப்போதும் எனக்கு மிக அருகே உணரப்படும் ஓர் அருகாமை மட்டுமே. அது என்னுள்ளிருந்து வெளிப்பொருட்களில் எதிரொளிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் உடனிருத்தல் என்னும் அனுபவம் மட்டுமே அது. நான் கேட்பதற்கிருப்பதெல்லாம் அது அறியும் என்பதுபோல. குறையொன்றுமில்லை என்று வான்பெருகும் பெருநிறைவின்முன் உணரும் தருணமே உண்மையான பிரார்த்தனையாக இருக்கமுடியும்.

 இங்கே என்னை இழுத்து வைத்திருப்பது எது என எண்ணிக்கொண்டேன். அது கலைதான். மனிதக் கற்பனையின் தரிசன உச்சங்கள் கைகளாக ஆகி கல்லிலும் உலோகத்திலும் தங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. பொருட்கள் வழியாக நாம் அதை உருவாக்கியவனின் அகத்தின் எழுச்சியைச் சென்றடைய முடியும் என்றால் அதுவே கலை. இந்த சிலைகளை உருவாக்கியவன் எத்தகைய கனவில் இருந்தான். மண்ணுலகையே அழைக்கும் இந்த குட்டிக்கைகளின் குண்டு விரல்களைச் செதுக்கியபோது முதல் குழந்தையை கருவாசனையுடன் அள்ளி மார்போடணைத்துக்கொள்ளும் அன்னையின் மார்புகள் போல அவன் ஆத்மாவில் அமுதூறியதா என்ன?

 

 

 கலையின் தருணங்களை ஒருபோதும் அள்ளிவிட முடிவதில்லை. அலையலையான மன எழுச்சிகளாக கரையை வந்து மோதிக்கொண்டே இருக்கிறது கலையின் முடிவிலி. அதன் விரிவை அவ்வலைகளே மறைத்துவிடுகின்றன. எத்தனை நுட்பங்கள். எத்தனை ஆயிரம் மலர்வளைவுகள் எத்தனை ஆயிரம் நுண்நெளிவுகள். இக்கணம் வரை ஒருவருமே கவனிக்காத எத்தனை ஆயிரம் செதுக்கல்கள் இங்கே இன்னுமிருக்கக் கூடும். கலைஞன் அவற்றை தன் அகக்கண்களுக்காகவே செதுக்கியிருப்பான். தன்னுள் ஊறிய மகத்துவமொன்றை பொன்னிலும் கல்லிலும் கண்டுகொள்வதற்கப்பால் அது வேறெதுவுமில்லை அவனுக்கு.

 கலையை விட்டு வரச்சொல்லி மனதை பிடித்திழுக்கிறது தர்க்கம், தாயின் முந்தானையைப் பிடித்திழுக்கும் சேய்போல.’நேரமாகிறது, நேரமாகிறது’ என. ஆனால் நேரமின்மையில் நிரந்தரமாக நின்று விட்டிருக்கின்றது மாபெரும் கலை. புனிதர்களின் கண்களின் பெருங்கருணை. மரியின் கண்கள் மட்டுமல்ல அவள் உடைகளின் நெளிவில் அவள் கூந்தலின் அலைகளில் அவளுடைய சிறிய பாதங்களில் அவள் குழந்தையை ஏந்தியிருக்கும் மென்மையில் எங்கும் கருணை மட்டுமே. ஆயினும் அது சிலைதான். கலையின் வழியாக தெய்வங்களைக் காட்டிவிடமுடியுமா என்ன? கலை எத்தனை எளியது. எத்தனை வரையறைக்குட்பட்டது. கல்லின் வரையறை, பொன்னின் வரையறை, உருவங்களின் வரையறை. அழகு என்னும் மகத்தான வரையறை. ஆயினும் கடவுளரை காட்ட வேண்டுமென்றால் மானுடனுக்குக் கலையன்றி வேறென்ன வழி இருக்கிறது?

 வெளியே வரும்போது நெஞ்சை விம்மச்செய்யும் ஒரு பெருமூச்சுடன் உணர்ந்தேன். இந்த பேராலயத்துக்கு ஆறுமடங்கு இருக்குமாம் ரோமாபுரியின் பேராலயம். ஒருவேளை இந்தச் சிறிய வாழ்க்கையின் நான் அங்கே செல்லமுடியாமலே போகலாம். ஆனால் சிலைகளில் இருந்து தெய்வங்களுக்குச் செல்லும் கற்பனையால் இவ்வாலயத்தில் இருந்து அவ்வாலயத்திற்குச் செல்கிறேன் இப்போது. அதன் பிரம்மாண்டமான கலைவெளியில் ஒரு சிறிய பூச்சியாக ஊர்ந்து செல்கிறேன். நான் என்ற எளிமையை ஒரு கணமும் நான் என்ற மகத்துவத்தை மறுகணமும் உணர்ந்தபடி நடக்கிறேன். அதன் வானில் நிறைந்திருக்கின்றது மைக்கேலாஞ்சலோவின் பெருங்கனவு. காலத்தை தனக்குத் திரைப்புலமாக விரித்துக்கொண்ட வல்லமை உடையது அது.

 

 

 ஆயினும் எளிய தச்சன்மகனுக்குப்போய் எதற்காக இந்த ஆடம்பரம்? இத்தனை பொன்னை அவன்பெயரால் குவித்து வைத்தால் எப்படித்தாங்குவான் அவன்? அவனுடைய காட்டுச்சுனை போன்ற எளிய சொற்களின் மீது இந்த பிரம்மாண்டமான கலைச்சிகரங்களை ஏற்றி வைத்தால் இவற்றை விலக்கி அச்சொற்களை சென்றடைய முடியுமா என்ன? இங்கே ஒவ்வொன்றிலும் திமிறியெழும் ஆடம்பரம் அதற்குள் உள்ள அதிகாரத்தைச் சுட்டுகிறது. அதிகாரம் சுயமுனைப்பின் அறுவடை. சுயமுனைப்போ அனைத்து தியாகங்களுக்கும் எதிரானது. தியாகங்களினால் மட்டுமே நெருங்கக்கூடிய அவன் மாளிகையின் படிகள் எப்படி பொன்னால் அமையமுடியும்?  எங்கிருந்து வந்து எதைத் தீண்டியிருக்கிறது இந்த பேராலயம்?

 எத்தனை எளிமையானவை அவனுடைய சொற்கள்! நாற்பது வருடங்களுக்கும் மேலாக அனேகமாக தினமும் அவனுடைய ஒருவரியையேனும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மண்ணில் மாபெரும் ஞானம் ததும்பிய சொற்கள் நிகழ்ந்துள்ளன. பெருங்கருணை விளங்கிய சொற்கள், கூரிய நீதி சுடர்ந்த சொற்கள், முடிவில்லாத அழகு நிறைந்த சொற்கள் பிறந்துள்ளன. அவன் சொற்களின் அளவுக்கு எளிமை எச்சொற்களிலும் கூடவில்லை. பாலைவனத்து சிற்றோடை போல தெளிந்தவை. கைக்குழந்தை தேடி எடுத்து பட்டுச் சிறுகையில் பொத்தி வைத்திருக்கும் ஈரமான வெதுவெதுப்பான கூழாங்கல் போல சர்வசாதாரணமான பேரெழில் கொண்டவை.

 ஏனென்றால் அவை ஞானதாகிகளுக்காகச் சொல்லப்படவில்லை. சான்றோருக்காகவோ கற்றோருக்காகவோ சொல்லப்படவில்லை. ஏன், நல்லவர்களுக்காகக்கூடச் சொல்லப்படவில்லை. பூமிக்கு வந்த அருளாளர்களிடையே தச்சன்மகனை தனித்து நிறுத்தும் அம்சம் அது ஒன்றே. அவன் மட்டுமே கைவிடப்பட்டவர்களுக்காக, புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக, தோற்கடிக்கப்பட்டவர்களுக்காக, பாவத்தில் நீந்துபவர்களுக்காக பேசினான். பிறர் சமூகத்தின் கோபுரமுகடுகளை நோக்கிப் பேசினார்கள், அவனே அதன் அழுக்கு ஓடைகளை நோக்கிப் பேசினான். பிறர் கல்விச்சாலைகளை நோக்கிப் பேசினார்கள் அவன் போகசாலைகளை நோக்கிப் பேசினான். பிறர் அவர்களின் மகத்துவத்தை அறியும் வல்லமை கொண்டவர்களுக்காகப் பேசினார்கள். அவனோ அவனை சிலுவையில் ஏற்றுபவர்களுக்காகப் பேசினான்.

 என் இருபதுவயதில் அவனை மீண்டும் சுங்கக்காரர்களும் பரிசேயர்களும் சிறையிட்டு வைத்திருப்பதைக் கண்டேன். அவனை விட்டு வெகுதூரம் விலகிச்சென்றேன்.எத்தனை தேவாலயங்கள். வானபரியந்தம் ஏறி இல்லை என்று கைவிரித்து நிற்கும் சிலுவைகள் [ராஜசுந்தர ராஜனின் கவிதை] பின்பு ஒருநாள் ஒரு கடற்கரைக் குடிலில் புகைபடிந்த சிறிய கண்ணாடிக்குப்பிக்குள் தாமரையில் தனியிதழ்போல நின்ற மண்ணெண்ணைச்சுடரின் வெளிச்சத்தில், கயிறுகொண்டு காதுடன் கட்டப்பட்ட உடைந்த மூக்குக்கண்ணாடியின் செவ்வொளி மின்னும் கீழ்ப்பிறை வளைவுவழியாக குனிந்து விவிலியத்தைப் படிக்கும் ஒரு அன்னைமுகத்தில் மீண்டும் அவன் சொற்களை கண்டெடுத்தேன். அவள் பறக்கும் கூந்தலிழைகளில், ஒளிபரவிய கன்னங்களில், நடுங்கி அசையும் கரிய உதடுகளில் மண்ணில் சாத்தியமான மிகப்புனிதமான ஒன்று நிகழ்வதைக் கண்டேன். ஏனென்றறியாமல் நான் கண்ணீர் மல்கினேன்.

 பின்பு எனக்காக அவனைக் காட்டித்தருபவர்களை தேடியலைந்தேன். தாகம் கொண்டவன் என்ன செய்தாலும் அகம் நீர் நீர் என எண்ணிக்கொண்டிருப்பதைப்போல. அவனை நான் இந்த ஆலயங்களில், ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடி எனக்கு எனக்கு என தவிக்கும் உலகியல் வேண்டல்களில், எங்களிடம் வா எங்களிடம் வா என்று நச்சரிக்கும் மதவெறியர்களின் வெளிறிய சொற்களில் ஒருபோதும் கண்டடைய முடியாது என்று உணர்ந்தேன். ஒரு நாத்திகனுக்காவது என்றாவது அவன் சொற்கள் திறக்கக்கூடும். இந்த இறுகிய மதநம்பிக்கையாளர்கள் அவனை வெளியே விட்டு கதவைமூடி இறுகத்தாழிட்டுக் கொண்டவர்கள்.

 அவனை நான் தேடிச்செல்லவேண்டியதில்லை. என்னுடைய பாதை எதுவானாலும் அவன் அங்கே வந்தே ஆகவேண்டும். ஏனென்றால் அது அவனுடைய விதி. அவனை விட்டுச்செல்பவனை ஒருபோதும் அவனால் விட்டுவிட முடியாது. மழை பெய்து கொண்டிருந்த ஓர் இரவு. நான் என் தனி வீட்டில் என்னுடைய பழைய கட்டிலில் போர்த்திக் கொண்டு அமர்ந்து தல்ஸ்தோயின் நெஹ்ல்யுடோவின் மாபெரும் உயிர்த்தெழலின் கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். கந்தலுடுத்து வந்து அழைத்த எளியதச்சனின் சொல்லைக் கேட்டு படகுடன் கடலையும் விட்டு அவனைத்தொடர்ந்த பீட்டரைப்போல தன் மனசாட்சியைப் பின் தொடர்ந்து செல்வத்தை பதவியை குடும்பத்தை தாய்நாட்டை உதறிச் செல்லும் நெஹ்ல்யுடோவ் ருஷ்ய மொழியில் மனசாட்சியின் ஒளியைக் கோண்டுவந்தார் என்றார் லெனின்.

 

லெவ் தல்ஸ்தோய்

நாவலின் முடிவுவரியில் அலைகள் அடங்கி அமர்ந்து அனைத்தையும் ஒரேகணம் நினைவுகூர்ந்து நெஹ்ல்யுடோவ் பெருமூச்சுடன் அந்த மாபெரும் நூலைப்பிரித்தான் ”அனைத்துக்குமே இதில் பதிலைக் கண்டுகொள்ள முடியும் என்கிறார்கள்” என்று நினைத்தான். குத்துமதிப்பாக புதிய ஏற்பாட்டை திறந்து மாத்யூவின் நற்செய்தியை வாசிக்க ஆரம்பித்தான். ” அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி ‘விண்ணரசில் மிகப்பெரியவர் யார்?’ என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் அருகே நிறுத்தி பின்வருமாறு கூறினார். நீங்கள் மனம்திரும்பி சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என்று உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறுபிள்ளையைப் போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்”.

 அதுவே எனக்கான வழி என்றார் ருஷ்யக் கிழஞானி.  நூல்களிலும் உறவுகளிலும் பனிவெளியிலும் கண்ணீருடன் அலைந்து, ரயில் நிலையத்தில்  தனித்துக்கிடந்து இறந்து அவர் கண்டடைந்த மெய்ஞானம். என் கழுத்தில் எந்த அடையாளமும் தொங்க வேண்டியதில்லை. என் தலையில் எந்த நீரும் விழவேண்டியதில்லை. என்னால் எனது தனித்த  பாதைக்கு முன்னால் காற்றில் கரையும் முன் அவனுடைய பாதத் தடத்தைக் காணமுடிந்தால் போதும். இதோ வசந்தகுமார் சிகரெட் வாங்கும் பெட்டிக்கடையிலிருப்பவளின் இடையில் குட்டிவாய்க்குள் மொத்தக்கையையும் செருகி எச்சில் வழிய அமர்ந்திருக்கும் இந்தக் கரிய சிறுபிள்ளையை கையில் வாங்கி இவனை அவன் என என்னால் எண்ணமுடிந்தால் போதுமானது.

 மீண்டும் மீண்டும் அவனை என் ஆசிரியர்களாக வந்த பெரும் கலைஞர்களிடமே கண்டேன். அவர்கள் மட்டுமே அவனைக் கண்டிருக்கிறார்கள் என்றுணர்ந்தேன். இன்னொரு புத்துயிர்ப்பான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் கொலைப்பாவத்தைச் சுமந்து குருதிவழியும் இதயத்துடன் விபச்சார விடுதிக்குச் சென்று சோனியாவைக் காண்கிறான் ரஸ்கால்நிகா·ப். ஏசுவைத்தேடியலைந்தவவன் மக்தலீன் மேரியைக் கண்டடைந்தான். ஏனென்றால் அவன் ஏசுவாக ஆக ஆரம்பித்திருந்தான். இருவரும் பாவத்தில் கறைபடிந்த உடல்களை தியாகத்தால் கழுவி புதிதாகப்பிறந்தெழும் தருணம். விவிலியத்தை எடுத்து லாஸரஸ் உயிர்த்தெழுந்த கதையைப் படிக்கச் சொல்கிறாள் சோனியா. ரஸ்கால்நிகா·ப் படித்தான். தஸ்தயேவ்ஸ்கியின் சொற்கள்…

 ”அது உயிர்த்தெழும் லாசரஸைப் பற்றியது” அவள் திடீரென்று தீவிரமாக முணுமுணுத்தாள். திரும்பிக்கொண்டு அசைவில்லாது நின்றாள். தன் கண்களை அவனுக்காக உயர்த்தக்கூட அவள் தயாராகவில்லை. காய்ச்சல்கண்டவள் போல மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தாள். சிதைந்தது போல தண்டின்மீது அசைந்த மெழுகுவர்த்திச் சுடர் வறுமைமூடிய அந்த அறையையும் அதற்குள் நின்றபடி அழியாத அந்த நூலை வாசிக்கும் ஒரு கொலைகாரனையும் தாசியையும் மங்கலாக ஒளிரச்செய்தது . அந்த உயிர்த்தெழும் தருணத்தில் நான் என் கையிலிருந்து நடுங்கிய நூலின் ஒவ்வொரு எழுத்தும் பாலைநிலத்தில் பதிந்த அவனுடைய காலடிச்சுவடுகள் எனவே உணர்ந்தேன்.

 

ஃபயதோர் தஸ்தயேவ்ஸ்கி

இந்த வருடங்களில் என் மேஜை மீது எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது அவனுடைய சொற்களின் நூல். சஞ்சலங்களில், மன எழுச்சிகளில், தனிமையில், அச்சொற்களினூடாக அலைந்து  அதன் ஏதோ ஒருவரி என்னை வெளியே தள்ளும்போது மூடிவிடுகிறேன். ”அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்வீர்கள்”. வேர்கள் காயும் கோடையில் புதிதெனத் தளிர்க்கும் மரங்கள் மட்டுமே அறியும் அவன் ரகசியம்.

 இத்தனை வருடங்களில் நான் வாசித்த மேலை இலக்கிய நூல்களில் பாதிக்கும் மேலானவை எப்படியோ அவன் சொற்களில் இருந்து முளைத்தவை என்பதை எண்ணிக்கொள்கிறேன். எமிலி ஜோலா,  பேர் லாகர் குவிஸ்ட், நிகாஸ் கசந்த் ஸகீஸ், மேரி கொரெல்லி, லியூ வாலஸ், ஜோஸ் சரமாகோ…அவர்கள் வழியாகவே நான் அவனை இன்னும் அறிய முடிகிறது. ஏனென்றால் ஆன்மீகத்திற்கும் லௌகீகத்திற்கும் இடையேயான மாபெரும் இடைவெளியை உணர்ச்சிகளையும் கனவுகளையும் விசுவரூபம் கொள்ளச் செய்து நிறைக்க கலையால் மட்டுமே முடியும். எத்தனை மாபெரும் இலக்கிய ஆக்கங்கள். அவை சொற்களின் திருவிழாக்கள். சொற்கள் பொன்னொளி பெறும் தருணங்கள்.

 கலையையும் ஆடம்பரத்தையும் பிரிக்க முடியுமா என்ன? மானுடனுக்கு கலை என்பதே ஓர் ஆடம்பரம் அல்லவா? இந்த தேவாலயத்தை எதற்காக உருவாக்கினார்கள்? அவனுடைய தூய சொற்கள் அளித்த மன எழுச்சியை வேறு எப்படித்தான் சொல்வான் மானுடன்? அவனுக்கு கையில் கிடைப்பது எளிய கல், எளிய பொன் மட்டும்தானே? ரோமாபுரியின் புனித பீட்டரின் தேவாலயம் மகத்தானதுதான். ஆனால் அவனுடைய சொற்களின் மகத்துவத்தை உணர்ந்த மனம் கொண்ட எழுச்சியின் சிறிய துளிதானே அது?

 கதைகளில் ஒரு ஊமைச் சிறுமி இருந்தாள். தன் கனவு ஒன்றுக்குப் பதிலாக ஒரு சிறு கூழாங்கல்லை முன்னால் வைத்துவிட்டு கைகள் விரித்து உலகையையே சுட்டிக்காட்டி தன் உள்ளத்தைச் சொன்னாள். இந்தப் பேராலயம், ஏன் மண்ணில் எழுப்பப்பட்ட எல்லா பேராலயங்களும், அந்த தனிக்கூழாங்கல் போன்றவை. அதிக பட்சம் மனிதனால் அடையாளமாக வைக்கத்தக்கது அதுவே. இவை மானுடனின் சிறுமையையும் அவன் சொற்களின் மகத்துவத்தையும் சாட்சியப்படுத்தி நிற்கின்றன. மாபெரும் எளிமையை ஆடம்பரத்தால் சுட்டவேண்டுமென்றால் எத்தனை கோடிப் பொன் தேவையாகும்!

Nov 25, 2009 முதற்பிரசுரம்
மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

சாப்ளின்

$
0
0

11

சார்லி சாப்ளின் நடித்த படத்தை நான் பார்த்தது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது . வாழைக்குலைகள் விற்க அதிகாலைச் சந்தைக்கு போனால் இரண்டாம் ஆட்டம் படம் பார்ப்பது பொதுவான வழக்கம். குலைகளுக்குக் காவலாக நிற்பவனுக்கு தலைக்கு பத்து பைசா கூலி தருவோம். அருமனை கிருஷ்ணப்பிரியாவில் ஓலைக் கொட்டகைதான். மழைபெய்ய ஆரம்பித்துவிட்ட படங்கள்தான் அதிகமும் வரும். மழை இல்லாத அப்படங்களைப் பார்த்தால் எங்களூர் மக்கள் ஏதோ தப்பாக இருக்கிறதே என்று நினைப்பார்கள்.

பொதுவாக அன்றெல்லாம் புதிய படங்களைவிடப் பழைய படங்களைத்தான் எல்லாரும் விரும்பிப் பார்த்தார்கள். படங்கள் சாவகாசமாக இருக்கவேண்டும், கொஞ்சம் தூங்கி எழுந்தால் கூட ரொம்பதூரம் ஓடியிருக்கக் கூடாது. பன்னிரண்டு மணிக்கு தொடங்கும் ஆட்டம் காலை நான்கு மணி வரை நீள வேண்டும். ஆகவே ஓவல்டின், ரெமி முகப்பவுடர், சைபால் கால்களிம்பு முதலிய விளம்பரங்கள் முடிந்தபிறகு துண்டு படங்கள் போடுவார்கள். லாரல் ஹார்டி நகைச்சுவை, மிக்கி மௌஸ் கார்ட்டூன் இவற்றுடன் சாப்ளின் படமும் இருக்கும். சாப்ளின் ‘கோணக்கால்’ என்று சொல்லப்பட்டார் . லாரல் ஹார்டி மல்லனும் மாதேவனும் என்றும் கார்ட்டூன் படங்கள் பொம்மலாட்டம் என்றும் குறிப்பிடப்பட்டன.

கொட்டகையின் சொத்தாக இருந்து அனேகமாக தினமும் காண்பிக்கப்படும் இப்படங்களை எல்லாருமே பலநூறுமுறை கண்டிருப்பார்கள். படத்தில் தெளிவாக எதுவுமே தெரியாது இருந்தாலும் ஜனங்கள் பயங்கரமாகக் கூக்குரலிட்டுக் கூவிச் சிரித்து ரசிப்பார்கள். நான் பார்த்த சாப்ளின் படம் ஏதோ சம்பந்தமில்லாத நிழலசைவுகளாகவே இருந்தது. அதில் கோணக்கால் ஒரு பெரிய தொப்பியை வைத்துக் கொண்டு, அடிக்கடி அதைத் தூக்கிப் புருவத்தை மேலேற்றினார். அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. பல வருடங்கள் கழித்து பெங்களூர் அரங்கு ஒன்றில் நடந்த திரைப்படவிழாவில் சாப்ளினின் எல்லா படங்களையும் பார்த்தேன். பெரும்பாலான சமகால எழுத்தாளர்களைப் போலவே நானும் கோமாளியான தத்துவ ஞானியின் ரசிகனானேன் .

சின்னவயதில் என் குழந்தைகள் அஜிதன் சைதன்யா இருவருக்கும் சாப்ளின் மீது மோகம், பக்தி, பரவசம் எல்லாமே உண்டு. எல்லா சனி ஞாயிறுகளிலும் கிரெட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ் இரு படங்களையும் ஒரு சடங்கு போலத் தவறாமல் பார்த்து விடுவார்கள். இந்த வெறி எல்லையை மீறுகிறதோ என்று எனக்கு சந்தேகம். மேலும் நான் மிக முக்கியமாக ஏதேனும் செய்துகொண்டு இருக்கும் போது அந்த இசை தேவையில்லாத நடன அசைவுகளை என் உடலில் உருவாக்கி விடுகிறது. சாப்ளின் சீரியஸான ஆள் இல்லை, கோமாளிதான் என்று சொல்லிப்பார்த்தேன். சைதன்யா வாஜ்பாய் கூடத்தான் சாப்ளின் மாதிரி ஆடுகிறார் என்று சொல்லி ஒரு நாள் காட்டவும் செய்தாள். அப்போது தொலைக்காட்சி மின்னழுத்தக்குறைவால் நெளிந்து கொண்டிருந்தது. வாஜ்பாய் இடுப்பை மட்டும் நெளித்து காக்ரா நடனம் ஆடினார்.

திடீரென்று டிவியில் கோளாறு ஏற்பட்டுப் படம் பார்க்கமுடியாமலாயிற்று . ஒலி மட்டும்தான். நானும் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு சனியன்று அறைக்குள் இசைகேட்க எட்டிப் பார்த்தேன். ஒரே ஆட்டமாக இருந்தது. என்ன இங்கே என்றேன். ”சாப்ளின் ஆட்டம் அப்பா” என்றாள் சைதன்யா. ஆரம்பத்தில் வெறுமே இசையை மட்டும் வைத்துக் கேட்டு காட்சிகளை கற்பனையில் கண்டு சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பிறகு அஜிதன் சாப்ளின் ஆக நடிக்க ஆரம்பித்தான். மற்ற அத்தனை கதாபாத்திரங்களும் சைதன்யா. ஆட்டம் கற்பனைகள் நிறைந்து படர்ந்து பல திசைகளுக்கு சென்றது. சாப்ளின் பள்ளி ஆசிரியர்களை அறவே வெறுத்தார். முதல் இடம் வந்த மாணவனைக் குத்தினார்.

பிறகு இசையே வேண்டாம் என்றாயிற்று. நானும் ஆட்டத்தில் புகுந்து சாப்ளினிடம் உதை வாங்கும் குண்டு மனிதனோ போலீஸ்காரனோ ஆனேன். புதிய புதிய சாப்ளின் கதைகளை அந்தக் கணங்களில் உருவாக்கினோம். சாப்ளின் எம்ஜிஆர். சாப்ளின் சிவாஜி. சாப்ளின் தாத்தாக்கள்.

சாப்ளின் விளையாட்டு மேலும் நுட்பங்கள் கொண்டதாக மாறியது. எங்கும் எப்போதும் ஒரு புருவத் தூக்கலினாலோ முகச்சுளிப்பினாலோ சாப்ளினை கொண்டு வந்துவிடலாம் என்றாயிற்று. சாப்ளினுக்குச் சிரிப்பூட்டும் விசித்திர நபர்கள் மட்டுமல்ல சாப்ளினே எங்கும் கண்ணில் பட ஆரம்பித்தார். பேருந்தில் பள்ளிக்கு செல்லும் போது சைதன்யா என்னருகே உட்கார்ந்து “அப்பா இண்ணைக்கு சாப்ளின் யாரு?” என்பாள். குடை பேருந்தில் கண்டபடி மாட்டி இறங்கச் சிரமப்படும் ஆசாமி, கண்ணாடியை தூக்கிவிட்டு முகம் சுளிக்கும் பள்ளி ஆசிரியர்…. யார் வேண்டுமானாலும் சாப்ளினாகலாம். அக்கணமே சைதன்யா கண்டுபிடித்து வாயைப்பொத்தி சிரிப்பை அடக்குவாள். கண்கள் மட்டும் ஒளிவிடும்.

சாப்ளின் இல்லாத மனிதர்களே இல்லை. அத்தனை பேரிலும் மூடிகளைத் தூக்கி சாப்ளின் பொங்கிக் கசிந்து கொண்டே இருக்கிறார். இப்போது சாப்ளின் படங்களைப் பார்ப்பதில்லை. அவை சாப்ளினை ஒரு தனிமனிதராக மாற்றிவிடுகின்றன.

முதற்பிரசுரம் Aug 5, 2012

தொடர்புடைய பதிவுகள்

கள்ளுக்கடைக் காந்தி

$
0
0

1

சென்ற செப்டெம்பர் முப்பதாம் தேதி ஒரு சினிமா வேலையாக வைக்கம் சென்றிருந்தேன். நண்பர் மதுபாலும் தயாரிப்பாளர் சுகுமாரும் உடனிருந்தனர். திரும்பும் வழியில் மதிய உணவை எங்கே சாப்பிடுவது என்று எண்ணியபோது சுகுமார் ஃபோன் செய்து அவரது நண்பர் நந்தகுமாரிடம் விசாரித்தார். சேர்ப்பு என்ற ஊரில் உள்ள ஒரு கள்ளுக்கடை சிறந்தது என்றார் நந்தகுமார். சேர்ப்பு நடிகர் மம்மூட்டி பிறந்த ஊர்

கள்ளுக்கடையை விசாரித்துத் தெரிந்துகொண்டோம். வேம்பநாட்டுக்காயலின் கரையில் குடைப்பனையோலைகளால் கட்டப்பட்ட கள்ளுக்கடை. ஆனால் பல அறைகள் கொண்டது. தனியாக அமர்ந்து குடிப்பதற்கான சிறிய அறைகள். கூடங்கள். நாங்கள் செல்லும்போது பின்மதியம். ஆகவே கள் குடிப்பவர்கள் இல்லை. மதிய உணவுக்கு வந்தவர்களே அதிகம் இருந்தனர். மதுபால் பிரபல நடிகரும் கூட என்பதனால் அரசமரியாதை அளித்தனர்

மயக்கிய மரவள்ளிக்கிழங்கு, ஆப்பம் [அல்லது கள்ளப்பம்] . உடன் சாப்பிட மாட்டிறைச்சிச் பொரியல், வறுத்த பன்றி, அயக்கூற மீன்கறி, சாளைமீன் கறி வறுத்த கரிமீன், நண்டுப்பொரியல், சிப்பி பொரியல் என கொண்டுவந்து வைத்துக்கொண்டே இருந்தனர். சுகுமார் ஒரு சிறந்த சுவைஞர், சாப்பாட்டுக்கலைஞர் என்றே சொல்லலாம். கூடவே கள்.

சமீபத்தில் இத்தனை சுவையாக ஓர் உணவை உண்டதில்லை. ஒவ்வொன்றும் அதன் செவ்வியல் சுவையில் அமைந்திருந்தன. மாமிசங்கள் அனைத்துமே புதியவை, இளையவை. மீன் நேராக நீரிலிருந்தே எடுக்கப்பட்டதுபோல. மிதமான காரம். நல்ல தேங்காய் எண்ணை. எந்த உணவும் பழையதல்ல என்றார் சுகுமார். அங்கே குளிர்சாதனப்பெட்டியே இல்லை.

சமையற்காரரை அழைத்து கட்டித்தழுவி பாராட்டிவிட்டு கிளம்பினோம். மாட்டுக்கறி வறுவலை நல்ல நிபுணர் மட்டுமே சரியாகச்செய்ய முடியும். நன்றாகவெந்தால் கரி. வேகாவிட்டால் நார். பன்றிக்கறி வேறுவகையில் சிக்கலானது. வேகாவிட்டால் சாப்பிடவே முடியாது. வெந்து மிகையானால் உருகிவழியும். அவை தெய்வங்களுக்குப் படைக்கும் தரத்தில் இருந்தன

ஏனென்றால் சேர்ப்பில் இந்தக்கடைக்கு வருபவர்கள் அனைவரும் உள்ளூர்க்காரர்கள். கொஞ்சம் தரம் குறைந்தால்கூட மறுநாள் வரமாட்டார்கள். பெருங்கூட்டம் வரும் என்பதை கடையைப்பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடியும். ‘பாதிக்குமேல் பார்களை பூட்டிவிட்டார்கள் சார். ஆகவே இங்கே நல்ல கூட்டம். சாயங்காலம் வந்தால் நல்ல நாட்டுப்புறப்பாடல் பாடும் நாலைந்துபேர் இருப்பார்கள். கொஞ்சம் காத்திருப்பீர்கள் என்றால் இப்போதே வரச்சொல்கிறேன்’ என்றார் கடைக்காரர். ‘இல்லை கிளம்பவேண்டும்” என்றேன். “மிமிக்ரியும் காமெடியும் செய்வார்கள் சார்” கடை மிகச்சுத்தமாகவும் இருந்தது

அது அந்த ஊரின் ஒரு பண்பாட்டு மையம். நல்லகுடி, நல்ல உணவு, நல்ல கேளிக்கைகள். குடி என்பது கேளிக்கையுடன் தொடர்புகொண்டிருக்கையில்தான் ஏதேனும் பொருள் கொண்டதாக ஆகிறது. தமிழகத்தின் டாஸ்மாக் கடைகள் அருவருப்பான இடங்கள். அங்கே சலம்பல்கள்தான் எந்நேரமும். அங்கு விற்கப்படும் உணவை அந்தச் சாராயம் மட்டுமே எரிக்கமுடியும். அனேகமாக பிற இடங்களில் மிஞ்சும் பொருட்கள்தான் டாஸ்மாக் அருகே சூடுபண்ணி விற்கப்படுகின்றன.

குடி உயர்தரக்கேளிக்கையாக உள்ள இடங்கள் சென்னையில் உள்ளன. ஆனால் அமர்ந்து எழுந்தாலே ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் செலவாகிவிடும். ஏழைக்கு குடி என்பது ஒரு பெரிய வதையாக, அவன் சிக்கிக்கொண்ட நுகமாகவே உள்ளது. அவனை பிடித்துநிறுத்தி மடியை அவிழ்த்து பணத்தை பிடுங்கிக்கொள்கிறது அரசு. ரசாயனத்தை அவன் தலையில் கட்டுகிறது.

இந்தக்கள்ளுக்கடை போன்ற ஒன்று எவ்வகையிலும் தீங்கல்ல என்றே எண்ணுகிறேன். ஏழைகளுக்கும் கட்டுப்படியாகும் ஒரு கேளிக்கைமையம். கள் எத்தனை குடித்தாலும் ஒருவனை வேலைசெய்யமுடியாத அளவுக்கு நோயாளியாக்குவதில்லை. கண்மண் தெரியாத போதையை அளிப்பதில்லை. வயிறு நிறைந்தாலும் சட்டைப்பையைக் காலியாக்குவதில்லை. ஒரு குப்பிப் கள் 25 ரூபாய்தான். இரவெல்லாம் அமர்ந்திருந்தால்கூட இருநூறு ரூபாய்க்குக் குடிக்கமுடியாது.

கள்ளுக்கு அளிக்கப்படும் பணம் பெரும்பகுதி நேரடியாக விவசாயிக்குச் செல்கிறது. கேரளக் கிராமியப்பொருளியலின் அடிப்படை அது. ஆந்திரத்திலும் கேரளத்திலும் கள் முக்கியமான குடி. ஆனால் மும்மடங்கு பனைகள் கொண்ட , பனைப்பொருளியல் என்று சொல்லப்பட்ட ஓர் அமைப்பு நிலவிய தமிழகத்தில் கள் தடைசெய்யப்பட்டிருக்கிறது. கரும்புக்கழிவு கொள்முதல்செய்யப்பட்டு சாராயமாக ஆக்கப்பட்டு அரசு முத்திரையுடன் விற்கப்படுகிறது. அந்தப்பெரும்பணம் முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செல்கிறது.

வறண்ட நிலம் கொண்டதாகையால் தமிழகத்தின் பனைக்கள் மிகமிகத்தரமானது. அதற்கிணையான கள் ராயலசீமாவின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். கேரளத்தின் கள் தென்னையிலிருந்து எடுக்கப்படுவது. பனங்கள்ளின் மெல்லிய தித்திப்பும் மணமும் அதற்கில்லை. சென்ற பத்தாண்டுகளில் கேரளத்தின் தென்னைகளில் மண்டரி என்னும் வாடல்நோய் வந்து தேங்காய் உற்பத்தி அனேகமாக இல்லை என்னும் நிலை. கள் இல்லாமல் இருந்திருந்தால் கேரள விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். இப்போதைய பார் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு மேலும் உதவிகரமாக உள்ளன.

mahatma-gandhi

பேசிக்கொண்டே வந்தோம். காந்தியின் கள்ளுக்கடை மறியலைப் பற்றிச் சொன்னேன். காந்தியத்தை இறுக்கமான மதநம்பிக்கையாகக் கொள்ளாமல் இருந்தால் இன்றைய சூழலில் காந்தியவாதிகள் கள்ளை ஆதரிக்கவேண்டும் என்று தோன்றியது. அது கிராமிய உற்பத்தி. வட்டார நுகர்வு கொண்டது. சிறிய அலகுகளாகவே அந்த வணிகம் நிகழமுடியும். மையப்படுத்தப்பட்ட கொள்ளைலாப அமைப்புகளுக்கு எதிரானது அது. வேளாண்மைக்கு அணுக்கமானது. பெருந்தொழில் மூலம் உருவாக்கப்பட்டு கொள்ளைலாபத்திற்கு விற்கப்படும் ரசாயனத்திற்கு மிகச்சிறந்த மாற்று.

காந்தி மாட்டிறைச்சி உண்பதைப்பற்றி என்ன சொல்லியிருப்பார் என்றார் மதுபால். வாழ்நாளெல்லாம் பசுக்கொலைக்கு எதிராகப் பேசியவர் காந்தி. ஆனால் அதை பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மீது செலுத்தும் ஆதிக்கமாக, அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளாக நடைமுறைக்குக் கொண்டுவருவதை அவர் ஒருதருணத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அத்தனை சிறுபான்மையினரும் தங்கள் முழுமையான சுதந்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஓர் அமைப்பையே அவர் முன்வைத்தார். அவரது ராமராஜ்யம் அதுதான்.

மாட்டிறைச்சிக்கு எதிராக இன்று சில மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள தடை என்பது அரசுவன்முறை, அதற்கு ஆதரவாக எழும் மனநிலைகள் ஃபாசிசம் என்றே நான் நினைக்கிறேன். இந்தியா என்னும் பலபண்பாட்டுநிலம் ஃபாசிசத்தை தூக்கி வீசும் என நம்புகிறேன்

ஆகவே காந்தி பிறந்த இந்த நாளை அற்புதமான அந்த கள்ளுக்கடைக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். காந்தியுடன் அங்கே ஓர் மதிய உணவை அருந்தியதாக எண்ணிக்கொள்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

$
0
0

1

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ”என் பெண் வருகிறாள்” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில், ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த, குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ”ஹாய்!”என்றாள்.

”என்னைத்தெரியுமா?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு.

”சொல்லுங்க” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர், ”இவருதான் எழுத்தாளர் ஜெயமோகன். சொல்வேனில்ல?”என்றார்.அவள் கண்களை விரித்து ”அப்டியா? ஸாரி, நான் கதைகள் படிக்கிறதில்லை” என்றாள்

”என்ன படிப்பே?”என்றேன்.

”எனக்கு சூழலியல் தான் பிடிச்ச விஷயம். அதிலேதான் மேலே படிக்கணும்னு இருக்கேன். பறவைகளிலே தனி ஈடுபாடு உண்டு…”

சூழலியல் என்ற சொல்லை அவளிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. ”தமிழ்லே யாரோட எழுத்து படிப்பே?”

”தமிழ்லே தியடோர் பாஸ்கரன் மட்டும்தானே தொடர்ந்து எழுதறார்?”

சரிதான், அவரிடமிருந்து கிடைத்த சொல். ஒரு மொழியில் உண்மையான சிந்தனைகள் உருவாகவேண்டுமென்றால் அதற்கான கலைச்சொற்கள் உருவாக வேண்டுமென்று நம்புகிறவர் அவர். ”தியடோர் பாஸ்கரன் ரொம்ப கஷ்டப்பட்டு கலைச்சொற்களை உண்டு பண்ற மாதிரி இருக்கில்ல?”என்றேன், வேண்டுமென்றே

”அவர் எங்கியோ சொல்லியிருக்கார், ஒரு கலைச்சொல்லுங்கிறது ஒரு சமூகம் ஒருவிஷயத்தைப்பத்தி அடைஞ்ச ஞானத்தை சுருக்கி திரட்டி வச்சிருக்கிற புள்ளின்னு. ஒரு விதை மாதிரி அது. அதை நட்டு தண்ணி ஊத்தினா முளைச்சிரும். சூழலியல்ங்கிறது எக்காலஜிங்கிற சொல்லுக்கு தமிழாக்கம். ஆனா அதுக்கு தமிழிலே வேற ஆழமான பொருளும் இருக்கு. சூழ்ந்திருக்கிற எல்லாத்தப்பத்தியும் அறியற துறைன்னு சொல்லலாம்.”

”மரம் செடி கொடீன்னு பேச ஆரம்பிச்சா அறுத்துத் தள்ளிருவா” என்றார் நண்பர்.

”எனக்கும் சூழலியலிலே ஆர்வம் உண்டு” என்றேன்

”நிஜம்மாவா?”

”ரொம்ப இல்லை, கொஞ்சமா” என்றேன். ”என்னைப்பொறுத்தவரை இயற்கைங்கிறது மனசோட வெளித்தோற்றம். அப்டித்தான் சங்ககாலம் முதல் சொல்லியிருக்காங்க…”

”அது அத்வைதமில்ல?”

”விஞ்ஞானவாத புத்தம், அத்வைதம் எல்லாம் அதித்தன் சொல்றது. எல்லாமே பழைய தமிழ் ஞானத்தோட வளர்ச்சிப்படிகள்தான்…”

”நீங்க பேசிட்டிருங்க, ஒரு நிமிஷம்”என்று நண்பர் எழுந்துசென்றார்.

நான் எட்டிப்பார்த்தேன். ”என்ன?” என்றாள் அவள்.

”நீ யார் கூட வந்தே?”

”தனியாத்தான்…ஏன்?” என்றதுமே புரிந்துகொண்டு ”பைக்கைச் சொல்றீங்களா? அதான் எனக்கு வசதி…” என்றாள்.

”மொரட்டு வண்டிமாதிரி சத்தம் கேட்டது”

”ஆமா, அதுக்கென்ன? நானே தனியா வயநாட்டுக்கும் டாப்ஸ்லிப்புக்குமெல்லாம் போறேனே அப்றமென்ன?”

”சுதந்திரமான பொண்ணா உணருறதுக்கு அது உதவியா இருக்கோ?”

”ஆமான்னு வைச்சுக்கிடுங்க..”

”இந்த டிரெஸ்…”

”அதுவும்தான். ஜீன்ஸ்தான் எனக்குப்பிடிச்ச டிரெஸ். எப்டிவேணுமானாலும் இருக்கலாம். ஆனா மேலே முரட்டுத்தனமா ஒண்ணும் போட்டுக்க மாட்டேன்… ஐ லைக் மை பூப்ஸ். பெண்ணுக்கு மார்புகள்தான் அதனி அழகு இல்லியா? மார்புகளோட வடிவம் தனியா தெரியணும்னு தோணும்…”

என் வளர்ப்பில் அப்படிப்பட்ட பேச்சுக்கு இடமில்லை. ஆனால் அவள் கண்களில் முகத்தில் எந்தவிதமான தயக்கமும் கூச்சமும் இல்லை. நான் அருகே இருந்த புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன். பறவைகள். ”க.ரத்னம் தமிழ்நாட்டுப் பறவைகளைப்பத்தி எழுதின புஸ்தகத்தைப் படிச்சிருக்கியா?”

”நல்ல புத்தகம். ஆனா அதுமாதிரி நிறைய வேணும். இயற்கையைப்பத்தி ஒரு மொழியில என்ன இருக்குங்கிறது ரொம்ப முக்கியம். நம்ம பறவைகளைப்பத்தி வெளிநாட்டுக்காரங்க முழுமையா எழுதிர முடியாது… பறவைங்கிறது ஒரு பண்பாட்டுப்பொருளும்கூட, இல்லியா? ”

”அப்ப உன்னோட எதிர்காலம் இதிலேதான்…”

”கண்டிப்பா. நான் பிளஸ்டூ முடிக்கிறதுக்குள்ள அப்பாகிட்டே சொல்லிட்டேன். ஐ ஹேவ் மை ஓன் டிரீம்ஸ்”

நான் உள்ளுக்குள் புன்னகைசெய்தபடி ”கல்யாணம் குடும்பம் எல்லாத்தைப்பத்தியும்…?” என்றேன்

”ஆமா. வை நாட்? எனக்கு ஒரு துறையில ஆர்வம் இருக்குன்னா தோட ஒத்துப்போற ஆள்தானே வேணும்?” அவள் கண்களையே பார்த்தேன்.துல்லியமான கரிய பளிங்குகள்.

”சரிதான்..”என்றேன் ‘அப்டி யாராவது கண்ணுக்கு படறானா?”

”சேச்சே. இப்ப அப்டில்லாம் இல்லை. இப்ப எல்லாரும் ஜஸ்ட் ·ப்ரண்ட்ஸ் மட்டும்தான்… அதெல்லாம் அப்றம். உங்க கதைகளிலே சூழலியல் வருமா?”

”மனசோட வடிவமா வரும். அதாவது எதெல்லாம் அந்த கதைச் சந்தர்ப்பத்திலே உள்ள மனஓட்டத்தைக் காட்டுதோ அதுமட்டும் வரும்..”

”எனக்கு நேர்மாறா இயற்கைதான் மனசுன்னு தோணுது…”என்றாள் அவள் .”இதுவரை மனித இனம் தன்னைப்பத்தியே நினைச்சிட்டிருந்தது. இப்பதான் தன்னை இயற்கையோட ஒரு துளியா பார்க்க ஆரம்பிச்சிருக்கு. சூழலியல்தான் இனிவரக்கூடிய எல்லா அறிவியலுக்கும் தாய். இனிமே நோபல்பரிசுகள் எல்லாமே சூழலியல் அறிஞர்களுக்குத்தான்…”

நான் சற்று முன்னகர்ந்து புன்னகையுடன் ” என்ன, நோபல் பரிசு வாங்குற உத்தேசம் இருக்கா?”என்றேன்.

அவள் வெட்கச்சிரிப்புடன் மேலுதட்டை இழுத்துக் கடித்தபடி உடலை நெளித்து பார்வையை சன்னல் நோக்கித்திருப்பிக் கொண்டாள். முகமும் கழுத்தும்கூட சிவந்து கன்றியவை போலிருந்தன.

நண்பர் வந்து அமர்ந்து ”ஸாரி”என்றார்

”உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா… நான் சொன்னேன்ல வெக்கப்படுறப்பதான் பெண் அழகா இருக்கா”

”வெக்கமா, இவளா?”

”ஆனா எப்ப எப்டி வெக்கபடணும்னு அவளுக்கு தெரிஞ்சிருக்கு” என்றேன். அவள் திரும்பிப் பார்த்து சிரித்தபடி புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்ல முற்பட நான் ”சிடி”என்றேன். சிரித்தபடி வந்து எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் பேரழகி.

[ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்] [மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Jun 28, 2004]

தொடர்புடைய பதிவுகள்

விளையாடல்

$
0
0

இந்தியப்பயணம் முடிந்து திரும்பியபின் கொஞ்சநாள் நினைவுகளை மீட்டுவதுதான் இன்பமாக இருந்தது. என்னசெய்திருக்கலாம் என்ன செய்திருக்கக் கூடாது என்ற கருத்துக்கள், போன இடங்களில் பிறர் கவனிக்கத்தவறி தாங்கள் கவனித்த விஷயங்கள் பற்றிய வருணனைகள் என்று அதற்கு பல தளங்கள். தொலைபேசியில் பேசும்போது சிவா சொன்னார் ”ஒரு மனக்கொறைதான் கெடந்து உறுத்துது. அந்த பூசாரிப்பையனுக்கு ஒரு அம்பதுரூபா கையிலே கொடுத்திருக்கலாம்”

சிவா சொன்னது பன்னஹல்க அஜய்குமாரைப் பற்றி. நல்கொண்டா அருகே பன்னகல் என்ற ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே ஆந்திர தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் இருந்த சிவன் கோயில் ஒன்று இருந்தது. காகதீய பாணியில் அமைந்த கன்னங்கரிய கடப்பைக்கல் ஆலயம். இந்தவகைக் கோயில்களில் நுட்பமான சிற்பங்கள் செறிந்த முகமண்டபங்கள் பேரழகு கொண்டவை. மழைபெய்துகொண்டிருந்த காலைநேரத்தில் யாருமே இல்லாத கோயிலின் உள்ளே சுற்றி வந்தோம்.

அப்பகுதியெங்கும் மானுட சலனமே இல்லை. மண்டபங்கள் ஒழுகிக்கொண்டிருந்தன. தூண்கள் ஈரக்கருமையில் மின்னின. கைமுட்டி அளவுள்ள யானைச்சிலைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உருவான மண்டப விளிம்பின் நுட்பத்தை பார்த்தபடி கோயிலைச் சுற்றி நடந்தோம். கருவறைக்குள் ஒற்றை விளக்கொளியில் கரும்பளிங்கு லிங்கம் மௌனத்தில் அமர்ந்திருந்தது. வெளியே மண்ணில் புதைந்த காது உடைந்த கரிய நந்தி.

பன்னகல்க அஜய்குமார். 

கோயிலுக்குப்பின்னால் ஒரு திறந்தவெளி சிற்பக் காட்சியகம். அங்கே சிற்பங்கள் மழையில் நனைந்து தங்கள் நிரந்தரமான முகபாவனைகளுடன் நின்றன. அருகே இருந்த அருங்காட்சியகத்தில் வாட்ச்மேன் மட்டும்தான் இருந்தார். அவருக்கு தெலுகு மட்டுமே தெரியும். அவரிடம் தமிழில் விசாரித்து இன்னொரு கோயில் இருக்கும் விஷயத்தை தெரிந்துகொண்டோம். கிட்டத்தட்ட புதையல் ரகசியம் தெரிந்துகொள்ளும் அளவுக்கு சிரமப்பட்டோம்.

பார்ப்பவர்களிடமெல்லாம் அதை விசாரித்து விசாரித்துச் சென்றோம். எங்களுக்கு தெலுகு தெரியாதாகையால் வழிசொல்பவர் விரிவாக தெலுகுவில் சொல்வதையெல்லாம் தலையாட்டிக் கேட்போம். நன்றி சொல்லி பத்தடி முன்னால் சென்று அடுத்தவரிடம் விசாரிப்போம். முதலில் வழி சொன்னவர் புரியாமல் பின்பக்கம் பார்த்து நிற்பார்.

எல்லாரும் வயல் வெளியையே சொன்னார்கள். வழிதவறி விட்டது என்று பட்டது. சாரல் மழையில் நனைந்த கரும்புவயல்கள். சில இடங்களில் பசுமை அலையடித்த சோளவயல்கள். பல கிலோமீட்டர் தூரத்துக்கு மனிதர்களே கண்ணில் படவில்லை. பின்னர் பசுமையின் அலைகளுக்கு அப்பால் கடலில் கப்பலின் முகடு அலைபாய்ந்து தெரிவது போல ஒரு புராதன ஆலயத்தின் கோபுரம் தெரிந்தது.”அதோ”என்றார் செந்தில்.

கோயிலருகே வண்டி சென்றது. செம்மண் சேறு குழைந்த சாலையில் ஒரு சைக்கிளின் தடம் மட்டும் தெரிந்தது. நெருஞ்சி மண்டிய முற்றத்தில் இறங்கி கற்பாளங்கள் சரிந்துகிடந்த கோயில் முகப்பபை நோக்கிச் சென்றோம். இடிந்த கோயில் முகடு. ஆனால் மண்டபம் முழுமையாக, காகதீயக் கட்டிடக்கலைக்குரிய கச்சிதமான வளைவுகள் கொண்ட தூண்களுடன் ஒரு ராட்சத மலர் போல் இருந்தது. கோயிலுக்கு அருகே ஒரு பழைய சைக்கிள்.

கோயிலுக்குள் ஒரே ஒரு மனித ஆத்மா. பத்து வயதுப்பையன் ஒருவன் மேல்மூக்கில் குங்குமப்பொட்டுடன் சட்டை போடாத மெலிந்த உடல். பூணூல் இல்லை. பிராமணப்பையன் அல்ல. கழுத்தில் உருத்திராட்சம். வீரசைவமாக இருக்க வேண்டும். நம்மூர் வைராவிகள் போல.யாரது இங்கே என்று ஆச்சரியமாக எங்களைப் பார்த்தான். உள்ளே சென்றோம். அவன் பின்னால் வந்தான். சத்துக்குறைவின் விளைவான தேமல் கொண்ட உடல். கூடுகட்டிய மார்பு. அவன்தான் கோயில் பூசாரி. ஒன்பதாம் வகுப்பு மாணவன். உடல் அப்படிச் சொல்லவில்லை.

”இது என்ன கோயில்?”என்றார் வசந்தகுமார், மொண்ணையான தெலுங்கில். ”சாயா சோமேஸ்வர் குடி…”என்றான் பையன். ”பன்னகல்லில் இருக்கிற கோயில் எது?” அங்கே இருந்த வாட்ச்மேனுக்குகூட அது தெரிந்திருக்கவில்லை. ”அது பச்சன சோமேஸ்வர் குடி.”என்றான் பையன் இரண்டும் இரட்டைக் கோயில்களாம்.

கோயிலுக்குள் ஆசாரம் ஏதும் இல்லை. ஏனென்றால் அது தொல்பொருள்துறையின் பொறுப்பில் உள்ள கோயில். அஜய்குமார் அங்கே பரம்பரை பூசாரி. ஊரார் கொடுக்கும் சிறு ஊதியம் மட்டும்தான். எங்களை கருவறைக்குள்ளேயே கொண்டு போனான். லிங்கம் கருவறைக்குள் நான்கு படிகள் இறங்கிச்செல்லும் ஆழத்தில் இருந்தது. செம்பருத்திப்பூக்கள் போட்டு பூசை செய்து சிறு அகல்விளக்கும் கொளுத்தி வைத்திருந்தான்.

திரும்பி வெளியே வந்ததும் அஜய்குமார் ”இது சாயா சோமேஸ்வர். இந்த நிழல்தான் சுவாமி” என்று சொல்லி சிறிய விளக்கொன்றை ஏற்றினான். அந்த ஒளியில் லிங்கத்தின் நிழல் எதிரே தெரிந்த சுவரில் எழுந்து மெல்ல ஆடியது. அங்கே லிங்கத்தை வெளியே நிற்கும் பக்தர்கள் பார்க்க முடியாது. பூசைவும் வழிபாடும் நிழலுக்குத்தான். விசித்திரமான தத்துவ எண்ணங்களை உருவாக்கியது அதிர்ந்துகொண்டிருந்த நிழல்.

அஜய்குமார் நிழல் லிங்கத்துக்கு ஆரத்தி காட்டினான். பூ எடுத்து விபூதி பெற்றுக்கொண்டோம். அடுத்து சந்திராப்பூர் செல்ல வேண்டும். ஆகவே வெளியே சென்றோம். அஜய்குமார் பின்னால் வந்து கூச்சம் தெரிந்த முகத்துடன் ”சாமிக்கு எண்ணை வாங்க ஏதாவது கொடுங்க”என்றான். சிவா சட்டென்று கறாராக, ”இல்லை…”என்றார். அஜய்குமார் பின்வாங்கிவிட்டான்.நாங்கள் காரில் ஏறி திரும்பும்போது அஜய்குமார் பின்னால் வந்து வழியனுப்பினான். கோயில் பசுமைக்குள் மூழ்கிச்சென்றது.

”சார் நெனைக்கவே கேவலமா இருக்கு…அந்தப்பையன் முகம் கண்ணிலேருந்து மாறவே இல்லை. அவன் பொய் சொல்ற ஆளே கெடையாது. பிஸினஸிலே நாம் எத்தனை ஆளைப்பாக்கிறோம். அந்த கோயிலுக்கு எவனுமே வாற மாதிரி தெரியல்லை. அவன் ஒரு கடமைன்னு அதைச்செய்றான்…அவன் கேட்டப்ப ஒரு அம்பது ரூபாவ குடுத்திட்டு வரத்தோணல்ல… தரித்திரம் பேசிப்பேசி அதுவே வாயில வந்திட்டுது சார்” என்றார் சிவா. ”நெனைச்சா ஆறவே இல்ல”

காரணம் நாங்கள் பயணம் போகும் பாதை அது. எனவே செலவு எவ்வளவு ஆகும் என்ற ஊகங்களும் சிக்கனம் பற்றிய திட்டங்களுமாக இருந்தோம். ”இருபத்தஞ்சாயிரம் வரை ஓக்கே சார்” என்றார் செந்தில் ”அதுக்கு மேலேயே ஆகும்”என்றார் கிருஷ்ணன். ஆகவே போகும் வழியெல்லாம் வாயையும் வயிற்றையும் கட்டினோம். சத்திரங்களிலேயே தங்கினோம். எங்குமே காணிக்கை அன்பளிப்பு எதுவுமே அளிப்பதில்லை என்றிருந்தோம்.

ஆனால் கடைசியில் கணக்கு பார்த்தபோது திட்டமிட்டதில் பாதிகூட செலவாகவில்லை. ” பயந்து பயந்து கேனத்தனம் பண்ணிட்டோம் சார்” சிவா சொன்னார். ”இனிமே என்ன பண்றது?” நான் ”பேசாம அந்தப்பையனுக்கு கொஞ்சம் பணம் அனுப்பி வையுங்க”என்றேன். சிவா ”அட்ரஸ் தெரியல்லியே சார்” என்றார். ”தெரிஞ்ச அட்ரசுக்கு அனுப்புவோமே”என்றேன், ”கெடைக்கல்லேண்ணா திரும்பிவரும்ல?”

”ஒண்ணு சொல்றேன் ஜெயன், போஸ்டல் டிபார்ட்மென்ட் மாதிரி ஒழுங்கா இருக்கிற டிபார்ட்மெண்டே நம்ம நாட்டிலே கம்மி. அம்பதுபைசா கார்டு போட்டா அஸாமுக்கு போய் சேந்திரும். நம்மாளுக லெட்டர் போடாத தப்பை போஸ்டில தொலைஞ்சிட்டுதுன்னு சொல்லிச் சொல்லியே போஸ்டாபீஸ் மேலே பலருக்கும் தப்பு அபிப்பிராயம் இருக்கு. போஸ்டில் ஒரு லெட்டர் தொலையறதுக்கு பத்தாயிரத்தில ஒரு வாய்ப்பு கூட கெடையாது” என்றாள் போஸ்ட்மாஸ்டர் அருண்மொழி.

”ஏன்?”என்றேன். அருண்மொழி ”இந்த டிபார்ட்மெண்டே கம்மியா சம்பளம் வாங்கிற கீழ்மட்ட ஊழியர்களினாலதான் ஓடிட்டிருக்கு. மொத்த ஊழியர்களிலே அவங்கதான் தொண்ணூறு சதவீதம். அவங்களுக்கு இந்தவேலை மேலே ரொம்ப மரியாதை இருக்கு. இந்த வேலையினாலே தங்களுக்கு கௌரவம் இருக்குன்னு நெனைக்கிறாங்க. எங்க போஸ்ட்மேன் ஒருநாளைக்கு இருபது கிலோமீட்டர் வரை அலையறார். அவருக்கு எக்ஸ்டிரா டிபார்ட்மெண்ட் ஆளுன்னு பேரு. அரை ஊழியரோட சம்பளம்தான். ஆனா அவருக்கு வேலையிலே பரம திருப்தி. இந்தவேலை இல்லேன்னா அவரு கூலிவேலைல்ல செய்யணும்? போஸ்ட்மேன்னா ஊரிலே தெரியாத ஆள் இல்லை. எவ்ளவு மரியாதை!” என்றாள்

நான் சிவாவிடம் ஒரு விலாசத்தை உருவாக்கிச் சொன்னேன்.

P. Ajaykumar,
Temple Priest,
Chaya Somesvar Temple,
Pannakal,
Via Nalkonda ,
Andhra Pradesh

சிவா ”மொதல்லே ஒரு நூறு ரூபா அனுப்புவோம் சார். கெடைக்குதான்னு பாப்போம்”என்றார். ரூபாய் அனுப்பியதாக நாலைந்து நாள் கழித்துச் சொன்னார்.

பின்பு சிவா ·போன்செய்தார். ”சார், பணம் கெடைச்சிட்டுது. ரசீது இப்பதான் வந்தது” நான் சற்று ஆச்சரியத்துடன் ”அப்டியா?”என்றேன். ”ஆமா சார். சீல் எல்லாம் செக் பண்ணிப்பாத்துட்டேன். நல்கொண்டா, பன்னகல் ரெண்டு சீலும் இருக்கு. சரிதான். தெலுங்கிலே தொகை எழுதியிருக்கு. அஜய்குமார் கையெழுத்து போட்டிருக்கான்…ஒண்ணும் பிரச்சினை கெடையாது” சிவா சொன்னார்”ஆறுதலா இருக்கு சார். ஒரு கடமை முடிஞ்சது. சொல்லப்போனா இப்பதான் நம்ம டிரிப்பே நிறைவா முடிஞ்சிருக்கு”

எனக்கும் ஆறுதலாக இருந்தது. ஆனால் பன்னகல்க அஜய்குமாருக்கு எங்கள் முகம், ஊர் எல்லாம் நினைவிருக்குமா என்று தெரியவில்லை. சாயா சோமேஸ்வரின் ஒரு திருவிளையாடலாக அதை எண்ணிக்கொண்டிருப்பான்

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Nov 15, 2008

இந்தியப் பயணம் 9 – நல்கொண்டா

தொடர்புடைய பதிவுகள்


பத்து சட்டைகள்

$
0
0

1

அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும் ஒரு கடை அது. நான் அந்தமாதிரி கடைகளுக்குச் செல்வதில்லை. என்னுடைய துணிக்கடை என்பது ரூ 99 க்கு கீழே விற்கக்கூடிய கடையாகவே இருக்கும்.

அந்தக்கடையில் என்ன எடுப்பது என்றே எனக்குத்தெரியவில்லை. ”சார் ஒரு நல்ல ஜீண்ஸ் -டி ஷர்ட் எடுங்க” என்றார் வசந்தபாலன். நான் ஜீன்ஸ் போட்டது பத்துவருடம் முன்பு. அப்போது சின்னப்பையனாக இருந்தேன் என்று நினைப்பு. இலக்கிய உலகை திருத்திவிடலாம் என்ற திட்டமெல்லாம்கூட இருந்தது என்றால் கண்டிப்பாக சின்னப்பையன்தான் இல்லையா?

”சீச்சீ நானா ஜீண்ஸா?” என்றேன். ”இல்லை ஒண்ணு இருக்கட்டும்” என்று சொல்லி கட்டாயப்படுத்தி வாங்கி போட்டுக்கொண்டுவரச்சொன்னார்.நான் உள்ளே போய் ஒரு குட்டிஅறைக்குள் நின்றுகொண்டு உடைமாற்றினேன். சட்டென்று தூக்கிவாரிப்போட்டது. கண்ணாடிப்பிம்பம் என்னை வேடிக்கை பார்த்தது. வேறு அன்னியனுடன் இருப்பது போல.

வெளியே வந்து ”வசந்தபாலன், இது வேண்டாம். இது வேறென்னவோ போல இருக்கிறது” என்றேன்.  ”ஏன் சார்?” ”இதைபோட்டா நான் ஜெயமோகன் மாதிரி இல்லை” என்றேன். ”சார் இதை போட்டுக்கிட்டா நீங்க வேற ஜெயமோகன். அந்த வழக்கமான சட்டையில் நீங்க பேங்க் ஆபீசர் மாதிரி இருக்கீங்க… எங்க, லோன் வேணுமான்னு கேட்டிருவிங்களோன்னு பயமா இருக்கு”

வேறுவழியில்லாமல் ஜீன்ஸையும் சட்டைகளையும் அமெரிக்கா கொண்டுபோனேன். ஆனால் வழக்கமான முழுக்கை சட்டையில்தான் நான்போனேன். அமெரிக்காவில் முதல்முறையாக பாஸ்டனில் பாஸ்டன்பாலாவுடன் உலவச்சென்றபோது  ஒன்றைக்கவனித்தேன். அந்த நகரத்திலேயே நான் மட்டும்தான் அப்படி சம்பிரதாய உடை அணிந்திருந்தேன். மற்றபடி ஆண் பெண் எல்லாருமே டி ஷர்ட் தான். பாஸ்டன் பாலா சாயம்போன ஒரு டி ஷர்ட்டை அணிந்திருந்தார்.

”இங்கெல்லாம் ஹாலிடேன்னா எவருமே வழக்கமான டிரெஸ் போட்டுக்க மாட்டாங்க சார்…டி ஷர்ட் ஷார்ட்ஸ் தான்” என்றார் பாஸ்டன் பாலா.ஆனால் அங்கே யாரும் நம்மை கவனிப்பதில்லை. இருந்தாலும் எனக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் என்னிடம் இருந்தது இரண்டே டி ஷர்ட்டுகளும் ஒரு ஜீன்ஸ¤ம்தான். ஆகவே அடிக்கடி மாற்ற முடியாது.

ஆகவே ஒன்று செய்தேன், முழுமையான சுற்றுலா இடங்களுக்குப் போகும்போது அந்த டி ஷர்ட்டுகளை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டேன். கண்ணாடிச்சன்னல்களில் பார்ப்பதை தவிர்த்தேன். வேறு ஒரு ஜெயமோகன் அமெரிக்காவைப் பார்ப்பதற்கா நான் கஷ்டப்பட்டு வந்தேன்?

நலைந்துநாளில் பழகிவிட்டது. அப்போதுதான் நான் ஒன்றைக்கவனித்தேன், டி ஷர்ட் போட்ட அந்த ஜெயமோகன் கொஞ்சம் வேறு மாதிரியான ஆள். கொஞ்சம் சல்லிசாக இருக்கிறார். அதிகமாக யோசிப்பதில்லை. சின்ன விஷயங்களில் அவருக்கு அடிக்கடி மனம் ஈடுபடுகிறது.

ஒன்று கண்ணில்பட்டது, விடுமுறையின்போது ஒரு பூங்காவில் அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் இளநீலநிறத்தில் முழுசூட் உடை அணிந்துசென்றுகொண்டிருந்தார். அப்பழுக்கில்லாத கனவான் உடைகள். தொப்பி பூட்ஸ். நான் பாஸ்டன் பாலாவிடம் கேட்டேன். ”அவர்களின் உடை வழக்கம் இது. வெச்சால் குடுமி சிரைச்சால் மொட்டை. ஒன்று கலர்கலராக சட்டை பளபளக்கும் பாண்ட் இரும்புச்சங்கிலிகள் என்று இருப்பார்கள். இல்லாவிட்டால் இப்படி இருப்பார்கள்” என்றார் ”அந்த உடைக்கு எதிர்வினை இந்த உடை. இந்த உடைக்கு எதிர்வினை அந்த உடை. அவர்கள் எதையுமே எதிர்வினையாகத்தான் செய்வார்கள். இந்த நாட்டில் அவர்களின் உளவியல் அப்படிப்பட்ட்து”

உடைகள் வழியாக எதை தேடுகிறோம்? எதைச் சொல்கிறோம்? எதை முன்வைத்துக்கொண்டே இருக்கிறோம்?  நான் நெடுநாள் கையில்லாத சட்டையே போட்டதில்லை. பதினொராம் வகுப்பு படிக்கும்போது போட்டிருக்கிறேன். அதன்பின் முழுக்கைச் சட்டைதான். ஆனால் ஒருமுறை நண்பன் தண்டபாணி என் வீட்டுக்கு வந்திருந்தான். உங்களுக்கு தெரிந்த ஆசாமிதான். யுவன் சந்திரசேகர் கதைகளில் கிருஷ்ணனுக்கு மாயமந்திர ‘மாற்றுமெய்மை’ கிலிகளை மூட்டும் சுகவனம் கிட்டத்தட்ட அவன்தான். அவன் ஒரு கோடுபோட்ட அரைக்கை சட்டை வைத்திருந்தான். ”டேய் இதை போடுடா” என்றான்

போட்டுப்பார்த்தால் எனக்கு பாதி உடல் நிர்வாணமாக இருப்பது போல் இருந்தது. இரு கைகளும் இரு அன்னியர்கள் இருபக்கமும் நெருக்கிக்கொண்டு நிற்பது போல  இருந்தன. ”அய்யய்யே” என்றேன். ”நல்லா இருக்குடா’ என்று இழுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான். அந்த சட்டையை எனக்கே கொடுத்துவிட்டான். அதன்பின் நான் அடிக்கடி கையில்லாத சட்டை போட ஆரம்பித்தேன். அது என்னைகொஞ்சம் இலகுவாக்குகிறது என்று பட்டது.

‘ஆடைகள் ஒருவனின் சருமங்கள்’ என்று மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதையில் சொல்கிறார். இறந்தவனின் சட்டைகள் என்ற கவிதை. இறந்து போனவனின் சட்டைகளை என்ன செய்வது? அவற்றை  எப்படி எரிக்க முடியும்? இறந்தவனை மீண்டும் கொல்வதா? இன்னொருவருக்குக் கொடுத்து விடலாமா?  இறந்தவன் நம் எதிரே திடீரென்று வந்து திடுக்கிட வைப்பானே…என்ன செய்வது? எதுவுமே செய்யமுடியாது, இறந்தவனை என்ன செய்கிறோம்?

ஆடைகள் உடலுக்காகவே அளவிவிடப்படுகின்றன என்று தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியா? அடிப்படை அளவுகள் மட்டும்தானே உடலுக்குரியவை. பிற எல்லா அளவுகளும் மனதின் அளவுகள் தானே? நிறங்கள் வடிவங்கள்  அடையாளங்கள் எல்லாமே மனத்தின் அளவுகளுக்குப் பொருந்துபவை அல்லவா?

அப்படியானால் ஆடைகள் யாருடைய சருமம்? அவை நம் அகத்தின் புறச்சருமம் அல்லவா? நாம் நம்மை ஆடைகள் வழியாக முன்வைக்கிறோம். நான் சம்பிரதாயமானவன் நான் நேர்த்தியானவன் நான் எளிதானவன். நாம் ஆடைகள் வழியாக நம் சமூகசுயத்தை உருவாக்கிக்கொள்கிறோம்.

ஆனால் நாம் அதுவா? இல்லை நம் விருப்பங்கள்தாமா அவை? அந்த ஆடைகள் வழியாக நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆடைகளுக்குள் நாம் ஒளிந்துகொண்டிருக்கிறோம். என் ஆடைகளுடன் பேசு என எதிரில் இருப்பவர்களிடம் சொல்கிறோம்.

நான் தனிப்பட்ட முறையில் ஆடைகளை எப்படித்தேர்வுசெய்கிறேன்? என்னுடைய முதல் எண்ணமே வித்தியாசமாக தெரியக்கூடாது என்பதே. என்னை எவரும் தனியாகக் கவனிக்கக் கூடாது. சாலையில் ஒருவர் தூக்கிய புருவத்துடன் என்னைப்பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி ஏற்படுகிறது. எதுவோ தப்பாக ஆகிவிட்டது என்ற எண்ணம் எழுகிறது

நான் சாதாரணமாக இருக்கவேண்டும். அதற்காகவே உடை. அந்த உடை எனக்கு இச்சமூகத்தில் ஓர் இடத்தை உருவாக்கி அளிக்கிறது. நான் என் அலுவலகத்தில் பெரும்பாலும் பழைய மிகச்சாதாரண உடைகளையே அணிவேன். ஏனென்றால் நான் ஒரு இடைநிலை ஊழியன், குமாஸ்தா. என்னைப்போன்றவர்கள் எந்த உடை அணிகிறார்களோ அதுவே எனக்கும். அதிகாரிகள் அணிவதுபோல நான் அணிவதில்லை. என் இருபத்தைந்தாண்டுக்கால அலுவலக வாழ்க்கையில் சட்டையை உள்ளே விட்டு பான்ட் போட்டுக்கொண்டு நான் அலுவலகம்சென்றதே இல்லை.

ஓரளவுக்கு நேர்த்தியான ஆடைகளை வெளியே செல்லும்போது அணிகிறேன். ஒரு நடுத்தர வர்க்கத்து அரசூழியன் என என்னை அவர்கள் எண்ணட்டும். நல்ல கணவன்,நல்ல அப்பா,நல்ல குடிமகன். வம்புதும்பு கிடையாது. தப்பாக எதுவுமே செய்துவிட மாட்டேன். டீஏ அரியர்ஸ், சம்பளக் கமிழ்ஷன், ரியல் எஸ்டேட் விலை, சூர்யா விஜய் அஜித் ஜெயலிதா ஸ்டாலின் தவிர எதையுமே பேசாதவன். அதாவது ரொம்ப ரொம்ப நார்மலானவன். அதற்குள் எனக்கு வசதியாக ஒளிந்துகொள்ள இடமிருக்கிறது. நல்லது.

ஆனால் அதற்குள் நான் இருக்கிறேன். அந்தச் சட்டைகள் அச்சையும் உயிர் என்னுடையது. என்னுடைய உற்சாகங்களையும் தயக்கங்களையும்தானே அந்த சட்டைகள் நடிக்கின்றன? நீங்கள் அவற்றை பார்த்தால் என்னை பார்க்கிறீர்கள்.

நண்பர்களே இந்தபத்து நூல்களும் பத்து சட்டைகள். மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பத்து என்னை நான் காட்டியிருக்கிறேன். அரசியல் தத்துவம் ஆன்மீகம் இலக்கியம்…இவற்றுக்குள் நான் இருக்கிறேன்.  ஆனால் ஒளிந்திருக்கிறேன்.

கேரளத்துக் கோயில்களில்  உள்ளே நுழைய சட்டைகளைக் கழற்ற வேண்டும். யாழ்ப்பாணத்திலும் அந்த வழக்கம் உண்டு என்பார்கள். ஒரு கதை உண்டு. இதயம்பேசுகிறது மணியன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்றபோது சட்டையைக் கழற்ற தயங்கினாராம். அப்போது அங்கே இருந்த சாது அப்பாத்துரை [ இவரைப்பற்றி பிரமிள் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். சாது அப்பாத்துரையின் தியானதாரா ] ”ஏம்பா இந்தச் சட்டையைக் கழட்டவே இந்த மாதிரி கஷ்டப்படுறியே. அங்க போறப்ப அந்தச் சட்டைய எப்டி கழட்டுவே?” என்று கேட்டாராம்.

அனைத்துச் சட்டைகளையும் கழட்டிவிட்டு செல்லவேண்டிய சில சன்னிதிகள் உண்டு. சட்டைக்கு மெய்ப்பை என்று ஒரு சொல் உண்டு. மெய்யே ஒரு பைதான். பையை தூக்கிப்போட்டுவிட்டு மெய்யை மட்டுமே அது எடுத்துக்கொள்கிறது.

நான் சட்டைகளைக் கழற்றும் இடம் ஒன்று உண்டு. மெய்யாகவே நானிருக்கும் இடம். அங்கே எல்லா ஆடைகளையும் கழற்றிவிடுவேன். சருமத்தையும் சதைகளையும் எலும்புகளையும். ஆம், என் புனைகதைகளில் நான் என்னை நிர்வாணமாக்கிக் கொள்கிறேன். நான் அவற்றை எழுதுவதே அதற்காகத்தான்.

ஒருவன் நிர்வாணமாக கையில் வேட்டியுடன் சாலையில் சென்றானாம். பிடித்து விசாரித்த போலீஸ்காரரிடம் ”அய்யா நான் உடைமாற்றிக்கொள்ள ஒரு மறைவிடம் தேடி அலைகிறேன்” என்றானாம். புனைவிலக்கியம் எழுத அமரும்போது நான் பலசமயம் அப்படி உணர்வதுண்டு. நிர்வாணமாக வந்தமர்ந்து கொண்டு நான் ஆடைகளை அணிய ஆரம்பிக்கிறேன்.

ஏனென்றால் அந்த நிர்வாணத்தை அத்தனை பேரும் பார்க்க நான் விரும்பவில்லை. நான் உடை களையும் நடனம் ஆடுபவன் அல்ல.  அது யோகியின் நிர்வாணம். அங்கே என்னை வந்து பார்க்கவேண்டுமானால் நீங்களும் சட்டைகளை கழற்ற வேண்டும். எனது நிர்வாணத்தை உங்கள் நிர்வாணத்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

அதற்காகவே இத்தனை மொழியாக பெரிய ஒரு சுழல்பாதையை அமைக்கிறேன்.  வாழ்க்கையின் அத்தனை அம்சங்களாலும்  ஆக்கபப்ட்ட ஒரு வட்டப்பாதை அது. அன்பு பாசம் காதல் துரோகம் வெறுப்பு என எல்லா உணர்ச்சிகளாலும் ஆனது. எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் அரசியலும் பேசப்படுவது.

ஒவ்வொரு விஷயமும் ஒரு முள். ஒவ்வொன்றிலும் சிக்கி நீங்கள் உங்கள் உடைகளை இழந்தால் ஒழிய அந்த இடத்திற்கு வர முடியாது. அவ்வாறன்றி நான் அறிவுஜீவி நான் அரசியல்ஜீவி நான் இலக்கியஜீவி என்று அவரவர் சட்டைகளுடன் அந்தப்பாதையின் ஏதோ ஒரு வழியில் நின்று சுழன்றுகொண்டிருப்பவர்களை தினமும் பார்க்கிறேன்.

அந்த எல்லைகளைக் கடந்து என் அந்தரங்கமான கருவறைக்குள் வந்தீர்கள் என்றால் என் நிர்வாணம் ஏன் என்று உங்களுக்குத்தெரியும். நான் கருவறைக்குள் இருக்கிறேன். இன்னமும் நான் உருவாகவே இல்லை.

அவ்வாறு வரும் வாசகன் கண்டடையும் அந்த ஜெயமோகன் யார்? அது அந்த வாசகனின் ஓர் அந்தரங்கமான ஆடிப்பிம்பமாக இருக்கும் என்று நான் ஊகிக்கிறேன்.

ஆகவே இந்த பத்து வாசல்களை உங்களுக்காக திறந்து வைக்கிறேன். வருக

[19 -12- 2009 அன்று சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் ஆற்றிய உரையின் முன்வரைவு]

மறுபிரசுரம்

தொடர்புடைய பதிவுகள்

பின் தூறல்

$
0
0

images

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன‌. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். ஒன்றிற்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. பல முறை எழுத ஆரம்பித்து பின்பு விட்டு விடுவேன். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று.

மின்னஞ்சல்களின் மூலமும் அவள் பற்றிய என் கணிப்பின் மூலமும் அவள் இன்னும் என்னை  மறக்கவில்லை (அல்லது மறக்க முடியவில்லை) என்றே நினைக்கிறேன். எனக்கு திருமணமானதை என் வலைப்பூ அல்லது ஆர்குட் வழியாக தெரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். வாழ்த்து அனுப்பியிருந்தாள். அதற்கும் நான் பதில் அனுப்பவில்லை. என் வலைப்பூவில் பதிவுகளை படித்து விட்டு என்னைப் பாராட்டுகிறாள். நான் அவளது மின்னஞ்சல்களை படிப்பதில்லை என்று கருதியோ எனக்கு பிடிக்காது என்றோ இவையனைத்தும் ஓரிரு வரிகளில் மட்டுமே உள்ளன‌.

மூன்று வருட உணர்வுகளை மூன்று பத்திகளில் சொல்ல முடியவில்லை. மனநல மருத்துவர்கள் சொல்வதைப் போல பேசி சுமூகமாகப் போகக் கூடிய விஷயமாக நான் நினைக்கவில்லை. நீங்கள் கூறிய ‘காம குரோத மோகம்’, இவை மூர்றும் என்னுள் ஊறித் திளைத்து, துளைத்தெடுக்கிறது.

தற்போது என் திருமண புகைப்படம் ஒன்றை கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாள். என் எண்ணமெல்லாம் இதுதான். அவள் ஏன் இப்படி தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டும். ஓரிரு ‘பொதுவான’ மின்னஞ்சல்களை நான் அனுப்பினால் அது அவளுக்கு நன்மை பயக்குமா?

நிறைய எழுதி உங்கள் ஆஸ்திரேலிய பயண வேலைகளை தடை செய்ய விரும்பவில்லை. உங்கள் எண்ணங்களை பகிர முடியும் தருணத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

‍-‍‍ ஜெ

 

 

பி.கு.: இதை தங்கள் வலைப்பதிவில் வெளியிடும் பட்சத்தில் என் பெயர், இணையதள முகவரி இவற்றை தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்அன்புள்ள ஜெ

 

உங்கள் கடிதம்.

 

உங்கள் கடிதத்தில் சொல்லியிருக்கும் உறவின் சிக்கல் மிக சாதாரணமான ஒன்று. இதை நாம் எல்லா விஷயங்களிலும் பார்க்கலாம். நீங்கள் ஒன்றை மறுத்துவிட்டால் மீண்டும் கொஞ்சநேரம் அந்த விஷயம் உங்கள் மனதுக்குள் எஞ்சியிருக்கும். தொலைக்காட்சியை அணைத்தபின் எஞ்சும் பிம்பம் போல.

 

உதாரணமாக உங்களுக்கு ஒரு வேலைக்கு அழைப்பு வருகிறது. நீங்கள் அதை மறுத்துவிடுகிறீர்கள். ஆனால் உங்கள் மனம் சிலநாட்கள் அந்தவேலையை நீங்கள் செய்வதுபோலவே கற்பனைசெய்துகொள்ளும். அந்தவேலையில் நீங்கள் கண்ட குறைகள் உண்மையில் இல்லை என்று எண்ணிக்கொள்ளும். அதில் வெற்றிகளைக் கற்பனைசெய்துகொள்ளும். நீங்களாகவே மறுத்த ஒன்றைப்பற்றிய ஏக்கமே உங்களை விட்டுச்செல்ல கொஞ்ச நாள் பிடிக்கும். அது மனதின் மாயை

 

ஏன்? மனம் என்பது ஆசையால் ஆனது. பௌத்த மரபில் அதை திருஷ்ணை என்கிறார்கள். இருப்பதற்கான ஆசை, நுகர்வதற்கான ஆசை, வெல்வதற்கான ஆசை என அதை பௌத்த மரபு வகைபிரிக்கிறது. நாம் இருநாற்காலிகளைக் கண்டால் ஒன்றில் அமர்கிறோம். நம் மனம் இரண்டிலும் அமர்ந்து பார்க்கிறது. மனிதனுக்கு உலகையே வென்றாலும் இச்சை நிறைவுறாது. மனிதன் கோருவது இப்பிரபஞ்சத்தையே என்று சொல்லலாம். 

 

நம் ஆசைகளுடன் எப்போதுமே அகங்காரமும் இணைந்து கொள்கிறது. நீங்கள் மறுத்த வேலையை இன்னொருவன் செய்தால் அவன் சரியாகச்செய்யக் கூடாதென உங்கள் மனம் விழையும். அது தீய எண்ணத்தால் அல்ல. மாறாக அவ்வேலையை இன்னொருவன் திறம்படச்செய்வதென்பது உங்கள் இருப்பை மறுப்பதாகும். மனிதர்கள் ஒவ்வொரு கணமும் விழைவது தங்கள் இருப்பை. தங்கள் இருப்பின் இன்றியமையாமையை.

 

ஆரோக்ய நிகேதனம் நாவலில் கதாநாயகனாகிய ஜீவன் சிறுவயதில் மஞ்சரி என்னும் பெண்ணை மணம்புரிய விழைகிறான். அவள் பூபேன் என்னும் ஒரு ஜமீன்தார் மகளை மணந்துகொள்கிறாள். ஜீவனுக்கு அது பெரும் அவமானமாக ஆகிறது.  அவளை அடைவதல்ல அவன் பிரச்சினை, அந்த நிராகரிப்பைதாண்டிச்செல்வது என்பதே. அந்தப்பெண்ணால் நிராகரிக்கத்தக்க ஒருவனா நான் என்ற அகங்காரத்தின் எரிதலே அவனை நிம்மதியற்றவனாக ஆக்குகிறது

 

ஜீவன் மணம்செய்துகொள்கிறான். மஞ்சரியைவிட பேரழகியான ஆத்தர்பௌ எனும் பெண்ணை. அவளை நகையால் மூடி கொண்டுபோய் மஞ்சரிமுன் காட்டவேண்டும் என்பதே அவன் கனவு. ஆனால் மஞ்சரி ஊரைவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த விஷயம் ஆத்தர் பௌவிற்கு தெரிகிறது. அவள் மனம் ஆழமாகப் புண்படுகிறது. இன்னொருத்தியின் நிழலாக வாழ நேரும்போது ஏற்படும் அகங்கார அடி அது. அவர்கள் வாழ்க்கை அரைநூற்றாண்டுக்காலம் நீளும் சித்திரவதையாக ஆகிறது.

 

தோல்வியடைந்த உறவுகளில் உள்ள முக்கியமான பிரச்சினை இழப்பு அல்ல. இழப்பை மனிதன் தாங்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் வாழ்க்கை என்பதே ஒரு தொடர் இழப்புதான். நிராகரிப்பு மூலம் அகங்காரம் புண்படுவதே முக்கியமான பிரச்சினை. நிராகரிக்கத்தக்கவனா நான் என்னும் கொந்தளிப்பு. அதை எளிதில் தாண்டிவிடமுடியாது.

 

உங்கள் தோழியின் சிக்கல் இதுவே. அவளால் உங்களை இழக்க முடியும். ஆனால் அவள் இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது அளிக்கும் அகங்காரக் காயத்தை தாங்க முடியவில்லை. அதை அன்பென்றும், மிஞ்சும் பாசம் என்றும் மனம் கற்பனைசெய்துகொள்ளும். ஏனென்றால் நாம் எப்போதுமே நம் உணர்ச்சிகளை சிறந்தவை என்றுதான் கற்பனைசெய்துகொள்ள விரும்புவோம்.

 

தூரம் ஒன்றே அந்த அகங்காரச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். காலம் இடம் இரண்டுமே தூரத்தை உண்டு பண்ணுபவை. நம்மை எரியச்செய்யும் ஓர் உணர்வு சற்றே விலகியதும் இல்லாமலாகிவிடும். அந்தப் பெண்ணைப்பொறுத்தவரை உங்களிடமிருந்து விலகுவது மட்டுமே இப்போது  அவளுக்கு விடுதலை அளிக்கும். ஒரு புள்ளியில் நீங்கள் சிறியதாகி கடந்த காலத்துக்குள் புதைந்து மறைவீர்கள்.

 

ஆகவே உங்களைச் சந்திக்காமல் இருப்பதும் தொடர்பு கொள்ளாமலிருப்பதுமே அவளுக்கு நல்லது. மனிதவாழ்க்கை எப்போதும் முன்பக்கம்தான் இருக்கிறது. பின்பக்கம் இருப்பது வாழ்க்கையின் எச்சங்கள் மட்டுமே. உடல் அளவில் நாம் நம்மை ஒருவரிடமிருந்து விலக்கிக் கொண்டோமென்றால் பெரும்பாலும் நாம் மன அளவிலும் விலக முடியும். இது மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆசி. மனிதன் ஒரு மந்தைமிருகம். எந்த மந்தையில் இருக்கிறதோ அதற்கேற்ப மாறும் மனம் கொண்டவன்.

 

அந்தப்பெண் தனக்குரிய இடத்தையும் சூழலையும் வேறெங்காவது கண்டடைய வேண்டும். அதுவே முறையானது. நீங்கள் அவளிடமிருந்து முழுக்க முழுக்க சொல்லாலும் நினைவாலும் விலகிவிட முயலவேண்டும். அதுவே ஒரே வழி. இயல்பான வழி.

 

இம்மாதிரி தருணங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. நம் மனதுக்கு துயரங்களை வளர்த்துக்கொள்ளும் ஒரு வழக்கம் உண்டு. முள்ளைத்தின்ற ஒட்டகம் தன் ரத்தத்தையே சுவைக்க ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள் அதுபோல. துன்பங்களை வளர்த்துக்கொண்டு, மனமுருக்கும் பகற்கனவுகளில் மூழ்கி, விதவிதமான தன்னிரக்கநிலைகளை அடைந்து அதில் ரசிப்பது. பெண்களுக்கு அந்த மனநிலை மேல் ஒரு மோகம் உண்டு 

 

அந்த மனநிலை வாழ்க்கை மீது இருளைப் பரவச்செய்துவிடும். அதிலிருந்து விடுபட ஒரே வழி அதை நேருக்குநேராக பார்ப்பதுதான். இதோ நான் என் துயரங்களை மிகைப்படுத்திக்கொள்கிறேன், இது தேவையில்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதன் மூலமே நாம் வெளிவந்துவிட முடியும்.

 

மேலான உறவுகளை நேர்மையான உணர்வுகளால், நம்பிக்கையால், சமநிலையான கொடுக்கல்வாங்கலால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். கற்பனைகள், நெகிழ்வுகள் மூலம் உண்மையான உறவுகளை ஒருபோதும் உருவாக்கிக்கொள்ள முடியாது

 

 

ஜெ

தாரா சங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம்

- Show quoted text -

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 21, 2009

தொடர்புடைய பதிவுகள்

டம்மி

$
0
0

இரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில படங்கள் காலம் கடந்து நினைக்கப்படுகின்றன. நான் கடவுளில் உள்ள பாடல்கள் என்றும் நீடிக்கும். கூடவே அப்பாடல்கள் நினைவூட்டும் அந்த நாட்கள் எங்கள் மனங்களில்.

காசி என்பது ஒரு நகரமல்ல, ஒரு படித்துறை. வரணாசி என்று மகாபாரதம் குறிப்பிடும் அந்த புராதன கங்கைக்கரை பிறைவளைவு. பனாரஸ் என்ற பெருநகரம் எங்கோ கிடக்கிறது. அங்கே நான் சென்றதே இல்லை. மீண்டும் மீண்டும் இந்தப்படித்துறைக்கே நான் செல்கிறேன். பனாரஸில் உள்ளது வாழ்க்கை. காசியில் உள்ளது மரணம் ஊடறுக்கும் வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும் மரணத்தை நினைவு கூராமல் காசியில் வாழ முடியாது. பிணங்கள் மக்கள் பெருக்கில் மிதந்து மணிகர்ணிகா கட்டம் நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே தங்கி இளைப்பாறுகின்றன. எரியும் சிதையருகே தங்கள் இடத்துக்காகக் காத்துக் கிடக்கின்றன. பிணங்களின் அபாரமான தனிமையை காசியில் உணர முடியும். கூடவே கதறி அழும் உறவினர் இருக்கலாம். நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கால வடிவமான கங்கையின் கரையில் பிணம் தன்னந்தனியாகவே கிடக்கும்

பிணங்கள் ஏன் அச்சுறுத்துகின்றன? வெறும் ஒரு பொருளாக மாறிவிட்ட உடம்பை நம் பிரக்ஞை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அது ஒரு மனிதன். ஆனால் மனிதனுமல்ல. அது வேறு ஒன்று. முதன் முதலாக காசியில் என்னருகே ஒரு சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட பிணத்தின் கால் என்மீது மோதியபோது அடைந்த அச்சமும் அருவருப்பும் நினைவிருக்கிறது.

சிங்கப்புலியும் நானும், ஆர்தர் வில்ஸனின் உதவியாளர் ரதீஷ் எடுத்த படம்

ஆனால் பார்க்கப் பார்க்க அந்த அருவருப்பு விலகியது. படுக்க வைக்கப்பட்டிருந்த ஒரு பிணத்தின் சரிகைப் போர்வை விலகி தொடை தெரிந்த போது கையில் டீக்கோப்பையுடன் எழுந்து போர்த்திவிட்டிருக்கிறேன்.படிப்படியாக பிணம் ஒரு யதார்த்தமாக நம் நெஞ்சுக்குள் இடம்பிடித்துவிடும் காசியில்

நான் கடவுள் படத்துக்காக ஏராளமான டம்மி பிணங்கள் செய்தோம். அவற்றைத்தான் படத்தில் சுமக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்த டம்மி பிணங்களும்  படப்பிடிப்புக் குழுவினரை அச்சுறுத்தின. அவற்றின் அருகே வரமாட்டார்கள், அமர மாட்டார்கள். டம்மி பிணம் என்று தெரிந்தால் கூட தொடமாட்டார்கள்.

பின்னர் மெல்ல மெல்ல அச்சம் விலகியது. டம்மி பிணத்தருகே அமர்ந்து டீ சாப்பிட்டார்கள். டிபன் சாப்பிட்டார்கள். அரட்டை அடித்தார்கள். அதன் பின் நிஜமான பிணத்தருகே சாதாரணமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டார்கள். டீ குடித்தார்கள். போர்த்தப்பட்டிருப்பது ஆணா பெண்ணா என்று சாதாரணமாக அவதானித்தார்கள்.

உண்மையில் அதைத்தான் தந்திரீகம் செய்கிறது. பிணங்களுக்கு நிகரான டம்மி பிணங்களை உருவாக்குகிறது அது. வைக்கோலில் மண்ணில்செய்யப்பட்ட உடல்களை வைத்து சடங்குகளைச் செய்கிறது. அச்சம் அகன்ற பின்னர் பிணங்களை வைத்தே செய்கிறது. பிணங்களை அகமனதுக்கு அறிமுகம் செய்கிறது.

ஆனால் பிணம் என்பதேகூட ஒரு டம்மிதானே? மரணத்தின் போலி வடிவம்தானே? அதை பழகிக்கொண்டால் மரணத்தைப் பழகிக்கொள்ளலாகாதா? அதுதான் தாந்த்ரீகத்தின் வினா.

அதிகாலை வேளையில் சூடான டீயைக் குடித்த பின் இயக்குநர் சிங்கம் புலியும் நானும் சுடுகாட்டு பின்னணியில் ஒரு டம்மிப் பிணமருகே அமர்ந்து சுவாரஸியமாக எதைப் பேசிக் கொண்டிருப்போம்? சிங்கம்புலி எதையுமே வேடிக்கையாக ஆக்கக்கூடியவர். அனேகமாக ஏதாவது சினிமா வேடிக்கையாக இருக்கும். சினிமா என்பது வாழ்க்கையின் டம்மி அல்லவா?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 8, 2009

தொடர்புடைய பதிவுகள்

ஆகவே கொலை புரிக!

$
0
0

நானும் ஒரு வருஷத்துக்கு மேலாக சிலிகான் ஷெல்ஃப் என்று ப்ளாக் எழுதி வருகிறேன். என் பாணியில், என் ரசனைக்கு ஏற்றபடி, சமரசம் இல்லாமல் மனதுக்குப் பட்டதை எழுதி வருகிறேன். நான் எழுதுவது விமர்சனம் என்பதை விட, புத்தக அறிமுகம் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஒரு ஏழெட்டுப் பேர் மாதமொரு முறை கூடி ஏதோ ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேசுகிறோம்.

நான் மட்டுமல்ல இந்தக் குழும உறுப்பினர்கள் பலரும் ப்ளாக் எழுதுகிறார்கள். கூகிளில் buzz-கிறார்கள். ட்விட்டர், ஃ பேஸ்புக், இந்தக் குழுமம் எதிலாவது புத்தகம், இலக்கியம் பற்றி அவரவர் கருத்தைப் பதிவு செய்து கொண்டே இருக்கிறோம்.

இதனால் எல்லாம் பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா, இத்தனை நேரம் செலவழித்து என்னத்தைக் கண்டோம் என்று எனக்கு சமீப காலத்தில் ஒரு சோர்வு உருவாகி இருக்கிறது. செலவழிக்கும் நேரம் அதிகம், பயன் குறைவு என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.

இது ஏன் படிக்கிறோம் என்ற கேள்வி இல்லை. அப்படி ஒரு கேள்வி எழாதபடி என் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறது. புத்தக அறிமுகத்தால் என்ன பயன் என்ற கேள்வியும் இல்லை. சொந்த அனுபவங்கள் எனக்கு என்ன பயன் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றன. இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதுவதால் என்ன பயன்?

ஆர்வி

சிலிகான் ஷெல்ஃப்

அன்புள்ள ஆர்வி,

எல்லாச் செயல்களிலும், அவை எவ்வளவு பயனுள்ளவையாக உண்மையில் இருந்தாலும், ஒரு சோர்வுத்தருணம் உண்டு. அதுவும் அதன் பகுதியே. இதை எழுதும்போது காகா காலேல்கரின் சரிதையை வாசித்துக்கொண்டிருக்கிறேன். காந்தியின் சீடர். எழுத்தாளர். நம்மைப்போன்றவரல்ல, லௌகீக வாழ்க்கையே இல்லாத அர்ப்பணிப்புள்ள தேச சேவகர். அவர் தொடங்கிய பெரும்பாலான முயற்சிகள் வெள்ளைய அரசால் அழிக்கப்பட்டன. பல முயற்சிகள் பல காரணங்களால் தேங்கி நின்றன. கூட இருப்பவர்கள் மனம் சோர்கிறார்கள். ஆனால் ‘இவற்றைச் செய்யாமலிருந்தால் அடையும் வெறுமையைவிட செய்து நிறைவேறாமல் போவது மேல்’ என காகா பதிலளிக்கிறார். பெரும்செயல்வீரர்கள் இத்தகைய சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.

நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை நாம் புரிந்துகொள்ளக்கூடிய அளவு சிறிதல்ல. மிகப்பிரம்மாண்டமான, மிகச்சிக்கலான ஒரு கூட்டியக்கம் இது. ஒன்று இன்னொன்றாக நீளும் நிகழ்ச்சிகளின் வலை. தற்செயல்களின் நடனம் அல்லது விதியின் ஆடல். இதில் நாம் செய்யக்கூடிய எந்த செயலும் எப்படி என்ன விளைவை உருவாக்கும் என்று சொல்லிவிடமுடியாது. சின்னஞ்சிறு செயல் இந்த மாபெரும் வலையை உலுக்கலாம். பெரிய செயல் ஒன்றுமே ஆகாமலும் போகலாம். நம்மால் இதைப் புரிந்துகொள்ளவே முடியாது. நாம் செய்வதன் பலனை மதிப்பிட முயன்றால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆகவேதான் கீதை. ‘பலனை என்னிடம் விட்டுவிட்டு உன் தன்னியல்புக்கு உகந்த கடமையை மட்டும் செய்’ என்ற அறிவுரை.

ஆனால் இங்கே செய்யப்படும் எச்செயலும் வீணல்ல என்பதும் ஓர் அனுபவமே. எல்லாச் செயலுக்கும் எதிர்ச்செயலுண்டு. ஆகவே எல்லாமே எங்கோ எப்படியோ விளைவுகளை உருவாக்கிக்கொண்டேதான் உள்ளன. அந்த எண்ணமே நம்மை செயல்நோக்கிச் செலுத்தவேண்டும்.

கருத்தியல் தளத்திலான செயல்பாடுகள் உருவாக்கும் விளைவுகள் மிக மறைமுகமானவை. உங்களை நாள்தோறும் மறுத்துக்கொண்டே இருக்கும் ஒருவரை நீங்கள் உள்ளூர மாற்றிக்கொண்டே இருக்கக்கூடும் – நீங்கள் இருவருமே அதை அறிய மாட்டீர்கள். ஒரு கல் நீரில் விழுந்து அலைகளை உருவாக்குவது போலத்தான் ஒரு கருத்து சமூக மனதில் செயல்படுகிறது. முதலில் சின்ன வட்டம். அடுத்து பெரியவட்டம். அடுத்து அதைவிட பெரிய வட்டம். சின்னவட்டமே பெரிய வட்டத்தை உருவாக்குகிறது. சின்னவட்டம் தீவிரமானது. பெரிய வட்டம் பலவீனமானது.

கருத்துத்தளத்தில் செயல்படும் சிலர் ஒரு பிரம்மாண்டமான சமூகத்தை மாற்றுவது அப்படித்தான். அது சாத்தியமற்றதாகத் தோன்றும். ஆனால் அது நிகழ்ந்தபடி இருக்கிறது. 1880களில் பெண்களைப் பள்ளிக்கூடம் அனுப்பவேண்டுமெனத் தீவிரமாகத் தமிழில் எழுதி பேசியவர்கள் சிலநூறு பேர். நூறுவருடங்களில் தமிழகத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் படிக்கும் காலம் வந்துவிடுமென அவர்கள் கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள். அதை நிகழ்த்தியது 250 பிரதி அச்சிடப்பட்ட இதழ்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள் என்று அவர்களிடம் சொன்னால் மூர்ச்சையாகிவிடுவார்கள். இந்த பிரம்மாண்டமான நிகழ்வு ஒரு தனிமனிதனுடைய ஊகங்களைத் தாண்டியது.

இசைத்தட்டின் நடுவே உள்ள அச்சு அதைத் தூக்கிச்சுழற்றுவது போல ஒரு சமூகத்தின் கருத்தியல் மையமே அதை இயக்குகிறது. அதில் எல்லாக் கருத்துக்களுக்கும் இடமுண்டு. அரவிந்தன் நீலகண்டனும் அ.மார்க்ஸும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். ஆர்வியும் டாக்டர் சுனிலும் அதில் பங்களிப்பாற்றுகிறார்கள். கருத்துக்கள் என்பவை ஒன்றுடன் ஒன்று மோதி சமரசம் செய்தும் மீறியும் செயல்படுகின்றன.

நாம் நம் அன்றாடவாழ்க்கையின் அர்த்தமின்மையை உள்ளூர அறிந்தே இருக்கிறோம். தேடிச்சோறு நிதம் தின்னும் வாழ்க்கை. பிரபஞ்ச அர்த்தத்தை உணர்ந்து இந்த அன்றாட வாழ்க்கையில் சும்மா அமர்ந்திருக்க எல்லாராலும் முடியாது. இந்த அன்றாட வாழ்க்கையின் வெறுமையை வெல்லவே நாம் செயலில் ஈடுபடுகிறோம். செயல் இல்லாவிட்டால் இந்த வெறுமை நம்மைக் கொன்றுவிடும். ‘போர் அடிக்கிறது’ என நாம் சொல்வதே அர்த்தமற்ற காலத்தை நாம் உணர்வதுதான். அதைத் தாண்டவே மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். உண்மையில் வேலையே குறி என்றிருப்பவர்கள் அந்த வேலை அளிக்கும் எந்த லாபத்துக்காகவும் அதைச் செய்யவில்லை. அந்த வேலை அவர்களின் அன்றாட அலுப்பை மறைத்து அவர்களை முன்னெடுத்துச் செல்லுகிறது என்பதனால்தான் செய்கிறார்கள். அதுவும் போதாமல் குடிக்கிறார்கள். சூதாடுகிறார்கள். அவ்வாறு செய்யும் செயல்கள் உருவாக்கும் வெறுமையை அவ்வப்போது உணர்ந்து இன்னும் சலிப்படைகிறார்கள்.

அதற்குப்பதிலாக நமக்குப்பிடித்த ஒன்றைச்செய்து இந்த அன்றாடவெறுமையைத் தாண்ட முடிந்தால் அதைவிட மகிழ்ச்சியானது ஏதும் இல்லை. நம் அடிப்படை இயல்புக்கு உகந்த ஒரு செயலைச் செய்வதன் மூலம் நாம் நம் நாட்களைப் பொருளுள்ளதாக ஆக்கிக்கொண்டால் வாழ்க்கை நிறைவுறுகிறது. அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என பெரிய ‘நோக்கமோ’ ‘அர்த்தமோ’ இல்லை. இருந்தால் அது லௌகீக வாழ்க்கையில் அறியக்கூடியதும் அல்ல.

ஆகவே அர்ச்சுனா கொலை புரிக! ))))

ஜெ


சிலிக்கான் ஷெல்ஃப்

ஆகவே கொலைபுரிக!- கடிதம்

ஆர்விக்கு ஒரு வாழ்த்து

originally published on Jan 10, 2012/Republished

தொடர்புடைய பதிவுகள்

பாண்ட்

$
0
0

1

வெண்முரசு காண்டீபம் முடிந்த கையோடு ஒரு மாறுதலுக்காக சினிமா பார்க்கப்போகலாம் என முடிவெடுத்தேன். ஸ்பெக்டெர் படம் வந்திருந்தது, நாகர்கோயில் ராஜா மால் அரங்கில். சைதன்யா வீட்டில் சும்மாதான் இருக்கிறாள். கூப்பிட்டால் ‘போப்பா, ஜேம்ஸ்பாண்டையெல்லாம் எவ பாக்கிறது” என்று சொல்லிவிட்டாள். அருண்மொழிக்கு ஹாலிவுட் படங்களே அலர்ஜி.

ஸ்பெக்டர் பார்க்கப்போகிறேன் என்று நண்பர் சுகாவிடம் சொன்னேன். அவரும் ஒருமாதிரி சிரித்து ’போய்ட்டு வாருங்க மோகன்’ என்றர். ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது அறிவுஜீவிகளுக்கு உகந்தது அல்ல என்று ஒரு பொதுநம்பிக்கை இருப்பது தெரிந்தது. ஆனால் வேண்டாம் என்று விடவும் எனக்கு மனமில்லை. நான் இதுவரை வந்த எல்லா பாண்ட் படங்களையும் பார்த்திருக்கிறேன், எனக்கு பிடிக்கும்.

என் திரைப்பட ரசனை பொதுவாக ஒரு பத்துவயதுப் பையனுக்குரியது. தெளிவாகச் சொன்னால் ‘சிந்தனைக்கோ கற்பனைக்கோ இலக்கியம் இருக்கிறதே சினிமா எதற்கு?’ என்னும் மனநிலைதான். மாஸ்டர்பீஸ்கள் என்று சொல்லப்படும் படங்களை விழுந்து விழுந்து பார்த்த காலம் உண்டு. ஃபிலிம் சொசைட்டி இயக்கத்தில் செயலாற்றியும் இருக்கிறேன். ஆனால் எந்த சினிமாவும் ஒரு நடுவாந்தர நாவல் அளித்த அனுபவத்தைக்கூட எனக்கு அளித்ததில்லை. சினிமா குறைவான கலை என நான் நினைக்கவில்லை, என் கலை அல்ல.

எனக்கு சினிமா கேளிக்கைவடிவம்தான். சினிமாஸ்கோப்பில் பிரம்மாண்டமான நிலக்காட்சிகளைப் பார்ப்பதுதான் முதல் கவர்ச்சி. நகரங்கள், விதவிதமான சூழல்கள் பிடிக்கும். அத்துடன் பரபரப்பாகச் செல்லும் காட்சிகள் கவரும்.

நான் பார்த்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் கோல்ட் ஃபிங்கர். நான் அப்போது எட்டாம் வகுப்பு மாணவன். நாகர்கோயிலுக்கு அக்கா வீட்டுக்கு வந்தபோது மச்சான் என்னை கூட்டிக்கொண்டுசென்றார். லட்சுமி திரையரங்கம் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் பெரிய திரை எல்லாம் கிடையாது. படமே ரொம்ப பழைய அச்சாக இருக்கும். மழை பெய்யும்.மொத்தமாகச் சிவந்துபோயிருக்கும்.

ஆனால் சினிமாவை நாம் கற்பனையில் காண்கிறோம். இன்றைய சினிமாக்களைவிட பிரம்மாண்டமாக அதை அன்று நான் கண்டேன். நான் எண்ணிப்பார்க்கவும் முடியாத உலகங்களில் வாழ்ந்தேன். பாண்ட் என்னும் அந்தக்கனவு என்னை அப்போதுதான் ஆட்கொண்டது. நானே படம் பார்க்க ஆரம்பித்தபோது திருவனந்தபுரம் சென்று ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்தேன். நாவல்களை திருவனந்தபுரம் வாடகை நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்தேன்

திருவரம்பு என்னும் சின்னக்கிராமத்தில் பிறந்து ,மாடுமேய்த்து, சாணி சுமந்து, தொளியுழவு செய்து வாழ்ந்த ஓர் இளைஞனுக்கு ஜேம்ஸ்பாண்ட் என்னவாகப் பொருள் பட்டிருப்பார் என இன்று சிந்தித்துப்பார்க்கிறேன். ‘வெளியுலகம்’ என்றுதான். மாநகர்கள், உயர்தர விடுதிகள், அதிவேகக் கார்கள், விழாக்கள், நவீனக் கருவிகள், பெண்கள்… அறிவியலும் முதலாளித்துவப் பண்பாடும் சேர்ந்து உருவாக்கிய வாழ்க்கையின் உச்சகட்ட நுனி அது. அது எந்த இளைஞனுக்கும் கனவு

கூடவே அதன் அபாயங்கள். வேட்டையாடுதலும் வேட்டையாடப்படுதலும். ஜேம்ஸ்பாண்டுடன் நான் என்னை அடையாளம் கண்டுகொண்டதே இல்லை. ஆனால் அவருடன் சென்றுகொண்டிருந்தேன். அந்தக்கனவில் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். பின்னர் வெளிநாட்டுப்பயணங்களில் பெருநகர்களின் தெருக்களில், மலையுச்சிகளில் ,எரிமலைச்சாரல்களில், ஏரிக்கரைகளில் நின்றிருந்தபோது, மிக உயர்தர விடுதியறைகளில் தங்கியபோது அந்த கனவில்தான் வாழ்ந்தேன்.

எனக்குப்பிடித்த பாண்ட் ரோஜர்மூர்தான். சீன் கானரி அடுத்தபடியாக. ஆனால் பிற பாண்ட்களைப் பிடிக்காது என்றல்ல. எல்லா பாண்டுகளும் பிடித்தமானவர்கள்தான். ஏதோ ஒருவகையில் டேனியல் கிரெய்க் மூன்றாவதாக பிடித்தமானவராக இருக்கிறார். குழப்பமான பாண்ட். கவலைப்படுபவர், அலைக்கழிப்புகள் கொண்டவர். துரோகங்கள் பாண்டுக்குப்புதியவை அல்ல, ஆனால் கிரெய்க் மனம் கலைந்துபோகிறார். இன்றைய காலகட்டத்தின் பாண்ட். தான் சார்ந்திருக்கும் அமைப்பாலேயே வேட்டையாடப்படுபவர்

ராஜாஸ் மால் அரங்கில் பகல்முழுக்க பெய்த மழைச்சாரலிலும் நூறுபேர் இருந்தனர். நாகர்கோயிலிலேயே நல்ல திரையரங்கு, நல்ல ஒலியமைப்பு. படம் எனக்கு மீண்டும் ஒர் இளமைமீட்சியாக இருந்தது. பான்ட் ஓடிக்கொண்டே இருந்தார். அவருக்கும் பத்து வயதுதான். பத்து வயதுப்பையனின் உலகில்தான் சாகசம் உண்டு, சாவு இல்லை.

ஆனால் நம் மக்களுக்கு இன்னமும் நல்ல அரங்கில் படம் பார்க்கத்தெரியாது. ஒற்றை ஸ்பீக்கர் அரங்கில் படம் பார்த்த பழக்கம். பல ஓடைகளிலாக சூழொலி அமைப்பு உள்ள அரங்கில் ஒலிகள் அரங்கின் அனைத்து திசைகளிலும் கேட்கும். எல்லா ஒலிகளும் துல்லியமாகக் கேட்பதனால் இன்றையபடங்கள் மௌனமாகவும் மெல்லிய இசையுடனும் மிகமென்மையான ஒலிகளுடனும் இருக்கும்.

ஆகவே நடுவே செல்பேசி ஒலிப்பது, பேசிக்கொண்டிருப்பது , கூச்சலிடுவது எல்லாம் ஒலியனுபவத்தை அழித்துவிடும். என்னருகே இருந்த இரண்டு இளம்ஜோடிகள் பேசிக்கொண்டே இருந்தனர்.நடுவே செல்பேசியில்  பேசினர். படித்த ‘நவயுவர்’கள். அவர்களிடம் சொல்லிப்பார்த்தேன். முறைத்தார்கள்.

நான் எழுந்து சென்று அரங்கப்பணியாளரிடம் அப்பால் ஓர் இடம் கோரிப்பெற்றேன். முன்பக்கம் சென்று தனித்து அமரமுடிந்தது. பின்னால் செல்பேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. ‘ஆமா மச்சி, படம் பாக்கிறேண்டா’ போல குரல்கள்.

புன்னகையுடன் எண்ணிக்கொண்டேன். ஒருபக்கம் பாண்டின் அதிநவீனத் தொழில்நுட்பம். செல்பேசிகள், நவீனத் திரையரங்கம்.ஆனால் ஓலைக்கொட்டகையில் படம் பார்க்கும் கலாச்சாரப்பயிற்சி. இதுதான் நவீன இந்தியா.

மெக்ஸிகோசிட்டி, லண்டன், ரோம், மொரோக்கோவின் டான்ஜியர் வரை வெவ்வேறு நிலங்கள். வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் அல்ல. உணர்வுபூர்வமானவர், தன்னந்தனிமையை ஒவ்வொரு கணமும் உணர்பவர். ஆனால் வழக்கமான உலகைக் காக்கும் சாகசம்.

படம் முடிந்தபோது உருவான எண்ணம் ஒருவகை இரட்டைநிலை. ஒன்று என் இளமைமுதல் கண்ட பாண்ட், அதே கதை. ஒன்றுமே மாறவில்லை. அப்பாடா! ஆனால் அதற்குள் அனைத்துமே மாறிவிட்டிருக்கின்றன. பாண்டே கூட. அதுவும் நன்றாகவே இருந்தது

தொடர்புடைய பதிவுகள்

விலகிச்செல்பவர்கள்…

$
0
0

ஜெ

உங்கள் பழைய கட்டுரை ஒன்றை வாசித்தேன் எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும். அதில் நீங்கள் சொல்லியிருந்த ஒரு வரியே இக்கடிதத்தை எழுத எனக்குத் தூண்டுதல். ‘இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு விலகிச்சென்ற நண்பர்கள், வாசகர்கள் ஓரிருவர்கூட கிடையாது’ என்கிறீர்கள். உங்களுக்கு ‘பணிவன்புடன்’ கடிதம் எழுதியவர்கள் இன்றைக்கு உங்களை சுயமோகம் பிடித்தவர், அல்பம் என எழுதுவதும் உங்கள் அமைப்பில் இருந்தவர்களே அவற்றை பிரசுரித்து மகிழ்வதையும் காண்கிறீர்களா? உங்கள் மனப்பதிவு என்ன?

கருணாகரன்

அன்புள்ள கருணாகரன்,

இல்லை, தெரிந்துகொள்ளவும் முயல்வதில்லை. உங்கள் கடிதம் மூலம் ஊகிக்கிறேன். ஆனால் மறுபக்கத்தையும் பாருங்கள். அதிதீவிர மோடி எதிர்ப்பாளர்களாக நின்று என்னை வசைபாடுபவர்களிலும் பலர் பழைய நண்பர்களே.

உண்மை, எப்போதும் சிலர் விலகிச்சென்றுகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நண்பர்கள் அல்ல. அப்படி விலகிச்செல்பவர்களில் முக்கியமான தரப்பினர் தங்களை மிகமுக்கியமானவர்களாக எண்ணிக்கொண்டு என்னை அணுகுபவர்கள்.

நான் அவர்களின் சாதனைகள் என்ன என்றே பார்ப்பேன். அவர்களோ தங்களைப்பற்றி தாங்கள் என்ன உருவகித்திருக்கிறார்களோ அதை நான் அடையாளம் காண்கிறேனா என்று பார்ப்பார்கள். நான் இயல்பாக இருப்பேன், அவர்கள் ஒவ்வொரு கணமும் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பார்கள்.

இன்னும் நுட்பமாக, என்னைச்சூழ்ந்துள்ள மற்ற நண்பர்கள் தங்களை மிகமுக்கியமானவர்களாக எண்ணுகிறார்களா என்று பார்ப்பார்கள்.அவ்வாறு நிகழாதபோது அதை தங்கள் குறைபாடு என எண்ணி அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளும் சிலர் இருக்கலாம். பொதுவாக என்னையும் என் நண்பர்களையும் நிராகரித்து தன் இடத்தைப்பாதுகாத்துக்கொள்ளும் போக்கே அதிகம்.அதன்பின்னர் அவர்களின் நக்கல்களும் வசைகளும் வரத்தொடங்கும். அது நண்பர்களுக்கும் தெரியும்

இன்னொரு தரப்பினர் ஏதேனும் கருத்தியல்பற்று கொண்டவர்கள். இந்தத்தளம் ஆரம்பித்தபின் அப்படி விலகிச்சென்ற முதல் குழுவினர் அறுவை சிகிழ்ச்சைக்குக் கடப்பாரை என ஈ.வே.ரா பற்றி எழுதியபோது சென்றவர்கள். அதன் நித்யானந்தா பற்றிய என் விமர்சனங்களை ஒட்டி சென்றார்கள். அதன்பின் சந்திரசேகர சரஸ்வதி பற்றிய என் விமர்சனம் இன்னொரு தரப்பினரை விலக்கியது.

சமீபமாக வெள்ளை யானை வந்தபோது இன்னொரு குழு சென்றது. அதன்பின் அர்ஜுன் சம்பத் பற்றிய விமர்சனம் ஒரு தரப்பை அகற்றியது. சமீபமாக இடைநிலைச்சாதி, தெலுங்குச்சாதிகளைப்பற்றிய குறிப்புகள் ஒரு சராரை வெளியே கொண்டுசெல்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் கடும் வன்மத்துடன்தான் செல்கிறார்கள்.

1
கருத்துக்களுக்காக ‘புண்பட்டு’ செல்வர்கள் சென்றுகொண்டேதான் இருப்பார்கள். இவர்கள் அத்தனைபேரையும் ஒன்றாக வைத்திருக்கவேண்டும் என்றால் கருத்தே சொல்லக்கூடாது. அப்போதும் கருத்து என்ன என்று கேட்டு குடைந்து , அவர்களே ஊகித்து, புண்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.

இவர்கள் வாசகர்களே அல்ல. ஏனென்றால் வாசகனின் திறந்த உள்ளத்துடன் இவர்கள் எப்போதும் வாசித்ததில்லை. உடன்பாடான கருத்துக்களுக்காக மட்டுமே தேடியிருக்கிறார்கள். நண்பர்களாக அவர்கள் தங்களை வைத்துக்கொண்டதுமில்லை. உண்மையில் இவர்களுக்கு என் மேல் எப்போதும் எந்த மரியாதையும் இருந்ததும் இல்லை. அவர்களுக்கு தங்கள் சாதி, மதம், அரசியல் நிலைபாடுகளே முக்கியமானவை.

கருத்தியல்வெறி என்பது பெற்ற தந்தையின் கழுத்தை அறுக்கக்கூட தயங்காத இடத்திற்கே மனிதர்களைக்கொண்டுசெல்லும். ஏனென்றால் மிதமிஞ்சிய கருத்தியல்பற்று கொண்டவர்கள் இயல்பான மனிதர்கள் அல்ல. ஒருவகை ஆளுமைக்குறைபாடு கொண்டவர்கள். தனித்து நிற்கும் தன்னம்பிக்கையும் நிமிர்வும் அற்றவர்கள். அந்த கருத்தியல் என்பது அவர்களின் ஊன்றுகோல்.

அந்த தாழ்வுணர்ச்சியும் தனிமையும் உச்சகட்ட வன்மத்தை நோக்கித்தள்ளுகின்றன. வெறுப்பின் வெறியே அவர்களை வல்லமைமிக்கவர்களாக உணரச்செய்கிறது.

அவர்கள் தங்களுடைய கருத்துக்களுக்கு நான் உதவக்கூடும், ஒத்துப்போகக்கூடும் என நம்பி என்னிடம் வருகிறார்கள். ஏதேனும் சில கட்டுரைகள் அதற்குக் காரணமாக இருக்கலாம். பிற கட்டுரைகள் வரும்போது நான் அப்படி அல்ல எனத்தெரிந்ததும் ‘புண்பட்டு’ விலகிச்செல்கிறார்கள்.

அவ்வாறு விலகும்போது அதுவரை இருந்த நெருக்கத்தை ரத்துசெய்தாகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். வசைபாடத் தொடங்குகிறார்கள். அவர்கள் அன்பாக இருந்தபோதே நான் அயோக்கியனாக இருந்தேன் என பேச ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் என்னைப்பற்றி வசைபாடத்தேவையான நிகழ்ச்சிகளெல்லாம் அன்பாக இருந்தபோதுதான் நடந்திருக்கும்.

இதை எழுந்தவந்த நாள் முதலே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அது கருத்துத்தளத்தில் செயல்படும் எவரும் சந்தித்தாகவேண்டிய நிலைதான். வேறுவழியே இல்லை. இதை என் ஆளுமையுடன் நான் தொடர்புபடுத்திக்கொள்வதில்லை. ஏனென்றால் இது என் பிரச்சினை அல்ல. இது அவர்களின் பிரச்சினை.

என் நண்பர்கள், என் வாசகர்கள் என்னைவிட்டு விலகுவதும் அவ்வப்போது நிகழும். பல்லாயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள். ஒருநாளில் சராசரியாக 150 வாசகர்கடிதங்கள் வருகின்றன. புதியவாசகர்களின் கடிதங்களே தினம் பத்துக்கும் குறையாது.

பெரும்பாலும் பதிலிடுவேன், ஆனால் நான் எந்த மனநிலையில் இருப்பேன் எனச் சொல்லமுடியாது. நீலம் எழுதியநாட்களில் மின்னஞ்சல்களையே படிக்கமுடியாதவனாக இருந்தேன். பதில் பெறாமல் புண்பட்டவர்கள் உண்டு..

அத்துடன் ஒன்றுண்டு, அக்கட்டுரை எழுதிய காலகட்டத்தில் இருந்த நான் அல்ல இப்போதுள்ள நான். எப்போதுமே சமநிலையான ஆளுமை கொண்டவன் அல்ல. கொந்தளிப்பான, கட்டற்ற மனநிலைகள் எனக்குண்டு. எழுத்தாளன் என்றே என்னைச் சொல்வேன், சான்றோன் என்று அல்ல.

ஆனால் வெண்முரசு எழுதத்தொடங்கியபின் பித்துக்கும் மனத்தளர்ச்சிக்கும் உச்சகட்ட எழுச்சிக்கும் நடுவேதான் அலைந்துகொண்டிருக்கிறேன். தற்கொலையின் விளிம்புவரை சென்று மீள்வதுண்டு. இது ஒரு யோகியின் பணி. நான் எளிய மனிதன். இந்த அழுத்தத்தை என் உடல் உள்ளம் இரண்டுமே எதிர்கொள்ளமுடியாது தவிக்கின்றன.

இம்மனநிலை சூழ்ந்திருப்பவர்களை தொந்தரவு செய்வது என எனக்குத்தெரியும்.மனைவி குழந்தைகள் கூட புண்படக்கூடும். என் குடும்பத்திலிருந்தே என்னை விலக்கி ஒளித்துக்கொண்டு அந்நாட்களை கடக்கிறேன். ஆகவே சிலசமயம் நண்பர்களிடம் கடுமையான சில எதிர்வினைகள் நிகழக்கூடும். எனவே பெரும்பாலும் மிகநெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே இருக்கிறேன். நண்பர்கள் மட்டுமே இந்நிலையைப் புரிந்துகொள்ளமுடியும்.

வாசகர்கள், நண்பர்கள் பெரும்பாலும் ஓரளவு அதைப்புரிந்துகொள்பவர்கள் அல்லது அமைதியாக விலகிச்செல்பவர்கள். ஆனால் எல்லாரும் அல்ல. அபூர்வமாகச் சிலர் கடுமையாகப் புண்பட்டுவிடுவதும் கொந்தளிப்பதும் நிகழ்கிறது. நான் அதற்காக வருந்தி மன்னிப்புகோரியும் கூட மேலும் கோபம் கொண்டு விலகிச்சென்றவர்களும் உண்டு.

ஆகவே இன்று என்னை நேரில் சந்திக்கவரும் அனைவரிடமும் முன்னரே மன்னிப்பு கோருவதுண்டு. ஓர் இயல்பான, சம்பிரதாயமான, இனியநட்புக்காக என்னை நெருங்கவேண்டியதில்லை என்று முன்னரே எச்சரிக்கவும் செய்கிறேன். நீங்கள் எண்ணும் அந்த மனிதன் அல்ல நான் இப்போது. நான் வாழும் உலகம் வேறு.

கடைசியாக, தமிழகத்தில் இன்றுள்ள வலுவான இலக்கியக்கூட்டு என்பது விஷ்ணுபுரம் அமைப்பு. இதன் நண்பர்குழுவின் பணிகள் தொடர்ந்து நிகழ்கின்றன. ஒவ்வொரு வருடமும் அது விரிவடைந்தே வருகிறது.

மறுபக்கம் தமிழ்ச்சூழலில் சுயபிரலாபங்களுக்கு, சுயமுன்னேற்றமுயற்சிகளுக்கு அப்பால் ஒன்றுமே நிகழ்வதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்.ஆகவே இதற்குள் மனத்திரிபுகளை உருவாக்க பிறர் முயல்வது நடந்துகொண்டே இருக்கிறது.

இருவகையில் அவர்கள் முயல்வார்கள். இந்நண்பர்குழுவில் உள்ளவர்களை அடிவருடிகள் துதிபாடிகள் அல்லக்கைகள் என கிண்டலடிப்பார்கள். நம் நண்பர்களில் சிலர் இச்சொற்களால் அகங்காரம் புண்படுவார்கள். மெல்ல விலகிச்செல்வார்கள்.

இப்படி நம்மைப்பற்றிச் சொல்பவர்கள் தங்கள் அசட்டு நூல்களுக்கான எளிய பிரசுரவசதிக்காக பிரசுரகர்த்தர்களையும் ஊடகப்பிரபலங்களையும் சமூகஊடகங்களில் வெட்கமே இல்லாமல் துதிபாடிக்கொண்டிருப்பவர்கள் என்பதை நண்பர்களால் அப்போது கவனிக்கமுடியாது.

விஷ்ணுபுரம் அமைப்பு அதிலுள்ளவர்களின் சுயநலனுக்காக செயல்படுவது அல்ல. முழுக்கமுழுக்க இலக்கிய நோக்கம் மட்டுமே கொண்டது அது. இதுவரையிலான செயல்பாடுகள் அனைத்துமே அதற்கான ஆதாரங்கள். அதில் பங்களிப்பு மட்டுமே உள்ளது, எவரும் எதுவும் பெறுவதில்லை. நட்பின் மகிழ்ச்சியைத்தவிர

மேலும் இதில் எவரும் மேல் கீழென இல்லை. எவ்வகையிலேலும் இப்படி ஒரு கூட்டமைப்பை உருவாக்காமல் இங்கு எதையுமே நிகழ்த்தமுடியாது. ஆனால் அகங்காரம் சீண்டப்படும்போது இவை கண்ணுக்குப்படுவதில்லை. காழ்ப்பு கொண்டவர்களின் இந்த உத்தி ஓரளவு வெற்றிகரமாகவே உள்ளது

இன்னொன்று  உங்களைப்பற்றி இப்படிச் சொன்னாரே என்ற வகையில் போட்டுக்கொடுப்பது. அவ்வப்போது அதுவும் வேலைசெய்யத்தான் செய்கிறது.

இதையெல்லாம் கடந்தே இங்கே எதையாவது செய்யமுடியும் என நினைக்கிறேன். இத்தனை காழ்ப்புகள், எதிர்ப்புகள், வசைகள், அவமதிப்புகளுக்கு அப்பாலும் இது இயங்குவதையே இதன் சாதனை என கொள்கிறேன்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும்

$
0
0

அன்புள்ள ஜெ ,,

எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவைப்பற்றி நான் எப்போதுமே சிந்திப்பதுண்டு. நெருங்கிப்பார்த்தால் எழுத்தாளர்களின் எழுத்துக்கும் அவர்களின் பர்சனாலிட்டிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எழுத்தாளர்கள் ஏன் எழுத்தாளர்களைப்போல இல்லை என்று கேட்கிறேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. அதாவது எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே ஒரு சீரான உறவு உண்டா என்ன?

அதாவது ஒரு நாவலை வாசித்து ‘இந்த எழுத்தாளன் இப்படிச் சொல்கிறான்’ என்று நம்மால் நினைத்துக்கொள்ள முடியுமா?  நான் சரியாகக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது இதுதான். நாம் ஏன் ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துப்பேசவேண்டும்? நீங்கள் உங்கள் விமர்சனங்களில் ஓரளவுக்குத் தனிப்பட்ட விஷயங்களை தொட்டுக்கொள்கிறீர்கள். அதைப்பற்றித்தான் கேட்கிறேன்.எழுத்தாளனை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும்? அதனால்தான் இந்தக்கேள்வி. இன்னும் நான் சரியாகக் கேட்கவில்லை.

தமிழ்

 

அன்புள்ள தமிழ்

.

 

நீங்கள் கேட்கும் கேள்வி இதுதான். சமூகப் பொதுமனதில் இருந்து எழுத்தாளன் என்ற  ஒரு பொதுப்பிம்பம் உருவாக்கப்பட்டு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதை எல்லா எழுத்தாளர்களுக்கும் போட்டுப் பார்க்கிறீர்கள். அந்தக் கற்பனைச்சித்திரத்தின் குரலாக எழுத்துக்களை வாசிக்கிறீர்கள். ஆனால் நேரில் சந்தித்தால் எழுத்தாளர்கள் அப்படி இருப்பதில்லை.

இது ஏன்? எழுத்தாளர்களின் பொதுபிம்பம் என எதையும் வகுத்துவிடமுடியாது என்பதே என் பதில். நான் இங்கே பேசுவதெல்லாம் உண்மையான எழுத்தாளர்களைப்பற்றி. ஒரு நல்ல ஆக்கத்தையாவது உருவாக்கிய கலைஞர்களைப்பற்றி. பிற எதிலும்போலவே எழுத்தாளர்களிலும் போலிகளே அதிகம். பலசமயம் அதிக புகழுடன் இருப்பவர்களும் அவர்களே. காரணம் வாசகர்களிலும் பெரும்பாலானவர்கள் போலிகள். உண்மையான வாசகனுக்கு நீடித்தகவனமும் சுயமான கற்பனையும் தேவை. போலிகளுக்கு அவை எதுவும் தேவையில்லை.

எழுத்தாளர்களின் மனம் என்பது அந்தச் சமூகத்தின் மனத்தின் உச்சமாக வெளிப்படுவது. அதற்காகவே தீவிரப்படுத்தப்பட்ட சமூகமனத்தின் ஒரு சிறு பகுதி  அது என்று சொல்லலாம். ஒரு சமூகத்தின் கூட்டுஆழ்மனத்தின் லாவா  வெளிப்படும் சில புள்ளிகள் என்று எழுத்தாளர்களை வகுத்துக்கொள்ளலாம்.  ஆகவே அச்சமூகத்தின் உன்னதங்களும் கீழ்மைகளும் எல்லாம் அங்கே பீறிட்டு வெளிக்கிளம்புகின்றன. எழுதும் கணத்தில் ஆழத்திலிருந்து எழுந்த ஒரு நாவாக அவன் மாறுகிறான். தனிப்பட்ட முறையில் எழுத்தாளனின் பணி என்பது தன்னைத் துல்லியமான ஓர் ஊடகமாக ஆக்கிக்கொள்வது மட்டுமே.  எழுத்தில் எழுத்தாளனுக்குத் தேவையாக உள்ள பயிற்சி என்பது அதுவே

ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி.  ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான்.  அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்தகாலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும்.

விளைவாகத் தனக்குரிய படிமமொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இதுதான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான். ஆனால் இது படைப்பூக்க நிலையில் மட்டும்தான். அப்போது மட்டுமே அவன் எழுத்தாளன். மிச்சநேரத்தில் அவன் வெறும் மனிதனே.

இன்னும் சொல்லப்போனால் சராசரி மனிதர்களை விட உள்வாங்கியவனாகவும் சஞ்சலங்கள் கொண்டவனாகவும் உணர்ச்சிகரமானவனாகவும் அவன் இருக்கக்கூடும். ஆனால் வாசகர்களுக்கு எப்போதும் எழுத்தாளன் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அந்தபிம்பம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒன்று. அதிகம் வாசிக்காதவர்களுக்குக்கூட அந்தச் சித்திரம் மனதுக்குள் உள்ளது. நம் வணிகக்கதைகள் திரைப்படங்கள் எல்லாமே அந்த எளிமையான சித்திரத்தை அளிப்பவை. அந்தச் சித்திரத்துடன் எழுத்தாளனைச் சந்திக்கும் வாசகனுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. பலசமயம் நடை உடைபாவனைகளேகூட ஏமாற்றத்தை அளிக்கின்றன.

நான் எப்போதுமே எழுத்தாளன் என்று சமூகம் கட்டமைத்துள்ள அந்த பிம்பத்தைச் சுமக்கக்கூடாதென நினைத்துக்கொண்டிருப்பவன். லௌகீகவாழ்க்கையில் நான் எதுவோ அதையே புறத்தோற்றமாகக் கொண்டவன். சமூக மரியாதைகளைப் பேணக்கூடியவன். ஆகவே என்னைச் சந்திக்கும் பலர் ‘நீங்க எழுத்தாளர் மாதிரியே இல்லை’ என்று சொல்வதுண்டு. மேலும் ஓர் அளவுக்குமேல் நெருக்கமாக ஆகிவிட்டவர்களிடமே நான் விரிவாகவும் தீவிரமாகவும் பேசுகிறேன். ஆகவே சிலருக்கேனும் என் பிம்பம் நேரில் சிதையக்கூடும்.

ஆனால் என்பிம்பம்  கணிசமான வாசகர்களிடம் மெல்ல மெல்ல வேறுவகையில் வலுவாக உருவாவதையே காண்கிறேன். அதுவே எனக்கிருக்கும் மிக விரிவான தனிப்பட்ட நண்பர்-வாசகர் வட்டத்துக்கான காரணம். இருபதுமுப்பது வருடங்களில் என்னை விட்டு விலகிச்சென்ற நண்பர்கள், வாசகர்கள் ஓரிருவர்கூட கிடையாது. இருப்பவர்கள் அனைவருமே வழக்கமான எழுத்தாள சித்திரம் ஒன்றை உடைத்துவிட்டு என்னைப்பற்றிய வேறு ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டவர்கள். அப்பிம்பம் உடைவதில்லை.

[காஃப்கா]

 

கலைஞர்களைப்பற்றிய இந்த சமூகச்சித்திரம் எப்படி உருவானது? ஒரு தொடக்கப்புள்ளியாக ஜான் ரஸ்கின் எழுதிய ‘நவீன ஓவியர்கள்’ என்ற பெரும் நூலைச் சொல்லலாம். அது ஓவியத்தை விட அதிகமாக நவீன இலக்கிய விமர்சனத்தில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தியதாகும். எழுத்தாளனின் மனதை அடிப்படையாகக் கொண்டு எழுத்தை ஆராய்வதற்கான சிறந்த தொடக்கமாக அமைந்தது அந்த நூல்.

அதன் பின்னர் இன்றைய விமரிசனம் வரை தொடர்ச்சியாக எழுத்தாளனின் மனதுக்கும் எழுத்துக்கலைக்குமான உறவைப்பற்றி ஏராளமான கோட்பாடுகள் பேசப்பட்டிருக்கின்றன. கலை என்பது கலைஞனின் ஆளுமையின் ஓர் உச்ச வெளிப்பாடு என்ற கருத்தை மேலைச்சிந்தனையில் ஆழமாகப் பதிவுசெய்தது ரஸ்கினின் நூல்தான். இன்றுவரை அந்த அடிப்படை நம்பிக்கையில் இருந்து மேலைச்சிந்தனை வெளிவந்து விட்டது என்று சொல்ல முடியாது.

இன்றைய இலக்கிய விமர்சன மரபு என்பது கிட்டத்தட்ட ரஸ்கினின் சமகாலகட்டத்தில் தத்துவ விவாதம், அறிவியல் விளக்க கட்டுரைகள், மதவிளக்கக் கட்டுரைகள் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆகவே ஆரம்பகால இலக்கியவிமர்சனம் எழுத்தாளனின் ஆளுமைக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு நேர்கோட்டைப் போட முயல்கிறது.

சாமுவேல் ஜான்சன், கூல்ரிட்ஜ் போன்றவர்களின் இலக்கிய விமரிசனத்தின் செயல்பாட்டை எளிமையாக இவ்வாறு சொல்லலாம். இலக்கியப் படைப்புகள் காட்டும்  உணர்ச்சிகள் மற்றும் கருத்துக்கள் வழியாகவும் வாழ்க்கை வரலாற்றுத்தகவல்கள் வழியாகவும் அந்த படைப்பாளியின் ஆளுமையை உருவகித்துக்கொள்கிறது அது. அதன்பின் அந்த ஆளுமையின் வெளிப்பாடாக அந்த இலக்கியப்படைப்புகளை வாசிக்கிறது. படைப்பு – > படைப்பாளி -> மீண்டும்படைப்பு என்ற இந்தச் சுழற்சியை நாம் மரபான விமர்சனங்கள் அனைத்திலும் காணலாம்.

இது இயல்பானதும் பயனுள்ளதுமாகும் என்றே நானும் நினைக்கிறேன்.  இதன் போதாமைகளை நிரப்பி நாம் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால் படைப்பைப் படைப்பாளியின் ஆளுமையாகக் காண ஆரம்பித்ததுமே படைப்பாளியின் ஆளுமைச்சித்திரம் பிரம்மாண்டமானதாக ஆகியது. எழுத்தாளன் அவன் வாழும் காலகட்டத்தின் மாதிரிச்சான்று என்ற எண்ணம் எழுந்தது. ஆகவே அவனை ஆராய்வது அச்சமூகத்தையே ஆராய்வதாகும் என நம்பினர். கலைஞனைக் கதாநாயகனாக ஆக்குவதென்பது ரஸ்கினின் காலம் முதலே இலக்கியத்தில் பெருமரபாக ஆகிவிட்டிருந்தது. கலைஞன் மிகமிகச் சிக்கலான ஆளுமை என்றும் அவனுடைய அகம் நுட்பங்களால் ஆனது என்றும் உருவகிக்கப்பட்டது. கலைஞனின் அகத்தைச் சித்தரிப்பதென்பது எழுத்தாளர்களுக்கு எளியது, அவர்களால் அதைத் தன்னுடன் சேர்த்து அடையாளம் காணமுடியும் என்பதும் காரணம்.

ஆனால் இவ்வாறு பத்தொன்பதாம்நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கதாநாயகக் கலைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என மேலை இலக்கியத்தில் விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. ரோமெய்ன் ரோலந்தின் ழீன் கிரிஸ்தோஃப் என்ற புகழ்பெற்ற பேரிலக்கிய நாவலை முன்வைத்து விரிவான சர்ச்சைகள் நிகழ்ந்துள்ளன. அந்த உருவகங்கள் பெரிதும் விருப்பக் கற்பனைகளே என்று கூறப்பட்டது. கலைஞனைத் தன்னைப்போன்றவன் என நினைக்கும் எழுத்தாளன் கலைஞனின் சித்திரத்தை மிகையாகப் புனைய ஆரம்பிக்கிறான். தன் இலட்சிய பிம்பமாக அவனைப் புனைந்து வைக்கிறான்.

ஐரோப்பாவின் சமகாலப் பண்பாட்டு வரலாற்றில் ஷீன் கிறிஸ்தோஃப் முதலிய பேரிலக்கியங்கள் ஆற்றிய பங்களிப்பு மிக நுட்பமானது. முந்தைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கலைஞர்கள் ஒருவகை அன்னியர்களாகவே கருதப்பட்டார்கள். அவர்கள் கட்டற்றவர்களாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் எண்ணப்பட்டார்கள். வீரர்களுக்கும் பிரபுக்களுக்கும் அளிக்கப்பட்ட மரியாதையில் சிறுபகுதிகூட கலைஞர்களுக்கு அளிக்கப்படவில்லை.

ஆனால் ஜனநாயக யுகம் ஆரம்பித்தபோது குலப்பெருமை வழிபாடு பின்னகர்ந்தது. வீரவழிபாடு வேறு வடிவங்களுக்கு உருமாற்றம் கொண்டது. மக்களை கவரக்கூடியவர்களான கலைஞர்கள் பெரும் வழிபாட்டு பிம்பங்களாக எழுந்து வந்தார்கள். அப்போது கலைஞர்களின் பொதுப்பிம்பங்களைக் கட்டி எழுப்பவேண்டிய தேவை உருவானது. அதற்கான முன்னுதாரணங்களைப் புனைவில் உருவாக்கி அளித்தன ஷீன் கிறிஸ்தோஃப் போன்ற நாவல்கள்.

ஐரோப்பிய வரலாற்றை எடுத்தால் பல கலைஞர்களின் ஆளுமைகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுப் பெருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். முக்கியமான உதாரணம் மொசார்த் தான். நவீன ஐரோப்பிய பண்பாட்டின் தொடக்கப்புள்ளி என்றுகூட அவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். [ அவரது ஆளுமையின் சாயலில் உருவாக்கப்பட்டவர் ழீன் கிறிஸ்தோஃப்.அங்கே ஆரம்பித்த இந்தக் கலைஞனைச் சித்தரிக்கும் போக்குத்தான் இன்று எழுத்தாளர்களின் வரலாற்றை எழுதுவதில் வந்து நிற்கிறது.  

1

நமக்கு நவீன இலக்கியம் ஐரோப்பிய கற்பனாவாத இலக்கியங்கள் மூலம் அறிமுகமாகியது. அதனுடன் சேர்த்தே கலைஞன் என்ற நவீன உருவகமும் இங்கே வந்திருக்கவேண்டும். அந்த உருவகம் இங்கிருந்த எழுத்தாளர்களை எப்படிக் கிளர்ச்சி கொள்ளவைத்திருக்குமென ஊகிக்க முடிகிறது. ஆரம்பகால வங்க எழுத்துக்களிலெல்லாம் கலைஞனான  இலட்சியக் கதாநாயகனை நாம் காண்கிறோம்.

இந்த இலட்சியவாத நோக்கு பின்னர் கலைஞர்களை அந்த வெளிச்சத்தில் சித்தரித்துக்கொள்ள நமக்குத் தூண்டுதலாகியது. கலைஞர்களை நாம் இலட்சியவாதிகளாகச் சித்தரித்துக்கொண்டதை சமூகமே சேர்ந்து நிகழ்த்திக்கொண்ட புனைவு என்று சொல்லலாம்.

உதாரணமாக நாம் பாரதியை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று பாருங்கள். பாரதியின் பாடல்களின் உணர்ச்சிநிலைகள் வழியாக நாம் அவரை உணர்ச்சிகரமானவராக, கற்பனாவாதப்பண்பு கொண்டவராக, கொந்தளிப்பானவராக உருவகித்துக்கொள்கிறோம். அவரது கருத்துக்கள் வழியாக அவர் ஒரு தேசியவாதி, தமிழ்ப்பற்றுக் கொண்டவர், சக்தி வழிபாட்டாளர்,பின்னர் அத்வைதி என்று புரிந்துகொள்கிறோம். அதன் பின் பாரதியின் வாழ்க்கைவரலாற்றை இந்தக் கோணத்தின் வழியாகத் தேடிக் கிடைக்கும்  பலவகையான தகவல்கள் வழியாகப் புனைந்து உருவாக்கிக் கொள்கிறோம்.

அதாவது இலக்கியம் அளிக்கும் சித்திரத்தை வைத்தே வாழ்க்கை வரலாற்றுச் சித்திரத்தைத் தொகுத்துக்கொள்கிறோம். பலசமயம் இலக்கியம் அளிக்கும் சித்திரத்தைக் கொண்டு வாழ்க்கைவரலாற்றின் இடைவெளிகளைக் கற்பனை மூலம் நிரப்பிக்கொள்கிறோம். நிறைய சந்தர்ப்பங்களில் இலக்கியம் அளிக்கும் சித்திரத்துடன் பொருந்தும்படியாகப் பாரதியின் வாழ்க்கையைக் கற்பனைமூலம் மிகைப்படுத்தவும் செய்கிறோம்.

பாரதி காந்தியைச் சந்தித்தது போன்ற பல நிகழ்ச்சிகள் பின்னர் இவ்வாறு உருவாக்கப்பட்டவை. பாரதியின் வாழ்க்கையைச் சித்தரித்து அவரது ஆளுமைச்சித்திரத்தை உருவாக்க  அப்படி எத்தனை நூல்கள் தொடர்ச்சியாக ஐம்பதாண்டுக்கால இடைவெளியில் எழுதப்பட்டுள்ளன என்று பார்த்தால் ஆச்சரியம் ஏற்படும்.

கற்பனை அம்சம் குறைவான நூல்கள் என்று யதுகிரி அம்மாளின் ‘நான் கண்ட பாரதி’ ,கனகலிங்கத்தின் ‘எனது குருநாதர்’ போன்ற நூல்களைச் சொல்லலாம். கற்பனை அம்சம் கூடிய சித்தரிப்புகள் என வராவின் ‘மகாகவி பாரதி’ என்ற வரலாற்றையும் பரலி சு நெல்லையப்பரின் ‘மகாகவி பாரதி வரலா’ற்றையும் சொல்லலாம். இந்தப்போக்கு கடைசியில் படைப்புக்களில் இருந்து உருவாக்கப்பட்ட பாரதியே பாரதியின் ஆளுமை என்ற  இறுதிநிலையை அடைவதை ராஜம் கிருஷ்ணனின் ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற நூலில் காணலாம்.
1
இவ்வாறுதான் சென்றகாலத்தைய இலக்கிய ஆளுமைகளின் சித்திரங்கள் முழுக்க நமக்கு உருவாக்கியளிக்கப்பட்டிருக்கின்றன. மேலைநாட்டில் இலக்கிய ஆளுமைகளின் குணச்சித்திரத்தை படிப்படியாக பல்வேறு நூல்கள் மூலம் உருவாக்கிக் கொள்வதென்பது முக்கியமான இலக்கியச் செயல்பாடாகவே உள்ளது. தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, பால்ஸாக்,மாப்பசான், மார்சல் புரூஸ்ட் போன்ற எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சித்தரிப்புகள் பல தலைமுறை எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டவை.

 

அதன்பின் வந்த நவீனத்துவ இலக்கிய காலகட்டம் எழுத்து என்பதை எழுத்தாளனின் ஆளுமையின் ஒரு முகம் மட்டுமே என்று எண்ணியது. ஆகவே இக்காலகட்டத்தில் கலைஞனின் தனிவாழ்க்கை என்பது மிக அதிகமாக பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. உதாரணமாக எந்த கா·ப்கா கதையும் கா·ப்காவின் தனிவாழ்க்கை அளவுக்குப் பேசப்பட்டதில்லை. அவரது தனிவாழ்க்கையை மனதில் கொள்ளாமல் அவரது எந்தக் கதையும் வாசிக்கப்பட்டதில்லை

 

இக்கணம் வரை இவ்வாறு கலைஞனின் ஆளுமையை புனைவதும் மறுபுனைவுசெய்வதும் ஆராய்வதும் மேலைநாட்டு இலக்கியத்தில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. வின்செண்ட் வான்கா, போன்ற ஓவியர்கள்,  விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவ அறிஞர்கள் எக்காலமும் வாழ்க்கைவரலாற்று ஆய்வாளர் கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். திரைப்படத்தில்கூட இன்றும் அப்போக்கு தொடர்கிறது.

 

தமிழிலக்கியத்தில் கற்பனாவாதச் சாயலுடன் கலைஞனை கதாநாயகனாக ஆக்கிய படைப்புகளுக்கு மூன்று சிறந்த முன்னுதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ’மோகமுள்’. பாபுவை இசைக்கலைஞனாக சித்தரிப்பதனூடாக அவனை மிகமிக நுட்பமானவனாக உணர்ச்சிகரமானவனாக காட்டுகிறார் தி.ஜானகிராமன். பாபுவின் நெகிழ்ச்சிகள் எல்லாமே இசைமூலமே சொல்லப்படுகின்றன என்பது அந்நாவலை மிக விரும்பத்தக்கதாக ஆக்கியது.

 

இன்னொரு உதாரணம் கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ சிக்கல் ஷண்முகசுந்தரம் என்ற இசைக்கலைஞனின் வாழ்க்கைச்சித்திரத்தை அளிக்கிறது இந்நாவல். அன்றைய இசைமேதையான ராஜரத்தினம்பிள்ளையின் சாயலில் உருவாக்கப்பட்டது இக்கதாபாத்திரம். ராஜரத்தினம்பிள்ளை அவரது கலைச்செருக்கு சுதந்திர மனப்பான்மை கட்டற்ற உணர்ச்சிநிலைகள் ஆகியவற்றுக்காக பெரும்புகழ்பெற்றவர். அந்த ஆளுமைக்கூறுகளை இந்நாவல் வெற்றிகரமாக அதன் நாயகனுக்கும் அளிக்கிறது.

 

இவ்விரு நாவல்களும் கிட்டத்தட்ட ஷீன் கிறிஸ்தோஃப் ஆற்றியபணியையே இங்கே செய்தன என்பதை காணலாம். அவை நவீன ஜனநாயக சூழலுக்காக கலைஞன் என்ற முன்னுதாரணச் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகின்றன.பழைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிரபுக்களின் சேவகர்களாக இருந்த கலைஞர்கள் அக்காலகட்டத்தில் மக்கள்நாயகர்களாக மாற ஆரம்பிக்கிறார்கள். அதற்கு இந்த சித்தரிப்புகள் பேருதவி செய்கின்றன. அதற்கு அன்று பேருருவம் கொண்ட அச்சு, காட்சி ஊடகங்களும் உதவின

 

இக்காலகட்டத்தில் எஸ்.ஜி.கிட்டப்பா, ராஜரத்தினம் பிள்ளை போன்ற வசீகரமான கலைஞர்களின் ஆளுமைகள் வாய்மொழிப்பேச்சுகளில் பரவிய துணுக்குச்செய்திகள் மூலம் சமூகமனத்தில் கட்டி எழுப்பப்பட்டன. இக்கலைஞர்களின் ஆளுமையில் மிக வசீகரமாக இருந்தது இவர்களின் மீறல்தான். மரபை இவர்கள் மீறிய விதம். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை உதறி முன்னால்சென்ற விதம். ஏன் ஒழுக்கத்தை மீறி எழுந்த விதமும்தான். மக்கள் அவர்கள் விழைந்த மீறல்களைச் செய்பவர்களாக இவர்களைப்புனைந்தார்கள்.

 

[ராஜரத்தினம் பிள்ளை ]

உண்மையில் தில்லானா மோகனாம்பாளுக்கு பின்னரே ராஜரத்தினம்பிள்ளை பெரும் ஆளுமையாக சமூக மனதில் வளர்ந்தெழுந்தார் என்கிறார்கள். இருக்கலாம். அது ஒரு கொண்டு-பெற்று வளரும் உறவு. வாய்மொழிக்கதைகள் இலக்கியமாகின்றன. இலக்கியம் வாய்மொழிக்கதைகளை வளர்க்கிறது

 

இவ்விரு நாவல்களையும் இன்று வாசித்தால் இருமைகள் கட்டமைக்கப்பட்டு அந்த வேற்றுமைகள் மூலம் இலட்சியக்கலை, இலட்சியக்கலைஞன் என்ற படிமம் செதுக்கி உருவாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். தியாகையரின் சாயலில் உருவாக்கப்பட்ட ரங்கண்ணா என்ற இசையாசிரியனின் நேரடி வாரிசாக பாபு உருவாக்கப்படுகிறான். இசையை வணிகக்கலையாக ஆக்கும் ராமு பாபுவுக்கு நேர் எதிரான ஆளுமையாக கட்டமைக்கப்படுகிறான்.

 

அதேபோல பல இருமைகளை தில்லானா மோகனாம்பாள் உருவாக்குகிறது. பழமையில் தேங்கிப்போய் ஒரேமாதிரியாக வாசிக்கும் மரபுக்கு நேர் எதிராக திருவாரூர் பாரிநாயனத்தை எடுத்து வாசிக்கும் சண்முகசுந்தரம் உருவாக்கப்படுகிறான். இன்னொருபக்கம் அன்று வந்துகொண்டிருந்த ஆங்கில இசைக்கு எதிரான தேசிய இசையின் கலைஞனாக காட்டப்படுகிறான். இன்னொரு பக்கம் ‘டப்பாங்குத்து’ இசையான ஜில்ஜில் ரமாமணியின் இசைக்கு எதிரானவனாக அவன் நிறுத்தப்படுகிறான்.

 

அக்காலகட்டத்து வெற்றிகரமான வணிகநாவலாக இருந்த, ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனின் ’சித்திரப்பாவை’ கலைஞனை ஒட்டுமொத்த சமூகத்தையே வழிநடத்தும் இலட்சியவாதியாக மேலும் முன்ன்னெடுத்துசெலவதை காணலாம். அதன் கதாநாயகன் அண்ணாமலை ஒர் ஓவியன். அன்றைய வெகுஜன வாசகர்களுக்கு புரியும்படியாக ஒரு எளிமையான உருவப்படம் தீட்டும் ஓவியனாகவே அகிலன் அவனை காட்டியிருக்கிறார்.

’இன்றைய வாழ்க்கையின் அகப்புற நிலைகளை ஆராய்ந்து, எதிர்காலத்துக்கான மனப்போக்கை உருவாக்கும் கடமை எனக்கிருப்பதாக நான் நம்புகிறவன்’ என சித்திரப்பாவையின் முன்னுரையில் அந்நாவலின் நோக்கத்தை சொல்லும் அகிலன் அந்த உயர் இலட்சியவாதத்தின் மனிதவடிவமாகவே அண்ணாமலை என்ற கலைஞனை படைத்திருக்கிறார். சமுதாயவீதியில் நா.பார்த்தராசதி முத்துக்குமரன் என்னும் இலட்சியக்கலைஞனைப் படைக்கிறார்.

 

தமிழில் நவீனத்துவ எழுத்து அதன் தொடக்கத்தை நிகழ்த்தியபோதே அறிவுஜீவியும் கலைஞர்களுமான கதாநாயகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். இதற்கும்  இரு முக்கியமான உதாரணங்கள். ஒன்று, ஜெயகாந்தனின் பாரீஸுக்கு போ’ அதில் இசைக்கலைஞன் இசைக்கலைஞனாக அல்ல, நவீனத்துவத்துக்கே பிரதிநிதியாக வெளிப்படுகிறான். பழமையுடன் போரிடுபவனாக, புதிய உலகின் விழுமியங்களை உள்வாங்கி தெளிவாக முன்வைப்பவனாக அவன் காட்டப்படுகிறான்.

 

சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சிலகுறிப்புகள்’ இன்னொரு உதாரணம். சுந்தர ராமசாமி கலைஞனை ஒரு இலட்சியவாதியாகக் காட்டவில்லை. அவனுடைய சஞ்சலங்களையும் தத்தளிப்புகளையும் தேடலையும் முதன்மைப்படுத்துகிறார். நவீனத்துவத்துக்கு இரு முகங்கள். ஒன்று, பழைய மதிப்பீடுகளை மறுத்து வாதாடும் சீர்திருத்த வேகம். அதற்கு ஜெயகாந்தனின் நாவல் உதாரணம். இன்னொன்று, நவீன யுகத்தில் தன் இருப்புக்காக தேடி விழுமியங்களுக்காக அலைமோதும் இருத்தலியல். அதற்கு ஜேஜே சிலகுறிப்புகள் உதாரணம்

 

இவ்வாறு கிட்டத்த இரு நூற்றாண்டுகளாக பண்பாட்டுவெளியில் எழுத்தாளன் என்ற படிமம் தொடர்ந்து செதுக்கப்பட்டுவருகிறது. அது ஒரு நவீனத்தொன்மம் என்று கொள்வதே சிறந்தது. அதற்கு பலவகையான சமூகப்பயன்பாடுகள் இருந்தன. ஆகவேதான் அது தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டது. இன்றும் நீடிக்கிறது.

 

முதலில் அது கருத்தியல்செயல்பாடு, கலைகள், இலக்கியம் ஆகியவற்றுக்கு சமூக அறத்தை உருவாக்கி நிலைநாட்டுவதில் உள்ள பங்கை சமூக மனதில் நிலைநாட்டுகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கலைஞனுக்கு இந்த இடம் இல்லை என்பதை நினைவுகூரவேண்டும். அவன் அரசசபைகளிலோ அல்லது தேர்ந்த சில ரசிகர்களிடமோ மட்டுமே தொடர்புகொண்டுவந்தான். அவன் ஜனநாயக யுகத்தில் இவ்வாறு  பொதுக்கருத்தை உருவாக்கும் ஆளுமையாக கட்டமைக்கப்படுகிறான். பாரதி,கல்கி, ஜெயகாந்தன் போன்றவர்களுக்கு தமிழ்ச்சமூகத்தில் இருந்த செல்வாக்கு இவ்வாறு உருவானதே.

 

ஒருபடைப்பை வாசிப்பதற்கு எப்படியோ அந்த படைப்பாளியின் ஆளுமை என்ற ஒரு மானசீகச் சித்திரம் தெவையாகிறது. வாசகன் அந்த ஆளுமையுடன் கொள்ளும் அந்தரங்கமான உரையாடலே வாசிப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. அந்த எழுத்துக்களின் உச்சநிலைகளை மட்டுமே தொடுத்து உருவாக்கப்பட்ட ஆளுமையாகவே அந்த சித்திரம் இருக்க முடியும்.

அது ஓர் இலட்சிய பிம்பமே. எழுத்தாளனின் உண்மையான அன்றாட ஆளுமை அந்த பணியை ஆற்றமுடியாது. அந்த வாசகன் எழுத்தாளனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு அன்றாடவாழ்க்கையிலும் அவ்வெழுத்தாளன் அல்லது கலைஞன் கொள்ளும் உச்சகட்ட வெளிப்பாட்டு நிலைகளையும் மனநிலைகளையும் நேரில் கண்டாலொழிய. அது அனைவருக்கும் சாத்தியமல்ல.

 

ஆகவே பொதுவெளியில் எழுத்தாளன் கலைஞன் என்ற ஒரு நவீன தொன்மம் எப்போதுமே நீடிக்கும். அதன் ஒளியில் எல்லா எழுத்தாளர்களும் வாசகனால் கட்டமைக்கப்படுவார்கள். அதற்கு ஒரு முக்கியத்துவமும் உண்டு. ஆனால் எழுத்தாளனிடம் அந்த ஆளுமையை அப்படியே எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். அப்படி எதிர்பார்க்காமல் இருக்கலாம். அல்லது எழுத்தாளனைச் சந்திக்க்காமல் இருக்கலாம்.

 

இதில் இன்னொன்று உண்டு. போலிஎழுத்தாளர்கள் மிக எளிதாக அந்த பொதுபிம்பத்தை தங்கள் ஆளுமையாக ஆக்கி நடிப்பார்கள். அப்படி எத்தனையோ போலிகளை நாம் மேடைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். ஆகவே இதை ஒரு விதி என்றேகூட சொல்லுவேன். ஓர் எழுத்தாளனை நேரில் சந்திக்கும்போது உங்கள் மனதில் உள்ள சித்திரம் மாறவில்லை என்றால் அவன் எழுத்தாளன் அல்ல, நடிகன்.

 

ஜெ

 

 

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Aug 15, 2011

தொடர்புடைய பதிவுகள்


சகிப்புத்தன்மையின்மை!

$
0
0

1

என் வாழ்க்கையில் அதிகாரம் என்றால் என்ன என்று நான் கண்கூடாக அறிந்தது 1994 இல் சம்ஸ்கிருதி சம்மான் விருதுக்காக டெல்லி சென்று அங்கே இந்தியா இண்டர்நேஷனல் செண்டரில் இரண்டு நாள் தங்கியிருந்தபோதுதான். அதற்கு முன்னரே இரு அமைச்சகங்களில் எனக்கு அறிமுகமுண்டு, செய்தித் தொடர்பு துறை மற்றும் கலாச்சாரத்துறை. ஆனால் அதிகாரம் தங்கத் தாம்பாளத்தில் பரிமாறப்பட்டிருப்பதை அங்கேதான் பார்த்தேன்.

பெரிய வளாகத்தினுள் அமைதியான சொகுசான பங்களா. புல்வெளிகள். உயர்தர உணவுகள். குடிவகைகள். ஓசையின்றி வெண்புகைபோல நடமாடும் பரிசாரகர்கள்.மேலுதடு அசையாமல் பேசப்படும் வெண்ணை ஆங்கிலம். நாசூக்காக கூந்தல் திருத்தும் உதட்டுச்சாயப் பெண்களின் நிரந்தரமாக வளைந்த புருவங்கள். ஓசையே இல்லாமல் ஆனால் சைகைகளும் முகபாவனைகளும் உரக்க ஒலிக்க கைவிரித்து கட்டித் தழுவி அளிக்கப்படும் வரவேற்புகள்.

அதன்பின் நான் பல நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால் இந்தியா இண்டர்நேஷனல் செண்டரின் அந்த ஆடம்பரத்தையும் சொகுசையும் எங்கும் கண்டதில்லை. இந்தியாவில் கலைகளையும், சுதந்திர சிந்தனையையும் வளர்க்கும் பொருட்டு இந்திய அரசின் நிதியுதவியால் உருவான சுதந்திர அமைப்பு அது. அப்போது டாக்டர் கரன்சிங் அதன் தலைவராக இருந்தார் என நினைவு. அவரை அங்கே மாலையில் பார்த்தேன்.

நான் ஆங்கில இதழ்களில் அதுவரை வாசித்தறிந்த அத்தனை முக்கியமான அறிவுஜீவிகளையும் அங்கே பார்த்தேன். யூ.ஆர். அனந்தமூர்த்தி கிட்டத்தட்ட நான்காண்டு காலமாக அங்கே நிரந்தரமாக தங்கியிருந்தார். கிரீஷ் கர்நாட் சிலநாட்களாக தங்கியிருந்தார். பிரீதிஷ் நந்தி போன்ற இதழாளர்கள் மகரந்த் பரஞ்ச்பே போன்ற சிந்தனையாளர்கள். ஷோபா டே போன்ற எழுத்தாளர்கள். எங்குபார்த்தாலும் பெரிய தலைகள்.

அன்று நான் மலைத்துப் போனது உண்மை.கிரிஷ் கர்நாடை கண்டு அருண்மொழி ஓடிப்போய் அறிமுகம் செய்து கொண்டு குதூகலித்தாள். நயன்தாரா ஷெகல் தினமும் அங்கே மதுவருந்த வருவதுண்டு, அன்றும் பார்த்தேன். அன்று என்னுடன் சம்ஸ்கிருதி சம்மான் வாங்கிய இருவர், ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அனாமிகா ஹக்ஸர் அங்கே வழக்கமாக வருபவர்கள் என்பதை கண்டேன்

முரட்டு கல்கத்தா ஜிப்பாவும் கோலாப்பூர் சப்பலும் அணிந்தவர்கள். குட்டிக்கண்ணாடி போட்டவர்கள். காதி புடவை கட்டி தூவெண் நரை படரவிட்ட பெண்கள். ஒருவர் கபிலா வாத்ஸ்யாயன் என்றார்கள். பபுல் ஜெயகர் வருவார் என்றார்கள். எங்கே பார்த்தாலும் இலக்கியப் பேச்சுக்கள். கலை விவாதங்கள்.

Ve.sa-front-page
அந்த ஆடம்பரம் என்னை அச்சுறுத்தியது, உயர் அறிவுஜீவித்தனம் அன்னியமாக்கியது. மறுநாள் என்னைக் கண்ட வெங்கட் சாமிநாதன் அதை உடனே ஊகித்துக் கொண்டார். ‘யோவ் இதிலே முக்காவாசிப்பேர் சரியான காக்காக் கூட்டம். டெல்லியோட அதிகாரமையங்களை அண்டிப் பொழைக்கிற ஸ்நாப்ஸ். பலபேர் வெறும் பவர் புரோக்கர்கள். நீ மதிக்கிற மாதிரி உண்மையான ஆர்ட்டிஸ்ட் ஒண்ணு ரெண்டு இருக்கலாம். அவனும் இங்க இருந்திட்டிருக்கமாட்டான். ஒடீருவான்”

“இவங்கதான் அத்தனை கல்ச்சுரல் விஷயங்களையும் தீர்மானிக்கிறாங்க. உலகத்தில உள்ள அத்தனை விஷயங்களப் பத்தியும் ஒருமணிநேரம் அழகான ஆங்கிலத்திலே சரியான ஜார்கன் எல்லாம் போட்டு பேசமுடியும். ஆனா அறுபத்தி ஒண்ணாம் நிமிஷம் முதல் சாயம்போக ஆரம்பிச்சிரும். ஒரெளவும் தெரியாது. பெரும்பாலும் பழைய பெருங்காய டப்பா” வெங்கட் சாமிநாதன் சொன்னார்

“அத்தனைபேரும் ஆளுக்கு நாலஞ்சு டிரஸ்ட் வச்சிருப்பாங்க. செர்வீஸ் ஆர்கனைசேஷன் , கல்ச்சுரல் ஆர்கனைசேஷன்னு இருக்கும். கான்ஃபரன்ஸிலே இருந்து கான்ஃபரன்ஸுக்கு பறந்திட்டிருப்பாங்க. கவர்மெண்ட் பங்களாவில ஒரே ஒரு முறை ஒரு நிகழ்ச்சிக்காக தங்க எடம் குடுத்தாப்போரும், கெளப்பவே முடியாது. டெல்லியிலே மட்டும் எப்டியும் அஞ்சாயிரம் பங்களாக்களை ஆக்ரமிச்சு வச்சிட்டிருக்குது இந்தக் கூட்டம்” சாமிநாதன் சொன்னார் “இதே மாதிரி இன்னொரு அதிகார மையம் இருக்கு ஜே.என்.யூ. அங்கியும் இதே கதைதான்”

“கவர்மெண்ட் இவங்களை கெளப்பிவிடமுடியாதா?” என்றேன். “பொதுவா கவர்ன்மெண்ட் அப்டி நினைக்கிறதில்லை. ஏன்னா இந்தக் கூட்டம் நேரு காலம் முதலே வந்து ஒட்டிக்கிட்டது. ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்பப்ப சில ஐ.ஏ.எஸ் காரங்க முயற்சி பண்ணினாலும் அங்க போய் இங்கபோய் காலை கைப்பிடிச்சு கெஞ்சி கூத்தாடி தப்பிச்சிருவாங்க”

“அதோட இன்னொண்ணும் இருக்கு” என வெங்கட் சாமிநாதன் சொன்னார். “இவங்க வெறும் ஒட்டுண்ணிகள் மட்டும் இல்ல. இவங்களுக்கே பெரிய பவர் ஒண்ணு உண்டு. பெரும்பாலானவங்க முற்போக்கு இடதுசாரி ஆளுங்க. பாத்தேல்ல?’ நான் வியந்து “ஆமா” என்றேன்.

“உலகம் முழுக்க செமினார்கள் வழியா அறியப்பட்டவங்க. இந்தியாவிலே எது நடந்தாலும் உலகப் பத்திரிகைக்காரங்க இவங்ககிட்டதான் கேப்பாங்க. காங்கிரஸ் கவர்மெண்டுக்கு ஒரு லெஃப்டிஸ்ட் முகமூடிய உண்டுபண்ணி குடுக்கிறதே இவங்கதான். அப்டிப்பாத்தா இவங்களுக்கு செலவழிக்கிற தொகை ரொம்ப கம்மி” என்றார் வெ.சா “இவங்க இந்தியா மேலே உக்காந்திட்டிருக்கிற வேதாளங்க. யாராலயும் எதுவும் செய்யமுடியாது. இந்தியாவில எது சிந்தனை எது கலைன்னு தீர்மானிக்கிறவங்க”

நான் பலமுறை இந்தியா இண்டர்நேஷனல் செண்டருக்கும் அதைப்போல டெல்லியில் உள்ள நாலைந்து கலாச்சார மையங்களுக்கும் சென்றிருக்கிறேன். மலையாள இதழாளர்களுடன். அவர்களுக்கு வதந்தி பொறுக்கிச் செய்தியாக்க உகந்த இடங்கள் இவை. அந்திக்குப்பின் மது தலைக்கு ஏறும் போது ரகசியங்களே இல்லை

ஆனால் இவர்கள் எழுதித்தள்ளும் ஆங்கில நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகளை அரிய ஞானச்செல்வங்களாக கருதி அவற்றின் அடிப்படையில் அரசியல் பண்பாட்டு விவாதங்கள் செய்பவர்கள் மேல் எப்போதுமே ஒரு பரிதாபம் எனக்குண்டு. உண்மையான அரசியலை ஒருபோதும் அவர்கள் அறிவதில்லை. எளிய பற்று நிலைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுத்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

முன்பு இதைப்பற்றி எழுதியபோது ஃபர்கா தத் ஒரு பவர் புரோக்கர் அன்றி வேறல்ல என எழுதினேன். என் நண்பர்களே எப்படி அப்படி ஒரு முற்போக்குப் போராளியைப்பற்றி எழுதலாம் என என்னிடம் சண்டையிட்டனர். நல்லவேளை சில நாட்களிலேயே அந்தம்மாள் டாட்டாவிடம் பேசிய தரகு வேலையின் விவகாரங்கள் நீரா ராடியா டேப் வழியாக வெளிவந்தன.

[என்னாயிற்று அந்த வழக்கு என எவருக்கேனும் தெரியுமா? ஃபர்கா தத்தை அவரது முற்போக்கு பீடத்திலிருந்து ஒரு மாதம் கூட கீழிறக்க அந்த அப்பட்டமான வெளிப்படுத்தல்களால் இயலவில்லை. டெல்லியின் வல்லமை அப்படிப்பட்டது]

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக அந்த அதிகார வளையம் மீது கை வைக்கப்பட்டிருக்கிறது. கீழ்மட்டத்தில் இதற்கான எச்சரிக்கைகள் ஆறுமாதமாக அனுப்பப் பட்டிருக்கின்றன. சென்ற வாரம் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மை சடாரெனக் குறைந்து அறிவுஜீவிகள் கொந்தளித்தெழுந்ததன் உள்விவகாரம் இதுதான் போலும்.

JatinDas

உதாரணமாக நடிகை நந்திதா தாஸின் தந்தை ஓவியர் ஜதீன் தாஸ் டெல்லியின் மிக மிக முக்கியமான பகுதியில் அரசு பங்களாவை பல ஆண்டுக்காலமாக இலவசமாக பயன்படுத்திவருகிறார். அவரை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அரசு. நந்திதா தாஸ் சகிப்புத்தன்மை குறைந்துவருவதாக கொந்தளித்து நாளிதழ்களில் எழுதுவதும் தொலைக்காட்சிகளில் பேசுவதும் வேறெதற்காக? சகிப்புத்தன்மைக்கான தற்கொலைப் படைப் போராட்டம் மேலும் வலுப்பெறவே வாய்ப்பு

மோடி தவறான இடத்தில் கையை வைத்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன். உலக மீடியாவில் இந்தியாவை சீரழிக்க இவர்களால் முடியும். இங்கு ரத்த ஆறு ஓடுவதாக ஒரு சித்திரத்தை மிக எளிதாக உருவாக்குவார்கள். தொழில்துறைத் தயக்கங்களை உருவாக்கவும் சுற்றுலாத் துறையை அழிக்கவும் இவர்களால் முடியும். இவர்களுக்கு இந்தியாவில் இன்று மாற்றே இல்லை என்பதே உண்மை. இவர்களை சகித்துக்கொள்வதே இன்று இந்தியாவுக்கு இன்றியமையாதது. மோதியின் சகிப்பின்மை ஆபத்து.

அரசுபங்களா ஆக்ரமிப்பு -அறிவுஜீவிகளுக்கு நோட்டீஸ்

தொடர்புடைய பதிவுகள்

நகரம்! நகரம்!

$
0
0

மனுஷ்யபுத்திரன் எனக்குத் தீபாவளி வாழ்த்து அனுப்பியிருந்தார். பல வகையிலும் இந்த தீபாவளி எனக்கு முக்கியமானது, அஜிதனும் சைதன்யாவும் வீட்டிலேயே இருந்த தீபாவளி இது. நான் அவரைக் கூப்பிட்டு பேசிய போது அவரது சமீபத்திய கவிதை ஒன்றைக் குறிப்பிட்டேன். எம்டன் குண்டு போட்டபோது கிளம்பியது போல மொத்தச் சென்னையே ஊரைவிட்டுக் கிளம்புவது பற்றிய கவிதை அது

அவர் எனக்கு கடிதமெழுதியிருந்தார்

mq

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட நாளைக்கு பிறகு உங்களிடம் பேசியது மனதிற்கு நன்றாக இருந்தது. ஒரு கவிதையை நான் குறிப்பிட்டதும் சட்டெனெ அதன் சாரத்தை தொட்டு திறந்து நீங்கள் பேசியது மனக்கிளர்ச்சி தந்தது. இதுதான் அந்தக் கவிதை.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

1

தீபாவளியைத் தேடி

பண்டிகைகள்
எப்போதும்
எங்கோ தொலைவில் இருக்கும்
ஒரு ஊரில் இருக்கின்றன

தீபாவளிக்கு முந்தைய நாளில்
தீபாவளியைத் தேடிசெல்பவர்கள்
நகரத்தை விட்டு
பெரும் வெள்ளமாக
வெளியேறிக் கொண்டிருந்தார்கள்

பேருந்துக்காக காத்திருப்பவர்கள்
ரயிலுக்காக காத்திருப்பவர்களின் முகங்களில்
எல்லையோரங்களில் காத்திருக்கும்
அகதிகளின் நிழல்கள் விழுகின்றன

ஒரு புதுமணத் தம்பதி
தங்கள் முதல் தீபாவளிக்கு
ஊருக்குச் செல்வதற்காக
டிக்கட் கவுண்டரின் முன்
வாடிய முகத்துடன்
நின்று கொண்டிருக்கின்றனர்

அப்பா வந்துருவேன்
அப்பா வந்துருவேன்
என்று யாரோ ஒருவன் பதைப்புடன்
அலைபேசியில் சொல்லிக்கொண்டே
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்

தெற்கிலிருந்து
இந்த நகரத்திற்கு வந்த ஒருவன்
ஒரு சிறிய கைப்பையுடன்
இரவெல்லாம் பேருந்தில்
நின்று கொண்டே பயணம் செய்கிறான்

ஒரு பண்டிகையைத் தேடி
எல்லா திசையிலும்
மக்கள் சாரை சாரையாக
சென்று கொண்டிருக்கிறார்கள்

பண்டிகைகள் நாம் இருக்கும்
இடத்திற்கு வந்து விடாது
நாம் தான் அதை தேடிப் போக வேண்டும்
நாம் எந்த நிலங்களை விட்டு வந்தோமோ
எந்த முகங்களை விட்டு வந்தோமோ
அங்குதான் பண்டிகைகள்
குடியிருக்கின்றன

தீபாவளிக்கான ஒரு சிறப்பு ரயிலில்
கூட்டம் பிதுங்கி வழிகிறது
அந்த ரயில் மாற்று பாதைகளில்
வெகு நேரமாக சென்றுகொண்டிருக்கிறது
யாரோ ஒருவன்
’ இந்த ரயில் போய்ச்சேருவதற்குள்
தீபாவளி முடிந்து விடும்”
என்று முணுமுணுக்கிறான்

நானும் அந்த ரயிலில்தான்
போய்க்கொண்டிருக்கிறேன்
எனது பண்டிகை காத்திருக்கும்
ஊர் என்று எனக்கு எதுவும் இல்லை

எனது பண்டிகைகள்
என் பால்யத்தில் இருக்கின்றன
அதுவரைக்கும் இந்த ரயில் போகுமா
என்றும் எனக்குத் தெரியவில்லை

*

அவர் எழுதிய நல்ல கவிதைகளில் ஒன்று இது. இதிலுள்ள உலகளாவிய தன்மைதான் காரணம். உலகமே நகரங்களில் மையம் கொள்கிறது. அத்தனைபேரும் தங்கள் இளமைகளை, பாரம்பரியத்தை, ஆழ்மனதை கிராமங்களில் விட்டுவிட்டு நகரங்களுக்குக் குடியேறுகிறார்கள். அங்கே நகரெமெனும் மாபெரும் இயந்திரத்தின் பகுதிகளாகிறார்கள். தானியங்கிப் பட்டைகள் அவர்களை கொண்டு செல்கின்றன.

சீனாவில் புத்தாண்டு நாளன்று மொத்தச் சீனாவுமே நகரங்களை உதறி கிராமங்களுக்குச் சென்றமையால் அங்குள்ள முப்பத்தாறு பட்டை கொண்ட நெடுஞ்சாலையில் ஆறுமணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்று செய்தி வந்தது. சென்னையும் தீபாவளி சமயத்தில் அப்படியே திகைத்து விடுகிறது. நெடுஞ்சாலைகள் உறைந்து நின்று கூச்சலிடுகின்றன.

அது லௌகீகத்திலிருந்து, நிகழ்காலத்திலிருந்து ஒரு தீடீர் விழித்தெழல் தான். இழந்து வந்த ஒன்றை நோக்கிய பாய்ச்சல். நனவுக்கும் ஆழ்மனதுக்கும் நடுவே ஓடுகின்றன நெடுஞ்சாலைகள், ரயில்பாதைகள்.

ஆனால் காலம் முன்னால் தான் செல்லும். திரும்பிச் செல்ல அதற்குத் தெரியாது. திரும்பிச் சென்ற இடங்களில் அவர்கள் அறிந்த எதுவும் இருப்பதில்லை. அது அவர்களுக்கும் தெரியும். ஆகவே ஊருக்குச் சென்றதுமே செயற்கையாகக் கொண்டாடுகிறார்கள். அது இரண்டு நாளைக்குத் தாங்கும். அதன்பின் மீண்டும் நகரம்

சென்னையில் வெள்ளம் என்று கேட்டதும் நேற்று சிங்கப்பூரிலிருந்து நண்பரும் கவிஞருமான நெப்போலியன் கூப்பிட்டார். ‘அண்ணன், மழையப்பாத்தீங்களா? இந்த மழைக்குப் பின்னாடி நம்ம ஜனங்க கொஞ்சம் முழிச்சுக்குவாங்க. சின்ன ஊர்களுக்கெல்லாம் ஒரு விடிவு வரும். அமெரிக்காவிலயோ சிங்கப்பூர்லயோ சம்பாதிச்சத முழுக்க சென்னையில வீடா கட்டி இன்வெஸ்ட் பண்ணாம அவங்கவங்க ஊர்களுக்கும் போலாம்னு தோணிடும்’

நெப்போலியன் புதுக்கோட்டைக்காரர். அவரது நம்பிக்கையை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சென்னை ஒரு மாய இயந்திரம். அது எவரையும் விடுவதில்லை. கவர்ந்திழுக்கும், உட்கார்த்தி வைத்திருக்கும். அது உலகியலின் மாயை. பண்டிகைகள் எல்லாம் இனிய பகற்கனவுகள்

mt [எம்.டி]

எர்ணாகுளம் உருவாவதற்கு முன்னால் மலையாளிகளுக்கு மெட்ரோபாலிடன் நகரம் என்றால் சென்னைதான். மலபார் முன்பு சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்ததும் காரணம்.எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி 1967 ல் வெளிவந்த ‘நகரமே நன்றி’ என்னும் படம் சென்னை என்னும் மாயத்தின் மிகச்சரியான சித்தரிப்பு. அதன் வாய்ப்புகள், அதன் வசீகரம், அறியாமலேயே அது பறித்துக்கொள்ளும் இறந்தகாலமும் கனவுகளும்…

படத்தின் இரு பாடல்களை மீண்டும் கேட்டேன். ‘நகரம் நகரம் மகாசாகரம்’ ஜேசுதாசின் குரல். துயரம் நிறைந்த பாடல். சென்னையில் தன்னை இழந்த மலையாளக் கிராமத்தானின் தனிமையின் இசை. இன்னொரு பாடல் ஜானகி பாடிய ‘மஞ்ஞணி பூநிலாவு’. தான் இழந்த கேரளத்தின் நிலத்தைப் பற்றிய ஓர் இனிய கனவு.

மீண்டும் ஹமீதின் கவிதை. அதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து பத்து கவிஞர்களுக்கு அனுப்பினேன். ‘அது மலபார் எக்ஸ்பிரஸ் பற்றிய கவிதை. மலையாள இலக்கியத்தில் அதைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அது நகரத்துக்குக் கொண்டு செல்லும். திரும்பக் கொண்டு வராது’ என்றார் ஒரு மூத்த கவிஞர்.

புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் கதையில் பிள்ளையவர்கள் ஒவ்வொரு நாளும் எக்மோர் சென்று நெல்லை எக்ஸ்பிரஸைப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் திரும்பச் செல்வதை நினைத்துக் கொண்டேன்.

உலகம் முழுக்க மக்கள் நகரங்களில் தேனடைகள் போல அப்பியிருக்கிறார்கள். அவ்வப்போது ஓர் உலுக்கல். விழித்துக் கலைந்து அலை பாய்ந்து திரும்ப அடைகிறார்கள்.

எதிர்காலத்தில் விவசாயப் பண்ணைகளும் நகரங்களும் மட்டுமே உலகில் இருக்கும் என்றும், மக்களில் 90 சதவீதம்பேரும் பெருநகரங்களில் வாழ்வார்கள் என்றும் எதிர்காலவியலாளர்கள் சொல்கிறார்கள். இன்று அதன் அடையாளங்கள் தெரிகின்றன

இன்று இக்கவிதையை மீண்டும் மீண்டும் நினைக்கக் காரணம் மழை. எனக்குத் தெரிந்த பலர் சென்னையை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் வெளியேற முடியாமல் அனைத்து வழிகளும் மூடிக் கிடக்கின்றன.

இது இன்னும் கொடூரம். நனவை விட்டு வெளியேறும் வாயில்கள் அனைத்தும் மூடிவிட்டதென்றால் அதைவிடப்பெரிய கொடுங்கனவு ஏது?

1 [ பி.பாஸ்கரன்]

நகரம் நகரம் மகாசாகரம்
மகா சாகரம்

களியும் சிரியும் வேறே
செளியும் சுழியும் தாழெ
புறமே புஞ்சிரி சொரியும் சுந்தரி
பிரியான் விடாத்த காமுகி

ஸ்னேஹிக்குந்நு கலஹிக்குந்நு
மோஹபந்தத்தில் அடியுந்நு
நுரைகள் திங்ஙும் திரைகள் போலே
நர ராசிகள் இதில் அலையுந்நு

குதிச்சு பாயும் நகரியில் ஒரு
கூரை சமைக்குவது எங்ஙினெ ஞான்
பாராவார திரையில் என்னுடே
பவிழ தீவு தகர்ந்நாலோ

தமிழில்

[நகரம் நகரம் மாபெரும் கடல்
மாபெரும் கடல்

களியாட்டும் சிரிப்பும் வேறு
சேறும் சுழிப்பும் கீழே
வெளியே புன்னகை சொரியும் சுந்தரி
பிரியவிடாத காதலி

காதலிக்கிறாள் ஊடுகிறாள்
மோக பந்தத்தில் அடிமைப்படுகிறார்கள்
நுரை சிதறும் அலைகள் போல
மானுட குலங்கள் இதில் அலைகின்றன

விரைந்தோடும் நகரியில் எனக்கென
ஒரு கூரையை கட்டுவது எப்படி?
ஆழிப் பேரலையில் எனது
பவளத்தீவும் உடைந்திடுமோ?]

மஞ்சணி பூநிலாவு பேராற்றின் கரையிங்கல்
மஞ்ஞள் அரைச்சு வச்சு நீராடும்போள்

எள்ளெண்ணை மணம் வீசும் என்னுடே முடிக்கெட்டில்
முல்லைப்பூ சூடிச்ச விருந்நுகாரா

தனுமாசம் பூக்கைத மலர்சூடிவரும்போள்
ஞான் அங்ஙயே கினாவு கண்டு கொதிச்சிரிக்கும்

பாதிரா பாலைகள்தன் விரலிங்கல் பௌர்ணமி
மோதிரம் அணியிக்கும் மலர் மாசத்தில்
தாந்நியூர் அம்பலத்தில் கழகக்காரனேபோலே
தாமர மாலையுமாய் சிங்கம் எத்தும்போள்
ஒரு கொச்சு பந்தலில் ஒரு கொச்சு மண்டபம்
புளியிலக்கரமுண்டு கினவு கண்டேன்ன்

மஞ்சணி பூநிலாவு பேராற்றின் கரையிங்கல்
மஞ்ஞள் அரைச்சு வச்சு நீராடும்போள்


தமிழில்

[பனி அணிந்த பூநிலவு பேராற்றின் கரையில்
மஞ்சள் அரைத்து வைத்து நீராடும்போது

எண்ணெண்ணை மணம் வீசும் என் கூந்தலில்
முல்லைப்பூ சூடித்தந்த விருந்தினனே

மார்கழி மாதம் தாழம்பூ மலர்சூடி வரும்போது
நான் உங்களை கனவுகண்டு ஆசைப்பட்டிருப்பேன்

நள்ளிரவில் விரியும் பாலைமரத்தின் விரல்மலர்களில்
பௌர்ணமி மோதிரம் அணிவிக்கும் மலர் மாதத்தில்

தாநியூர் கோயிலில் பூசை செய்பவனைப்போல
தாமரை மாலயுடன் ஆவணி வரும்போது

ஒரு சிறிய பந்தலில் ஒரு சிறிய மண்டபத்தில்
புளியிலை கரை போட்ட புத்தாடையை கனவுகண்டேன்]

கவிதை பி பாஸ்கரன்
இசை கே ராகவன்

தொடர்புடைய பதிவுகள்

நினைவுகூர்தல்

$
0
0

சிலநாட்களுக்கு முன் மிகச்சங்கடமான ஒரு நிகழ்ச்சி. நான் கடையில் ஏதோ வாங்கிக்கொண்டிருக்கையில் ஒருவரைக் கண்டேன். புன்னகைசெய்து ‘நல்லா இருக்கியளா?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். ‘இப்ப சோலியிலே இல்லல்லா?’ என்றார். ‘இல்லை’ என்றேன். என் கண்களைச் சந்தித்ததும் அவருக்குப் புரிந்தது. ‘சாருக்கு என்னை ஞாபகமிருக்கா?’ வேறு வழியில்லை .’இல்லை…மன்னிச்சிருங்க..நீங்க?’ என்றேன். அவர் முகம் சுருங்கியது. ‘செரிசார்…போட்டு..இப்ப நினைச்சு என்னத்துக்கு?’ என்று சொல்லிவிட்டார். கூடவே அவரது நண்பரும் இருந்தார். அவர் மேலே பேசாமல் ‘வரட்டா’ என்று போய்விட்டார்.

மூளையின் சகல குப்பைகளையும் அள்ளி வெளியே இழுத்துப்போட்டேன். முகமே நினைவுக்கு வரவில்லை. பின்பு வீட்டுக்கு வந்தபின் சட்டென்று நினைவுக்கு வந்தது. நான் பத்மநாபபுரத்தில் இருக்கையில் தெருவில் இருந்த ஒரு சைக்கிள்கடைக்காரர்! அடடா சொல்லியிருக்கலாமே என நினைத்துக்கொண்டேன். அருண்மொழியிடம் சொன்னேன். அவள் ‘அய்யே அவரில்ல. அவர் செத்துப்போயிட்டார்’ என்றாள். தூக்கிவாரிப்போட்டது.

’அப்பா உனக்கு அல்ஷைமர்ஸ்…ஐ ஜாலி…அப்பா நான் எந்த கிளாஸ் படிக்கிறேன் சொல்லு பாப்பம்’ என்றாள் சைதன்யா? ‘நீ யாருடீ கொழந்தே?’ என்று கேட்டேன். மோகன்லால் தன்மாத்ரா படத்தில் அல்ஷைமர் வியாதி வந்ததும் அலுவலகத்துக்கு வந்து சட்டையைக் கழட்டியபடி ‘இத்திரி மோரும்வெள்ளம் எடுத்தோ’ என்பார். அதை நடித்துக்காட்டினேன். எனக்கு அல்ஷைமர் வந்தால் என்ன ஆகும் என்று சைதன்யா விவரித்தாள். [விஷ்ணுபுரம் என்ற ஒரு நாவலை எழுத ஆரம்பித்துவிடுவேன்] சிரிப்பு அடங்கி மேலே சென்றதும் சட்டென்று ஒரு பீதி. உண்மையிலேயே அதுதானா?

நேற்று நினைவுக்கு வந்தது. அவர் யார் என்று. நான் என் அலுவலகம் போய் நான் ஒன்றரை வருடம் வேலைசெய்த கட்டிடத்தைப்பார்த்தபோது. அந்தக் கட்டிடத்தில் நான் வேலைசெய்தபோது என்னருகே இருந்து வேலைசெய்தவர் அவர். ஒன்றரை வருடம் அனேகமாக தினமும் அவர் முகத்தைப்பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். ஆனால் அப்படியே சுத்தமாக நினைவில் இருந்து அந்தமுகம் மறைந்திருக்கிறது. பிற ஊழியர் முகங்களை நினைவுக்குக் கொண்டுவரப்பார்த்தேன். ஒருமுகம்கூட நினைவில் இல்லை.

ஆமாம், நான் இருபதாண்டுக்காலம் பணியாற்றிய துறையில் ஒருசில முகங்கள், மிகச்சில நிகழ்ச்சிகள் தவிர எவையுமே நினைவில் இல்லை. இத்தனைக்கும் பலரிடம் நான் தொழிற்சங்கரீதியான நீண்டகால உறவு வைத்திருந்தேன். எப்படி அப்படி சுத்தமாக அழிந்தது? இன்னொரு விசித்திரம் முகங்கள் சந்தடி இல்லாமல் இடம்மாறியிருந்தன. எப்படி அந்த சக ஊழியரின் முகம் சைக்கிள்கடைக்காரர் முகமாக ஆகியது? அவை இரண்டுக்கும் பெரிய சம்பந்தமேதும் இல்லை. அவர்களை இணைக்கக்கூடிய பொது அம்சம் எதையாவது என் ஆழ்மனம் கண்டுகொண்டிருந்ததா என்ன? அந்த சகஊழியர் வாழ்க்கையில் மிக மோசமான ஓர் அனுபவத்தை அளித்துவிட்டேன். உன்னை நினைவுகூர முடியவில்லை என்று சொல்வது எனக்கு நீ முக்கியமே அல்ல என்று சொல்வதற்குச் சமம்தான். ஆனால் அதை இனிமேல் சரிசெய்யமுடியாது.

நான் மிக அபாரமான நினைவாற்றல் கொண்டவன் என்று புகழ்பெற்றிருந்தேன். சிறுவயதில் நூல்களை ஒப்பிப்பேன். நூற்றுக்கணக்கான நூல்களின் சாராம்சத்தைச் சொல்வேன். இன்றும் அந்த நினைவாற்றலுக்கு குறைவில்லை. படைப்புசக்தி என்பது பெரும்பாலும் துல்லியமான நினைவாற்றலே என்று ஒரு தரப்பு உண்டு. உண்மையாக இருக்கலாம். நான் நினைவுகூருமளவுக்குத் துல்லியமாக வாழ்க்கையை நினைவுகூர்பவர்கள் குறைவு.

அப்படியென்றால் இத்தனை மறதி எப்படி? எதை நினைவுகூர்கிறோம், எதை மறக்கிறோம்? சிறுவயதிலேயே நான் பெரும் மறதிக்காரனும்கூட. குடைகள், சாப்பாட்டுப்பாத்திரங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த புத்தகப்பையையே மறந்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்புத் தேர்வையேகூட மறந்திருக்கிறேன். சைக்கிளில் உட்காரச்செய்து அப்பு அண்ணா கூட்டிச்சென்று பாதியில் அமரச் செய்தார்.

இன்றும் மறதி வாழ்க்கையின் ஒரு பகுதி. செல்பேசிகளை , கைப்பையை, அடையாள அட்டைகளை மறந்து செல்வேன். நான் எழுந்து செல்லும்போது ஒவ்வொரு முறையும் நமுட்டுச்சிரிப்புடன் மணிரத்னம் நான் மறந்துவிட்ட ஏதாவது ஒரு பொருளை எடுத்துக்கொடுப்பார். ஒருமுறை வசந்தபாலன் அலுவலகத்தில் செருப்பை மறந்துவிட்டுவிட்டு காரில் ஏறி ஓட்டலுக்கு வந்திருக்கிறேன். சமீபத்தில் பீர்மேட்டில் ஒரு கார் எங்களருகே பிரேக் போட்டு நின்றது. உள்ளே இருந்தவர் என்னிடம் பாண்ட் ஜிப்பைப் போடும்படி சொன்னார்

ஆனால் இந்த ஒட்டுமொத்த மறதி, இது பெரிய ஆச்சரியம். அப்படி வேறென்ன இருக்கிறது? முக்கியமாக நான் படித்த படிப்பு. கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்தேன். பாடங்களில் ஒருவரி கூட நினைவில்லை. சமீபத்தில் எதையோ விளக்கிய ஆடிட்டர் ‘இதெல்லாம் பிகாமிலே படிச்சிருப்பியளே’ என்றார். எதுவுமே நினைவுக்கு வரவில்லை. பள்ளியிறுதி வகுப்பு, அதற்கு முன் படித்த பாடங்களில் ஒன்றுமே மீளவில்லை. கல்லூரி நண்பர்களில் எவருமே நினைவில் இல்லை. ஒருவர் அவரே அறிமுகம்செய்துகொண்டால்கூடப் பலநாட்களுக்கு அவரது முகம் கற்பனையில் வரமாட்டேன் என்கிறது. பள்ளிநண்பர்களில் ஒரு சிறு நண்பர்குழாம் தவிர ஒட்டுமொத்த முகங்களும் மறைந்துவிட்டன.

இதற்கான காரணம் என்ன என்று யோசிக்கிறேன். நான் உள்ளூர பள்ளியை பொருட்படுத்தியதே இல்லை என்பதுதான். அந்த இளமையில் என் மனம் முழுக்க கிராமியக்கலைகள், நாட்டார் கதைகள், புத்தகங்கள், காடுசுற்றல்தான் இருந்தது. அவையெல்லாமே துல்லியமான நினைவுகளாகப் பதிந்திருக்கின்றன. நமக்கு உண்மையிலேயே எவை முக்கியமோ அவற்றை மட்டுமே நாம் நினைவில் நிறுத்துகிறோம். பிறவற்றை விலக்கிவிடுகிறோம். நான் என் கல்விநாட்களைப்பற்றி அனேகமாக ஏதும் எழுதியதில்லை.

ஆனால் உண்மையிலேயே முக்கியமான சிலவற்றையும் மறக்கிறோம். மறக்க முயல்கிறோம். நான் என் இளமைப்பருவ வீடு, அம்மா, அப்பா எல்லாவற்றையும் மறக்க முயல்பவன். நினைவில் அம்மா முகம் வந்தாலே தீயால் சுட்ட அதிர்ச்சி வரும். ஆகவே மறக்க முயன்றுமுயன்று இன்று பெரும்பகுதியை நினைவிலிருந்து நீக்கிவிட்டேன். அப்படி நீக்குவதன் வழியாகவே அந்த அனுபவங்கள் அளித்த வதையில் இருந்து மீண்டுவந்தேன். அம்மா அப்பாவின் ஒரு படம்கூட என்னிடம் இல்லை. அவர்களை நினைவூட்டும் எதுவுமே என்னிடம் இல்லை. சென்றமாதம் ஒருமுறை அம்மாவை நினைவுகூர முயன்றேன். முகம் நினைவில் வரவே இல்லை. நீரில் பிம்பம் அலையடிப்பது போல இருந்தது. அது நிம்மதியாகவும் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. நான் என் பெற்றோர் பற்றியும் பெரிதாக எழுதியதில்லை.

இன்னொருவகையான மறதியை கவனித்திருக்கிறேன். மறதி என்பதை விட நினைவைக் கற்பனை இடமாற்றம் செய்வது என்று சொல்லலாம். நான் எப்போதுமே அகத்தை அளைந்துகொண்டிருப்பவன். நான் வாழ்வது முக்காலும் என்னுடைய கற்பனைகளில்தான். என் கற்பனைகளுக்குத் தேவையான கச்சாப்பொருளை அளிப்பதற்குத்தான் எனக்குப் புறவுலகம் தேவைப்படுகிறது என்று நினைத்துக்கொள்வேன். அந்தப் புறவுலக தகவல்களை என் இஷ்டப்படி கலைத்துக் கற்பனையைக் கட்டிக்கொண்டே இருக்கிறேன்.

வாசித்த அறிந்த எதையும் அப்படியே வைத்துக்கொள்வதில்லை. அவற்றைப்பற்றி சிந்திப்பேன். ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொள்வேன். கற்பனையில் அனுபவங்களைப் பலமடங்கு வளர்த்தெடுப்பேன். திருவனந்தபுரத்தில் ஒரு தெருவில் நடக்கும்போது நான் போகவே போகாத லாகூரிலோ டாக்காவிலோ நடப்பதாகக் கற்பனைசெய்துகொள்வேன். நான் வாசித்த நாவல்களில் நான் வெகுதூரம் சென்றிருக்கிறேன். ஆரோக்கியநிகேதனம் எனக்கு நானூறு பக்க நாவல் அல்ல. அது பல மாதகாலம் நான் வாழ்ந்த ஒரு பெரிய வாழ்க்கை. போரும் அமைதியும் கிட்டத்தட்ட என் பூர்வஜென்மம்.

பல கதைகளை நான் பல கோணங்களில் திரும்பத்திரும்பக் கற்பனையில் வளர்த்திருக்கிறேன். பல படைப்புகளைக் கலந்திருக்கிறேன். தாகூரின் கோராவை விபூதிபூஷனின் அப்பு சந்திப்பான். ரஸ்கால்நிகாஃப் அன்னா கரீனினாவைக் காதலிப்பான். பயணங்களில் அப்படி மணிக்கணக்கில் கற்பனையை ஓட்டியபடி இருப்பது என் வழக்கம். கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாகக் கற்பனையில் ஆக்கிக்கொள்கிறேன். அவர்கள் அழியாமல் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

நான் சுயமாகவும் பிரம்மண்டமான நாவல்களைத் தொடர்ச்சியாகக் கற்பனைசெய்துகொள்வேன். சென்றமாதம் பலநாட்களாக ஒரு அபாரமான மாயாஜாலக்கதையைக் கற்பனையிலேயே முடித்தேன். நான் கற்பனைசெய்த நாவல்களில் பத்துசதவீதத்தைக்கூட எழுதியதில்லை. முழுக்கக் கற்பனைசெய்தால் அப்போதே அந்நாவல் மேல் சுவாரசியத்தை இழந்துவிடுவேன் நண்பர்களுக்கு உடனடியாகச் சொல்லி ‘அசத்திய’ பல கதைகளை என்னால் பிறகு எழுதவே முடிந்ததில்லை.

இந்த பிரம்மாண்டமான அக உலகில் எது என் கற்பனை எது புறவய உண்மை என பிரிக்கும் கோடு மிக மென்மையானது. அந்தப்பிரக்ஞை எப்போதும் துல்லியமாக இருக்கிறது என்பதே ஆச்சரியமான விஷயம். மதுரை வரை நான்கு பஸ் மாறி ஏறி செல்லும்போதும் டீ குடிக்கும்போதும் எல்லாம் மனதுக்குள் ஒரு பெரியநாவல் ஓடிக்கொண்டே இருக்க அதையும் புறத்தையும் கச்சிதமாக பிரித்துச் சமநிலை செய்துகொண்டே போகிறது பிரக்ஞை. எப்போதாவது இந்த எல்லைக்கோடு அழிந்தால் பிறகு மீட்சி இல்லை.

ஆனால் மிக அபூர்வமாக எல்லைக்கோடு சற்றே மயங்கிவிடும். வாசித்த நூலில் இல்லாத தகவல் அல்லது விவரணை அல்லது மேலதிகக் கதை என் நினைவில் இருக்கும். அப்படி இருப்பது எப்போதுமே வெறும் திரிபாக இல்லாமல் மிகவும் படைப்பூக்கத்துடன் கூடிய ஒரு மாற்று வடிவமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்படி எந்தக்கதை என் நினைவில் இடம்மாறியிருக்கிறது என்பதைக் கவனிப்பது பெரிய அனுபவமாக இருக்கிறது.

நூல்களைப்பொறுத்தவரை அவற்றின் அட்டை மற்றும் கட்டமைப்பைக்கூட நான் கற்பனையில் வேறுவகையாக வைத்திருக்கிறேன். உதாரணமாக தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்ற அழகியநூல் எண்பதுகளில்வெளிவந்தது. கிரௌனுக்கும் சின்ன அளவு. குண்டான வெள்ளையான நூல். தல்ஸ்தோயின் அன்னா கரீனினாவும் அப்படிப்பட்ட வடிவில் தமிழில் வந்திருப்பதாகக் கற்பனையில் வைத்திருந்தேன். உண்மையில் அப்படி இல்லை என அறிந்தது வருத்தமாக இருந்தது.

நூலகத்தில் நூல்தேடும்போது இது நடக்கிறது. திருவிகவின் சுயசரிதையை நாட்கணக்காகத் தேடினேன். கடைசியில் பார்த்தால் கண்முன்னால் இருக்கிறது. நான் அது கிரௌன் அளவுள்ள பேப்பர்பேக் நூல் என நினைத்திருந்தேன். அது கெட்டி அட்டை, டெமி அளவு. அதைப்போலவே படங்கள். பாதேர் பாஞ்சாலி எனக்கு வண்ணப்படமாகவே நினைவில் நிற்கிறது. லாரன்ஸ் ஆஃப் அரேபியா கறுப்புவெள்ளைப்படமாக.

எப்படி இந்த பிம்பம் மனதில் பதிகிறது, நீடிக்கிறது? இதெல்லாம் கூடிக்கலந்து பிரிக்கமுடியாதபடி ஆகும் என்றால் என் அகம் நினைவுகூரவே முடியாத பிரம்மாண்டமான ஒர் அராஜவெளியாக மாறிவிடுமா என்ன?

ஆனால் துல்லியமான புறத்தகவல்களை, வாசித்த தகவல்களை சேமித்து வைத்திருக்கும் மூளைகளால் ஒருபோதும் புனைவை எழுதமுடியாதென்று தோன்றுகிறது. புனைவு என்பது ஒரு கட்டற்ற சுதந்திரம். தகவல்கள் நம்மால் எதுவும் செய்யமுடியாதவை, கல்லாலும் இரும்பாலும் ஆனவை. புனைவில் எதுவும் சாத்தியம். அது பறப்பது போல. தகவல்கள் விமானத்தின் ஓடுபாதை மட்டுமே. எழுந்ததும் அவை மிகமிகக் கீழே சென்றுவிடுகின்றன.

நல்ல புனைவெழுத்தாளன் என்றால் அவன் ரயில்வேஃபாரத்தை நிரப்பினால்கூடக் கொஞ்சம் புனைவு கலந்திருக்கும் என்று சுஜாதா ஒருமுறை பேச்சில் சொன்னார். உண்மைதான். உலகமெங்குமுள்ள மேதைகளின் புனைகதைகள் பலமுறை தகவல்கள் பிழைபார்க்கப்பட்ட பின்னரும் பிழைகளுடன் இருக்கின்றன. அவர்களின் சுயசரிதைகள் கூட புனைவுமிக்கவையாக இருக்கின்றன.

புனைவில் மட்டும் அப்படி அல்ல என்று அஜிதன் சொன்னான். எல்லா சிந்தனையிலும் ஒரு புனைவம்சம் உண்டு என்றான். தகவல்களை அப்படியே நினைவுகூர்வது ஒரு இயந்திரவித்தை. தகவல்களை முடிவில்லாமல் இணைத்து இணைத்துப் புதியபுதிய சாத்தியங்களை கண்டடைந்துகொண்டே இருப்பதுதான் சிந்தனை என்பது. அந்த சுதந்திரம் கற்பனையின் விளைவுதான்.

ஒவ்வொரு சிந்தனையாளருக்கும் அதற்கான கற்பனை சார்ந்த வழிமுறை உண்டு. கணிசமானவர்கள் சிந்தனைகளை அந்தரங்கமான படிமங்களாகவே அடைகிறார்கள், கையாள்கிறார்கள். அவற்றை முன்வைக்கையில் மட்டுமே கறாரான தகவல்சரிபார்ப்பு தேவையாகிறது. அதை மேலும் விளக்க அஜிதன் கொடுத்துப்போன வி. எஸ். ராமச்சந்திரன் எழுதிய நூல்களை நான் இன்னும் வாசிக்கவில்லை.

ஆம். இளமையில் வாசித்து வாசித்து நிரப்பிக்கொண்டே இருந்த மனம் இன்றில்லை. இன்று நானே சிந்திப்பவை மட்டுமே எனக்கு முக்கியமாகத் தெரிகின்றன. நான் சிந்திக்கும்தோறும் வெளியே இருந்து வந்தவை முக்கியமற்றுச் செல்கின்றன.

அப்படியென்றால் எனென்ன நினைவில் நீடிக்கின்றன? துல்லியமாக நீடிப்பவை நிலக்காட்சிகள். நான் சென்ற இடங்கள் பலவும் அவற்றின் ஒளிநிழல் துல்லியத்துடன் மீண்டு வருகின்றன. ஆச்சரியமாக, மணங்கள் நினைவில் நிற்கின்றன. ஒரு வாசனை ஒரு காட்சியை அணுவணுவாக இழுத்துக்கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. சமீபகால நிகழ்ச்சிகளை விட இளமைப்பருவ நிகழ்ச்சிகள் துல்லியமானவை. ஒரு காட்சியின் சித்திரம் துல்லியமாக இருக்கையில் அது மதுரையா இல்லை சென்னையா என்பது குழம்பிவிடுகிறது. குரல்கள் தெளிவாகவே நினைவில் மீண்டு வருகின்றன

எந்த நினைவு தன்னிச்சையாக மீண்டு வருகிறதோ அது துல்லியமாக இருக்கிறது. கனவுபோல. மொழியை மீட்டிக்கொண்டே இருந்தால் என்னை மீறி விழிப்புநிலைக்கனவுபோல நினைவுகூர்தல் நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் எதை மீட்க முயல்கிறேனோ அது நாடாப்புழு போல உடைந்து கைக்குச்சிக்கித் துடிக்கிறது. மிச்ச உடல் வேறெங்கோ துடிக்கிறது. எந்த அனுபவத்திலும் சாராம்சமான ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அது நினைவில் இருக்கிறது, அதனுடன் தொடர்புள்ளவை நினைவிருக்கின்றன. புறவயமான தகவல்கள் மறைந்துவிட்டிருக்கின்றன. ஆகவேதான் புனைவு கலக்காமல் உண்மையை எழுதமுடியாதவனாக ஆகிக்கொண்டிருக்கிறேன்.

கடைசியாக ஒன்று. கடந்த பலவருடங்களாக என் அகப்பயணம் மூலம் நான் சென்றுகொண்டிருக்கும் இடம் என்பது மேலும் மேலும் உள்நோக்கியது. புறத்துடனான உறவை மிகமிக வலுக்கட்டாயமாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை. சொல்லப்போனால் ஒரு பிடிமானமாகவே வைத்துக்கொண்டிருக்கிறேன். அந்தப்பயணத்தில் கற்றுச்சேர்த்து வைத்த எல்லாமே கரைந்து அழிகின்றன. ஒட்டுமொத்தமாக எல்லா நினைவுகளும் அழிந்தால் என்னிடம் என்ன மிஞ்சும்? அதுவே உண்மையான நானாக இருக்கும்

 

மறுபிரசுரம்.முதற்பிரசுரம் Aug 9, 2012

வேராழம்

 

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

வேராழம்

$
0
0

 

memory

என்னுடைய முதல் நினைவு நான் ஆறுமாதக் கைக்குழந்தையாக இருந்தபோது தொடங்குகிறது.இதை நவீன உளவியலாளர் அன்றிப் பிறர் நம்பமாட்டார்கள் என்று நான் அறிவேன். பலரிடம் சொல்லி நகைப்புக்கு இடமாகியிருக்கிறேன். நானே அதை ஒரு கனவு எப்படியோ நனவாக மூளையால் தவறாக எண்ணப்பட்டுவிட்டது என்று எண்ணிக்கொண்டிருந்த காலமும் உண்டு. 1994இல் நித்யா குருகுலத்தில் பஞ்சாபைச்சேர்ந்த மூத்த உளவியலாளர் ஒருவரிடம் அதைப்பற்றிச் சொன்னேன். அது அபூர்வமானதுதான் ஆனால் மிக அபூர்வமானது ஒன்றும் அல்ல என்று சொன்னார்.

நான் ஒரு தவழும் குழந்தை. துல்லியமான தன்னுணர்வு எனக்கு இருக்கிறது. கைகளையும் முழங்கால்முட்டுகளையும் ஊன்றி வேகமாக நகர்கிறேன். என் கழுத்தில் இருந்து ஒரு சங்கிலி முன்னால் தொங்கி ஆடுவதை அவ்வப்போது உட்கார்ந்து எடுத்து இழுத்துப்பார்க்கிறேன். அந்த இடம் ஒரு சாணிமெழுகிய தாழ்வான அடுக்களை. ஓரமாக என் அளவுக்கு உயரமான ஒரு உரல் கிடக்கிறது. நான் எழுந்து அதைப்பிடித்துக்கொண்டு நிற்கிறேன். உரலின் மழமழப்பான குழிக்குள் கைகளை விட முயல்கிறேன்.

யாரோ எனக்கு சுற்றும் அமர்ந்துபேசிக்கொண்டிருக்கிறார்கள். என் அம்மாவை மட்டும் குரலால் மட்டுமல்ல மணமோ அல்லது அதுபோல வேறு ஏதோ ஓர் உணர்வால் என்னால் அறியமுடிகிறது. ஒரு பெண் உள் அறையில் இருந்து அடுக்களைக்குள் இறங்கும் படிகளில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய புடவையின் மஞ்சள்நிறமான வெளிச்சமும் அலைபாயும் கீழ் நுனியும் எனக்கு தெரிகிறது .நான் அதை நோக்கிச்செல்கிறேன். அப்போது அந்தப் பூனைக்குட்டி குறுக்காக வருகிறது.  வெண்ணிறத்தில் சில தவிட்டுக்கோடுகள் கொண்ட,பின்கால்கள் நடுங்க மெல்லமெல்லத் தள்ளாடிச் செல்லும் பூனைக்குட்டி

அதன் வெறித்த கண்களையும் மியாவ் என்று சொன்னபோது வாயின் சிவப்புக்குள் பற்களையும் கண்டேன். அதைநோக்கி வேகமாகச்சென்று அதன் அருகே கிடந்த ஒரு அரிப்புப் பெட்டியை [பனைநாரால் செய்யப்பட்ட பெட்டி. சாதம் வடிக்க அதைப் பயன்படுத்துவார்கள்] எடுத்து அந்தப்பூனைமீது கவிழ்க்க முயல்கிறேன். பூனை நகர்ந்து நகர்ந்து செல்கிறது. அரிப்புப் பெட்டியை என்னிடமிருந்து யாரோ பிடுங்கி அதே வேகத்தில் என் வயிற்றை வலிக்கும்படி பிடித்து என்னைத் தூக்க, பூனைக்குட்டி கீழே தாழ்ந்து செல்கிறது. நான் கால்களை உதைக்கிறேன். அது என் அம்மா அல்ல என்று அந்தத் தொடுகையினாலேயே அறிகிறேன். சொல்லும்போது பெரிதாக இருக்கிறது, உண்மையில் சில நிமிடங்கள் நீளும் ஞாபகப்படங்களின் ஒரு துணுக்கு மட்டும்தான் இது.

அடுத்த நினைவு நெடுநாள் எனக்குக் கனவுபோல வந்துகொண்டிருந்தது. ஒரு சொரசொரப்பான குளத்து சிமிண்ட் மதில் மீது நான் அமரச்செய்யப்பட்டிருக்கிறேன். அருகே பிழிந்த துணிகளின் குவியல். கீழே எனக்குப் பின்பக்கம் படிகள். அதற்கும் கீழே நீலமான அலைகள் தளும்பும் நீர். நீர்ப்பாசியும் சோப்பும் கலந்த வாசனை. துணி துவைக்கும் சத்தம். பெண்களின் ஓசைகள். எதிரே ஒரு பெரிய காளைமாடு– அல்லது பசுமாடு– வருகிறது. அதன் கட்டுக்கயிறு காலில் சிக்குவதனால் தலை இழுபட்டுக் கொம்புகளை ஆட்டிக் குனிந்து குனிந்து வருகிறது. எனக்கு பயமே இல்லை, நான் அதன் கொம்புகளையே பார்க்கிறேன்.

கொம்புகளின் இடைவெளி என்னைவிடப் பெரியது. காளை உஸ்ஸ் என்று மூச்சுவிட்டுத் தலையைக் குனிக்கும்போது எனக்குக் கடுமையான அச்சம் வந்து உடலே உறைந்து விடுகிறது. அழமுடியாமல் மொத்த ஓசையும் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டுவிட்டது. அப்போது கீழே பெண்களின் ஒலிகள். யாரோ ஓடிவந்து என்னைத் தூக்கிக் கொண்டார்கள். நான் தூக்கிய பெண்ணைக் கட்டிக்கொண்டேன். காளையை யாரோ அதட்டித் துரத்தினார்கள்.

ஒரு முறை காய்ச்சலில் இந்நினைவை மீண்டும் துல்லியமாகக் கண்ட பின் நான் அதை என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா அரண்டு போனாள். உண்மையில் நடந்த நிகழ்ச்சி அது என்றாள். இவ்விரு நிகழ்ச்சிகளும் அருமனை ஊரில் நிகழ்ந்தவை. அப்போது எனக்கு ஆறுமாதம். அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு  கோயில் குளத்துக்குக் குளிக்கச் சென்றிருக்கிறாள். என்னை மதில்மேல் வைத்துவிட்டு நீந்தச் சென்றபோது அந்தக் காளை என்னை முட்டவந்ததாம். சந்திரி என்ற மாமி என்னைக் காப்பாற்றினாள் என்றாள். அந்த நிகழ்ச்சியில் அம்மாவின் தவறு அதிகம் என்பதனால் எவரிடமும் சொன்னதே இல்லை.

எனக்கு ஏதோ உளவியல்சிக்கல் என்று அம்மா எண்ணி என்னைப்பற்றிக் கவலை கொள்ள ஆரம்பித்தாள். உளச்சிக்கல் என்பதற்கான சில சான்றுகள் அன்று என் நடத்தையில் உண்டு. நான் எனக்குள் கற்பனையில் மூழ்கிப் புற உலகமே இல்லாமல் நாளெல்லாம் இருந்துகொண்டிருப்பேன். அலைவேன். நானே சில விஷயங்களைக் கற்பனை செய்து அவற்றை வளர்த்தெடுத்து ஒரு கட்டத்தில் அவை எனக்கு உண்மையே ஆகிவிடும். இரவெல்லாம் வெறிபிடித்தவனைப்போல வாசித்துக்கொண்டிருப்பேன். பதற்றமும் தனிமையும் கொண்டவனாக இருந்தேன்.

அந்த நிகழ்ச்சியில் இன்னும் ஒரு சிக்கலான இடம் உண்டு, அதை நான் அம்மாவிடம் சொல்ல முடியாது. நான் என்னைத் தூக்கி அணைத்த அந்தப் பெண்ணின் ஈரமான வெற்றுத்தோளையும் கழுத்தையும் சருமத்தின் மென்மையையும் வெம்மையையும் துல்லியமாக நினைவு வைத்திருந்தேன். நான் என்றால் என்னில் இருந்த ஆண். அந்த விஷயத்தால் என்னை நானே ஏதோ அசிங்கமான கீழ்த்தரமான பிறவி என்று எண்ணி எனக்குள் கூசிக்கொண்டிருந்தேன். அந்நினைவை என்னிலிருந்து அகற்ற முயன்று அதைப் பெருக்கிக் கொண்டிருந்தேன். நான் ஆன்மீக ஈடுபாடு கொண்டமைக்குக் காரணங்களில் ஒன்று நான் ஒரு சராசரிக்கும் கீழான ஆத்மா என்று அக்காலத்தில் நான் எண்ணியதே. அன்று என்னில் கிறித்தவப்பாதிப்பு மிக அதிகம்.

என்னுள் உள்ள பெண் சார்ந்த பிரக்ஞை ஒரு வயது முதல் துல்லியமாக நினைவிலிருக்கிறது என்று சொன்னால் மீண்டும் உளவியல் நிபுணர்கள் மட்டுமே நம்புவார்கள். முதல் நினைவாக ஏதோ ஒரு பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி என்னை என் அம்மாவிடமிருந்து வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டாள். அவளுடைய புடவையில் அமர முடியாமல் நான் வழுக்கிக் கொண்டே இருந்தேன். அவளுடைய கன்னத்து மென்மயிர், கழுத்தில் அணிந்திருந்த மாலை, அவள் போட்டிருந்த பவுடரின் நறுமணம் ஆகியவை என் நினைவில் அழுத்தமாக உள்ளன.

அது முஞ்சிறையாக இருக்கலாம். அங்குதான் அப்போது நாங்கள் குடியிருந்தோம். அந்த வீட்டை என்னால் நன்றாக நினைவுகூர முடிகிறது. பெரிய வீடு. நடுபோர்ஷனில் ஒரு கால்நடை மருத்துவரும் அவரது மனைவியும் சிறிய பெண்குழந்தையும். வலப்பக்க போர்ஷனில் ஒரு வெள்ளைநிறமான தடித்த பெண். அவளுக்கு அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது. இடப்பக்க போர்ஷனில் நாங்கள்.என் தங்கை அப்போது கைக்குழந்தை. அந்த வீட்டுக்கு வெளித்திண்ணை மூவருக்கும் பொதுவானது.

உதிரியாக எழும் நினைவுகளை இப்போது எழுதும்தோறும் எழுத தொட்டுத் தொட்டு எடுக்க முடிகிறது. அந்த தடித்த வெள்ளைநிறமான பெண் என்னிடம் அத்தனை அன்பாக இருக்க மாட்டார்கள். மலையாளி. அவர்களின் வீட்டுக்குள் நான் செல்வது குறைவு. கொடிகளில் நிறைய அழுக்குத்துணிகள் தொங்கும் நினைவு இருக்கிறது. ஒருமுறை நான் அவர்கள் வீட்டுக்குள் ஓடிச்சென்ற போது குழந்தைக்கு ஒரு முலையில் பால்கொடுத்து இன்னொரு முலைக்கு மாற்றியபோது நான் அவர்கள் வெண்முலைகளைப் பார்த்தேன். பீங்கான் ஜாடியின் மூடி என்ற எண்ணம் வந்தது.

கால்நடைமருத்துவரின் மனைவிக்கு நான் செல்லம். அவர்கள் வீட்டில் நிறைய வார இதழ்கள் வாங்குவார்கள். நான் அவற்றைப் படம்பார்ப்பேன். அவர்கள் வீட்டின் கதவின் அடியில் உள்ள இடைவெளி வழியாக இதழ்களை உள்ளே தள்ளி அனுப்ப முடியும். காலையில் அவர்கள் வாங்கும் நாளிதழை பேப்பர்காரன் அப்படித் தள்ளி உள்ளே விட்டுவிடுவான். அதைப்போல நானும் எந்தத் தாள் கிடைத்தாலும் உள்ளே தள்ளி விடுவேன். அவர்கள் வீட்டுப் பெண்குழந்தை குண்டாகப் பாயில்படுத்திருக்கும். குழந்தைக்கு அத்தனை பௌடர் போடுவதை நான் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பேன். குழந்தை முகமே நினைவில் இல்லை. தொடை மடிப்புகளில் பவுடர் நிறைந்திருப்பது மட்டுமே நினைவில் இருக்கிறது.

அந்தக் கால்நடைமருத்துவர் முகம் நினைவில் இல்லை. ஆனால் அவர்கள் வீட்டில் இருந்த ஏசுவின் பெரிய காலண்டரும் அது சுவரில் சுழன்று சுழன்று உருவான தடமும் நினைவில் இருக்கின்றன. அந்தக் கால்நடைமருத்துவரின் மனைவியின் முகம் நினைத்தால் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் சிலசமயம் துல்லியமாக மனதில் எழுந்து வந்துவிடும். கருமையை நெருங்கும் மாநிறம், நெற்றியில் முடிச்சுருள்கள். பெரிய கண்கள். எப்போதும் உரக்கச் சிரித்துக்கொண்டே பேசுவார்கள். எங்களூரில் பெண்கள் சிரிப்பது மிகக் குறைவு. எப்போதும் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

உட்கார்வதற்கான ஒரு மணைப்பலகையைக் கையில் எடுத்துக்கொண்டு அதை ரேடியோ என்று பாவனை செய்தபடி நான் அலைந்த ஒரு நாள் நினைவில் வருகிறது. வீட்டுக்கு முன்னால் உள்ள தென்னந்தோப்பில் அம்மா, அந்த மாமி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும்போது வேறு யாரோ ஒரு பெண் வந்து பேசிக்கொண்டிருக்கையில் வாழைத்தண்டு சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கல்லெல்லாம் போகும் என்று சொன்னதைக் கேட்ட நினைவு. அந்த டாக்டர்மாமி என்னிடம் நான் வெட்டினரி டாக்டர் ஆகக்கூடாது மனித டாக்டர் ஆகவேண்டும் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது, அதைச்சொன்ன அந்த நேரத்து முகம் நினைவில் இல்லை. அந்தக்குரல் மட்டும்தான்.

அவர்கள் மீது எனக்கு இருந்த ஈர்ப்பை என்னால் இப்போது பலவாறாகப் பகுப்பாய்வுசெய்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவருக்கும் பாலியல் சார்ந்து தனி ரசனை ஒன்று இருக்கும். குறிப்பிட்ட வகையான நிறம், முக அமைப்பு, பேச்சுமுறை, ஆளுமை என ஒரு தெரிவு இருக்கும். பெண்ணின் உடலில் ஆணுக்குக் கிளர்ச்சியை உருவாக்கக் கூடிய உறுப்புகளே ஒவ்வொரு ஆணுக்கும் மாறுபடும். இந்த ரசனை எப்போது எப்படி உருவாகிறது என்று சொல்ல முடியாது. ஆண் என்னும் தன்னிலை ஆணுக்கு மிகமிக இளம் வயதிலேயே உருவாகி விடுகிறது. சொல்லப்போனால் தன்னிலை உருவாகும்போதே அது ஆண் என்பதாகத்தான் உருவாகிறது.அப்போதே இதுவும் உருவாகிவிடுமென நான் நினைக்கிறேன்

என்னுடைய ரசனையைத் தீர்மானித்ததில் இந்த மாமிக்கு பெரும்பங்குண்டு என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. எனக்கு எப்போதுமே மலையாளப்பெண்கள் ஆர்வமூட்டியதில்லை, என் சுற்றத்தில் பலசமயம் பேரழகிகள் சாதாரணமாகப் புழங்கியிருக்கிறார்கள். பேரழகிகள் நெருங்கிய தோழிகளாக இருந்திருக்கிறார்கள், திருமண ஆலோசனைகளும் வந்திருக்கின்றன. மாநிறம்தான் என் ரசனைக்குரியதாக இருந்துகொண்டிருக்கிறது. இதெல்லாம் ஊகம்தான். ஆனால் அந்த மாமியின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் சிரிப்பையும் நான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.

இக்கால இளமை நினைவுகளில் ஒன்று, ஏதோ ஒரு விழாவுக்கு நான் கொண்டுசெல்லப்பட்டது. எங்கள் வீட்டில் வேலைசெய்த சிறுமி என்னைத் தூக்கிச் சென்றாள். மின்விளக்குகளும் ஒலிபெருக்கிகளும் ஒலித்தன. அவளுடைய தம்பி ஒருவன் வந்ததும் அவன் முட்டில் இருந்த காயத்தில் பேப்பரை ஒட்டியதும் நினைவில் இருக்கிறது. அந்தச் சிறுமியின் வாயில் சில பற்கள் விழுந்து இடைவெளி இருக்கும்

அதன்பின் ஒரு மேஜையில் இருந்து நழுவி நான் கீழே விழும் காட்சி. இத்தகைய விபத்துக்களின் கணநேர அனுபவங்களிலேயே நமக்கு நிகழ்வதை நாமே வேடிக்கை பார்க்கிறோம். மேஜையின் முனை என் நாடியில் குத்திவிட்டது. என்னைத்தூக்கியபடி அந்தச் சிறுமி ஒரு வீட்டுக்குள் ஓடிச் சென்றதும் அங்கிருந்த ஒரு பெண்மணி காப்பித்தூளைக் காயத்தில் வைத்ததும் நினைவிருக்கிறது. விரைவிலேயே அம்மா வந்துவிட்டாள். அப்படியானால் அது மிக அருகே உள்ள ஏதோ ஒரு இடம்.

முஞ்சிறை வீட்டைச் சுற்றி இருந்த தென்னந்தோப்பு ஏராளமான சித்திரங்களாக நெஞ்சில் உறைந்திருக்கிறது. மதியநேர அமைதியில் தென்னை ஓலைகள் வான் வெளியில் மெல்ல அளைவதை எப்போது கண்டாலும் அந்த மனநிலை உருவாகிவிடுகிறது. அந்தத் தென்னந்தோப்புக்குள் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிறமான ஒரு கன்றுக்குட்டியை நான் மாமியின் இடுப்பில் இருந்துகொண்டு நெற்றியில் தொட்டுப்பார்த்தேன். ஒரு தூக்கணாங்குருவிக்கூட்டை யாரோ கொண்டுவந்து தந்தார்கள். அதை நான் ஒரு ஒட்டுத்திண்ணையில் அமர்ந்து நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் பின்னல்களுக்குள் இருந்த வெம்மையான குழிகளில் கைகளை வைத்து ஒரு சிறுகுழந்தை போல ஆகி அந்தத் தொட்டிலில் தூங்குவதாக நினைத்துக்கொண்டேன்.

பலவருடங்கள் கழித்து அந்தக் கால்நடைமருத்துவரின் மனைவி தன் இரு குழந்தைகளுடன் என்னைப்பார்க்க நாங்கள் அப்போது தங்கியிருந்த முழுக்கோடு ஊருக்கு வந்தாள். நான் அப்போது அவளை மிக அன்னியமாக உணர்ந்தேன். என்னை அவள் தழுவியபோது சங்கடமாக இருந்தது. அவளது குழந்தைகளுக்கு நானும் மிக அன்னியமாக இருந்தேன். அவர்கள் நாகர்கோயில் குழந்தைகள், நாங்கள் நாகர்கோயிலைக் கண்டிராத கிராமத்துக் குழந்தைகள். அதன்பின் அவர்களைப் பார்க்கவேயில்லை.
முஞ்சிறையில் குடியிருந்த நாட்களில் என் அம்மாவுக்கு ஏதோ உடம்புக்கு வந்தது. முஞ்சிறையில் இருந்து என்னைத் தூக்கியபடி நடந்தே தக்கலை பெரிய ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். கூட வேறு பெண்களும் பேசிக்கொண்டு வருவார்கள். சாலையெல்லாம் நிழல்கள் ஆடும். அம்மாவுக்கு நரம்பில்  ஊசி போடுவதற்காகக் கையை நர்ஸ் கெட்டியாகப் பிடிப்பதை நான் கவனித்திருக்கிறேன். அம்மாவின் கையில் நரம்புகள் புடைத்திருக்கும். உதடுகளைக் கடித்து வேறு பக்கம் திரும்பியிருப்பாள்

ஒரு நாள் ஒரு நர்ஸ் நடுவகிடு எடுத்துத் தலைசீவி வந்திருந்தாள். அப்போதெல்லாம் கோணல் வகிடுதான் வழக்கம். அதை இன்னொரு நர்ஸ் ‘நல்லா இருக்குடீ நல்லா இருக்குடீ’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். இரு நர்ஸ்களின் முகங்களும் தெரிகின்றன. அப்படிப்பார்க்கும்போது இன்று ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டுவயதுக்குக் குறைவான அந்தப் பிராயத்தில் நான் பெண்களை மட்டுமே கவனித்திருக்கிறேன்.பெண்களுடன் இருக்கவே விரும்பியிருக்கிறேன். ஒரு ஆண் முகம்கூட நினைவில் இல்லை. இப்படித்தான் எல்லா ஆண்களுக்கும் இருக்குமா என்று தெரியவில்லை.

முஞ்சிறையில் இருக்கும்போதுள்ள ஒரு நிகழ்ச்சி மிகத்துல்லியமாக நினைவில் நின்று அடிக்கடி மீள்வது. எங்களை அப்பா தேங்காய்ப்பட்டினம் கடல் பார்க்கக் கூட்டிக்கொண்டு சென்றார். நான் பார்த்த முதல் கடல் அது. தென்னைமரங்களுக்கு அப்பால் கடல் ஒளியுடன் திளைப்பதைக் கண்டேன். கடற்கரையை அடைந்ததும் நான் பீதியுடன் அலறிப் பின்னால் ஓடி மணலில் அமர்ந்துவிட்டேன். பெரிய போர்வை ஒன்றுக்குள் ராட்சதர்கள் உருண்டு புரண்டு சண்டை போடுவதைப்போல எனக்குத் தோன்றியது. அந்தக் காட்சியை சற்றும் மாற்றுக் குறையாமல் இதை எழுதும்போதே காணமுடிகிறது.

அம்மாவும் அப்பாவும் அண்ணனும் முன்னால் சென்றார்கள். அம்மா இடுப்பில் விஜி இருந்தாள். ”அம்மா போகாதே..விஜியைக் கொண்டு போகாதே’ என்று நான் மணலில் கால்களை உதைத்தபடி கதறி அழுதேன். என்னை குண்டுகட்டாகத் தூக்க அப்பா முயன்றார். நான் கதறி அழுது கீழே விழுந்தேன். ஏறத்தாழ முப்பத்தைந்து வருடம் கழித்து தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் நிற்கும்போது தென்னைமரங்கள் நடுவே கடல் உள்வாங்கித்தெரிந்த அந்தக் காட்சி என் இளமைப்பருவத்தின் காட்சியேதான் என்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.

அதன்பின் நாங்கள் பத்மநாபபுரத்தில் குடியிருந்தோம். அந்த வீடு கொஞ்சமும் நினைவில் இல்லை. ஆனால் அதன் கொட்டியம்பலம் — வீட்டுமதிலில் உள்ள கேரள பாணி நுழைவாயில், கூரைபோட்டிருக்கும் – நினைவிருக்கிறது. குழந்தைகள் வெளியே செல்லாமல் இருக்க அதில் குறுக்காக ஒரு கட்டை போடப்பட்டிருக்கும். நான் அதில் ஏறி மறுபக்கம் குதிப்பேன். விஜி அந்தப்பக்கம் நிற்பாள்.

அப்போது நாங்கள் வளர்த்த ஒருநாயின் முகம் மறையவில்லை. உண்மையில் அது நாங்கள் வளர்த்தது அல்ல, அது வீட்டு உரிமையாளரின் நாய். விஜியின் பின்னாலேயே சென்று அவளைக் காவல் காக்கும். அவளை அன்னியர் தொடுவதை அனுமதிக்காது. அவளிடம் ஒரு கூடைக்காரி ஏதோ பேசிவிட்டுக் கன்னத்தைத் தொடுவதற்கு வந்தபோது நாய் உறுமியபடி முன்னால்சென்றது. அவள் அலறி ஓடினாள்.

நான் அப்பாவின் கையைப்பற்றியபடி நடக்கும்போது உயரமான வீட்டுக்கூரையின் முக்கோணக்கூம்பு அருகே ஒரு புறா பறந்ததைப் பார்த்தேன். பக்கவாட்டில் கரிய நிறத்தில் பத்மநாபபுரம் கோட்டைமதில் வந்துகொண்டே இருந்தது. யாரோ பெரிய முறுக்கு ஒன்று கொண்டு என் அம்மாவிடம் கொடுத்திருந்தார்கள். அதை உடைத்து அம்மா எனக்குத் தந்ததும் அருகே விஜி நின்றதும் நினைவில் இருக்கிறது. நான் கதவுக்கு வெளியே வாலாட்டிய நாய்க்குக் கொஞ்சம் முறுக்கைப் பிய்த்து வீச அது வீட்டுக்குள்ளேயே விழுந்தது. நாய் உள்ளே வந்து எடுத்துக்கொண்டது.

பத்மநாபபுரத்தில் இருக்கும்போது வேறு நினைவுகள் ஏதும் இல்லை. அங்கிருந்து நாங்கள் கொட்டாரம் என்ற ஊருக்கு சென்றுவிட்டோம். அங்கேதான் நான் பள்ளியில் சேர்ந்தேன். ஒன்றாம் வகுப்பு. இரண்டாம் வகுப்பு முதல் முழுக்கோடு ஊருக்கு வந்து விட்டோம். பள்ளிநாட்கள் பெரும்பாலும் எனக்குத் தெளிவாகவே நினைவில் நிற்கின்றன. தேவையென்றால் நினைவுக்குக் கொண்டுவர முடியாத இடமென ஏதுமில்லை.

ஆனால் நினைவுகள் அப்படிச் சாதாரணமாக நம்மில் மீள்வதில்லை. நல்ல காய்ச்சலில் பிரக்ஞையழிந்து கிடக்கும்போது அவை நம்முள் நிகழ்கின்றன. அல்லது தியானத்தில் எதிர்பாராதபடி அலையலையாக எழுந்து வருகின்றன. அதேபோல மொழி சரியாக சுருதிகூடி வெறிபிடித்ததுபோல எழுதிச்செல்லும்போதும் சற்றும் நம்ப முடியாதபடி மிக அபூர்வமான நினைவுகள் எழுந்து வந்துவிடுகின்றன. சிலசமயம் நாம் எழுதிய ஒரு இடம் உண்மையில் முன்பு எப்போதோ நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவம்தான் என்று ஆச்சரியத்துடன் நாம் உணர்கிறோம். சிலசமயம் அவ்வனுபவம் உருமாறிப் படைப்பில் வெளிவந்திருக்கும்

ஓர் உதாரணம், ‘காடு’ நாவலில் அம்பிகா அக்கா உடைமாற்ற  கிரிதரன் கண்ணாடியைக் காட்டும் இடம். சுற்றிச் சுற்றி வந்து குட்டிக்கிரிதரன் கண்ணாடியைக் காட்ட அக்கா தன் உடையை அதில் பார்த்து மகிழ்கிறாள். அந்த நிகழ்ச்சி கால்நடை மருத்துவர் மனைவி மாமிக்கு நான் கண்ணாடி காட்டியதுதான். ஏதோ ஒரு மன எழுச்சியில் அவர்கள் கதவுகளை மூடிக்கொண்டபின் தன் பெட்டியைத் திறந்து தன் பட்டுப்புடவை ஒன்றை எடுத்துக்கட்டிக்கொண்டு கண்ணாடி காட்டச்சொல்லிப் பார்த்து ரசித்தார்கள்.

ஆனால் காடு நாவலில் அந்த அக்கா வேறு. அவளுடைய சூழல், மனநிலை எல்லாமே வேறு. அந்த சம்பவம் மட்டும் எப்படியோ அங்கே வந்து அமைந்துவிட்டது. அம்பிகா அக்காவில் ஏதோ ஒரு இடத்தில் அந்த மாமி இருக்கிறாளா? கண்டுபிடிக்கவே முடியவில்லை. இலக்கியத்தில் நிகழ்ச்சிகள் மட்டும் வருவதில்லை, நிகழ்ச்சிகள் மீது ஏறும் விருப்பங்களும் கனவுகளும் எல்லாம் கலந்துதான் வருகின்றன.

படைப்பூக்கம் என்பது வெறும் நினைவாற்றல்தான் என்று எர்னெஸ்ட் ஹெமிங்வே சொல்லியிருக்கிறார். அது முழு உண்மை அல்ல. ஆனால் மறுக்கக்கூடியதும் அல்ல.

 

மறுபிரசுரம்/Feb 19, 2013
.

தொடர்புடைய பதிவுகள்

ஒரு வருட முடிவில்…

$
0
0

3

 

இனிய ஜெயம்,

கொஞ்சம் நெகிழலாம் என்று முடிவு செய்து விட்டதால்,கடலூர் சீனுவின்“Patented” வார்த்தையை உபயோகித்து கொள்கிறேன், அண்ணன் கோபித்து கொள்ள மாட்டார் என்ற உரிமையோடு.

இன்றிலிருந்து ஒரு வருடம் முன்பாக முகநூலில் உலாவிக் கொண்டு இருந்த பொழுது ஒரு சினிமா செய்தியை கிளிக் செய்வதற்கு பதில் தவறுதலாக வேறு ஒரு Linkயை கிளிக் செய்து விட்டேன். Network down ஆனதால் அதை பல முறை முயன்றும் close செய்ய முடியவில்லை. வேறு வழி இல்லாமல் அதை என்னவென்று படிக்க நேர்ந்தது. அந்த தளத்தில் கிரேஸி மோகனின் டிராமா ஆர்டிஸ்ட் போல இருந்த ஒருவரின் புகைப்படமும், “காந்தி ஒரு பனியா” என்ற தலைப்பும் இருந்தது. அந்த தளத்தின்  பெயர் www.jeyamohan.in என்று இருந்தது. அதற்கு முன்னால் ஜெயமோகன் என்ற பெயரை , “எம்‌ஜி‌ஆர் அவமதிப்பு” சர்ச்சையிலும், நான் கடவுள் படத்தின் வசனகர்த்தா என்ற முறையிலுமே அறிந்து இருந்தேன். அந்தக் கட்டுரையின் தலைப்பு என்னை எரிச்சல் அடைய வைத்தது. மறுபடியும் ஒரு காந்தி வசை கட்டுரையை படிக்க வேண்டுமா என தோன்றியது. என்னதான் எழுதி இருக்கிறார் என படிக்கத் தொடங்கிய அந்த கட்டுரை தன் இரண்டாம் மூன்றாம் வரியிலே என்னை உள்ளே இழுத்து கொண்டது.

கட்டுரை பாதி படிக்கையிலே அந்த தளம் முன்னர் செய்த முயற்சியால் மூட பட்டது. மறுபடியும் அந்த linkயை முகநூலில் தேட முடியவில்லை. கூகிளில் அந்த தளத்தை தேட முயற்சிக்கையில், “ஜெயமோகன் ஒரு ஆணாதிக்கவாதி” என்ற பல வசை செய்திகளுக்கு  நடுவில் தளத்தை மறுபடி கண்டு அடைந்தேன். ஏறக்குறைய ஒரு மணி நேர தேடலுக்கு  பிறகு அந்த கட்டுரையை மறுபடியும் கண்டு அடைந்து படித்து முடித்தேன். அடுத்த ஒரு நாளில் அங்கு இருந்த காந்தி பற்றியான அனைத்து கட்டுரைகளையும் படித்து முடித்தேன். படித்து முடித்தவுடன் ஒரு சிந்தனையற்ற மனநிலையில் தள்ளப்பட்டேன். அதற்கு முன்னால் “சத்தியசோதனை” “கஸ்தூரிபா காந்தி” பற்றியான இரு புத்தகங்கள் மட்டுமே படித்து இருந்தேன், காந்தி பற்றியான ஒரு உணர்வுபூர்வமான புரிதல் மட்டுமே இருந்தது. அந்த கட்டுரைகள் என்னை காந்தி பற்றியான வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றன. இவ்வாறாக தொடங்கியது உங்களுடனான என் பயணம்.

என் சிறு வயதில் இருந்தே கடவுள், பிரபஞ்சம் பற்றியான பல கேள்விகள் என்னை அலைக்கழித்து இருக்கின்றன. அந்த கேள்விகளுக்கு பதிலாக கிண்டல்களும், நான் “Bore” அடிப்பவன் என்ற உணர்வுகளும், பக்தி ரீதியான விளக்கங்களும், கம்யூனிச, நாத்திக நோக்கில்லான விளக்கங்களும் கிடைத்தன.  பக்தி நோக்கில் ஒரு மன திருப்தி கிடைத்ததே ஒழிய சரியான பதில் கிடைக்க வில்லை. கம்யூனிச, நாத்திக நோக்கிலான விளக்கங்களுக்கு உள்ளயே என்னால் செல்ல முடியவில்லை. அது ஒரு தாற்காலிக தள்ளிவைப்பு போல நான் உணர்ந்தேன். “கடவுள் நம்பிக்கை உண்டா”?, “நான் ஒரு இந்துவா” போன்ற கட்டுரைகள் என்னை மெதுவாக தத்துவ தளத்திற்கு கொண்டு சென்றன. ஆன்மீகம், தத்துவம் தொடர்பான அனைத்து கட்டுரைகளையும், கேள்வி பதில்களையும் தேடி தேடி படித்தேன். வெட்கத்தை விட்டு சொல்வது என்றால் “மூன்று தத்துவங்கள்”, “ஆறு மதங்கள்”, “ஆறு தரிசனங்கள்” என்பவை இருப்பதுவே அப்பொழுது தான் தெரிந்தது. முதலில் தாங்கள் எழுதுவது ஒரு மறைமுகமான நாத்திகமோ என்ற ஐயம் தோன்றியது. ஆனால் படிக்க படிக்க அது வேறு ஒரு தளத்திற்கு என்னை கூட்டி சொல்வது எனக்கு தெரிந்தது. “பிரம்மம்” என்ற கருத்து உருவில் எனக்கான விடை இருப்பது போல உணர்ந்தேன். உரைகளை கேட்பது, புத்தகம் படிப்பது போன்றவைகள் மூலம் ஒரு பொழுதும் ஆன்மீகத்தில் நுழைய முடியாது எனவும் அது ஒரு தன்வயப்பட்ட மனப்பயணத்தில் மட்டுமே கண்டு பிடிக்க முடியும் என்பதை நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அங்கு இருந்து மெதுவாக சமுதாய, அரசியல் சார்ந்த கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். முக்கியமாக சாதி, மத, சடங்கு, மார்க்ஸிய இடதுசாரி, இந்துத்துவ வலது சாரி சார்ந்த கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். சிறு வயதில் இருந்தே “துக்ளக்” படித்து கொண்டு இருப்பதனால், அந்த பாதிப்பில்  எனக்கு என ஒரு கருத்து நிலைப்பாடு வளர்த்து வைத்து இருந்தேன். அதற்கு எதிரான கருத்துகளை பெரும்பாலும் தவிர்த்து வந்தேன். ஆனால் தங்களின் “முரணியக்க” (dialetics) எனும் கருத்து நிலைப்பாடு என்னை மிக கவர்ந்தது. எந்த ஒரு கருத்துமே அதற்கு எதிரான கருத்துடன் விவாதித்து முன்நகர்ந்தால் மட்டுமே அந்த கருத்து தெளிவு அடைய முடியும் என்பதும், இதற்கு கிரேக்க, இந்திய பண்பாட்டில் இருந்த முக்கியத்துவமும் என்னை ஆச்சரியபட வைத்தது. நம் அடையாளத்தை, பண்பாட்டை காக்க வலதுசாரிகளின் முக்கியதுவத்தையும், அந்த பண்பாடு சமகால சவால்களை சமாளிக்க, பண்பாட்டை தற்காலிக நோக்கில்  மறு மதுப்பீடு செய்ய இடதுசாரிகளின் முக்கியதுவத்தையும்  என்னால் உணர முடிந்தது. இவ்விரு சார்புகளின் சரியான முன்நகர்வு மூலமாகதான் ஒரு நல்ல சக்திமிக்க சமுதாயம் (Healthy Society) உருவாக்க முடியும் என்ற தெளிவு பிறந்தது.

தங்கள் மூலம் பல தரப்பட்ட கருத்து நிலைப்பாடு கொண்டவர்களின் அறிமுகமும், அவர்களின் எழுத்துகளும் பரிச்சயம் ஆனது. அரவிந்தன் நீலகண்டன், ஒத்திசைவு ராமசாமி, ஜடாயு போன்ற வலது சாரிகளும், பி.ஏ.கிருஷ்ணன், ஞானி போன்ற இடதுசாரிகளின் எழுத்தும் அறிமுகம் ஆயின. இன்று வரை இவர்களை  (ஞானி தவிர) தொடர்ந்து பின்பற்றி (Follow) வருகிறேன்.   பண்பாடு எதற்கு, ஆன்மீகம் எதற்கு, இந்து மதம் அழிய பட வேண்டும் என்ற கருத்து உள்ள பெரியாரிய கருத்து உருவின் மீது பெரிய ஈர்ப்பு இல்லை என்றாலும்  , ஒரு தரப்பாக, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய அவர்களையும் (பரிக்ஷா ஞாநி etc.,) பின்பற்றுகிறேன்.   தமிழ் இந்து இணையதளமும், வினவும் தங்கள் மூலமாகவே அறிமுகம் ஆயின. ஒரு பிரச்சனையின் பல்வேறு கோணங்களை அறிய இவை மிகவும் உதவின.

தங்களின் சமுதாய, அரசியல், ஆன்மீக கட்டுரைகளையே படித்து கொண்டு இருந்தேன், இலக்கிய சம்பந்தமான கட்டுரைகளை தவிர்த்தே வந்தேன். ஏனோ என்னால் அதில் உள்ளே செல்ல முடியவில்லை. எல்லாமே எழுத்து தானே இதில் ஏன் வணிக இலக்கியம், மற்ற இலக்கியம் என்ற வேறுபாடு என்றுதான் நினைத்து கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் தேதி வாரியாக, எல்லா வருட கட்டுரைகளையும் தளத்தில் படித்து முடித்து விட்டு இருந்தேன். கூடவே தமிழ் ஹிந்து, வினவு, சுனிலின் காந்தி இணையதளம், கவர்னர் சீனுவின்  நித்யாவின் பிளாக் எல்லாவற்றையும் படித்த பிறகு ஒரு வெறுமை வந்தது. அப்பொழுது ஒவ்வாரு நாளும் “வெண்முரசு” என ஒன்று தொடர்ந்து தளத்தில் வந்து கொண்டே இருக்கும். அதில் என்ன இருக்கிறது என ஒரு முறை படித்து பார்த்தேன். அது பிரயாகையில் வரும் “திரௌபதி சுயம்வர” பகுதி. இதையா இவ்வளவு நாள் விட்டு வைத்து இருந்தோம் என குற்ற உணர்வு மேலோங்கி வெண்முரசை முதலில் இருந்து படிக்க தொடங்கினேன். வெண்முகில் நகரம் 25ஆம் பகுதி வருவதற்குள் ஐந்து நாவல்களை  முடித்து மறுபடியும் அதில் சேர்ந்து கொண்டேன்.

படித்தேன் என்று சொல்வதற்கு பதிலாக அது என்னை முழுவதுமாக உள்ளே இழுத்து கொண்டது. எண்ணம் முழுவதும் பீஷ்மர், அம்பை,பாண்டு, விதுரன், துரியன், தர்மன், பீமன் இவர்களை சுற்றியே வந்தது. அது வரை வெறும் கல்கி, சாண்டில்யன்,பாலகுமாரன் (கொஞ்சம் சுஜாதா) போன்றவற்றை மட்டுமே படித்து வந்த எனக்கு இதன் வேறுபாடு புரிந்தது. வணிக எழுத்து புறவயம் ஆனவை. அவை எளிதில் படிக்கக் கூடியவை, விறுவிறுப்பாக செல்ல கூடியவை.அவைகளை மேலே இருந்தே படிக்கலாம்.  ஆனால் இலக்கியம் என்பது அகவயமானவை, அவை விறுவிறுப்பாக செல்வதில்லை, நமக்கு பிடித்தவற்றை அவை சொல்லவில்லை, மாறாக அவை என்ன சொல்கிறதோ அதை நமக்கு பிடிக்க வைக்கிறது. அவைகளை உள்ளே சென்று தான் படிக்க முடியும்.

வணிக இலக்கியம் என்பது கரையில் இருந்து ஆற்றை பார்ப்பது  போல, ஆனால் உண்மையான இலக்கியம் என்பது அந்த ஆற்றிலே உள்ளே விழுவது போல. ஆறு எந்த திசையில் செல்கிறதோ அத்திசையில் நாமும் அடித்து செல்லபடுவோம். அலை மேழே எழும் பொது நாமும் மேழே எழுவோம், அது அமைதியாக இருக்கும் பொழுது நாமும் அமைதியாய் இருப்போம்.வெண்முரசிற்கு பிறகு என்னால் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை வாசிக்க முடிந்தது. ஊட்டி முகாம் எனக்கு பெரிய திருப்பு முனையாக இருந்தது. அதுகாறும் இலக்கியம், கவிதை என நான் நம்பி கொண்டு இருந்த அனைத்தும் இரக்கமே இல்லாமல் வெளியே தூக்கி வீசப்பட்டன.அங்கு வந்து இருந்தவர்களில் நான் மட்டுமே உண்மையமான இலக்கியம் எனவற்றை படிக்காமல் இருந்து இருந்தேன்.  இன்று கொஞ்சம் கொஞ்சமாக அவைகளை படித்து கொண்டு இருக்கிறேன்.

வெண்முரசு வாசிப்பு தொடர்பான சந்தேகங்களுக்காக அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடன் மெயிலில் உரையாட தொடங்கினேன். உப்பு வேலி விழாவில் தங்களை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த குழுமத்தில் எப்பிடி சேர்வது என்று தெரியாமால் இருந்தேன். அன்றைய விழாவின் தொகுப்பாளரான செந்தில் குமார் தேவனை அணுகி என் விருப்பத்தை தெரிவித்தேன். அங்கு இருந்து தான் ஆரம்பித்தது நம் நண்பர்களின் பழக்கம்.

இந்த ஒரு வருடத்தின் முக்கிய அனுபவமாக கருதுவது இந்த நண்பர்கள் குழாமைத்தான். பத்ரியின் விழாவிற்கு வந்து இருத்த பொழுது சிவாத்மா தான் முதலில் என்னிடம்பேசினார். நெடுங்காலம் பழகியதை போல பேசினார். நீங்க ஜெவை சந்திக்க வரிங்களா என கேட்டார்? நண்பர்கள் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்றோம். அந்த அறையில் அன்று இருந்தவர்கள் தான் அடுத்த ஆறு மாதத்திற்குள் நெருங்கிய நண்பர்களாக மாறப் போகிறார்கள் என்பது எனக்கு அன்று தெரியாது. இங்கு எல்லாருக்கும் இலக்கியம் பிடிக்கும் என்பதால் ஒரு common wave length ஒன்று உள்ளது, அது நட்பை மேலும் பல படுத்துகிறது. ஊட்டி முகாம் முடிந்து இன்று வரை ஒவ்வொரு நாளும் விஷ்ணுபுர நண்பர்களை தொடர்பு கொள்ளாமல் தூங்க சென்றதில்லை.

ஊட்டி முகாமிலே மாத மாதம் வெண்முரசு கூடுகை நடத்துவது என்று முடிவு செய்தோம். இம்மாதிரியான கூடுகைகள் வாசிப்பு அனுபவத்தை அதிகரிக்க மட்டும் இல்லாமல் நட்பை மேலும் பல படுத்துகின்றன. மாத கூடுகைகள் தாண்டி சிறு சிறு சந்திப்புகள், சிறு பயணங்கள் நட்பை மேலும் வளர்த்தன. இது வெறும் சென்னை என்று மட்டும் இல்லை, கோவை, ஈரோட்டில் இருக்கும் நண்பர்கள், லண்டன் , ஆஸ்திரேலியா, அமெரிக்க நண்பர்கள் வரை இது பொருந்தும். வெகு இயல்பாக இந் நண்பர்களிடம் பொருத்திக் கொள்ள முடிகிறது. அனைத்தையும்  பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த நண்பர்கள் யாவரும் தங்களிடம் வெவ்வேறு வகையாக ஈர்க்கப் பட்டு உள்ளவர்கள். உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் எங்களை இணைக்கும் பொன் பட்டு நூல் நீங்கள் தான்.

என்ன ஆச்சரியம் என்றால் இந் நண்பர்கள் யாவரும் வெவ்வேறு கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர்கள். சிலர் இந்துத்துவர்கள், சிலர் இடதுசாரி சார்பு சிந்தனை உள்ளவர்கள், சிலர் காந்தியவாதிகள், சிலர் பெரியாரியவாதிகள், பலர் என்னை போல எந்த நிலைப்பாடும் இல்லாதவர்கள். இவர்கள் தங்களிடமும் , மற்ற நண்பர்கள் இடமும் தங்கள் கருத்தியல் சார்பாக ஆழமாக விவாதிப்பவர்கள். ஆனால் விஷ்ணுபுர விழாக்களில் இந் நண்பர்கள், தங்களின் கருத்து நிலைப்பாடு வேற்றுமைகளை மறந்து  ஒன்று கூடி சேரும் பொழுது, ஒரே வரிசையில் சாப்பிடும் பொழுது, ஒன்றாக தூங்கும் பொழுது, ஒன்றாக இலக்கியத்தை அலசும் பொழுது  சிறுது பரவசமாகவும் இருக்கிறது. வெவ்வேறு மார்கங்கள் ஆக இருந்தாலும் பரஸ்பரம் அழித்து கொள்ளாமல் , விவாதித்து முன்னகர்ந்த இந்த பண்பாட்டு மண்ணில் தான் இது சாத்தியம் என்று தோன்றுகிறது.கூடவே இது இப்பிடியே நீடிக்குமா என்ற பயமும் இருக்கிறது.

நான் விஷ்ணுபுர குழுமத்தை சேர்ந்தவன் என்று எவ்வித தயக்கமும் இல்லாமல் எல்லா இடத்தில்லும் சொல்ல முடியும். எழுத்தாளனுக்கும் வாசகனக்குமான இவ்வாறான உரையாடல்கள் வேறு எங்கும் நடக்குமா என்று தெரியவில்லை. வெண்முரசு கூடுகைக்கு செல்லும் பொழுது ஜாஜா இரவு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் கூடுகை முடிந்து சில மணி நேரம் பேசிய பிறகே பிரிந்து செல்லுவோம். அது என்னவோ தெரியலை சீக்கிரம் போக முடிவது இல்லை என்று சிரித்து கொண்டே சொல்லுவார். தன் கிரகப்பிரவேசம் அழைப்பிதழ் கொடுக்க சென்னை வந்த பொழுது ஒரு நண்பரிடம்  உரையாடலை முடித்து விட்டு அடுத்த நண்பரை பார்க்க செல்வதற்கு அரங்கா ரொம்பவே சிரமபட்டார்.

சரி. இந்த ஒரு வருடத்தில் அனைத்தும் தெளிவு அடைந்து விட்டதா என்றால், கண்டிப்பாக இல்லை இப்பொழுது மேலும் குழப்பமாகதான் இருக்கிறது. ஏன் என்றால் ஒரு விஷயம் தெரியாத பொழுது எந்த குழப்பமும் ஏற்படுவதில்லை, விஷயம் தெரிய தெரிய தான் அதிக குழப்பம் ஏற்படும். ஆனால் முழுவதுமாக தெளிய இந்த குழப்பங்கள் தேவை என்றே நினைக்கிறேன். இரக்கமே இல்லாமல் பல பிம்பங்கள் இந்த ஒரு வருடத்தில் உடைக்க பட்டு இருக்கிறது.

முதலாவதாக, காஞ்சி பெரியவர் பற்றியது. ஆசாராமான பிராமன குடும்பத்தில் பிறந்தவன் நான். என் மனைவி வழியில் காஞ்சி மடத்தில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தங்களையும், அரவிந்தன் நீலகண்டனையும் படித்த பொழுது அந்த பிம்பம் சுக்கு நூறாக சிதைக்கப்பட்டது. உங்களின் கருத்துக்கு எதிரான மாற்றுக்கருத்து எதுவும் என்னிடம் இல்லை. நீங்கள் சொல்வதின் உண்மை உரைத்தது. ஜாதிய நிலைப்பாட்டை ஏற்கும் ஒருவரை எப்பிடி ஞான குருக்கள் வரிசையில் வைக்க முடியும் என்பதை மறுக்க முடியவில்லை. இதை மட்டும் சொல்லி நீங்கள் நிறுத்த வில்லை. அடுத்த கட்டுரையில் ஏன் அவரை வெறுக்கக் கூடாது என்று எழுதி இருந்தீர்கள்? அது தான் என்னை முழுவதுமாக மாற்றியது. அதிலும் அந்த கடைசி வரி, “ஆணாதிக்க வாதியான என் தந்தையை என்னால் வெறுக்கவா முடியும் “ ?. இப்பொழுது எனக்கு அவர் மீது வெறுப்போ பற்றோ இல்லை. ஆனால் அவர் இடம் என்ன என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன்.

இரண்டவதாக, பாரதி பற்றியது. தாகூரையும் பாரதியையும் ஒப்பிட்டு எழுதியது. தாகூர் ஏன் மகா கவி என்பதை தர்க்கபூர்வமாக நீங்கள் நிறுவியதை என்னால் மறுக்க முடியவில்லை.

இப்பிடியாக பல பிம்பங்கள் பல கருத்து நிலைப்பாடுகள் உடைக்க பட்டே இருந்தன. அனைத்தையும் எழுத எனக்கு பொறுமை இல்லை. என்ன செய்வது?  உளியின் வலியை சகித்தால்தான் கற்கள் சிற்பமாக ஆக முடியும். அதே போல் என்னளவில் convince ஆகாத கருத்து நிலைகளை அப்பிடியே தான் வைத்து உள்ளேன்.

ஐந்து மணி நேரமாக type செய்து கொண்டு இருக்கிறேன். அனைத்தையும் சொல்லிவிட்டேனா என தெரியவில்லை?யோசிக்க யோசிக்க நிறைய வந்து கொண்டு இருப்பதால் இதுவே போதும் என நினைக்கிறேன். இவை அனைத்திற்கும் ஒரு பொழுதும் நன்றி என்று உங்களுக்கு சொல்லப் போவது இல்லை, ஏன் என்றால் இது ஒரு ஆசானின் கடமை என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

ரகுராமன்

அன்புள்ள ரகுராமன்

நேற்று ஆ. மாதவன் விருதுவிழா நிகழ்வுகளை நோக்கிக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய உள எழுச்சி ஏற்பட்டது. என் வாழ்க்கையில் கால்நூற்றாண்டு இலக்கியத்திற்காகவே செலவாகியிருக்கிறது. திரும்பிப்பார்க்கையில் மூன்று விஷயங்களைத்தான் இனியவை என்று சொல்வேன். ஒன்று வாசிப்பில் மூழ்கி வேறொரு வெளியில் வாழ்வது. இரண்டு எழுத்தில் புதியனவற்றை கண்டடைந்தபடியே இருப்பது. மூன்று நண்பர்களுடன் அளவளாவுவது

இந்த நட்புக்குழுமம் அந்த நட்பாடலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இதனுள் இதுவரை பெரிய அளவில்  பூசல்கள் கசப்புகள் ஏதும் வரவில்லை. ஆனாலும் கவனமாகவே இருக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் மனிதர்கள் எங்கு சென்றாலும் தங்கள் சொந்தக்கசப்புகளைச் சுமந்து செல்பவர்கள். அவற்றை மீறி ஒரு மகிழ்வான களமாக இதை அமைத்திருக்கிறோம்

அதன்மீது நின்றுகொண்டே இந்த சிறிய செயல்களைச் செய்கிறோம். நாளை இவை பெரியதாகத்தெரியும் என்பதையும் அறிந்திருக்கிறோம். மங்கலச்சொல் சொல்கிறீர்கள் என நான் அறிவேன். இக்குழுமத்திலேயே மிகச்சிக்கலான மனிதனாக நான் ஆகிக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக வெண்முரசு எழுதத் தொடங்கியபின். பெருங்கனவுகளுக்கு முன்னால் நிற்கையில் நாம் உணர்வது நம் சிறுமையை மட்டும் அல்ல, நம் ஆயுள் எந்த அளவுக்கு அற்பமானது என்பதையும்தான்

இந்தக் குழுமத்தில் நீங்கள் அடைந்த அனைத்தும் இதை உயிர்ப்புடன் நிறுத்தும் நண்பர்களால் வாய்த்தது. அவர்களுக்கு நன்றி சொல்வோம்

 

ஜெ

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை
Viewing all 311 articles
Browse latest View live