Quantcast
Channel: அனுபவம் –எழுத்தாளர் ஜெயமோகன்
Viewing all 316 articles
Browse latest View live

யாப்பு

$
0
0

[நகைச்சுவை]

 

images

ந்நாட்களில் குழந்தைகள்மேல் பெரியவர்களின் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டங்கள் இல்லையாதலால் எட்டாம் வகுப்பிலேயே யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். துடிப்பான பையன்களாக இருந்தோம். தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு புன்னகையுடன் வகுப்புக்கு வந்து சாக்குக்கட்டியால் கரும்பலகையில் “யாப்பு” என்று எழுதி அடிக்கோடிட்டதுமே சிரிப்பு ஆரம்பம். எங்கள் பள்ளியில் இயல்பாகப் புழங்கி வந்த ஒரு சொல்லுக்கும் அதற்கும் அரைக்கணமே வேறுபாடு.

“லேய் என்னலே சிரிப்பு, மயிராண்டி. செருப்பால அடிச்சி தோல உரிச்சிருவேன்.சிரிப்பு… சிரிக்கப்பட்ட மோரைகளைப் பாரு…ஏலே உனக்க அம்மைக்க ஆமக்கன் இஞ்ச துணியில்லாம நிக்கானேலே? வாய மூடுங்கலே நாறப்பயக்கலே… வெவரமும் கூறும்கெட்ட இந்த ஊருல என்னைய வேலைக்குப்போட்ட தாயளிய மொதல்ல போயி மண்டையில அடிக்கணும்…காலையில எந்திரிச்சு வந்திருதானுக வாயையும் களுவாம…” என்று ஏசுஞானமரியதாசன் முன்னுரை வழங்கிவிட்டு நேராகப் பாடத்திற்குள் புகுந்தார்.

“ஓரோ பயக்களும் கண்டிப்பாட்டு யாப்பு அறிஞ்சிருக்கணும்…” என்றார் ஏசுஞானமரியதாசன். “ஓம் சார்!” என்றான் தங்கச்சன். “என்னலே ஓமு?” “சார் சொன்னது உள்ளதாக்கும்” ஏசுஞானமரியதாசன் தலைசரித்து அவனைப்பார்த்தபின் “என்னத்துக்கு?” “நாளைய தலைமுறைக்கு சார்!” தங்கச்சன் எஸ்எஃப்ஐ உறுப்பினர். சகாவு ஹேமச்சந்திரன் நாயராலேயே பெயர்சொல்லி அழைக்கப்படும் தகுதி கொண்டவன். “இரிடே தங்கச்சா…அப்பம் சங்கதி அதாக்கும். நாளைய தலைமுறையை உருவாக்குததுக்கு யாப்பு அத்தியாவிசியமாக்கும்.கேட்டுதால மயிராண்டிமாரே…இருந்து பாக்கானுக பாரு…இவனுக கண்ணைக்கண்டாலே எனக்கு ஒருமாதிரி கேறிவருதே…”

அடுத்த சொல்லாக “அசை” என்று எழுதியதுமே நான் அதை என் நோட்டில் அவசரமாக எழுதினேன். “…ஆகா எளுதிப்போட்டாம்லே…கரடிக்க மகன் எளுதிப்போட்டாம்லே..என்னலே எளுதினே… ?” “அசை” “அசைண்ணா என்னலே அர்த்தம்?” “துணிகாயப்போடுத கயிறு சார்” “அய்யட, உடுத்தா வேட்டி கிளிச்சா கௌபீனம்னு சொல்லுத மாதிரி…. வந்து சேருதானுக…ஏல மலையாளத்து மயிரான்லாம் வந்து தமிளு படிக்கல்லேண்ணு இஞ்ச எவன்லே கேட்டான்? இங்கிணயுள்ளவன் படிச்ச தமிளுக்கே நாடு நாறிட்டு கெடக்கு… ஏலே அசைண்ணா….”

“மாடு அச போடுகது சார்” என்றான் ஸ்டீபன். வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஏசுஞானமரியதாசன் ஸ்டீபனை உற்றுப்பார்த்து சில நிமிடங்கள் நின்ற பின் மென்மையான குரலில் “லே மக்கா, உனக்க அப்பன் ஞானதாஸு கள்ளுக்கடையில வடைண்ணு நெனைச்சு வேதக்கண்ணுக்க மூக்குபொடிக்குப்பிய எடுத்துக் கடிச்சவனாக்கும். நீ அதைச் சொல்லல்லேண்ணாத்தான் நான் நிண்ணு பாக்கணும். வித்தில உள்ளதுல்லா கொத்துல நிக்கும்?…” பெருமூச்சுவிட்டு “ஆரும் தோக்குக்கு உள்ள கேறி வெடி வைச்ச வேண்டாம். பூர்வஜென்ம பாவத்தினாலே ஒருத்தன் இஞ்ச கெடந்து மூச்சறுக்குத எளவ கேட்டு மனசிலாக்கிப் படிச்சாப்போரும்…” என்றபின் “அசைண்ணா வார்த்தைக்க ஒரு துண்டாக்கும்.இப்பம் இந்த ஆயிரங்காலட்டய நாம நாலஞ்சா வெட்டினாக்க ஓரோ துண்டும் ஒத்தைக்கு ஊர்ந்து போவும்லலே, அதைமாதிரி ஒரு வார்த்தைய நாம வெட்டினாக்க தனியாட்டுபோற துண்டுகளாக்கும் அசைண்ணு சொல்லுதது…”

எனக்குப் பளீரென்று மின்னியது. ஏசுஞானமரியதாசன் “… ஆனா போற போக்குல பீடிக்கடையில தடம் போயில நறுக்குதது மாதிரி போட்டு வெட்டப்பிடாது. அதுக்கொரு கணக்கு இருக்கு. அந்தக் கணக்கயெல்லாம் அந்தக்காலத்தில சோலிமயிருகெட்ட பண்டிதனுங்க தேமா புளிமாண்ணு வாயி புளிச்சா மாங்கா புளிச்சாண்ணு தெரியாம எளுதி வச்சிருக்கானுக. அத இப்பம் உங்ககிட்ட சொன்னா அதவச்சுகிட்டு புதிசாட்டு நாலஞ்சு கெட்டவார்த்தைய உருட்டி வைப்பிய…அதனால நான் ஒரு கணக்காட்டு சொல்லுதேன்…லே சாம்ராஜு அங்க என்னலே முளிக்கே…முளி செரியில்லியே..”

சட்டென்று ஒரே வகுப்பில் பாடல்களை அசைபிரிக்கும் கணக்கை இலகுவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார் ஏசுஞானமரியதாசன். அந்த ஒரு மணிநேரத்தில் கற்ற கணக்கு இந்தநாள் வரை செய்யுட்களைப் படிப்பதற்குக் கை கொடுக்கிறது. யாப்பை முதலில் அசைபிரிக்கக் கற்றுக்கொடுத்தபடி தொடங்கவேண்டும் என்பது பழைய கவிராய மரபின் வழிமுறை. அசைபிரிக்கத் தெரிந்ததுமே பழந்தமிழ்ப் பாடல்கள் பிசுக்கு நீக்கப்பட்ட கண்ணாடி வழியாகத் தெரிவதுபோலத் தெளிவடைகின்றன.கண்ணில் பட்ட அனைத்துச் சொற்சேர்க்கைகளையும் பாடல்களையும் அசைபிரிக்க ஆரம்பித்தோம். ‘ஐந்து கரத்தனை யானைமுகத்தனை’ முதல் ‘சும்மா இருந்தா அம்மைதாலி அறுப்பேன்..’ போன்ற நாட்டுப்புற இலக்கியங்கள் வரை.

நாலாம் நாள் ஏசுஞானமரியதாசன் மீண்டும் வகுப்பில் யாப்பு தொடங்கியபோது பலரும் பிரகாசமாக அதை எதிர்கொண்டோம். “ஏம்லெ எல்லா கெட்டவார்த்தைக்கும் அசைபிரிச்சாச்சாலே….இல்ல இனி வல்லதும் பாக்கி உண்டா?”. முனகல் ரீங்கரிக்க “என்னலே சத்தம்?”. “பிரிச்சாச்சு சார்…” .”லே ஜெயமோகன் எந்திரி, பேரு வச்சிருக்கான்பாரு கரடிநாயரு, லே உனக்கு வல்ல சிண்டன் கோரன் கடுத்தாண்ணு நல்ல நாயருக்க பெர வச்சா என்னலே..? செரி அதுபோட்டு, தலையெளுத்துல்லா பேரா வந்து சேருது…நீ சொல்லுலே…தேமாங்காய்ண்ணா என்ன வார்த்தையாக்கும்?”

நான் வெட்க,”சார் அவன் நல்ல பயலாக்கும், கெட்ட வார்த்தை சொல்ல மாட்டான்…” என்றான் ஜெபக்குமார். “கெட்டவார்த்தை சொல்லாத நாயரா? என்னலே புதிய கதயாட்டிருக்கு?”. “நான் சொல்லுகேன் சார்” .”ஆமா. நீ வெளைவே. நீ டீக்கனாருக்க பயல்லா..அவரு சிலுவையிட்டு கும்பிடுத சமயத்திலயும் வாயில கெட்டவார்த்தையில்லா சொல்லுவாரு… நீ அதைச் சொல்லணும். நான் அதை நிண்ணு கேக்கணும்…செரி,சகல தேமாங்காக்களும் கேளுங்க, இண்ணைக்கு அடுத்த பாடம். சீர்!”

நான் சீர் என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டேன். “ஒரு பாட்டில இருக்கப்பட்ட ஒரு வரிய நாம ஒரு மூங்கில்னுட்டு வைப்போம். என்னலே?” “முளை சார்” “ஆமா. முளை. அதில இருக்கப்பட்ட ஒரு கணுவாக்கும் சீருங்கியது. வல்லதும் மனசிலாச்சாடே புளிமாங்கா?” “ஆமா சார்” “என்ன புளிமா மனசிலாச்சுது?” “திருக்குறளிலே ஏழு கணு இருக்கும் சார்!” “அடிச்சான்பாரு லக்கி பிரைஸ்…உனக்க அப்பன் கரடி பாகுலேயன்பிள்ள கோமணம் அவுத்த நேரம் கொள்ளாம், கேட்டியாலே? சீராத்தான் இருக்கு…”

ஏசுஞானமரியதாசன் கரும்பலகையில் “மங்காத சீரகத்தைத் தந்தீரேல் வேண்டாம் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே” என்று எழுதி அதை என்னிடம் சீர் வகுத்து அசைபிரித்து எழுதச்சொன்னார். நான் எழுதி முடித்ததும் “அம்பிடுதான்லே யாப்பு. இனி காசுள்ளவனைப்பற்றிப் பாட்டெளுதிக் கும்பி நனைச்சலாம். கோப்பு இருந்தாப் பெண்ணடிகளைப்பத்தி பாட்டெளுதி அவளுகளை வளைச்சும் எடுக்கலாம்…என்னலே? ஆனா பாதிக் கவிஞனுங்க கூவிளங்காய்களையாக்கும் எளுதுகது…” பையன்கள் சிரித்தார்கள்.

“நாலு இல்லேண்ணா எட்டு இல்லேண்ணா பதினாறு சீரு சேந்தா ஒரு அடி…” என்றார் ஏசுஞானமரியதாசன். “அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ணுட்டு அம்மி நகருததுவரை பாடிட்டிருக்கப்பிடாது. வெண்பாவுக்கும் விருத்தப்பாவுக்கும் எல்லாம் நாலு அடியோட நிறுத்தணும். அதிலயும் வெண்பாண்ணாக்க இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க சமைஞ்ச குட்டி தண்ணிக்குப் போறாமாதிரி ஒரு இதுவாட்டு இருக்கணும் கேட்டியாலே?”

பிறகு தனக்குத்தானே ஒரு சிரிப்பு “பின்ன, சைவசித்தாந்தம் வல்லதும் பாடணுமானா கையில கழி வச்சிருக்கது நல்லது. ஒரு காட்டுவழி பயணமுல்லா? நாய்நரி குரைச்சு வரும்லா? அதுக்காக்கும் கழிநெடிலடிண்ணு ஒரு எனம் வச்சிருக்கு…அது பிறவு பாக்கிலாம்…”

அடுத்தது தொடை “தொடைண்ணா என்னலே?” திரும்பி எங்களைப்பார்த்து “சிரிக்கானுக பாரு…லே உன்னையெல்லாம்..இல்ல எனக்க வாயால அதைச் சொல்லமாட்டேன். குருசாபம் என்னத்துக்கு?” என்ற பின் “தொடுக்குதது தொடை. ஏல,தொட்டுக்கிட்டிருந்தா அது தொடை. ரெண்டும் போயித் தொடுத எடம் முக்கியம்லே… என்னலே?”

“ஆமா சார்” “நீ கண்டே…செரி போட்டு. அப்பிடித் தொடுகதுக்கு ஒரு கணக்கு இருக்கு. சும்மால்ல.. ஏன் அப்பிடி ஒரு கணக்கு வச்சிருக்கான்?”

வகுப்பை உற்று நோக்கிய பின் ஏசுஞானமரியதாசன் “லே குட்டப்பன் ஆசாரி சொல்லுலே. எதுக்குலே கணக்கு?”

“கணக்கு இல்லேண்ணா கோணலா இருக்கும் சார்”

“பாத்தியா ஆசாரிண்ணா ஆசாரிதான். அவன் மூளை, அது வேற… அதாக்கும்லே காரியம். அழகுண்ணா என்னாண்ணு நெனைக்கே? அழகுண்னா கணக்குலே.. இந்த மேசைக்க நாலு காலும் அளவோட கணக்கா இருந்தா அது மேச. இல்லேண்ணா அது வெறகு… கணக்குகள் செரியா இருந்தா கண்ணுக்கு அளகு. காதுக்கு அளகு. நாக்குக்கு அளகு. மனசுக்கு அளகு. எரிசேரிக்கு ஒரு உப்புண்ணா புளிசேரிக்கு உப்பு வேற கணக்கு. ஏல, எத்தன வருசம் இருந்து திண்ணுபாத்து நாயம்மாரு அதை கண்டுபிடிச்சிருப்பானுக? சிந்திச்சுப் பாக்கணும். மூப்பிலான்மாரு சொல்லித்தாற கணக்குகளில இருக்கப்பட்டது அவனுக தலைமுறை தலைமுறையா அனுபவிச்சு அறிஞ்ச அழகுகளாக்கும்….”

ஏசுஞானமரியதாசன் உற்சாகமாகத் தொடர்ந்தார். “எந்த ஒரு உருப்படிக்கும் ரெண்டு கணக்குகள் உண்டு. ஒண்ணு அளவுக்கணக்கு இன்னொண்ணு தொடுப்புக் கணக்கு…ஏம்லே ஆசாரி?”

“ஆமா சார்”

“அதுதான்லே மக்கா கவிதைக்கும். இதுவரை அசை சீரு அப்டீண்ணு நாம படிச்சதெல்லாம் அளவுக்கணக்கு. இப்பம் தொடைண்ணு படிக்கப்பட்டது தொடுப்புக்கணக்கு. ரெண்டு கணக்கும் சேந்தா அதுக்குண்டான ரூபம் வந்துபோட்டு… இப்டி ஓரோ பாட்டுமுறைக்கும் ஓரோ கணக்கு இருக்கு கேட்டியளாலே?”

ஏசுஞானமரியதாசன் கவிதைமுறைகளுக்குள் புகுந்தார். “பண்டுகாலத்திலே வாத்தியான்மாரு பாடப்பட்டது ஆசிரியப்பாண்ணு ஆரும் நெனைச்சுக்கிடப்பிடாது. அது, சும்மா வெறும் வாயோட இருக்கதுக்கு பாடிப்பாப்பமேண்ணு பொதுவான விசயங்கள நீட்டிச் சொல்லுகதுக்குண்டான வடிவமாக்கும். கூறுகெட்ட ஆசாரி கலப்பை செய்யுகது மாதிரிண்ணு வையி. செத்தி நீட்டினாப்போரும், கலப்பை வந்திரும். இழுக்கப்பட்டது மாடுதானே. உப்புபுளிக்கு ஆசாரிச்சி அகப்பை செய்யுகது மாதிரியாக்கும் வெண்பா. மூணுவரி சிரட்டை. முக்காவரி கோலு, அம்பிடுதான்லே… இது ரெண்டுக்கும் நல்ல ராகம் கெடையாது பாத்துக்க. ஆசிரியப்பாவுக்கு சும்மா சொல்லப்பட்ட சத்தம். அகவலோசைண்ணு சொல்லுவாக. கேட்டுப்பாத்தா ஒருமாதிரி ஒப்பாரிச்சத்தம் காதில விழும் பாத்துக்கோ..வெண்பாவுக்கு அறைதல் ஓசை. என்னத்த அறைதல்? வண்ணாத்தி துணி வெளுக்குத சத்தம் இல்லலே மக்கா….உறப்பிச்சு சொல்லுத சத்தம். இந்நா பிடிலே மயிராண்டி வெண்பா–ண்ணு எடுத்து வச்சா அது வெண்பா..”

ஒரே நாளில் சரசரவெனப் பாடல் வகைகளுக்குள் போய் முடித்தே விட்டார். எதிலும் குழப்பமே இல்லை. அவரது மிகச்சிறந்த அறிவுரை யாப்புக்காக மனக்கணக்கு போடக்கூடாது. வகைக்கொன்றிரண்டாகப் பாடல்களை மனப்பாடம் செய்து வைத்து வேகமாக அவற்றை வாய்க்குள் சொல்லிப் பார்க்க வேண்டும். அதே மெட்டில் சரசரவென எழுதினால் பெரும்பாலும அந்தப் பாடல் வகை வந்துவிடும். பாடலை நேரடியாக எழுதக்கூடாது. சொல்லியபின் எழுதினால் யாப்பு சீராக வரும். அதாவது நம் கவிதை நம் காதுக்குக் கேட்க வேண்டும். யாப்பைக் காதுதான் நன்றாக உணரும். எழுதியபிறகு மெதுவாகத் தளைதட்டுகிறதா என்று சரிபார்த்தால் போதும்.

எங்கள் வகுப்பிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பீரிட்டுக் கிளம்பினோம். எதற்கும் வெண்பா, ஆசிரியப்பா. கார்பன் டையாக்சைட் தயாரிப்பது பற்றி நான் எழுதிய எட்டு விருத்தப்பாக்களைக் கேட்டு அறிவியல் ஆசிரியர் வில்லியம் என்னை பெஞ்சுமேல் ஏறி நிற்கவைத்து முன் இருக்கை கார்த்தியாயினியின் உருவாகிவந்த முலையிடைவெளியை பார்க்கவைத்தார். தங்கச்சன் தனித்தமிழில் எழுதிய “தாயோளி என்றாலும்…” எனத் தொடங்கும் வெண்பா பலகாலம் அப்பிராந்தியத்தில் புகழ்பெற்றிருந்தது.

வண்ணார்காவு கண்டன் சாஸ்தாவைப்பற்றி ஒரு காவியம் எழுதவேண்டுமென ஆசைகொண்டு நான் இருநூறுபக்க நோட்டு வாங்கி முந்நூறு விருத்தங்களும் நாற்பது வெண்பாக்களும் எழுதினேன். அதைத் திருவனந்தபுரம் நவராத்திரி பூஜையில் அரங்கேற்றுவதைப்பற்றி விரிவாகக் கற்பனைசெய்தேன். அக்கற்பனை எளிதாகவும் சுகமாகவும் இருந்ததனால் காவியம் எழுதுவது நின்று போனது.

“யாப்புண்ணாக்க ஒரு சுக்கும் இல்ல கேட்டுக்கோ. அஞ்சாம்கிளாஸ் கணக்கக் காட்டிலும் சுளுவாக்கும். அப்பம் எல்லாவனும் கவித எளுதீர முடியுமாலே? எல்லா ஆசாரியும் எல்லாம் செய்யுதான். நூற்றில ஒருத்தனாக்கும் உளிக்க ஒப்பம் மனசையும் ஆத்மாவையும் கொண்டு வாறவன்… அப்பிடிச் செய்த ஓரோ உருப்படியிலயும் செய்த ஆசாரிக்க ஆத்மாவு நிக்குதுலே… உருப்படியத் தொட்டா மண்ணடிஞ்ச அந்த ஆசாரியைத் தொட்டது போலயாக்கும். பாறசாலையிலே ஒரு நாயரு வீட்டிலே காலம்கழிஞ்ச அச்சு மூத்தாசாரிக்க உருப்படி ஒண்ணு இருக்குண்ணு சொல்லிக்கேட்டு நானும் பாகுலேயன்பிள்ளயும் நாராயணன் போத்தியும் குமாரசாமியுமாட்டு பாக்கப்போனோம். அச்சு மூத்தாசாரிய கேட்டிருக்கியளாலே?”

“ஆமா சார்” “ஆருலே?” “திருவட்டார் கோவில் மண்டபத்தக் கெட்டின ஆசாரி சார்…” “ஆமா….அதைக்கண்டு மார்த்தாண்ட வர்மா மகாராஜா நீரே பெருந்தச்சன்னு சொல்லி அப்டியே காலில விளுந்து கும்பிட்டு தெட்சிணை வச்சாருண்ணு சொல்லு வழக்கு. பெருந்தச்சன் இந்த பாறசாலைத் தறவாட்டுக்கு ஒருக்கா வந்திருக்காரு. காட்டிலே ஒரு மூத்த பிலாமரத்தைப் பாக்கதுக்கு. சாய்ப்புவீட்டிலே அன்னாகாரம் கழிஞ்சு கிடந்து உறக்கத்திலே இருக்கிறப்ப அந்தவீட்டுக் கொளந்தை ஒண்ணு அங்கிண வந்து ஆசாரி மேலே கேறிக் களிச்சிருக்கு. ஒருவயசுப் பெண்குழந்தை. அத எடுத்து முத்தினவரு உளிய எடுத்து அங்க கிடந்த மரத்தில ஒரு களிப்பெட்டி செய்து குடுத்திட்டு போனாரு…அந்த குழந்தை வளந்து நூறுவயசு இருந்து செத்து அவளுக்க வழிப்பேரன்மாராக்கும் இப்பம் அந்தப் பெட்டிய வச்சிருக்கியது…”

“நீங்க பாத்தியளா சார்?”

“எவன்லே இவன்? பாக்காம பின்ன? பத்துசக்கறம் பணமிறக்கி பஸ்ஸு பிடிச்சு பின்ன மயித்துகதுக்கா போவானுக?” மந்தகாசத்துடன் மேஜைமேல் அமர்ந்து”பன்னிரண்டு கண்ணால பாத்தேன்லே… பத்து வெரலுக்க கண்ணும் ரெண்டு முகத்துக்கண்ணுமாட்டு… பெருந்தச்சன் சும்மா ஒரு அர நாழிகையிலே செத்திக்குடுத்திட்டுப்போன களிப்பெட்டி. ஆனா அதுபோல ஒண்ணு இன்னொருத்தன் செய்யமுடியாது. அத அப்பிடியே அளந்து எல்லா அளவும் கணக்கும் செரியாக் குறிச்செடுத்து அதே மரத்தில இன்னொருத்தன் செஞ்சாக்கூட அது இந்த களிப்பெட்டி மாதிரி இருக்காது’ என்றார்

‘லே, இது வேறலே…இதுக்க கணக்கு வேற. ஏலேகணக்கு நிக்கது ஜடத்திலே… கையில நிக்கும், மெய்யில நிக்கும், கல்லிலயும் மரத்திலயும் நிக்கும். கல்லும் மண்ணுமாலே ஒலகம்? பரலோகத்தில இருக்கப்பட்ட பரமபிதா கண்ட சொப்பனமுல்லாலே இந்த ஒலகம்? சொப்பனத்துலே ஏதுலே கணக்கு? ஆனா பாரதி சொல்லுகான், மண்ணைக்கட்டினா விண்ணைக் கட்டலாம்ணுட்டு. அதாக்கும் மக்கா சூச்சுமம். மண்ணைக் கட்டுத கலை தெரிஞ்சவனாக்கும் பெருந்தச்சன், தாயளி விண்ணையும் கட்டிப்போட்டான். கணக்கறிஞ்சவன் ஆசாரி. கணக்கு நெறைஞ்சவனாக்கும்லே பெருந்தச்சன்…”

“செரிலே மக்கா…இண்ணையோட நாம யாப்பு நிறுத்துகோம். பெரிய பரிச்சை வரப்போவுது. பாடம் கொறே கெடக்கு பாத்துக்கிடுங்க. பின்ன, இப்பம் ஒண்ணு சொல்லுகேன். நம்ம பாஷையிலயும் பல பெருந்தச்சனுங்க உண்டுலே… தேவசில்பி மயன் கண்டாலும் கையெடுத்துக் கும்பிடுத தச்சனுக. ஆனாக்க தச்சனுக்கெல்லாம் தச்சன்னா அவன் கம்பனாக்கும். கம்பராமாயணத்த நீங்க படிக்கணும்லே மக்கா.. இப்பம் சொன்னா உங்களுக்கு மனசிலாவாது. இடுப்புக்குக் கீழயாக்கும் சந்தோசம் இருக்குண்ணு நெனைச்சிட்டு அலையுத பிராயம்… லே மக்கா அதெல்லாம் எண்ணை தீந்து அணையுத வெளக்குலே… நெஞ்சுக்குள்ள உள்ள வெளக்குக்கு ஆத்மாவாக்கும் எண்ணை கேட்டுக்கிடுங்க. கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்துவுக்க மெய்யான வசனங்களைப் படியுங்க, அது ஆத்மாவுக்குப் பிரகாசம். கம்பனுக்க பாட்ட படியுங்க, அது ஆத்மாவுக்கு மதுரம்….லே இப்பம் ஒண்ணு சொல்லுதேன், கம்பனைப்படிச்சவனுக்கு பின்ன ஜீவிதத்திலே துக்கம்ணு ஒண்ணு இல்லலே…”

 

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Aug 8, 2012 @ 0:00

தொடர்புடைய பதிவுகள்


சுவையாகி வருவது…

$
0
0

images

 

இப்போதுகூட ஏதாவது வாசித்துக்கொண்டிருக்கும்போது அருண்மொழியின் காலடி ஓசை கேட்டால் மெல்லிதாக ஓர் எதிர்பார்ப்பு ஓடிச்செல்லும் – அவள் ஏதோ சாப்பிடக்கொண்டுவருகிறாள் என்று. உண்மையில் அப்படி எதுவும் அவள் கொண்டு வருவதில்லை. நானேதான் அடிக்கடி போய் கறுப்புத் தேநீர் போட்டுக்கொள்வேன். ஏதாவது தின்பதற்கு எடுத்துக்கொண்டு வைத்திருந்தாலும்கூட ‘என்ன சும்மா சும்மா கொறிச்சுகிட்டு? உக்காந்து எழுதி எழுதி குண்டடிக்கிறதுக்கா?’ என்று திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவாள். கல்லூரியில் அவளுக்கு உணவும் ஊட்டமும் சம்பந்தமான பாடங்கள் இருந்தன. இந்த கலோரி என்ற கெட்டவார்த்தையை என் மண்டைக்குள் ஏற்றியதே அவள்தான்.

அது உண்மையில் நினைவில் தங்கிவிட்ட அம்மாவின் காலடி ஓசை. சின்னவயதில் நான் வாசித்துக்கொண்டிருக்கும்போது அம்மா மெல்லிய காலடிகளுடன் வருவாள். என்னருகே எதையாவது தின்பதற்காக வைத்துக்கொண்டு ஓசையில்லாமல் திரும்பிப் போவாள். அப்போதெல்லாம் எதையுமே கடையில் வாங்கி சாப்பிடும் வழக்கம் இல்லை – திருவரம்பில் கடையும் இல்லை. கிராமத்தில் தின்பதற்கு ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். கொய்யாப்பழம், அயனிப்பழம், அன்னாசிப்பழம், வாழைப்பழம், மாம்பழம், அத்திப்பழம் என பழங்கள் ஏராளம். அம்மா அவற்றை மென்மையாக தோல்சீவி ,எடுத்துச் சாப்பிட வசதியாக நறுக்கி, என் வலது கையருகே கொண்டுவந்து வைப்பாள். நான் பெரும்பாலும் ஏறிட்டுக்கூட பார்ப்பதில்லை. புன்னகையைக்கூட திருப்பி அளிப்பதில்லை. அனிச்சையாக என் கை நீண்டு அதை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும்

அம்மா எந்நேரமும் என்னை நினைத்துக்கொண்டிருப்பாள் என இப்போது தோன்றுகிறது. அதிகபட்சம் அரைமணிநேர இடைவெளியில் ஏதேனும் ஒன்று வரும். தின்பதற்கும் குடிப்பதற்கும். டீ இரண்டுவேளை மட்டுமே. மிதமாக உப்பு போட்டு தேங்காய் துருவல் சேர்த்த சூடான கஞ்சித்தண்ணீர் மழைக்காலத்தில் அருமையான பானம். மோரில் கறிவேப்பிலை போடமாட்டாள், கவனக்குறைவாக குடிக்கும் என் தொண்டையில் சிக்கும் என. காலை என்றால் பதநீர். அதில்கூட பலவகையான பதங்கள். கொஞ்சம் கொதிக்க வைத்தால் பதநீர் ஒருவகையான சாக்லேட் பானமாக ஆகிவிடும். அதில் நாலைந்து பச்சைப்புளியங்காய்களைப் போட்டு லேசாகக் கொதிக்கவிட்டால் இன்னும் பெயரிடப்படாத ஒரு அமுதம்.

நனகிழங்கு, முக்கிழங்கு, காய்ச்சில்கிழங்கு, செறுகிழங்கு, சீனிக்கிழங்கு என அக்காலத்தில் எங்களூரில் கிழங்குகள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. சீனிக்கிழங்கு என்னும் சக்கரைவள்ளி கிழங்கு இனிப்பானது. நனகிழங்கு, முக்கிழங்கு இரண்டும் சுட்டால் மேலும் சுவையாக இருக்கும். செறுகிழங்கை ஆவியில் அவிக்க வேண்டும். சீனிக்கிழங்கு, செறுகிழங்கு இரண்டுக்கும் மெல்லிய இனிப்பு உண்டு, ஆகவே உப்பு சேர்க்கக்கூடாது. வேகவைத்த கிழங்கை தோல் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி அம்மா கொண்டுவந்து வைப்பாள்.

சீனிக்கிழங்கு, செறுகிழங்கு போன்றவற்ற வேகவைத்து நீரில் போட்டு கொதிக்கச் செய்து கலக்கி கஞ்சித்தண்ணீர் போல ஆக்கி கொஞ்சம் தேங்காய் துருவிப்போட்டால் அபாரமான மணமுள்ள சூடான பானம். எங்களூரில் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும் அரைக்கீரை தண்டுக்கீரை சிவப்புக்கீரை போன்றவற்றை வேகவைத்து குழைத்து அதன் மேலே ஊறும் சிவப்புச் சாறை தாளித்து கொண்டுவருவாள். காய்த்து கேட்பாரில்லாமல் கிடக்கும் பூசணிக்காயைக்கூட அப்படிச் செய்யமுடியும். அவை ஓரு வகை சூப்புகள் எனலாம். தேனில் பாதிக்குப் பாதி நீர் சேர்த்து குடிக்க கொண்டுவருவாள். மச்சு அறைகளில் புளி உருட்டி வைத்திருக்கும் பெரும்பானைகளில் ஓரிரு வருடம் பழைமைகொண்ட புளியின்மீது இனிப்பான தேன் போல ஊறி நிற்கும் விழுதுடன் நீரும் கருப்புகட்டியும் சேர்த்து ஒரு ஜிர்ர்ரென்ற பானம்.

அம்மாவின் மனம் எனக்கு ஏதாவது புதிதாக தரவேண்டுமென்ற கற்பனையுடன் சுற்றும் பார்த்துக்கொண்டே இருக்கும் போலும். வாழைக்காயை வேகவைத்து லேசாக வறுத்து தாளித்து கொடுப்பாள். ஒருமுறை அப்போதுதான் பால்விட்ட பச்சை நெற்கதிர்களை மெல்ல அரைத்து வெண்சாறாகப் பிழிந்து கொஞ்சம் இனிப்புசேர்த்துக் கொடுத்தாள். அன்னாசி போன்ற புதர்ச்செடிகளின் இலைகளின் அடிக்குருத்துக்கள் தின்பதற்குச் சுவையானவை. தவிட்டைப்பழம் போன்ற புதர்ப்பழங்களைக்கூட விடுவதில்லை. ஆற்றுக்கு வரும் வழியில் தேடிப்பறித்து மடியில் கட்டி கொண்டுவந்து வைப்பாள்.

அம்மா புதிதாகத் தின்பண்டங்கள் செய்துகொண்டே இருந்தாள். புளியின் ஓட்டுக்குள் முறுகிய பதநீரை நல்லமிளகாய் ஏலக்காய் சேர்த்து விட்டு உறையச்செய்த சாக்லேட். முறுகிய பதநீர் விழுதுடன் மணமான பச்சரிசித் தவிடை கலந்து பரப்பி செய்த கேக். வறுத்த பயறுடன் கருப்பட்டி விழுதை கலந்து உருட்டிய பொரிவிளங்காய். விதவிதமான சுண்டல்கள். கிராமத்தில் உள்ள எந்த பயறும் சுண்டலாகும். உளுந்துச் சுண்டல். ஏன், கோதுமையை வேகவைத்துக்கூட சுண்டல் செய்ய முடியும். பலவிதமான கொட்டைகள். பலா, அயனிக் கொட்டைகளை சுட்டு, வறுத்து கொண்டு வருவாள். அவற்றை வேகவைத்து தாளித்தும் கொண்டுவருவாள்.

கண்ணால் பார்த்து இந்த பூமியை அறிந்து முடிக்கமுடியாது. அதேபோலத்தான் நாவும். நாக்கின் தேடலுக்கு எல்லையே இல்லை. ருசிகளின் பெருவெளி இந்த பூமி. ஒருமுறை உண்ட உணவை மீண்டும் உண்ணாமல் உண்டால்கூட வாழ்நாளில் இதன் சுவைகளில் சில துளிகளையே உண்ண முடியும். பெருங்கருணை ஒன்று நாம் வாழும் வெளிக்கு அப்பால் கனிந்த கண்களுடன் நின்று நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய மர்மப்புன்னகையுடன் காலடியோசை கேட்காமல் வந்து நம் கையருகே முற்றிலும் புதிய சுவை ஒன்றை வைத்துவிட்டுச் செல்கிறது.

எந்தக்குழந்தையை எப்போது பார்த்தாலும் சாப்பிட ஏதாவது கொடுப்பாள் . அம்மாவின் உடைகளுக்குள் அவள் சந்திக்கும் அடுத்த குழந்தைக்காக ஒரு தின்பண்டம் இனித்து இனித்துக் காத்திருக்கும். முலைகள் வற்றியபின் மொத்த உடலே ஒரு நிறைந்த முலையாக ஆனதுபோல. அம்மாவைப்பார்த்ததுமே தெரிந்த குழந்தை ‘த்தா’ என்றுதான் பேசும். ’தருபவள்’- அதுதான் அவள். வீட்டுக்கு வந்த எந்த அன்னியனுக்கும் அவன் வயிறு நிறைய உணவிடாமல் அனுப்பியதில்லை. கிராமத்தில் அது சாதாரணம். கூடைக்காரர்கள், குறவர்கள் முதல் யாரோ வழிப்போக்கர்கள் வரை வந்து சாதாரணமாக ‘கஞ்சி குடுங்க தாயி’ என்று கேட்டு சாப்பிடலாம். அவர்கள் கேட்கும்படி வைக்காமல் மேலும் மேலும் போடவேண்டும் என அருகே நின்று பரிமாறுவாள். உணவை அள்ளி வைக்கும் கரத்தில் தெரியும் பிரியம் கண்டு கண்கலங்கி கன்னங்களில் வழிய சாப்பிடுபவர்களை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆனால் அம்மாவுக்கு சாப்பிடுவதில் ஆர்வமே இருந்ததில்லை. மிக மெலிந்த வலுவான உடல் கொண்டவள். பகலில் எந்நேரமும் வேலை. மாடுகள் ,கோழிகள், மனிதர்கள்… இரவில் நெடுநேரம் வரை வாசித்துக்கொண்டிருப்பாள். தமிழில், ஆங்கிலத்தில், மலையாளத்தில். அம்மா உலக இலக்கிய அசைவை நுட்பமாக பின்தொடர்ந்துகொண்டிருந்த மகத்தான வாசகி. அவள் ருசி அதில்தான் இருந்தது.

காலை எழுந்ததும் ஒரு ’கட்டன் டீ’ சாப்பிட்டால் அடுத்த உணவு மதியம்தான். அதுவும் அனைவரும் சாப்பிட்டபின்னர் தன் தோழியும் வேலைக்காரியுமான தங்கம்மாவுடன் பேசியபடி புழக்கடை உரல்புரையில் அமர்ந்து சாப்பிடுவாள். மிகவேகமாக ஏதோ கடமையை முடிப்பதுபோலத்தோன்றும். இரவு வெகுநேரம் கழித்து எது இருக்கிறதோ அதை அள்ளிப்போட்டுக்கொள்வாள். ஒன்றும் மிஞ்சாமல் போகும், அப்பாவுக்கு திடீர் விருந்தினர்கள் வந்தால். கவலைப்படாமல் ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கை எடுத்து தணலில் சுட்டு உடைத்துக் கொறித்துக்கொண்டு கடும்சாயா குடித்து முடித்துவிடுவாள். எங்கும் எப்போதும் அம்மா ஆர அமர சாப்பிடுவதைக் கண்டதில்லை. உணவைப்பற்றி பேசியதே இல்லை. அம்மாவின் சுவை நரம்புகள் நெடுநாட்கள் முன்னரே மங்கிவிட்டிருந்தன என்று படுகிறது. சுவை பார்க்கக்கூட எதையும் நாவில் விடுவதில்லை. சமையலின் பக்குவம் அவள் கைகளில்தான் இருந்தது.

வீட்டில் யார் நன்றாகச் சாப்பிடவில்லை என்றாலும் அம்மாவுக்கு தெரியும். அனைவருடைய மனத்தையும் அம்மா வயிறுவழியாக அளந்து அறிந்துகொண்டிருந்தாள்: ஆனால் அம்மா சாப்பிட்டாளா இல்லையா என எவருமே கவனித்ததில்லை. நிலத்தின் மீது நிற்கும் எவரும் நிலத்தை கவனிப்பதில்லை என்பதுபோல. எனக்கென சமைக்கும் எதிலும் ஒரு துண்டேனும் அவள் வாயில் போட்டுக்கொண்டதைப் பார்த்ததில்லை. அம்மாவுக்கென நான் எதையும் எப்போதும் கொடுத்ததில்லை.

நேற்று ஒருநண்பர் வாங்கிவந்து கொடுத்துப்போன ஆப்பிள்களில் கடைசி ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி தட்டில் பரப்பி படித்துக்கொண்டிருக்கும் சைதன்யாவின் அருகே மெல்ல வைத்துவிட்டு வந்தபோது நினைத்துக்கொண்டேன் , அவற்றில் ஒரு துண்டைக்கூட நான் அதுவரை வாயில் போடவில்லை. சைதன்யாவோ அஜிதனோ சாப்பிடும் தின்பண்டங்கள் என்னுடைய அகநாக்கு ஒன்றில் பலமடங்கு தித்திக்கின்றன. ஒரு தின்பண்டத்துடன் அவர்கள் அருகே செல்லும்போது நடைகூட கனிந்து மென்மையாக ஆகிவிடுகிறது.

பிரபஞ்சத்தை அறிவதில் பத்து நிலைகள் உண்டு. தசதர்சனங்கள் என அவற்றை அத்வைதம் வகுக்கிறது. [அத்யாரோபம், அபவாதம், அசத்யம்,மாயை, ஃபானம், கர்மம், விக்ஞானம், பக்தி,யோகம், முக்தி] அவற்றில் எட்டாவது தரிசனமாகிய பக்திக்கு விஷ்ணுபுரம் நாவலில் மகாநாமபிட்சு எழுதிய சிறுநூலில் அளிக்கும் விளக்கக் கவிதை இது

’கேள் பிட்சுவே, தாயைப் பின் தொடர்கிறது குழந்தையின் ஆத்மா, ஒருபோதும் பிரியாத பிரியத்துடன். ஏனெனில் தாயின் முலைப்பாலின் சுவை அதற்கு அழைப்பாகிறது

கேள் பிட்சுவே, தாய் ஒருபோதும் குழந்தையின் பின்னிருந்து விலகுவதில்லை. ஏனெனில் முலையருந்தும் குழந்தை ஊட்டுகிறது தன் அன்னைக்கு – ஆயிரம் மடங்கு இனிய அமுததை’

 

====================================================================

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jul 28, 2010 @ 0:00

அள்ளி அள்ளிப் பெருகுவது…

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்

வீடு

அப்பாவின் தாஜ்மகால்

முதற்சுவை

முதற்சுவை கடிதங்கள்

தோன்றாத்துணை

கடைசிக்குடிகாரன்

பூதம்

தெய்வமிருகம்

பிரிவின் விஷம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கொல்லிமலைச் சந்திப்பு -1

$
0
0

கொல்லிமலைக்கு ஒருநாள் முன்னதாகவே செல்லலாம் என்று முடிவெடுத்தேன். கொல்லிமலைப்பகுதிக்கு நான் சென்று முப்பதாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நாகர்கோயிலில் இருந்து 24 அன்று மாலை ரயிலில் கிளம்பி மறுநாள் மூன்று மணிக்கு நாமக்கல்லில் இறங்கினேன். ரயில்நிலையத்திற்கு நாமக்கல் நண்பர்கள் வரதராஜனும் வாசுவும் மகேஷ் [காங்கோ] வும் வந்திருந்தனர். அஜிதன் கடலூர் சென்றுவிட்டு அங்கிருந்து நேரடியாக வந்திருந்தான்.

1

அருகே விடுதியில் அறை. கீழே பனானா லீஃப் என்னும் ஓட்டல். நான் இரவில் கொஞ்சம் கலைந்த துயிலில் தான் வந்தேன். சீர்காழிகோவிந்தராஜன் பாடலை அழைப்பு ஓசையாக வைத்திருப்பவர்களுக்கு ரயிலில் தனிப்பெட்டிகள் அளிக்கலாம் என்பது என் எண்ணம். அரைத்தூக்கத்தில் அருகே ஒருவரின் செல்பேசி ‘வினாயகனே’ என்று கதறியது. சற்று நேரம் கழித்து இன்னொன்று ‘அபிராமீ’ என்று அதலபாதாளத்தில் விழுவதுபோல அலறியது.

சீர்காழி ரோலர்கோஸ்டர் பாடகர். ஆரோகணத்தில் சுழன்று ஏறி அவரோகணத்தில் நடுங்கியபடி விழுகிறார். சீர்காழியை ஏன் தமிழகத்தின் தேசிய உடைமை ஆக்கக்கூடாது? தேசிய உடைமையாக்கப்பட்ட நூல்களை போலவே அவரும் எவராலும் பொருட்படுத்தப்படாமல் ஆக வாய்ப்புள்ளதே. நாட்டுக்கு நல்லது அல்லவா?

காலை எட்டரைமணிக்கு தூங்கி எழுந்தபோதே ஈரோட்டிலிருந்து கிருஷ்ணனும் ராம்குமாரும் விஜயராகவனும் வந்தனர். அனைவரும் காரில் சென்று நாமக்கல் நரசிம்மரை பார்த்தோம். நடை பூட்டும் நேரம். அவசரமாகப் பூசை நடந்துகொண்டிருந்தது. பேருருவம் கொண்ட நரசிம்மர் குடைவரைக்கோயிலின் உள்ளே புடைப்புச்சிற்பமாக அமர்ந்திருந்தார். பக்கவாட்டில் உலகளந்தபெருமாளும் , வராகமூர்த்தியும் திரிவிக்ரமரும் செதுக்கப்பட்டுள்ளனர். பல்லவர் காலத்துக் குடைவரைக் கலையின் உச்சம். மகேந்திரவர்மப்பல்லவனால் ஏழாம்நூற்றாண்டில் அமைக்கப்பட்டது

முந்தைய முறை பெருமாள் முருகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவருடன் அங்கே சென்று தரிசனம் செய்த்து. அதன்பின்னர் யாரோ சில மூடர்கள் நரசிம்மர் மற்றும் சுற்றிலும் உள்ள பெருமாள் சிலைகள் அனைத்திலும் வெள்ளைபெயிண்டில் கண்டபடி நாமம் சார்த்தியிருந்தனர். பெருமாளின் உதடுகளுக்கு சிவப்பு பெயின்ட். உடல் முழுக்க கரிய பெயிண்ட். மானுட அற்பத்தனத்தின் உச்சம்.

மூலச்சிலைகளுக்கு இவ்வகையில் எந்த ஒப்பனையும் செய்யக்கூடாது என்பதும், ஒவ்வொரு அலங்காரமும் மாலைக்குள் அகற்றப்பட்டு அதிகாலையில் நிர்மால்ய பூசை செய்யப்படவேண்டும் என்பதும்தான் ஆகம நெறி. சாதிவிஷயங்களில் , கோயில் உரிமை விஷயங்களில் ஆகமத்துக்காகப் பாய்ந்துவரும் நம்மூர் அர்ச்சகர்கள் பிற எதிலும் ஆகமங்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.

உண்மையில் கொஞ்சமேனும் படிப்போ, அறிவோ கொண்டவர்கள் இங்கே அர்ச்சகர்களாக வருவதுமில்லை. அனைத்துவகையிலும் அடித்தளத்தில் நிற்கும் எளிய ஆத்மாக்களே அர்ச்சகர்கள். அவர்கள் செய்வதே பூசை. சொல்வதே புராணம். அவர்கள் உடல்மொழியில் உள்ள அசட்டுத்தனமும் அக்கறையின்மையும் குரலில் உள்ள அதட்டலும் மிகவும் மனவிலக்கத்தை அளிக்கின்றன. இங்கே இதையெல்லாம் கேட்க ஆளே இல்லை. மடங்களில் கூட மடையர்களே அமர்ந்திருக்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து கேரள ஆலயங்களுக்கு பக்தர்கள் படையெடுப்பதற்குக் காரணம் அங்கே முறையாகவும் ஈடுபாட்டுடனும் செய்யப்படும் பூசைமுறைகள்தான் என பலமுறை பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே பூசைமுறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் வலுவானவை. பக்தர்களும் அதில் கண்டிப்பானவர்கள். அங்குள்ள அர்ச்சகர்கள் நல்ல சம்பளம் வாங்கும் அரசூழியர்கள் என்பதும் இன்னொரு காரணம்.

அருகே உள்ள புகழிமலை [புகளூர்] என்னும் ஊரிலுள்ள சமணக்குகைகளைப் பார்க்கச்சென்றோம். புகழிமலை இன்று முருகன்கோயிலாக உள்ளது. நாங்கள் செல்லும்போது நடைமூடிவிட்டனர். படி ஏறிச்செல்லும் வழியில் பக்கவாட்டில் திரும்பிச்சென்றால் மலைவிளிம்பினூடாக நடந்து புகளூர் சமணப்படுக்கைகளை அடையலாம். மலைமேல் செருப்பு போட்டுச் செல்லக்கூடாது. மதியவெயில் கால்களை சுட்டது. குதித்துக் குதித்துச் சென்றோம்.

இரும்பு வாசல் பூட்டப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு காவலரை அழைத்துத் திறக்கச் சொன்னோம். அதற்குள் மலையிடுக்கு வழியாக பாதிப்பேர் அப்பக்கம் சென்றுவிட்டோம். மலைவிளிம்பில் நடக்க இப்போது இரும்புவேலியின் காவல் உள்ளது. அக்காலத்தில் ஆபத்தான பாதையாக இருந்திருக்கவேண்டும்.

06122010(013)06122010(014)

இரண்டு குகைகள். சமணர்கள் தேர்ந்தெடுக்கும் உயரமற்ற பாறையிடுக்குகள் அவை. உள்ளே சமணப்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இவை சங்க காலத்தையவை. கிபி இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்தவை என்பது ஆய்வாளர்களின் ஊகம்

இங்கே பிராமி லிபியில் தமிழில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இருந்தன. வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட சில கல்வெட்டுகளும் உள்ளன. இவை சேரமன்னர்கள் சமணத்துறவிகளுக்கு செய்து அளித்த படுக்கைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

தமிழகத்தில் சங்ககாலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் மிகச்சிலவே உள்ளன. சங்கமன்னர்களின் கல்வெட்டுக்கள் அரிதினும் அரிதானவை. ஆகவேதான் புகளூரின் சங்ககாலத்து தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் ஆய்வாளர்களுக்கு மிகமுக்கியமானவையாக உள்ளன.

மதியம் நண்பர் காங்கோ மகேஷ் அவர்களின் இல்லத்திற்குச் சாப்பிடுவதற்காகச் சென்றோம். அவரது வீடு பேக்கர் பாணி கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட அழகிய கட்டுமானம். உணவுக்குப்பின் இரு கார்களில் கொல்லிமலைக்குச் சென்றோம்

நண்பர் வாசுவின் பண்ணை கொல்லிமலை செல்லும் வழியில் உள்ளது. அங்கே அவரது தம்பி தங்கி குறுமிளகு விவசாயம் செய்கிறார். ஓர் அழகிய விருந்தினர் இல்லம் உள்ளது. அதுதான் சந்திப்புக்கான இடம். நாங்கள் செல்லும்போது மாலையாகி விட்டது. வாசு அங்குள்ள நவரம்பழம் என்னும் மலைவாழைப்பழம் ஒரு குலை கொண்டுவைத்தார். சாப்பிட்டு டீ குடித்தபின் தோட்டத்திற்குள்ளேயே சென்று உச்சியில் இருந்த பாறைமுகடை அடைந்தோம்.

அங்கிருந்து சுற்றிலும் விரிந்திருந்த கொல்லிமலை அடுக்குகளைப் பார்த்தோம். மயில்கள் அகவிக்கொண்டிருந்தன. மலைப்பகுதிகளுக்குரிய மெல்லிய பச்சிலைவாசனையுடன் காற்று. குளிரத்தொடங்கியது .விண்மீன்கள் ஒவ்வொன்றாக எழுந்துவந்தன. வானம் ஒளிமிக்க பரப்பாக மாறியது

ஒன்பது மணிக்கு நிலவெழும்வரை அங்கேதான் இருந்தோம். விடுதிக்குத் திரும்பிவந்ததுமே படுத்துவிட்டேன். முந்தையநாள் ரயிலில் சரிவரத் தூங்காததனால் நான் படுத்ததுமே என்னை இழந்தேன்

[மேலும்]

புகளூர் கல்வெட்டுகள்

புகளூர் கல்வெட்டுக்கள் – பத்ரி சேஷாத்ரி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

கொல்லிமலை சந்திப்பு 2

$
0
0

DSC_0952

கொல்லி மலையில் குளிரே இருக்காது என்பது வாசுவின் கூற்றாக இருந்தது. ஆனால் இரவில் நல்ல குளிர். காலையில் நன்றாகவே குளிர். ஆறுமணிக்கு எழுந்து ஒரு நீண்ட காலைநடை சென்றோம். அருகிருந்த படதுக்குளம் வரை சென்று அப்படியே திரும்பி சோழர்காலத்தைய இடிந்த சிவன்கோயில் ஒன்றைப்பார்த்தோம். கோயில் பாதிவரை மண்ணில் மூழ்கியிருந்தது. உள்ளே ஆவுடை மட்டும். அதன் மேல் ஒரு கல்லைத்தூக்கி சிவனாக வைத்திருந்தனர்

கொல்லிமலை பழங்காலத்தில் முக்கியமான ஊராக இருந்துள்ளது. தமிழ்ப்பண்பாட்டின் தொடக்ககாலத்தில் குன்றுகள்தான் முக்கியமான அரசுகளாக எழுந்தன. பாரியின் பறம்பு மலை, ஓரியின் கொல்லிமலை போல. இவர்கள் குறிஞ்சித்திணையின் குறவ அரசர்கள். பின்னர் மருதநிலம் மேலும் அதிக உபரிசெல்வத்தை உற்பத்திசெய்யத்தொடங்கியபோது சமவெளியில் பெரிய அரசுகள் உருவாயின. அவை இந்த குன்று அரசுகளை வென்றன. இந்தச்சித்திரமே நாம் புறநாநூற்றில் இருந்து பெறுவது

திரும்பி வரும்வழியில் கொல்லிமலையின் முக்கியமான அடையாளமாக உள்ள பெருங்கற்காலத்து புதைவிடம் ஒன்றைச் சென்று பார்த்தோம். கல்லால் ஆன அறை இது. கற்பாறையைக் குடைந்து உருவாக்கிய குழியின் மேல் பெரிய சப்பைப்பாறை ஒன்றைத் தூக்கி வைத்து அதை அமைத்திருந்தனர். தமிழகப்பெருங்கற்காலம் என்பது ஏறத்தாழ முப்பதாயிரம் வருடம் பழைமையானது.

உள்ளே முதுமக்கள்தாழிகள் இருந்துள்ளன. அவை அரசு தொல்லியல்துறையால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டன.  உள்ளே ஒன்றும் இல்லை. உள்ளே சென்று குனிந்து பார்க்க சிமிண்டால் குழியாக படி அமைத்திருக்கிறார்கள். கொல்லியின் வரலாறு அங்கே ஆரம்பிக்கிறது கொல்லிமலை சங்ககாலம் முதல் வரலாற்றுக்குள் உள்ளது. இது கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் மலை. கொல்லிப்பாவை என்னும் தெய்வம் இங்கிருந்தது எனப்படுகிறது. அது கொற்றவையாக இருக்கலாம். சேரர்களின் கட்டுப்பாட்டில் இந்த மலை இருந்துள்ளது.

பத்துமணிக்கு வாசகர்களை நாமக்கல்லில் இருந்து ஒரு வேனில் அழைத்துவந்தார் வரதரஜன். வாசுவும் வாதராஜனும்தான் இந்தச்சந்திப்புகளை நடத்தியவர்கள். இருநாட்களாகவே தூக்கமில்லாமல் அவர்கள் இதற்காக வேலைசெய்திருந்தனர். சிறிய சந்திப்பாக இருந்தாலும் இத்தனைபேரையும் திரட்டிச்சேர்த்து கொண்டுவருவது சாதாரணமான வேலை அல்ல.

நேரடியாகவே சந்திப்பு தொடங்கியது. முதல்நாள் அனைவரும் கொஞ்சம் தூக்கக் கலக்கமாக இருந்தனரோ என்று தோன்றியது. பெங்களூர் ,சென்னை. கொங்குவட்டாரத்திலிருந்தும் மதுரை, புதுக்கோட்டை பகுதியிலிருந்தும் வந்திருந்தனர். அனைவருமே இளம் வாசகர்கள். வாசிப்பு சம்பந்தமான வினாக்கள். அங்கிருந்து பொதுவான கேள்விகள்.

இளைய வாசகர்களைச் சந்திப்பது எப்போதுமே பெரிய திறப்புகளை எனக்கு அளித்தது. இம்முறையும் அப்படித்தான். அவர்களின் குழப்பங்கள். அறிமுகத்தடுமாற்றங்கள். கூச்சங்கள். கூடவே ஒருபோதும் நான் நினைக்காத கோணத்திலான கேள்விகளும் அவதானிப்புகளும் . சந்திப்பு எனக்கு ஒரு பெரிய பரவசம் என்றே சொல்லவேண்டும்

மாலையில் ஒரு டிராக்டரில் அனைவரும் ஏறிக்கொண்டு கொல்லிமலையின் சிகர உச்சிக்குச் சென்றோம். ஊரெல்லாம் வேடிக்கைபார்த்தனர். ஆனால் உற்சாகமாக மலைகளை அந்திசாயும் ஒளியில் பார்த்தபடி செல்லமுடிந்தது.

கொல்லிமலையின் இன்னொரு தொன்மையான பாரம்பரியத்தின் தடயமாக அங்கே ஒரு தீர்த்தங்கரர் சிலை உள்ளது. அமர்ந்த கோலம். ஆனால் பாதி மண்ணில் புதைந்துள்ளது. எந்த தீர்த்தங்காரர் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. வர்த்தமானர் என்று தோன்றியது.

மிக அழகிய சிலை  ஒரு வாழைத்தோப்புக்குள் உள்ளது. இப்போது அங்குள்ள மக்கள் விபூதி பூசி சைவத்தெய்வமாக வழிபடுகிறார்கள். சிலையெல்லாம் தெய்வமென்பது நம் மனப்பழக்கம் என்பது ஒருபுறமிருக்க, வழிபடும் தகைமைகொண்ட அழகிய சிலைதான் அது.

மலைமேல் உள்ள கொங்கலாயி அம்மன் இங்குள்ள மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் தெய்வம். மலையுச்சியில் காட்டுசெண்பக மரங்கள் சூழ்ந்த தனிமையில் அமைந்திருந்தது. அங்கு செல்லும் வழியிலேயே செருப்புக்களைக் கழற்றிவிடவேண்டும் என்றார்கள். செல்லும் வழியிலுள்ள கோணக்கல் என்னும் பீடத்தைத் தொட்டு சத்தியம் செய்தால் அம்மனே வந்து தண்டிப்பாள் என்றார் முதியவர் ஒருவர்

கோயிலின் நடை தினமும் திறப்பதில்லை. நாங்கள் சொன்னதனால் திறந்தனர். இரு கிராமப் பூசாரிகள் ஊர்க்கவுண்டரின் முன்னால்வைத்து சில உறுதிமொழிகளுக்குப்பின் அதைத் திறந்தனர். வாசலுக்கு நேராக எவரும் நிற்கலாகாது. திறப்பதற்கான ஆசாரங்கள் பல இருந்தன. பலமுறை தெண்டனிட்டு வணங்கினர். தரையில் நிலம்பட தொழுதனர்

அவை சடங்குபோலத் தோன்றவில்லை, மிகுந்த பக்தியுடனும் உணர்வுபூர்வமாகவும் அவை செய்யப்பட்டன. நான் நாமக்கல்லில் வைணவ அர்ச்சகர்கள் பூசைசெய்த முறையிலிருந்த அலட்சியத்தையும் அவலட்சணத்தையும் நினைத்துக் கூச்சம் அடைந்தேன்

வெளியே நின்ற பெரியவரிடம் “உள்ள சிலை இருக்குங்களா?” என்றபோது அவர் “அவளே உக்காந்திருக்கா” என்றார். அந்த நம்பிக்கை அவர்கள் அனைவரையும் உயிர்ப்புகொள்ளச் செய்திருந்தது. அது நமக்கும் பரவி அசாதாரணமான ஓர் உச்சநிலை ஏற்பட்டது.

உள்ளே இருந்தவள் கொற்றவை. காலடியில் மயிடன் விழுந்து கிடந்தான். நான்கு கைகளில் கட்கமும் வில்லம்பும் சூலமும் இருந்தன. உருளைப்பாறை ஒன்றில் புடைப்பாகச் செதுக்கப்பட்ட சிலை மிகத்தொன்மையானதாக இருக்கலாம்.

முன்பெல்லாம் கொற்றவை மலைப்பாறைகளில் அல்லது குகைகளில்   செதுக்கப்பட்டு கிட்டத்தட்ட மறைந்தே கிடக்கும். போர்களின்போதும் ,பயணத்தின் போதும் மட்டுமே பூசை. பெரும்பாலும் உயிர்ப்பலி. அவ்வப்போது மானுடப்பலி. பாலைநிலத்து எயினர் இட்டெண்ணித் தலைகொடுத்த கொற்றத்தாள் இப்படித்தான் இருந்திருப்பாள்.

அன்று பதினெட்டு தேங்காய்களை உடைத்தனர். அந்த ஆலயத்தைச் சூழ்ந்து அங்கு பூசாரியாக இருந்தவர்கள் இறந்தபின் நடப்பட்ட சிறிய நடுகற்கள்  நின்றிருந்தன. கொல்லிமலையின் ஒரு மைய நரம்புமுடிச்சு அந்த ஆலயம் என்று தோன்றியது.

பெருங்கற்கால கல்லறை

கொங்கலாயி அம்மனுக்கும் இரண்டு வருடங்களுக்கொருமுறை உயிர்ப்பலி உண்டு. இருநூறு ஆடுகள் வரை பலியிடப்படுமாம். வரும் ஏப்ரலில் விழா நிகழ்கிறது. கொற்றவையின் தோற்றம் அந்த பெருங்கற்கால கல்லறையை நினைவுறுத்தியது. ஏனெனென்று தெரியவில்லை.

அங்கிருந்து மலையுச்சிப்பாறையில் சென்று அமர்ந்தோம். கண்ணெட்டும் தொலைவுவரை நாமக்கல் நிலப்பரப்பு. முதலில் இருளில் ஓரிரு விளக்குகள். மெல்ல விண்மீன்கள் தெளிவதுபோல ஒளிப்புள்ளிகளின் பெருவெளி. வானத்தில் விண்மீன்களின் அதிர்வு. மேலும் கீழும் விண்மீன்களால் சூழப்பட்டிருந்தோம். குளிர்ந்த காற்று அடித்துக்கொண்டிருந்தது

 

அங்கே பேசிக்கொண்டும் நிலவுக்காகக் காத்துக்கொண்டும் அமர்ந்திருந்தோம். நிலவெழுந்தபின் சென்று இரவுணவை அங்கேயே முடித்துவிட்டு திரும்பி வந்தோம். பதினொரு மணிக்கெல்லாம் அனைவருமே தூங்கிவிட்டோம்

மறுநாள் காலையில் அனைவருகே புத்துணர்ச்சியுடன் எழுந்தோம். உடனே விவாதங்கள். தோட்டத்தினுள் இருந்த பாறையுச்சிக்கு ஒரு காலைநடை சென்றோம். சுற்றிலும் பசுமைமேல் காலையொளி மெல்ல எழுவதைக் கண்டு அமர்ந்திருந்தோம்.

மீண்டும் விவாதங்கள். மெல்ல தயக்கங்கள் அவிழ்ந்து அனைவருமே உற்சாகமாகப்பேசத்தொடங்கினர்.மதிய உணவுவேளை வரை இடைவெளி இல்லாமல் சென்றது உரையாடல். நண்பர்கள் கொண்டுவந்த  கவிதைகளையும் கதையையும் வாசித்து விவாதித்தோம்.

மதியம் இரண்டு மணிக்குச் சந்திப்பு முடிந்தது. தழுவல்கள், புகைப்படங்கள். நாங்கள் மூன்றுமணிக்குக் கிளம்பினோம். எனக்கு இரவு 11 மணிக்குத்தான் நாகர்கோயில் ரயில். அஜிதன் ஈரோடு வழியாக கனகபுரா செல்வதாகச் சொன்னான். சமணப்பயணம்.

காங்கோ மகேஷ் இல்லத்தில் [மஞ்சள் சட்டை]

வரும் வழியில் சேந்தமங்கலம் பெருமாள் கோயிலைச் சென்று பார்த்தோம். மணல்பாறையால் கட்டப்பட்ட ஆலயம். மழுங்கலான சிற்பங்கள். கோயிலின் உள்ளே சம்பந்தமே இல்லாமல் எழுதிப்போடப்பட்டிருக்கும் துதிகள், கலையம்சம் இல்லாத படங்கள். இத்தகைய ‘பயன்பாட்டுக் கோயில்கள்’ எல்லாமே விழிகளை உறுத்துபவையாகவே இருக்கின்றன

மாலையில் நாமக்கல் ரங்கநாதர் ஆலயத்தைப்பார்த்தோம். குடைவரைக்கோயில். உள்ளே கரிய திருமேனியாகப் படுத்துறங்கும் திருமால். கார்க்கோடகன் மேல் படுத்திருப்பதாக தொன்மம். வழக்கம்போல பெருமாளுக்கு அலுமினியத்தில் தொப்பி போல கிரீடம் செய்து மாட்டி. அழுக்குத்துணி சுற்றி உடம்பெங்கும் வெள்ளைபெயிண்டால் கண்டபடி நாமம் போட்டு ,  சிவந்த பெயிண்டால் வாய் வரைந்து, கார்க்கோடகன் முகத்திற்கு வகைவகையாக பற்களும் கண்களும் வாயும் வரைந்து முடிந்தவரை சீரழித்திருந்தனர்

பல்லவர் காலகட்டத்துச் சிற்பம். அன்று ஒரு கலைஞனின் கனவில் எழுந்த தெய்வம். இன்று கலை என்றால் என்னவென்றே அறியாத மூடர்கள் நடுவே சீர்கெட்டு விரிந்திருக்கிறது. முன்பொருமுறை கும்பகோணம் ராமசாமி ஆலயத்தின் மகத்தான சிற்பங்கள் நடுவே நின்றிருந்தபோது ஒருவர் “என்ன சார் பொம்மை?’ என்று என்னிடம் கேட்டார். நம்மவர் உள்ளத்தில் இருப்பது மரப்பாச்சியும் பிளாஸ்டிக் பொம்மையும்தான். எந்தச்சிற்பத்தைப்பார்த்தாலும் அது குறையுடையதாகத் தோன்றுகிறது. அதை மரப்பாச்சியாக ஆக்கிவிடுகிறார்கள்

இப்போதெல்லாம் நம் ஆலயங்களைப் பார்க்கையில் ஓர் அழியாப்பதற்றம் நெஞ்சில் குடியேறுகிறது. அறியாமயால் இவற்றை அழித்துவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறோம் என்னும் எண்ணம். அதை கடந்து ஆலயங்களைப் பார்க்கவே முடியவில்லை. மிக அபூர்வமாகவே நல்ல முறையில் பேணப்படும் ஆலயங்களைக் காணமுடிகிறது

மாலை நாமக்கல் மலைமேல் ஏறிச்சென்றோம். ஒருகாலத்தில் நாமக்கல் மலை வெறும் குப்பைமேடாகக் கிடக்கும் என்றார் கிருஷ்ணன். அருகில் இருக்கும் குளங்கள் சாக்கடையால் நிறைந்து நாறுமாம். இப்போதுள்ள எம்.எல்.ஏ முயற்சியால் மலை தூய்மையாக்கப்பட்டுள்ளது. குளம் செப்பனிடப்பட்டு நல்ல நீர் நிறைந்து அழகிய சுற்றுச்சுவரும் அமர்ந்திருக்கும் பெஞ்சுகளுமாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சற்றேனும் அக்கறை இருந்தால் சிறப்பாக பேணமுடியும்.ஆனால் அப்போதே ஆங்காங்கே மக்கள் குப்பைகளைக் கொண்டு போட்டிருப்பதைக் கண்டேன். “ராத்திரியில் கொண்டாந்து போட்டிடறாங்க சார்” என்றார் வரதராஜன்

வரதராஜனின் இல்லத்தில் இரவுணவு. பத்தரை மணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்தேன். அதன்பின் என்னை ரயில் ஏற்றிவிட்டனர். நாகர்கோயிலில் இருந்து வந்திருந்த நண்பர் ஷாகுல் ஹமீதுடன் நான் ரயிலேறினேன். இன்னொரு நிறைவான சந்திப்பு. பின்னாளில் இதையெல்லாம் பெருமையுடன் நினைத்துக்கொள்ளப்போகிறேன் என எண்ணிக்கொண்டேன்.

இந்தச் சந்திப்புக்கு இருவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். வரதராஜன், வாசு. வாசு என்னுடன் பாலக்காடு கல்லூரியில் நிகழ்ந்த உரையில் பங்கெடுக்கவந்தார். அப்போது முதல் அறிமுகம். வரதராஜன் விஷ்ணுபுரம் நிகழ்ச்சி வழியாக அறிமுகம். இருவருமே ஜக்கிவாசுதேவ் அமைப்புக்கு அணுக்கமானவர்கள். நிகழ்ச்சிகளை ஒங்கிணைப்பதில் திறமை அங்கிருந்து வந்திருக்கலம். மிகச்சிறந்த இலக்கிய வாசகர்கள்

வாசு

வாசு

கொல்லிமலையின் அந்த விருந்தினர் மாளிகையும் தோட்டமும் வாசுவின் தம்பி செந்திலின் பொறுப்பில் இருந்தன. அவர் அங்கே தங்கி விவசாயம் செய்கிறார். முன்பு சொந்தமாகத் தொழில்செய்துகொண்டிருந்தார். இயற்கைவேளாண்மையில் ஆர்வம் வந்ததும் தொழிலை முடித்துக்கொண்டு பண்ணையிலேயே தங்கிவிட்டார். அவரது மகன் மட்டும் நாமக்கல் பள்ளியில் படிக்கிறான்

செந்திலின் உபசரிப்பால்தான் இந்நிகழ்ச்சியே நடந்தது. உண்மையில் சமையல் முழுக்க செந்திலின் மனைவியால்தான் செய்யப்பட்டது. நானே அதை நிகழ்ச்சி முடிந்தபின்னர்தான் அறிந்தேன். அவர்களைப்பொறுத்தவரை நாங்கள் அவர்களிடம் வந்த விருந்தினர்கள். அவர்களுக்கு நன்றி சொல்வதைவிட என்றும் அழியாத நினைவாக இது இருக்கவெண்டும் என நினைப்பதே முறையானது.

செந்திலும் குடும்பமும்

வரதராஜன்

வரதராஜன்

 

கொல்லிமலை புகைப்படத் தொகுதி

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

இனியவை திரும்பல்

$
0
0

1

கொல்லிமலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும்போதுதான் கே.சி.நாராயணன் கூப்பிட்டார். என் முப்பதாண்டுக்கால நண்பர். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவர். இலக்கியவிமர்சகராக பெரும் பங்காற்றுவார் என ஆற்றூர் அவரைப்பற்றி எண்ணினார். ஆனால் மாணவராக இருக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்டு மாத்ருபூமி இதழ் அவரை அழைத்துக்கொண்டது. விமர்சகராக அவரது இடம் உருவாகவில்லை. ஆனால் இதழியலில் அவர் ஒரு சாதனையாளர்

நாற்பதாண்டுக்கால இதழியல் வாழ்க்கை கே.சி.நாராயணனுக்கு உண்டு கௌமுதி பாலகிருஷ்ணனுக்கும், என்.வி.கிருஷ்ணவாரியருக்கும் எம்.டி.வாசுதேவன் நாயருக்கும் பின் மலையாள இலக்கியத்திற்கு அதிக பங்களிப்பாற்றிய இதழியலாளர் என்று கே.சி.நாராயணனை ஐயமில்லாமல் சொல்லிவிடலாம். ஓய்வுக்குப்பின்னரும் அவரை விட மனமில்லாமல் மலையாள மனோரமா தன் வெளியீடுகளுக்கான பொது ஆசிரியராக நீட்டிக்க வைத்திருக்கிறது

1

கே.சிக்கு இப்போது அறுபத்தைந்து வயது. நான் அவரைச் சந்திக்கையில் அவருக்கு முப்பத்தாறு. மாத்ருபூமி இதழின் துணையாசிரியராக இருந்தார். நான் காசர்கோட்டிலும் அவர் கோழிக்கோட்டிலும். நிகழ்ச்சிகளில் சந்திப்போம். வெடித்துச்சிரிக்கவைக்கும் உரையாடல்காரர். எதிர்மறை உளவியல் சற்றும் இல்லாதவர். இலக்கியம் குறித்து எப்போதுமே பேசிக்கொண்டிருப்பவர்.

மாதவிக்குட்டியின் [கமலா தாஸ்] மைந்தரும் பிரபல இதழாளருமான எம்.டி.நாலப்பாடு மலையாள இதழியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றவர். நாலப்பாட்டுக்கு நெருக்கமானவராக இருந்த கே.சி மாத்ருபூமி இதழின் நவீன வடிவை உருவாக்கியவர். மாத்ருபூமியின் உரிமை மாறியபோது எம்.டி.நாலப்பாடு வெளியேறினார். கே.சி கல்கத்தாவுக்கு செய்தியாளராகச் சென்றார்.

k

சென்னைக்கு அவர் மாத்ருபூமியின் செய்திப்பிரிவுத்தலைவராக வந்தார். நான் பாலக்கோட்டுக்கு மாற்றலாகிவந்தேன். சென்னையில் பார்சன் காம்ப்ளெக்ஸில் இருந்த அவரது அலுவலகமும் குடியிருப்பும் அன்று ஓர் இலக்கிய மையமாக இருந்தது. சகரியா, புனத்தில் குஞ்ஞப்துல்லா , பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்ற இலக்கியவாதிகள் வந்துகொண்டே இருப்பார்கள். குடி, இலக்கியம் , மீன், அரசியல் என்று ஓர் இரவுபகல் இல்லாத உலகம்

நான் சென்னைசென்றால் கே.சியின் அலுவலகவீட்டில்தான் தங்குவது வழக்கம். தூங்கும்வரை இலக்கியம்பேசி பேசிய இடத்திலேயே காலைவிழித்து உடனே விட்ட புள்ளியிலிருந்து இலக்கியம் பேசுவோம். கே.சி. அங்கிருந்து மீண்டும் மாத்ருபூமிக்கு ஆசிரியராகச் செல்ல யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு காரணம்.

IMG_20160329_124650

மீண்டும் மாத்ருபூமி ஆசிரியராகச் சென்ற கே.சி என்னை அதில் வாரம் ஒரு கட்டுரை எழுதும்படி சொன்னார். அவ்வாறுதான் நான் மலையாளத்தில் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தேன். அதற்கு முன் எம்.கங்காதரன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த ஜயகேரளம் இதழில் சிலகட்டுரைகள் எழுதியிருந்தேன். மாத்ருபூமியில் கடிதங்கள் எழுதியிருந்தேன். மாதவிக்குட்டியின் சந்தனமரங்கள் கதை வெளிவந்தபோது நான் எழுதிய வாசகர்கடிதத்தை வாசித்துவிட்டு மாதவிக்குட்டி என்னை அழைத்துப் பேசினார். அவ்வாறுதான் அறிமுகம் உருவாகியது.

மாத்ருபூமியில் இருந்து கே.சி மலையாள மனோரமாவுக்குச் சென்றார். நானும் உடன் சென்று மலையாளமனோரமா குழுமத்தின் இலக்கிய இதழான பாஷாபோஷிணி இதழில் எழுதலானேன். நான் சொந்த வீடுகட்டி உச்சகட்ட கடனில் இருந்தபோது மலையாள மனோரமா தான் என்னை தேற்றி வெளியேகொண்டுவந்தது. பாஷாபோஷிணியில் நான் எழுதிய கட்டுரைகள் ‘நெடும்பாதையோரம் உறவிடங்கள் நூறுசிம்ஹாசனங்கள் என்னும் மூன்று நூல்களாக மலையாளத்தில் வெளிவந்துள்ளன

IMG_20160329_124743

28 ஆம் தேதி காலை கே.சி நாகர்கோயில் வந்தார். நான் அன்று அதிகாலைதான் கொல்லிமலையிலிருந்து வந்தேன். தூங்காமல் வெண்முரசு ஒர் அத்தியாயம் எழுதிவிட்டு ரயில்நிலையம் சென்று அவரை அழைத்துவந்தேன். பார்த்ததுமே சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். நினைவுகளில் சிரிப்புகள்தான் அதிகமாக இருந்தன.

கே.சி மலையாள நகைச்சுவையாசிரியர் வி.கே.என்னின் ரசிகர். விகெஎன் நகைச்சுவைகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார். [எம்.கிருஷ்ணன்நாயர் பேரறிஞர். ஷேக்ஸ்பியரின் சரியான உச்சரிப்பு மில்டன் என்பதுதான் என்று சொல்கிறார்] அக்கால இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தோம். எழுபதுகளில் பம்மன் என்னும் எழுத்தாளர் பிரபலம். அவரது சட்டக்காரி, வஷளன் போன்ற நாவல்கள் இன்பக்கிளுகிளுப்புடன் வாசிக்கப்பட்டவை.

IMG_20160329_113652

வஷளன் என்றால் கேடுகெட்டவன் என்று பொருள். ”அன்றைக்கு என் மாமா வஷளன் என்பவன் எழுதிய பம்மன் என்னும் நாவல் என்று சொல்வார்” என்றார் கே.சி. நான் கோவையில் என் நண்பர் பாலசந்திரன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது பம்மனைப்பற்றிச் சொன்னேன். அருகே இருந்த பெரியவர் “நான்தான் பம்மன்” என தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

மாலை ஒரு அற்புதமான கோடைமழை. நாகர்கோயிலே பெருகி வழிந்தது. ஓட்டுநரை வரச்சொல்லியிருந்தேன். ஈரம் சொட்ட வந்தார். காரில் சுசீந்திரம் சென்றோம். கிட்டத்தட்ட படகில் போகும் அனுபவம். ஆனால் கன்யாகுமரியில் மழையே இல்லை. முகில்மூட்டம் இருந்தது. குளிர்காற்று. கடலைநோக்கியபடி அமர்ந்துபேசிக்கொண்டிருந்தோம்

kv

மறுநாள் செல்வேந்திரனை வரச்சொல்லியிருந்தேன். என் ஆதர்ச இதழாளரை செல்வா சந்திக்கவேண்டும் என்று விரும்பினேன். [அப்படியாவது திருந்துகிறாரா என்று பார்ப்போமே என்றுதான்] காலையில் ஒரு நடை சென்றுவரும்போது செல்வா வந்திருந்தார்.

காரில் எங்கள் குலதெய்வமான மேலாங்கோட்டு அம்மன் ஆலயத்திற்குச் சென்றோம். அங்கே ஓரு பூசாரி பெண்ணாக சேலையணிந்து தலைமுழுக்க பூச்சூடி நின்று குறிசொல்லிக்கொண்டிருந்தார். “அம்மை இருக்கேன் , பாத்துக்கிடுதேன், ஒண்ணும் பயப்படாதே. நல்லாயிரும் கேட்டையா?” என்பதே பெரும்பாலான அருள்வாக்கு. கட்டணம் ஐம்பது ரூபாய். ஒருபெண் நூறுரூபாயுடன் தயங்க “குடு. மிச்சம்தாறேன். அம்மன் திருடமாட்டேன். எனக்கு அம்பதுதான் காணிக்கை” என்று சொல்லி மேலாங்கோட்டு இசக்கி காசை வாங்கிக்கொண்டு மிச்சம் கொடுத்தாள்

IMG_20160329_112528

பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்றோம். இருளும் ஒளியும் ஊடாடும் அரண்மனையில் சிரித்துப்பேசிக்கொண்டு சுற்றிவந்தோம். இலக்கியம் மீண்டும் இலக்கியம். கே.சி ஓர் இலக்கிய அடிப்படைவாதி. ஆற்றூர் ரவிவர்மாவிடமிருந்து கற்றது அது. அரசியலில் ஆர்வமும் நிலைபாடும் இல்லை. அழகியலே இலக்கியம் என்று எண்ணுபவர்.

மதியம் தக்கலையில் சாப்பிட்டுவிட்டு வீடுதிரும்பினோம். கே.சிக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஆறரைக்கு ரயில். மூன்றரைக்கு அவர் கிளம்பிச்சென்றார். மிக உற்சாகமான இரண்டுநாட்கள். மீண்டும் இளமைக்குச் சென்று திரும்பினேன். இளமை என்பது கனவுகளால், அதைநோக்கி எழும் பெரும் உயிராற்றலால் ஆனது. இன்னமும் அவை அவ்வாறே எஞ்சுகின்றன என இருவருமே கண்டுகொண்டநாட்கள்

பிரிவின் விஷம்

 

தொடர்புடைய பதிவுகள்

கடவுளின் காடு

$
0
0

11-basheer

சென்ற ஜனவரி 21, 2015 ஒரு செய்தியை வாசித்தேன், கேரளத்தில் கவி சூழுலாமையம் மூடப்பட்டது. காரணம் அங்கே வந்த பயணிகள் இருவரை காட்டுயானை தாக்கிக் கொன்றது. அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள். அவர்களின் இறப்பு குறித்து ஆய்வுசெய்துவருகிறார்கள் என்றது செய்தி. நான் பஷீர் அங்கே இல்லை என நினைத்துக்கொண்டேன்

நான் நண்பர்களுடன் பலமுறை சென்ற இடம் கவி. எங்கள் நீண்டபயணங்களின் நடுவே ஓரிருநாட்கள் நீடிக்கும் குறுகிய பயணங்களையும் மேற்கொள்வோம். அவற்றில் முக்கியமானது மழைப்பயணம் என நாங்கள் பெயரிட்டிருக்கும் காட்டுலாக்கள். ஜூன் ஜூலை மாதங்களில் தென்மேற்குப்பருவமழை பெய்யத்தொடங்கும்போது கேரளத்தில் மேற்குமலை உச்சிகளில் உள்ள ஊர்களுக்குச் சென்று சுற்றிப்பார்ப்போம். பீர்மேடு, வாகைமண், பறம்பிக்குளம், திருநெல்லி கூடவே கவி.

மழைகோட்டு அணிந்துசெல்வோம் .  நாள்முழுக்க கொட்டும் மழையிலேயே இருப்போம். உடம்பெங்கும் கடித்து ரத்தம் உறிஞ்சும் அட்டைகளுடன் வாழ்வோம். இரவு எளிய விடுதிகளில் தங்குவோம். நான்குபக்கமும் அத்தனை மலைகளிலிருந்தும் அருவிகள் நூற்றுக்கணக்கில் கொட்டிக்கொண்டிருக்கும். மலைகளுக்கு வீரப்பற்கள் முளைத்ததுபோலிருக்கும்.

2009 ஜூலையில் முதல்முறையாக கவி சென்றோம். என் வாசகி எம்.ஏ.சுசீலாவின் மருமகன் பிரமோத் அப்போது கேரள காட்டிலாகா உயரதிகாரியாக இருந்தார். கேரளக்காடுகளை பாதுகாப்பதற்கான முக்கியமான பலநடவடிக்கைகளை எடுத்துப் புகழ்பெற்றவர் அவர். அவர் கவி சூழுலாமையத்திற்கு நாங்கள் செல்வதற்கான உதவிகளை வழங்கினார். அவர்தான் பஷீரை அழைக்கும்படி சொன்னார்

பஷீர் அப்போது அந்த மையத்தின் தலைவராக இருந்தார். கவி கேரளத்தின் சூழுலா [Eco-Tourism ] மையங்களில் ஒன்று.. இந்த சூழுலா என்னும் கருதுகோள் கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. காடுகளை சூழியல் புகலிடங்களாக அறிவிக்கும்போது அந்தக் காடுகளுக்குள் உள்ள ஊர்களை காலிசெய்ய வேண்டியிருக்கிறது. அந்த மக்களை இடம்பெயரச்செய்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு ஊர்சார்ந்த வேலைகள் தெரிவதில்லை. ஆனால் அவர்கள் காடுகளை நன்கறிவார்கள்.

ஆகவே அவர்களை வேலைக்கமர்த்திக்கொண்டு இந்த சூழுலா மையங்களை அமைத்தார்கள். இது அவர்களுக்கு நிலையான நல்ல வருமானத்தை உருவாக்குகிறது. அவர்கள் காட்டில் வேளாண்மை செய்வதும் விறகு பொறுக்குவதும் வேட்டையாடுவதும் தடுக்கப்படுவதனால் காடழிவும் நிகழ்வதில்லை. காட்டை அவர்களைக்கொண்டு கண்காணிப்பது எளிது.

கவி கேரளத்தில் உள்ள பெரியாறு புலிகள் புகலிடத்தினுள் அமைந்திருக்கிறது. ரான்னி வனக்கோட்டம், பத்தனம்திட்டா மாவட்டம். மதுரை வழியாகச் சென்றால் தேனி, கம்பம், குமுளி வழியாக மேலேறி வண்டிப்பெரியார் போவதற்கு மூன்றுகிலோமீட்டருக்கு முன்னதாகவே இடதுபக்கம் திரும்பினால் வள்ளக்கடவு என்ற ஊர். அங்கே வனக்காவலரிடம் முறைப்படி அனுமதிபெற்று காட்டுக்குள் புகுந்து கவி செல்லலாம்.

அங்கே காலை எட்டுமணிக்கு சாலையை திறக்கிறார்கள். ஒருநாளில் முப்பது வண்டிகளை மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள்.. அங்கிருந்து இருபக்கமும் அடர்ந்த காடுவழியாக பதினெட்டு கிலோமீட்டர் சென்றால் சாலையோரமாக கவி வருகிறது.

மது, பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை தடுப்பதில் கேரள காட்டிலாகாத்துறை மிகமிகக் கராறாக இருந்தது. பிஸ்கெட் உறைகளைக்கூட பிய்த்து எடுத்துவிட்டுத்தான் செல்ல அனுமதித்தனர். எங்களுக்குப்பின்னால் வந்தவர்களிடம் ஒரு புட்டி மது இருந்தது. தடுத்துவிட்டார்கள்,

அவர்கள் சினம்கொண்டு வாதாடியபோது உறுதியாகவே மறுத்து திருப்பியனுப்பினார்கள். “எங்களுக்கு மேலதிகாரிகளைத்தெரியும்” என்று அவர்கள் சொன்னபோது ”பஷீர்சாரைத்தெரியுமா?” என்றார் காவலர். “தெரியாது” என்றார்கள். “அவரிடம் பேசிவிட்டுச் சொல்…போ” என்றார். பஷீர் பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறதே என நினைத்துக்கொண்டேன்’

காலை பத்துமணிக்கு காடு வெயிலில் பச்சைவெளியாக விரிந்து கிடந்தது. சீவிடுகளின் ரீங்காரத்தால் ஒன்றாக இணைக்கப்பட்ட பிரம்மாண்டமான மரங்களின், இலைதழைத்த செடிகளின், மரங்களை மூடிய கொடிகளின் , பாறைகளில் தொற்றிய பெரனிகளின், பல்லாயிரம் பறவைகளின், பலகோடிப் பூச்சிகளின் காடு. பச்சை அடர்ந்த காட்டுக்கு நடுவே இளம்பச்சை வெயில் தேங்கிக்கிடக்கும் சிறிய புல்வெளிகள். ஈரம் வழிந்த கரும்பாறைகளின் இடுக்குகளில் பச்சைப்புற்கள் படர்ந்தேறியிருந்தன. மலைவிளிம்புக்கு மேலே மேகங்கள் ஒளியுடன் பரவிய நீல வானம்.

காடு முதலில் உருவாக்கும் எண்ணம் தூய்மை என்ற ஒற்றைச் சொல்தான். அந்த சொல்லை பலவிதமாக நாம் விளக்கிக்கொண்டே செல்லமுடியும். நாமறியும் நகர, கிராம வாழ்க்கையை நம் ஆழ்மனம் தவிர்க்க முயன்றபடியே உள்ளது. சத்தம், புழுதி, சாக்கடை, கட்டிடங்களின் சாலைகளின் ஒழுங்கின்மை, வாகனங்களின் நெரிசல், மக்களின் பிதுங்கல். காடு சட்டென்று நம்மை அவற்றில் இருந்து விடுவிக்கிறது. ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும் ஓர் இடம் காடு. அதை நாம் உணரும்போதே அதைச் சுத்தம் என்று சொல்லிக்கொள்கிறோம். அசுத்தம் என்பது ஒரு நிலைபிறழ்வுதான்.

gavi-eco-toursim-kerala

கவி ஒரு நீர்த்தேக்கம். காட்டில் ஓடிய இரு காட்டாறுகளை நான்கு மலைகளுக்கு நடுவே மூன்று தடுப்பணைகள் கட்டி பெரிய ஏரியாக தேக்கியிருக்கிறார்கள். அதன்பின்னர் அந்த நீரை பிரம்மாண்டமான குழாய்கள் வழியாக எண்ணூறடி கீழே சபரி நீர்மின்சார நிலையத்துக்குக் கொண்டுசெல்கிறார்கள். அந்த ஏரிக்கரையில்தான் கவி சூழுலா மையம் உள்ளது. அங்கே முப்பது பேர் வரை தங்க முடியும். அறுபது ஊழியர்கள் இருக்கிறார்கள்.

பஷீர் என்னை புன்னகையுடன் வரவேற்றார். உயரதிகாரி சொல்லி அனுப்பியவர் என்பதனால் ஒரு சின்ன இறுக்கம் இருந்தது. ஆனால் சிலநிமிடங்களிலேயே என்னை எழுத்தாளனாக அடையாளம் கண்டுகொண்டார். பஷீர் மிகச்சிறந்த இலக்கிய வாசகர். திரிச்சூரைச் சேர்ந்தவர். சச்சிதானந்தன், கெ.ஜி சங்கரப்பிள்ளை உள்ளிட்ட பல இலக்கியவாதிகளிடம் அறிமுகம் கொண்டவர். நான் மலையாளத்தில் எழுதிய அனைத்தையும் வாசித்திருந்தார்

மதிய உணவுக்கு பின்னர் ஒரு சிறிய கானுலா சென்றோம்.  கவி அட்டைகளால் ஆனது. மழைக்காலம் அட்டைகளின் கொண்டாட்டக்காலம். எங்களுக்கு கால்களை மூடும் காக்கி காலுறைகள் கொடுத்தார்கள். மழைக்கோட்டு கொண்டுசென்றிருந்தோம் கையில் உப்பு பொட்டலமும் வைத்திருந்தோம். சிறிய அட்டைகள் தொற்றி ஏறி துவண்டபோது உப்பைபோட்டோம். உப்பு அவற்றுன் உடல் நீரை உறிஞ்சுவதால் அமிலம் பட்டது போல துடித்து இறக்கும்.

அன்று கவியில் மழை இல்லை. முந்தையநாள்கூட பெய்திருந்தது. நாங்கள் சென்றபோது வானம் வெளுத்து நீல வெளியாகக் கிடந்தது. காட்டுக்குள் நிலம் ஆவியாகி இலைகள் வியர்த்து நீர் சொட்டிக்கொண்டே இருந்தது. எங்கும் மௌனத்துள் ஒரு மெல்லிய ரகசியமாக நீரின் துளியொலி. கவி காடு முழுக்க வேய் எனப்படும் மென்மூங்கில்காடுகள். புல்லாங்குழல் செய்வதற்கான மூங்கில் இது. இலைகள் அகலமானவை, அரம்போல கூரிய விளிம்புள்ளவை.

யானைகள் முதுகு உரசிய மரங்கள் வழவழப்பாக நின்றன. யானைகள் தோண்டிய மண் குவிந்து கிடந்தது. யானைப்பிண்டங்கள் நீரில் கரைந்தும் கரையாமலும் கிடந்தன. எங்கும் யானையின் இருப்பு இருந்தது. காட்டுக்குள் இருக்கும் யானையின் அருவுருவமே இந்தியக்காடுகளை உயிருள்ளதாக்குகிறது.

மாலைவெயில் பெருகிக்கிடந்த புல்மேட்டை அடைந்து மூச்சுவிட்டோம். அங்கே நின்றபோது அஸ்தமனத்தில் பச்சை மலைகள் நீலம் கொண்டு அணைந்து மறைவதை காணமுடிந்தது. மெல்ல கீழிருந்து மூடுமேகம் வந்து திரையிட்டு எல்லாவற்றையும் மறைத்தது. களைத்துப்போய் திரும்பி வந்தோம். கால்களில் ஒரு சில அட்டைகள் இருந்தன. ஆரம்பத்தில் உருவாகும் மனச்சுளிப்பு விலகிய பின் அட்டைகளை நாம் அஞ்சவோ அருவருக்கவோ தேவையில்லை. விரல்களால் சுண்டிச் சுண்டி விட்டோம்.

பஷீர் வந்து ஒரு மலையுலாவுக்கு அழைத்தார். பஷீரின் ஜீப்பில் காட்டுக்குள் சென்றோம். சிறிய வனப்பாதை. இருட்டி விட்டிருந்தது. இருபக்கமும் காடு இருட்டுக்குள் நிறைந்து கிடந்தது. இரு இடங்களில் மரங்கள் சரிந்திருந்ததை வழிகாட்டிகள் வெட்டி அகற்றினர். ஒரு சிறிய தடுப்பணை வரை சென்றுவிட்டு திரும்பி வந்தோம். வரும்வழியில் நடுச்சாலையில் ஒரு மிளா [சாம்பார் டீர்] நின்றிருந்தது. ஒளிக்கு கண்கூட உடல்சிலிர்த்து அசையாமல் நின்றது. சிலகணங்கள் கழித்து விளக்கை அணைத்ததும் பாய்ந்தோடி மறைந்தது.

கவி வனவாழ்க்கை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதனால் கார் எனப்படும் காட்டெருதுகளும் யானைகளும் காட்டுப்பன்றிகளும் மிகுதி. ஒருமுறை சுற்றிவந்தாலே கூட்டம்கூட்டமாக காட்டெருதுகளைப்பார்க்க முடியும். அவற்றில் முகம்சிவந்தவை மட்டுமே ஆபத்தானவை. பருவம் வந்த ஆண்கள் அவை. பொதுவாக காட்டெருதுகள் மனிதர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை

ஆனால் யானைகள் அப்படி அல்ல. அவை மிகமிக நுட்பமானவை. மனிதர்களைவிட்டு விலகிச்செல்லவே அவை முயலும். ஆனால் அவற்றை எரிச்சலூட்டும் பலவிஷயங்கள் உண்டு. முக்கியமாக வாசனை. நாம் பயன்படுத்தும் செண்டுகள், ரசாயனப்பொருட்கள் அதன் எட்டடி நீளமான மாபெரும் மூக்கை தொந்தரவு செய்பவை. அடுத்தபடியாக ஒலிகள். அதன் முறக்காதுக்கு நம் சினிமாப்பாடல்களிலும் செல்பேசிகளிலும் உள்ளம் கூரிய ஒலிகள் மிகவும் படுத்துபவை. அத்துடன் நம் உடைகள் பளிச்சென்று வெயிலில் மின்னுவது அவற்றின் மிகச்சிறிய கண்களை உறுத்துவது

கவியில் யானைகளைப் பார்க்கப்போகும்போது இவையனைத்தையும் சொல்லித்தான் அனுப்புகிறார்கள். ஒவ்வொரு குழுவுடனும் ஓரிரு காவலர்கள் வருவார்கள். அவர்கள் கெஞ்சிக்கொண்டே இருப்பார்கள், குப்பைபோடாதீர்கள், செல்பேசிகளை ஒலிக்கவிடாதீர்கள், காமிரா மின்னல்கள் தேவையில்லை, கூச்சலிடாதீர்கள். ஆனால் நம் சுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றுலா என்றாலே ரகளைசெய்வதும் அத்துமீறுவதும்தான். அப்படித்தான் சினிமாக்கள் அவர்களுடைய கதாநாயகர்களைக் காட்டியிருக்கின்றன

பஷீர் அதில் மிகமிகக் கறாரானவர். யாராக இருந்தாலும் பிடித்து உட்காரச்செய்து திருப்பி அனுப்பிவிடுவார். “இங்கே வரும் கும்பல் குடித்துவிட்டு புட்டிகளை காட்டில் வீசிவிட்டுச் செல்கிறார்கள். யானைகளின் கால்கள் மென்மையானவை . அவற்றின் எடைகாரணமாக அவை அந்த புட்டிகளை மிதித்தால் ஆழமாக உள்ளே சென்றுவிடும். சிலநாட்களில் கால் அழுகி யானை நகரமுடியாமலாகும். மரத்தில் சாய்ந்து நின்று உயிர்விடும்” பஷீர் சொன்னார்

அப்படி சில யானைகள் இறப்பதை கண்டபின்னர்தான் பஷீர் கடுமையானவராக ஆனார். எந்த சமரசத்திற்கும் ஒப்புக்கொள்வதில்லை. விதி என்றால் விதிதான். அவரை ஒன்றும் செய்யமுடியாது, ஏனென்றால் இடமாற்றம்செய்வதென்றால் கவியை விட காடு வேறில்லை. அவர் இரண்டு வாரத்திற்கு ஒருமுறைதான் ஊருக்குச் செல்வது. அங்கே ஒரே ஒரு மலையுச்சியில்தான் செல்பேசி அலைகள் கிடைக்கும்.

யானைகளைப்பற்றி பஷீர் சொல்லிக்கொண்டே வந்தார். “தன் உறவினர் இறந்ததைக் கண்ட யானை மனிதர்கள் மேல் வஞ்சம் கொண்டிருக்கும். பலசமயம் சாலைக்கு வந்து மனிதர்களை அது துரத்தும். மனிதர்களுக்கு யானைமேல் மதிப்பில்லை. காட்டின்மேல் மதிப்பில்லை. ஏனென்றால் உண்மையில் அவர்களுக்கு அல்லா மேல் மதிப்பில்லை”

பஷீர் சொன்னதகவல்களின் அடிப்படையில் நான் யானைடாக்டர் என்னும் கதையை எழுதினேன். பீர்புட்டிகள் யானைகளுக்கு எமனாவதைப்பற்றிய கதை. சூழியல் அமைப்புகளால் இதுவரை அரைலட்சம் பிரதிகள் வரை அச்சிட்டு இலவசமாக அளிக்கப்பட்ட கதை அது. ஓர் எழுத்தாளனாக நான் பஷீருக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டேன்.

பஷீர் ஓய்வுபெற்று திரிச்சூருக்குச் சென்றுவிட்டார். அதன்பின்னர்தான் கவியில் அந்த மரணங்கள். வட இந்தியப்பயணிகள், அதிகாரிகளும்கூட. அவர்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள். பஷீர் போல உறுதியான அதிகாரிகள் இல்லையேல் அப்படித்தான் நடக்கும்.

சென்ற நவம்பர் 24, 2015 ல் திரிச்சூரில் ஒரு இலக்கியநிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். பஷீர் என்னைப்பார்க்க வந்திருந்தார். நாங்கள் இரவு கனக்கும்வரை பேசிக்கொண்டிருந்தோம். கவியில் நடந்ததைப்பற்றிச் சொன்னேன் “நீங்கள் அதிகாரி, அரசியல்வாதி, தொழிலதிபர். சரி, ஆனால் யானை அதற்கும் மேலே. அது கடவுளின் பிரதிநிதி அல்லவா?” என்றார் பஷீர்.

 

படங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

ஒருநாளின் கவிதை

$
0
0

 

லட்சுமி மணிவண்ணன்

லட்சுமி மணிவண்ணன்

லட்சுமி மணிவண்ணனின் முழுக் கவிதைத்தொகுதியான “கேட்பவரே” நெல்லையில் இன்று [3-4-2016]வெளியிடப்பட்டது. நான் அதை வெளியிட  ‘நீயா நானா’ ஆண்டனி பெற்றுக்கொண்டார். விக்ரமாதித்யன் வாழ்த்திப்பேசினார்

காலையில் நாகர்கோயிலில் இருந்து பேருந்தில் கிளம்பி நெல்லை சென்றேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பாரதிவிழா பேச்சுப்போட்டிக்காக முதன்முதலாக ஆரல்வாய்மொழியை கடந்தேன். இருபக்கமும் மலைகளின் எல்லை இல்லாமல் விரிந்து கிடந்த சமநிலம், முகில்களே அற்ற கண்ணாடிப்பரப்பான வானம், முள்செடிகளும் தொலைதூரப்பனைகளும் மட்டுமே கொண்ட வறண்ட விரிவு என்னை அழச்செய்தது. பேருந்தில் இருபக்கங்களிலிருந்தும் அனல் அடித்துக்கொண்டிருந்தது.

அதன் பின் நெல்லை என்றாலே உலையருகே அமர்வதுபோல கன்னங்களில் வந்துமோதும் அனல்தான் நினைவிலெழும். கூடுமானவரை நெல்லையைத் தவிர்ப்பதே என் வழக்கம். முந்தைய முறை நெல்லை சென்றது தி ஹிந்துவின் ஆண்டுவிழாவுக்காக.

இன்று மீண்டும் நெல்லைக்குச் செல்லும்போது வெக்கை நினைவில் வந்ததுமே காரைத்தவிர்த்தாலென்ன என்று தோன்றியது. சுயவதை மனநிலைதான்.

 

கோணங்கி

கோணங்கி

பேருந்தில் ஒன்பது மணிக்குக் கிளம்பினேன். ஆரல்வாய்மொழி அருகே லாரி கவிழ்ந்திருந்தமையால் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டிருந்தது. நான் குட்டித்தூக்கம்போட்டு விழிக்கையில் தாழக்குடியில் இருந்தேன். அடடா, வண்டிமாறி ஏறிவிட்டேன் போலிருக்கிறதே என பீதியடைந்து எழுந்தேன். நடத்துநர் விஷயத்தைச் சொல்லி அமைதிகொள்ளச் செய்தார்.

நெல்லை  சென்று சேர பதினொன்றாகிவிட்டது. பேருந்துநிலையத்தில் செல்வேந்திரன் இருந்தார். அவருடன் இருசக்கரவண்டியில் கோடைவெயிலில் சென்று நெல்லை மல்லுக்களின் எல்லை என்பதை அறிந்தேன்.நெல்லையில் சைவசித்தாந்தம் கொலைவெறியுடன் தழைக்க இந்த வெயிலும் ஒரு காரணமாக இருக்கவேண்டும்.

நெல்லையில் நவீன இலக்கியக்கூட்டங்கள் அரிதினும் அரிது. பன்னிரண்டுபேர் வந்து அமர்ந்திருப்பார்கள். அதில் பதினொருவர் தி.க.சியின் அணுக்கர்களான முற்போக்கு. ஒருவர் நிகழ்ச்சி அமைப்பாளராக இருப்பார். அத்தனைபேரையும் வண்ணதாசனே பெயர் சொல்லி அழைக்கமுடியும்.

மேலும் முந்தையநாள்தான் தி.க.சி விருது பாரதிமணி அவர்களுக்கு அளிக்கப்படும் நிகழ்ச்சி நடந்திருந்தது. அதில் தோப்பில் முகமதுமீரான், செ.திவான் உள்ளிட்ட நெல்லையின் செல்வங்கள் அனைவருமே பேசியிருந்தனர். ஆகவே எனக்குவரும் கூட்டத்தையும் சேர்த்து பதிமூன்றுபேரை எதிர்பார்த்தேன்.

நெல்லையப்பர் ஆலயமருகே இருந்த அரங்குக்குச் சென்றபோது அவ்வரங்கு நிறைந்திருந்ததைக் கண்டு மீண்டும் இடம் மாறிவிட்டேனா என்ற குழப்பத்தை அடைந்தேன்.

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்

 

விக்ரமாதித்யன் அண்ணாச்சியை நீண்டநாட்களுக்குப்பின் பார்த்தேன். லட்சுமி மணிவண்ணனும் ‘படிகம்’ ரோஸ் ஆண்டோவும் காத்திருந்தனர். சற்றே முதிர்ந்த கைலாஷ் சிவனைப் பார்த்தேன். கோணங்கியை தழுவிக்கொண்டேன். ஃப்ரான்ஸிஸ் கிருபா பெயர் அடிபட்டது. கொஞ்சம் தேடித்தான் கூட்டத்திற்குள் சற்று உயர்ந்த அவரது தலையைக் கண்டுகொண்டேன். நீயாநானா ஆண்டனி வந்திருந்தார். தேவதச்சன் சற்று பிந்தி வந்திருந்தார். அஜயன் பாலா வந்திருந்தார். சந்துரு மாஸ்டர் வரமுடியவில்லை. செல்பேசியில் தன் வாழ்த்துக்களைச் சொன்னார்.

நீண்டநாட்களுக்குப்பின் சிற்றிதழ் நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சி. முகங்கள் எண்பதுகளை நினைவுறுத்தின, தீவிரமும் ,சண்டையும், குடியும் ,கொந்தளிப்பும் நிறைந்த அக்காலகட்டம். சட்டென்று, எல்லாம் அடங்க ஆரம்பித்தது. இலட்சியவாதம் அழிந்தது. கூடவே கலகமும். ஏனென்றால் கலகம் திருப்பிப்போடப்பட்ட இலட்சியவாதம்.

எஞ்சியது வெற்றுக்காமம். அதை எழுதும் ஒருவகையான மேலோட்டமான கைகள். அவர்களுக்கும் ராஜேந்திரகுமாருக்கும் இடையே மயிரிழையே வேறுபாடு. அதுவும் அவ்வப்போது காற்றில் பறந்து மறையும். முகங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப்பிரியமான ஒரு காலகட்டத்தின் முகங்கள். அன்றைவிட இன்னும் கலக்கம் கொண்டிருந்தன. அன்றைவிட மேலும் தனிமைகொண்டிருந்தன.

 

ஆண்டனி

ஆண்டனி

குற்றமும் மீறலும் ஒழுங்கின்மையும் நேரடித்தன்மையும் கொண்ட லட்சுமி மணிவண்ணனின் கவிதைகளைப்பற்றிப் பேசினேன். இன்றைய அறிவுலகம் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் உலகமயமாக்கத்தின் பொருளியல்சிக்கல்கள் அளிக்கும் எதிர் அழுத்தமும் உலகமயமாக்கத்தின் ஆன்மீகத்தன்மை அளிக்கும் நேர்விசையும் கொள்ளும் முரண்பாடே என அந்தோனி பேசினார். சமீபகாலத்தில் இலக்கியம் பற்றிக் கேட்கநேர்ந்த முக்கியமான கருத்து. அதைத்தான் இன்று எடுத்துவந்தேன் என்று சொல்லவேண்டும்.

கைலாஷ் சிவனின் புகழ்பெற்ற தொகுதியான சூனியப்பிளவு மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. ராஜன் ஆத்தியப்பனின் ’கருவிகளின் ஞாயிறு’ கவிதைநூல் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சி சிற்றிதழ்களுக்கே உரிய ஒழுங்கின்மையுடன் விசித்திரமான தீவிரத்துடன் நடந்துமுடிந்தது. மதியம் கிளம்பி ஜானகிராம் ஓட்டலில் தங்கியிருந்த பாரதிமணி அவர்களைச் சென்று பார்த்தேன். அவர் நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை, அவரால் படி ஏறமுடியாது. அறையில் கிருஷி இருந்தார். பாட்டையா என புகழ்பெற்ற பாரதிமணி உற்சாகமாக இருந்தார். நாடகநினைவுகள், பார்வதிபுரம் நினைவுகள்

மதியம் ஜானகிராமில் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் அரங்குக்கு வந்தேன். அங்கே கவிதை வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. விக்கியண்ணாச்சி மேலும் உக்கிரமான அன்புகொண்டவராக இருந்தார். நான் இலக்கு. ஆகவே நான் திரும்ப உடனே திரும்பவேண்டியிருந்தது

கைலாஷ் சிவன்

கைலாஷ் சிவன்

வழக்கறிஞரும் கல்வியாளருமான திரு சக்தி கிருஷ்ணன் அவர்களால் கட்டப்பட்டது நெல்லையப்பர் கோயில் அருகே நயினார் படகுக்குழாம் எதிரே உள்ள சக்தி கலைக்களம். நெல்லையில் கலையிலக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம். இசைக்கருவிகள், விளையாட்டுக்கருவிகள் , ஓவியங்கள் விற்கும் கடை. சோதிடம், இசை , ஓவியம் போன்றவற்றில் பயிற்சியளிக்கும் குழுக்கள் என தீவிரமாக இயங்கிவருகிறது. சிறிய இலக்கியவிழாக்களுக்குரிய அரங்கு. நெல்லையில் தொடந்து இலக்கியக்கூட்டங்கள் நடக்கலாமென்று தோன்றுகிறது

இவ்விழாவின் இன்னொரு நிறைவான அம்சம், ஏராளமான வாசகர்கள் எனக்காக வந்திருந்தனர் என்பது. வெண்முரசுக்கு நெல்லையில் இத்தனை வாசகர் என்பது நான் எவ்வகையிலும் எதிர்பாராதது. பலர் ஒருவருடத்திற்குள் வாசிக்க ஆரம்பித்த இளைஞர்கள். ஓர் எழுத்தாளனுக்கு அவன் படைப்பை நுணுகி ஆராயும் வாசகர்கள் ஒருவகை நிறைவை அளிக்கிறார்கள் என்றால் அவன் படைப்புக்களால் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே என்பவர்கள் இன்னொருவகை நிறைவை அளிக்கிறார்கள் இரு வகை வாசகர்களையும் சந்திக்கமுடிந்தது

சக்தி கிருஷ்ணனின் காரில் திரும்பி நாகர்கோயில் வந்தேன். இனிய நாள். வெயிலின் சோர்வு நிறைந்த நாளும்கூட .

 

தொடர்புடைய பதிவுகள்

ரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்

$
0
0

 

 

 

ரஃபி  சாஹிப் என் வாழ்க்கையின் அருந்துணை. ஒருபோதும் ரஃபி என்று மட்டும் சொல்ல மனம் குவிந்ததில்லை. இன்று, வெண்முரசின் மிகக்கொடூரமான ஓர் அத்தியாயத்தை எழுதியபின் அவரது இனிய துயர் கொண்ட குரலில் ஆழ்ந்திருக்கிறேன். குறிப்பாக இந்தப்பாடல்.

1956 lவெளிவந்த சந்திரகாந்தா என்னும் படம். இசை. என்.தத்தா. பாடல். சாஹிர் லுதியானவி

Rafi_splash

நான் விண்மீன்களுக்காகவும் நிலவுக்காகவும் ஏங்கினேன்

இரவின் இருளையன்றி எதையும் காணவில்லை

காதலுடன் முயங்காத பாடல் நான்

இலக்கில்லாது செல்லும் பயணி நான்

புண்பட்டவன், புதுவசந்தத்திற்காக ஏங்குகிறேன்

அக்கூந்தலில்லை இன்று. அதன் சரிகையிழை இல்லை

மறைந்துகொண்டிருக்கும் ஒரு விண்மீன் கூட இல்லை

ஏங்குகின்றன என் விழிகள்

அவள் பாதை என்னிடமிருந்து விலகிச்சென்றது

இன்று அவள் உருவமும் மாறிப்போயிற்று

அவளிடமிருந்து அன்புக்காக ஏங்குகிறது என் உள்ளம்

நான் அன்புக்காக ஏங்கினேன்

விம்மல்களையே பெற்றேன்

அமைதிக்காக விழைந்தேன் புயல்களை பெற்றேன்

மூழ்கும் என் இதயம் கரைகளை நாடுகிறது

பயனற்ற நம்பிக்கைகளின் குவியல் என் நெஞ்சு

ஒளியை நாடிச்சென்றேன் இருளையே கண்டேன்

வண்ணங்களை விண்ணகத்தின் ஒளியை நாடினேன்

நான் விண்மீன்களுக்காகவும் நிலவுக்காகவும் ஏங்கினேன்

இரவின் இருளையன்றி எதையும் காணவில்லை

யூடியூபில் இப்பாடலுக்குக் கீழே ஒரு கருத்துக்குறிப்பை பார்த்தேன். சையத் ஜாஃப்ரி ஒரு மாதம் முன்பு எழுதியிருந்தார்

photo

Syed Jafri1 month ago

I listened this song in 1960 on radio (Radio Ceylon, at that time), I was just 11 years old with emotions. I still remember my emotions which are still with me and unfortunately I am a man without a true woman in the age of 66 inspite of my fully devoted love. I have nothing to say except that I am a lost person.

 

சகோதரா, ரஃபி சாகிப் உடனிருக்கட்டும்.

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

அழிமுகம்

$
0
0

1

காசர்கோட்டில் வேலைபார்த்த நாட்களில் அம்மாவும் அப்பாவும் தற்கொலைசெய்துகொண்டபின்னர் நான் நோயுற்றவனாகவும் கொந்தளிப்பு கொண்டவனாகவும் இருந்தேன்.தபால்தந்தித்துறை ஊழியர்களுக்கான கம்யூனில் தங்கியிருந்த நான் அங்கே உள்ள நண்பர்களை தினமும் பார்ப்பதும் பேசுவதும் சகிக்க முடியாமல் ஆனபோது அங்கிருந்து வெளியேறி மொகரால்புத்தூர் என்ற இஸ்லாமியக் குடியிருப்புக்குள் ஒரு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே குடியேரினேன். அது நான்செய்த முதல் பிழை. அந்த பழங்காலத்து வீட்டில், தன்னந்தனிமையில் எனக்கு மேலும் மன அழுத்தம் ஏற்பட்டது. அங்கிருந்து ஆன்மீகம்.

காஸர்கோட்டின் ஆரம்பநாட்களிலேயே எனக்கு மங்களூர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பொதுவாக எனக்கு நகரங்களைப் பிடிப்பதில்லை. ஓரளவுக்குப் பிடித்த நகரங்கள் என்றால் மைசூரும் மங்களூரும்தான். மழைவளம் இருப்பதனால் அவை மரங்கள் அடர்ந்து பசுமையாக இருக்கும். தெருக்களும் நேர்த்தியும் சுத்தமும் கொண்டவை. அத்துடன் எனக்கு அப்போது ஆங்கிலப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக ஹாலிவுட் சண்டைப்படங்களுக்கு நான் ஒரு ரசிகன். காஸர்கோட்டில் ஆங்கிலப்படங்கள் அரிதாகவே வரும். மங்களூரில் நான்கு திரையரங்குகளில் அனேகமாக வாரம் ஒரு படம் போடுவார்கள். உயர்தரமான அழகிய திரையரங்குகள் அவை.

அங்கேதான் நான் மறக்கமுடியத பல படங்களைப் பார்த்தேன். கிங் சாலமோன்ஸ் மைன்ஸ், தி மிஷன், குட் பேட் ஆண்ட் அக்லி, தி ·பைவ் மேன் ஆர்மி, லாரன்ஸ் ஆ·ப் அரேபியா, டாக்டர் ஷிவாகோ — இந்தப்படங்களுக்கெல்லாம் ஒரு பொதுத்தன்மை உண்டு. இவை மிக விரிந்த காட்சியமைப்பு கொண்ட படங்கள். சினிமாஸ்கோப்பில் கண் நிறைத்து விரிந்த காட்சிகளுக்குள் நான் உள்ளேயே சென்றுவிடுவேன். மன அழுத்தமும் சிக்கல்கலும் கொண்ட அக்காலகட்டத்தில் வழ்ந்துகொண்டிருந்த நிலப்பரப்பில் இருந்து வெளியேறிச்செல்லும் அனுபவங்களாக அவை இருந்தன.

வார விடுமுறை நாட்களில் காலையில் ரயிலில் மங்களூருக்குக் கிளம்பிச்செல்வேன். காலைக்காட்சியாக ஒரு படம். மதியக்காட்சி ஒருபடம். மாலைக்காட்சி இரவுக்காட்சி என நான்கு படங்கள். ஓட்டலில் மீன்குழம்புடன் சாப்பாடு. இரவுக்காட்சி முடிந்ததும் தெருவோரக்கடையில் பரோட்டா சிக்கன். அதன்பின் நகரத்தில் ஒரு சுற்று சுற்றிவிட்டு மெல்ல ரயில்நிலையம் வருவேன். அதிகாலை நான்குமணிக்கு ஒரு ரயில் உண்டு. அது ஐந்தரை மணிக்கெல்லாம் காஸர்கோடு சென்றுவிடும்.ஓட்டமும் நடையுமாக வந்து ரயிலில் ஏறிக்கொண்டால் நள்ளிரவில் ஒருமணிக்கே ஒரு ரயிலைப்பிடிக்க முடியும், ஆனால் பின்னிரவில் காஸர்கோட்டுக்கு வந்து சேர வேண்டியிருக்கும். காலையில் வந்திறங்குவதே வசதி.

ரயில் தண்டவாளத்தில் இயந்திரம் இல்லாமல் இருளுக்குள் நின்றுகொண்டிருக்கும். பழக்கம் காரணமாக அதைக் கண்டுபிடித்து ஏறி பெட்டியில் பெஞ்சில் படுத்து தூங்கிவிட முடியும். காலையில் காஸர்கோட்டுக்கு வரும்போதுதான் முதல் மலையாளச் செய்தித்தாள்கள் வரும். சீசன் டிக்கெட் ஆட்கள் கண்ணூர் செல்வதற்காக ஏறி பெட்டிகளை நிறைப்பார்கள். அந்த ரகளையில் கண்விழிக்காமல் இருக்க முடியாது. அப்படியே விழிக்காவிட்டால் கூட கண்ணூர் சென்று அடுத்த ரயிலில் வருமளவுக்கு தெம்பு கொண்டவன் நான்.

தூங்கிக் கொண்டிருந்தவன் சலசலவென்ற பேச்சொலி கேட்டுக் கண்விழித்தேன். எழுந்து அமர்ந்து இருட்டுக்குள் சூழ என்ன நடக்கிறதெனப் பார்த்தேன். நிறையப் பெண்கள். முப்பது நாற்பது பேர் இருக்கலாம். பெட்டி நிறைய அமர்ந்து சண்டைபோடுவதுபோல பேசிக்கொண்டிருந்தார்கள். நடுவே சிரிப்பின் ஒலி கேட்டதனால் அது சண்டை அல்ல என்று தெளிந்தேன். என் அசைவை கண்டு ஒருத்தி ‘உய்யோ’ என்றாள். அது காஸர்கோட்டுக்கே உரிய ஒர் ஒலி. ”உய்யோ என்றோளீ’ என்றால் ‘அய்யோ இவளே’ என்று பொருள். ”இங்கே ஒரு ஆள் இருக்காண்டீ”

நாலைந்துபெண்கள் என்னைப்பார்த்தார்கள். இருட்டில் அடையாளம் தெரியவில்லை. ஒருத்தி ஒரு டார்ச் லைட்டை என் முகத்தில் அடித்தாள். நாலைந்துபேர் டார்ச் அடித்தார்கள். எல்லாரிடமும் சிறிய டார்ச் லைட் இருந்தது. நான் வெளிச்சத்துக்கு கண் கூசி கையால் மறைத்துக்கொண்டேன். ”சின்னப்பையண்டீ”என்று ஒருகுரல். ”டேய் எங்கடா போறே?” என்று இன்னொருகுரல்.”காஸர்கோட்டுக்கு”என்றேன் பலவீனமாக. ”அங்கே என்ன செய்கிறாய்?” நான் மெல்ல ”அங்கே டெலிபோனில் வேலை”என்றேன். அவர்கள் குழப்பமாக தயங்கியபின் ”என்ன வேலை?”என்றார்கள். நான் மீண்டும் சொன்னேன். ஒளிகள் அணைந்தன.

ரயிலில் விளக்கு போட்டபோது அவர்களைப் பார்த்தேன். பதினாறு வயதுமுதல் நாற்பத்தைந்து வயதுவரையிலான பெண்கள். கணிசமான பேர் சேலையால் தலையை முக்காடிட்ட ஏழை முஸ்லீம்கள். தூக்கக் கலக்கம் கொண்ட வெளிறிய முகங்கள். பல பெண்கள் சரிந்தும் ஒருவரோடொருவர் சாய்ந்தும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வெளிச்சத்தில் என்னைப்பார்த்த ஒருத்தி ”உனக்கென்ன சீக்கா?”என்றாள். ”இல்லை”என்றேன். ”வீட்டிலே யார் இருக்கிறார்கள்?” ”யாருமில்லை”என்றேன் ”உம்மா?” ”அம்மா அப்பா செத்துப்போய்விட்டார்கள்” அவர்கள்  அனுதாபத்துடன் என்னை பார்த்தார்கள்.” அதாக்கும் இப்படி கிறுக்கனைப்போல் இருக்கிறான்”என்று ஒரு வயதான பெண் சொன்னாள்.

அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டே இருந்தார்கள். கொஞ்சநேரத்தில் நன்றாகவே தூங்கிவிட்டார்கள். நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். யாருக்கும் உடல் பற்றிய நினைப்பே கிடையாது. வாய் ஒழுகதூங்கிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் மார்புகள் கிட்டத்தட்ட திறந்தே கிடந்தன. பார்வையை திருப்பிக்கொண்டு வெளியே இருளைப் பார்த்தேன்.

அவர்களை மெல்ல மெல்ல நான் புரிந்துகொண்டேன். மங்களூர் துறைமுகப்பகுதிகளுக்கு விபச்சாரத்துக்குச் சென்று வரும் கேரளப்பெண்கள். காஸர்கோட்டை ஒட்டிய கும்பளா உப்பளா போன்ற பின்தங்கிய முஸ்லீம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்கே பிழைப்புக்கு பெரும்பாலும் எந்த வழியும் இல்லை. மங்களூர் துறைமுகம் உருவான நாள்முதலாக நடந்துவரும் இந்தப்பழக்கம் காலப்போக்கில் குறைந்து வருவதாக நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனாலும் தினமும் முந்நூறுபேர் வரை மங்களூருக்குச் சென்று மீண்டார்கள்.

மீண்டும் மீண்டும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியானால் விபச்சாரிகள் என்றால் இவர்கள்தான். இப்படித்தான் இருபபர்களா? மிகச்சாதாரணமாக இருந்தார்கள். எல்லா ஏழைப்பெண்களையும் போலத்தான். மங்களூரில் வாங்கிய காய்கறிகளையும் பிற சாமான்களையும் துணிப்பைகளில் வைத்திருந்தார்கள். களைத்த தோற்றம். பலர் நெடுங்காலமாக நோயுற்றிருப்பதன் வெளிறல்களுடன் இருந்தார்கள்.

அவர்களுடன் பழக ஆரம்பித்தபோது மெல்லமெல்ல அவர்கள் வேறு என்று புரிந்துகொண்டேன். அடிக்கடி அவர்கள் இருக்கும் பெட்டியில் ஏறவேண்டியிருந்தது. அவர்கள் கூட்டம் கூட்டமாகவே ஏறுவார்கள், அது ஒரு பாதுகாப்புமுறை. ஏறியதுமே சண்டைகள், பூசல்கள்.  ரயிலிலேயே சீட்டு போட்டு ஏலம் விடுவதுண்டு. ரயிலில் பயணம்செய்யும் நேரம் முழுக்க மெல்லிய குரலில் பாடிக்கொண்டே இருப்பாள் ஒரு பெண். பலர் சிகரெட் குடிப்பார்கள்.  பெரும்பாலானவர்கள் குடிபோதையிம் இருப்பார்கள். பையில் நாட்டுச்சாராயம் வாங்கிக்கொண்டுசெல்பவர்களும் உண்டு

அவர்கள் அனைவரிலுமே அவமானப்படுத்தப்பட்டவர்களின் முகபாவனை இருந்தது. அடித்து துரத்தப்பட்ட ஒரு இடத்துக்கு மீண்டும் செல்லும்போது வரும் முகம். அத்துடன் ஒருவகையான வன்மம். எப்போதும் எவரையும் புண்படுத்த தயாராக இருக்கும் மனநிலை அது. சட்டென்று பூசலுக்கு இறங்கி விடுவார்கள். எந்தக்கணமும் ஒருவரை ஒருவர் கீழ்த்தரமான மொழியில் திட்டிக்கொள்ளவோ முடியைப்பிடித்து சண்டைக்கு இறங்கவோ செய்வார்கள்

அத்தனைபேரிலும் ஒரு ஆண்பிள்ளைத்தனம் இருப்பதாகவும் தோன்றியது. முலைகள் இடுப்பு பற்றிய பிரக்ஞை இல்லாமலானாலேயே ஆண்பிள்ளைத்தனம் வந்துவிடும் போல. பெரும்பாலானவர்களின் குரலும் கட்டைக்குரலாக ஆகிவிட்டிருந்தது. பேச்சு முகச்சுளிப்பு உடல் மொழி அனைத்திலும் நளினமற்ற ஒரு கட்டைத்தனம். அதீதமான காமம் கொண்டு கீழிறங்கிய ஒரு மனிதன் மட்டுமே அவர்களில் கவற்சி உறமுடியும். அவர்கள் எனக்கு கடுமையான அச்சத்தைத்தான் ஏற்படுத்தினார்கள். கூடவே ஒருவகை அருவருப்பு. அவர்களில் பலருக்கு தேமல் போன்ற சரும நோய்களும் இருந்தன. பதிலுக்கு என்னை அவர்கள் ஒரு உயிராகவே எண்ணவில்லை.

அவர்களைக் கண்டாலே அந்தபெட்டியைத்தவிர்த்து போன நான் அவர்கள் இருக்கும் பெட்டியிலேயே ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருமுறை ரயிலில் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒருவன் வந்து என்னருகே படுத்துக்கொண்டான். நான் திடுக்கிட்டு எழுந்தபோது அவன் என்னைத்தழுவியபடி ”ஒந்நுமில்ல மோனே ஒந்நுமில்ல” என்றான். நான் எழமுயன்றபோது என்னைப்பிடித்துக்கொண்டான். அவனுடைய முழங்கையை அழுத்திக்கடித்து பலம்கொண்டமட்டும் இறுக்கினேன். அவன் அலறியபடி விலக எழுந்து வெளியே பாய்ந்தேன். இன்னொருவனும் அருகே இருந்தான். இருவரும் என்னைத்துரத்தினார்கள். நான் இருளில் தட்டித்தடுமாறி ஓடி அந்தப் பெண்கள் இருந்த பெட்டியில் ஏறிக்கொண்டேன். அவர்கள் நின்றுவிட்டார்கள்.

அதன்பின் நான் ரயில்நிலையம் வந்தால் அந்தப்பெண்களுடனேயே இருப்பேன். அவர்களுடனேயே ஏறிக்கொள்வேன். ஒருசிலர் என்னைப்பார்த்து புன்னகை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருத்தி என்னிடம் ”தம்பி டோப்பு கேஸா?”என்றாள். நான் புன்னகைசெய்தேன். ”அதுதானே பார்த்தேன்”என்றாள். சிலசமயம் ஏதாவது தின்னும் பொருள் இருந்தால் எனக்கும் தருவார்கள். வேர்க்கடலை, சுண்டல்.

ஒருநாள் ரயிலில் மூர்ச்சையாகி விழுந்துவிட்டேன். அப்போது அடிக்கடி அத்தகைய மயக்கங்கள் வரும். தூக்கமில்லாமல் பலநாட்கள் தொடர்வதுதான் காரணம். ஒன்றுக்குப்போக எழுந்தவன் அப்படியே விழுந்துவிட்டேன். கண்களை திறந்தபோது என் முகத்தில் நீர் தெளித்துக்கொண்டிருந்தார்கள். நிறைய முகங்கள் மேலே தெரிந்தன. ரயில் குழாயில் பிடித்த நீரை குடிக்கத்தந்தார்கள். குடித்தபோது சற்று தெம்பு ஏற்பட்டது ஒரு நாற்பது வயதான பெண் என்னை ஆறுதல்படுத்தி ”தூங்கு…அப்படியே தூங்கு”என்றாள். காஸர்கோட்டில் அவளே இறக்கி விட்டாள். ”போய்க்கொள்வாயா மோனே?” என்றாள். ”ம்ம்” என்றேன்.

அவள்பெயர் கதீஜாம்மா. மறுமுறை ரயிலில் பார்த்தபோது பிரியமாகச் சிரித்து ”எங்கே போய்விட்டு வருகிறாய்? சத்தியமாகச் சொல்லவேண்டும்”என்றாள்,  ”இந்தப்பி¨ழைப்பு நாய்பிழைப்பு….நீ படித்தவன் போல இருக்கிறாயே” நான் சினிமா பார்க்கத்தான் செல்கிறேன் என்றேன். அவளால் நம்ப முடியவில்லை. டிக்கெட்டுகளைக் காட்டினேன். வியப்புடன் பார்த்தாள். ”மோனுக்கு கிறுக்கா?”என்றாள். மகன் என்றுதான் எப்போதும் என்னைச் சொன்னாள்.

மெல்ல மெல்ல நான் அவளிடம் என்னுடைய வேலை, குடியிருப்பு, என் குடும்பம் எல்லாவற்றையும் சொன்னேன். என் அம்மா அப்பா இறந்த விதத்தைப்பற்றி நான் காசர்கோட்டில் அவளுடன் மட்டுமே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். மிகவும் கனிந்த ஒரு பாவனை அவளிடம் இருந்ததை நினைவுகூர்கிறேன். நான் என் இலக்கிய ஆசைகள் என்னுடைய பயணங்கள் அலைச்சல்கள் எல்லாவற்றையும்  அவளிடம் சொன்னேன். ரயில் முழுக்க பேசிக்கொண்டே வருவோம். சிலசமயம் வேறு பெண்கள் அப்பேச்சில் கலந்துகொள்வார்கள். சிலர் பேச்சுக்குள் நுழைவது கதிஜாம்மாவுக்குப் பிடிக்காது, அதட்டி விரட்டுவாள்

ஒருமுறை ஒருத்தி நடுவே புகுந்து ஏதோ ஆபாசமாகச் சொல்லி சிரிக்க அவளை கதீஜாம்மா ஓங்கி ஒரு அறை விட்டாள். ”ஹராம் பொறப்பே…ஓடு..”என்று கத்தினாள். அவள் திருப்பி அடிக்க கடுமையான சண்டை. நான் வெலவெலத்துப்போய்விட்டேன். கதீஜாம்மாவின் இன்னொரு முகம் அப்போதுதான் தெரிந்தது எனக்கு. அடிபட்ட பெண் சாபமிட்டபடிப் போனாள்.

அவள் மலையாள வார இதழ்களை ஒன்றுவிடாமல் படிப்பாள். அதில் வந்த தொடர்கதைகளைப்பற்றி உணர்ச்சிகரமாக என்னிடம் பேசினாள். ‘மனுஷ்ய ஜீவிதம் துக்கமாக்கும். அதைத்தான் எல்லாரும் எழுதுகிறார்கள்.’ அந்தக்கதைகள் எல்லாமே உச்சகட்ட மெலோடிராமா கொண்டவையாக இருக்கும். சந்திரகலா எஸ் கம்மத் என்ற எழுத்தாளரை நேரில் ரயிலில் பார்த்ததாக பரவசத்துடன் சொன்னாள். ”நான் சந்திரகலா அம்மா தானே என்று கேட்டேன். ஆமாம் என்றார்கள்” என்று சொல்லி ஒரே பூரிப்பு.

அவளுக்கு மூன்றுபெண்கள். மூன்றுபேருமே கம்பெனியில் கயிறு திரிக்கிறார்கள். சிறுவயதிலேயே ஒரு கிழவருக்கு நாலாம்தாரமாக ஆகி கணவன் இறந்தபின் குழந்தைகளுடன் கைவிடப்பட்டவள். அதிகமாக தன்னுடைய தனிவாழ்க்கையைப்பற்றி சொல்லவில்லை. ‘படைச்சோன் கணக்கு மாஸ்டராக்கும். எல்லாத்துக்கும் அவனுக்கு ஒரு கணக்குண்டு”

அன்றெல்லாம் கேரளத்தில் மூப்புகல்யாணம், அரபிக்கல்யாணம் ஆகியவற்றைப்பற்றித்தான் நாளிதழ்களில் பேச்சாக இருந்தது. முஸ்லீம் பணக்கார வயோதிகர்கள் ஒரு அதிகாரபூர்வ மனைவியை வைத்துக்கொண்டு பிற மனைவியரை தொடர்ந்து நிக்காஹ¤ம் தலாக்குமாகச் செய்துகொண்டிருப்பார்கள். சில திருமணங்கள் பத்துநாள்கூட நீடிக்காது. அதற்கு அப்பெண்களுக்கு பெரும் பணம் கொடுப்பார்கள். அந்தப்பணத்தைக்கொண்டு அப்பெண்களைப்பெற்றவர்கள் அவளையும் தங்கைகளையும் திருமணம்செய்து கொடுப்பார்கள். இதற்கு மூப்புகல்யாணம் என்று செல்லப்பெயர். இதற்கு சில குறிப்பிட்ட மௌல்விகளே புரோக்கர்கள். அப்பள்ளிவாசல்கள் பெரும் வருமானம் ஈட்டின.

அதேபோல அரேபிய நாட்டைச்சேர்ந்தவர்கள் இங்கே வந்து முறைபப்டி நிக்காஹ் செய்து பெண்களுடன் சிலமாதங்கள் தங்கிவிட்டு பணம்கொடுத்து தலாக் செய்துவிட்டு செல்வார்கள். ஒருவகை சட்டபூர்வ விபச்சாரம் இது. பெரும்பாலும் இவர்கள் பதினைந்து வயதுக்கு உட்பட்ட மைனர் பெண்களாக இருப்பார்கள். அவ்வாறு எர்ணாகுளத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லபப்ட்ட ஒரு சிறுமியையும் கூடச்சென்ற ஏமன் நாட்டு அரேபியரையும் ஒரு பெண்போராட்டக்காரர் விமானத்திலேயே பிடித்து பிரச்சினைசெய்தார். ஊடகங்கள் அதை பெரிய செய்தியாக்கி அவ்வகை திருமணங்களைப்பற்றிய தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டன

இஸ்லாமியச் சீர்திருத்தவாதிகள் அந்தவகை திருமணங்களை எதிர்த்தார்கள். மதத் தலைமையில் இருந்தே அதற்கு கடும் கண்டனம் வந்ததுதாகவே அரசு அவ்வகை திருமணங்களை கண்டுபிடித்து தண்டிக்க ஆரம்பித்தது. அரபிகள் அதன் பின்னர் ஹைதராபாத்தை தங்கள் வேட்டைக்களமாகக் கொண்டார்கள். அங்கு சிலர் பிடிபட்டபோது அதுவும் செய்தி ஆகியது. இப்போதும் கேரளத்தில் இவ்வழக்கம் நீடிப்பதாகச் செய்திகள் வருகின்றன.

ரயிலில் பயணங்களில் உரைய்நாடிக்கொண்டிருக்கும்போது நான் அவ்வயதுக்கே உரிய முதிர்ச்சியின்மையுடன் ”ஏன், உங்கள் பெண்ணை அரபிக்கல்யாணத்துக்கு கொடுக்க வேண்டியதுதானே?” என்று கேட்டேன். கதீஜாம்மா சட்டென்று மற்றவளாக மாறினாள். யட்சிக்கதைகளில் பேரழகியான யட்சி சட்டென்று கண்கள் தீப்புள்ளிகளாக எரிய , நாக்கு பிதுங்கி வழிய, கொடூரத்தோற்றம் கொள்வதுபோல ! ”ச்சீ , ஹிமாறே…செருப்பால் அடிப்பேன்…என்னடா சொன்னே? ஹராம்பொறப்பே….புலையாடிமோனே ”என்று சீறிஎழுந்து விட்டாள்.

நான் ஒடுங்கி நடுங்கிப்போய் ”இல்ல நான் …”என்று ஏதோ சொல்ல வந்தேன். கையை ஓங்கியபடி அடிக்க வந்தவளை பலரும் பிடித்துத் தடுத்தார்கள். குலைகுலையாகக் கெட்டவார்த்தைகள். முகம் தீயில் எரிவதுபோல இருந்தது. நான் கூட்டம் நடுவே பிதுங்கி வேறுபக்கம் ஓடித்தப்பினேன். என்னுடைய கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு மாதங்களாக அவளை பார்க்காமல் ஒதுங்கி சென்றேன். இருமுறை நேரில் வந்தபோது பதுங்கிக்கொண்டேன். பின்னர் வேறு ஒரு பெட்டியில் படுத்திருக்கும்போது சற்றே கண்ணயர்ந்து விழித்தபோது என்னருகே இருந்தாள். நான் எழப்போனேன்., எட்டி அன் காலில் கையைவைத்தபடி. ”என்னோடு பொறுக்குக…மோனே” என்றாள். நான் பேசாமல் எழுந்து அமர்ந்தேன்.

”நான் இப்படிபப்ட்டவள்தான்… என்னுடைய ஜீவிதம் இப்படி ஆகிவிட்டது. வாயும் நாக்கும் கெட்டுப்போயிருக்கின்றன…”என்றவள் ”ஆனா நீ அப்படி கேட்டதும் தப்பு…என் குழந்தைகளை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்குத்தானே நான் இந்தப்பாடு படுகிறேன். என் உடலை விற்றுக்கொண்டிருக்கிறேன்.பெற்ற பிள்ளைகளை விற்பேனா?” என்றவள் அபப்டியே பீரிட்டு அழ ஆரம்பித்தாள். நான் வாயைப்பிளந்து அழுபவளைப் பார்த்து அமர்ந்திருந்தேன். அழுது அழுது அவளே தேறி கண்களைத்துடைத்தபின் வெளிறிய உதடுகளால் புன்னகைசெய்தாள்.

நாலைந்து மாதங்களுக்குப் பின் அவளுடைய மூத்த பெண்ணுக்குத் நிக்காஹ் வைத்திருந்தாள். ”விளிச்சால் வருமோ?” என்றாள். ”கண்டிப்பாக வருவேன்” என்றேன். ”வரணும் கேட்டோ?” என்று சொன்னாள். நிக்காஹ் முடிந்தபின் சாயங்காலம் வீட்டில் நடந்த ‘சுலைமானி சல்க்காரம்’ என்ற டீ விருந்துக்கு நான் சென்றிருந்தேன்.

மொகரால்புத்தூரில் இருந்து கும்பளாவுக்குச் சென்று அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து அந்தக் குடிசைப்பகுதியை அடைந்தேன். கடலோரமாக சிறிய ஆறு ஒன்றின் அழிமுகம் அப்படியே கரிய சேற்றுப்பரப்பாக மாறிப்பரந்திருந்தது. அதன் ஓரமாகவே குடிசைகள். அப்பகுதியே குமட்டச்செய்யும் சேற்று வாடையால் சூழப்பட்டிருந்தது. சற்று மேடான பகுதியில் சிறிய மசூதி. போவதற்குள் இருட்டிவிட்டது. கடல் பெரியதோர் உலைபோல செந்நிறமாக உருகிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது

குடிசைகளில் ஒரே சத்தம். நிர்வாணமான மொட்டைத்தலைக் குழந்தைகள். தலையில் ‘தட்டம்’ என்னும் முக்காடு போட்ட பெண்கள். கல்யாணவீட்டை கண்டுபிடிப்பது எளிது. வீட்டுமுன் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் இருந்தது. ஏழெட்டுபேர் பெஞ்சுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மீசை இன்றில் பெரிய தாடி வைத்த ஒரு மௌலவி கட்டைவிரல் தடிமனுள்ள நாட்டுச்சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தார். நான் தயங்கி நின்றேன்.

மௌலவி கனத்த குரலில் ‘நாயரு குட்டியா?’ என்று கேட்டார் ‘ஆமா’ என்றேன். ‘வாங்க…கதீஜா சொல்லியிருந்தா’என்றார். எனக்கு ஒரு ஒயர் நாற்காலிபோடப்பட்டிருந்தது. கடற்காற்று அடிக்கும்போது கெட்டுப்போன கருவாடும் சேறும் கலந்த வாடை எழுந்து குடலைப்பொங்க வைத்தது. காற்று சில நிமிடங்கள் நிலைக்கும்போது சற்றே ஆசுவாசம். மீண்டும் நாற்றத்தின் அலை. சில நிமிடங்கள் கழித்து அந்த நாற்றத்தைப் புரிந்துகொண்டேன். உண்ணத்தகாத மீன்களை வாங்கி மட்கவைத்து உரமாக ஆக்கி விற்கும்பொருட்டு குவித்து வைத்த குவியல்கள் அப்பால் சிறிய மலைகள் போல எழுந்து கிடந்தன.

மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமே அல்ல. மலக்குழியில் புழுக்கள் வாழ்வதுபோல மேடான இடங்களில் இருக்கும் மக்களின் சகல கழிவுகளும் வந்து சேரும் இந்தக் குழியில் இம்மனிதர்கள் வாழ்கிறார்கள். மனிதர்கள் மலத்தில் நெளியும் புழுக்களைப் பிடித்து தின்பதில்லை.ஆனால்  இங்கே வாழும் மனித உடல்களை நுகர மங்களூரின் பளபளப்பான சாலைகளில் கார்களுடன் வந்து நிற்கிறார்கள். கதீஜாம்மா சொல்லியிருக்கிறார். எவ்வளவுபெரிய கார்களெல்லாம் அவளை ஏற்றிக்கொண்டு செல்லும் என்று.

சற்று நேரத்தில் கதீஜாம்மா வந்தார். புதிய பாலியெஸ்டர் லுங்கி, மேலே நீளமான சட்டை. அதற்குமேல் ஒரு பெல்ட். புதிய சரிகைத்தட்டம். முகமெங்கும் புன்னகை. ”வரீன் வரீன்” என்று சொன்னபடி வந்து ”பகர்ப்பு கொடுக்க போயிருந்தேன்” என்றாள். முஸ்லீம் கல்யாணங்களில் பிரியாணியை தட்டுகளில் பக்கத்து வீடுகளுக்கு முழுக்க பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதை உரியவர்களே கொண்டு கொடுத்தால்தான் வாங்குவார்கள்.

அங்கே இருந்தவர்கள் அனைவருக்கும் அலுமினிய தட்டுகளில் வாழை இலை வைத்து பிரியாணி கொண்டு வந்து கொடுத்தார்கள். இளங்கன்றின் கறி. பிரியாணி மிகச்சுவையாகத்தான் இருந்தது. மௌலவி அவரது தட்டில் இருந்து பெரிய கறித்துண்டை எடுத்து எனக்குப்போட்டு ”கழிக்கின் நாயரே” என்றார். இன்னொருவர் இன்னொரு பெரிய துண்டு எடுத்து எனக்கு வைத்து ”கழிச்சோளூ”என்றார்.

கேரள இஸ்லாமியரின் வழக்கம் அது. அரேபியர்களிடமிருந்து வந்தது. நெருக்கமாக வாழும் கப்பல் வாழ்க்கையால் உருவானது. ஆகவே எச்சில் என்ற கருதுகோள்கள் இல்லை. காசர்கோடு சென்ற ஆரம்பத்தில் அதைப்பற்றிய அருவருப்பு இருந்தது. ஆனால் பின்பு அது மறைந்தது. மனம் நெகிழச்செய்யும் ஆழ்ந்தநட்பின் ஈரம் அதில் உள்ளது –அரேபியப்பண்பாட்டின் சாரம் என்றால் அதுதான்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த அனைவருமே என்னை ஊட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்தக்கறி மிக அருமையான உணவாக, மீண்டும் இன்னொரு முறை உண்பதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் தன் தட்டிலிருந்து சுவையான பகுதிகளை அள்ளி எனக்கு வைத்துக்கோண்டிருந்தார்கள். ”நான் போதும்” என்றேன். ”இளமையில் நன்றாக சாப்பிட்டால்தான் நீண்ட ஆயுள் கிடைக்கும்”என்று மௌலவி சொன்னார். ”படைச்சவன் மனிதனுக்கு பல்லைக்கொடுத்தது நன்றாகத் தின்பதற்காகத்தான்”. எனக்கு மூச்சுத்திணறியது.

அதன்பின் கதீஜாம்மா என்னை உள்ளே அழைத்தாள். உள்ளே ஹரிக்கேன் விளக்கின் ஒளியில் மணப்பெண் அமர்ந்திருந்தாள். மலிவான சரிகையால் நிறைந்த தட்டம். என்னைக்கண்டதும் நிமிர்ந்து பார்த்து புன்னகைசெய்தாள். மிக அழகான பெண். பொன்னிறமான அரேபிய முகம். சுறுமா [கண்மை]] எழுதிய கண்களில் நாணமும் மகிழ்ச்சியும் மின்ன, மெல்லிய இதழ்கள் விரிய, வெண்பற்கள் தெரியச் சிரித்து ”ஸலாம் இக்கா’ [அண்ணா] ‘என்றாள்.

நான் இருபது ரூபாயை அவள் கையில் கொடுத்து ஆசீர்வாதம்செய்துவிட்டு வெளியே வந்தேன். நிமிர்ந்து நின்றால் கூரை இடிக்கும் குடிசைக்குள் நாலைந்து பெண்கள் கோரைப்பாய்களில் அமர்ந்திருந்தார்கள். வீட்டுக்குப் பின்பக்கம் பிரியாணி சமைக்கும் இடத்திலிருந்து பிரியாணியின் ஆவியும் புகையும் எழுந்து கூரை வழியாக உள்ளே வந்தன. மூச்சுத்திணறி அங்கே நிற்கமுடியவில்லை.

வெளியே வந்தபோது மாப்பிள்ளை வந்திருந்தான். ஒல்லியான குள்ளமான இளைஞன். அவன் முகமே ஒரு பக்கமாக கோணியிருந்தது. கைகள் கால்கள் எல்லாவற்றிலும் ஒரு கோணல். அவன் நடந்து பெஞ்சில் அமர்ந்தபோதுதான் அவன் ஒரு கால் பலவீனமான நொண்டி என்று தெரிந்தது. ”இதாக்கும் அப்து…புதுமணவாளன்” என்றார் மௌலவி. அப்து வணங்கினான்.

அப்து சைக்கிளில் மீன் கொண்டுசென்று விற்கிறான் என்று சொன்னார்கள். ஒல்லியான ஒற்றைக்காலுடன் எப்படி அவன் சைக்கிள் ஓட்டுவான் என்றே தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உழைத்துப்பிழைப்பவனாக இருப்பான். அதைத்தான் அடிகக்டி கதீஜா சொல்வாள் ”ஒரு பெண்ணை வைத்து சோறுபோடக்கூடிய ஆணாக இருக்க வேண்டும்… ஆணாக இருந்தால் போதும்”

விடைபெற்றபோது மௌலவி என்னை அரபியில் ஆசிர்வதித்தார். மேடேறி சாலையை அடைந்த போது அந்த வாடைக்குள் எப்படி அத்தனைநேரம் இருந்தேன் என்று தோன்றியது. மங்களூர் நெடுஞ்சாலையில் ஒளிவெள்ளம் பெய்தபடி சாரி சாரியாக வண்டிகள் எதையும் அறியாமல் சென்றுகொண்டிருந்தன. அந்தச் சேரிக்குமேல் விண்மீன்கள் எட்டாத உயரத்தில் நிறைந்திருப்பதுபோல மேடான நிலத்தில் வீடுகளின் வெளிச்சங்கள். அங்கிருந்து பஸ் பிடித்து மொகரால்புத்தூர் சென்றேன்.

அதன்பின் கதீஜாம்மாவைப் பார்க்க நேரிடவில்லை, நான் ஒரு அகில இந்தியப்பயணத்துக்குக் கிளம்பினேன். திரும்பிவந்து பாலக்கோட்டுக்கு மாற்றம் பெற்று வந்துவிட்டேன். பிற இரு பெண்களுக்கும் ஆண்களை கண்டுபிடித்திருப்பாள் என்றுதான் படுகிறது.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் ஏப்ரல்  27, 2010

 

தொடர்புடைய பதிவுகள்

வால்

$
0
0

1

 

விஜியை நான் கைக்குழந்தையாகப் பார்த்திருக்கிறேன். என் நினைவில் உள்ள ஆகப்பழைய சித்திரம் அவளை ஒரு பாயில் படுக்க வைத்து யாரோ அவள்மேல் குனிந்து அவளைக் கொஞ்சுகிறார்கள். அவள் மல்லாந்துகிடந்து முஷ்டிபிடித்த சிறுகைகளையும் கால்களையும் உதைத்து காற்றில் நீந்துகிறாள். நான் பதறி அழுதபடி ”அப்பியை விடு…அப்பியை விடு” [அப்பி-கைக்குழந்தை] என்று கதறுகிறேன். கொஞ்சுபவரும் வேறு சிலரும் சிரிக்கிறார்கள். அப்போது விஜிக்கு மூன்றுமாதம் இருக்கும். அப்படியானால் அது அம்மாவின் பிறந்த ஊரான நட்டாலமாக இருக்கலாம்.

அதன்பின் பல சித்திரங்கள். அவளை நல்ல கருமையான மாநிறம் கொண்ட பொத்துபொத்தென்ற குழந்தையாக நன்றாகவே நினைவுகூர்கிறேன். அம்மா முழங்காலில் அவளைப்போட்டுக்கொண்டு வெந்நீர் விட்டு குளிப்பாட்டும்போது நான் அருகே குந்தி அமர்ந்து அவளுடைய குண்டு தொப்பை மேல் வழியுன் நீரை தொட்டுப்பார்க்கிறேன். அவளுடைய கன்னத்தில் வைத்த பெரிய திருஷ்டிப்பொட்டை ஈரம் காயாமலேயே தொட்டு அவளுடைய மறு கன்னத்தில் பொட்டுவைக்க முயன்று முகமெல்லாம் தீற்றிவிடுகிறேன். அவளை கவுன் போட்டு அம்மா கொண்டுபோகும்போது நான் பின்னால் ஓடி என்னிடம் அவளை தரும்படிச் சொல்லி அடம்பிடிக்கிறேன்.

முஞ்சிறையின் வீட்டில் தென்னை ஓலை நிழல்கள் வீட்டுக்குள் ஆடுகின்றன. அவள் தடுக்கில் கிடந்து கொலுசு போட்ட கால்களை காற்றில் ஆட்டுகிறாள். அவளுடைய முழங்கால்களும் மூட்டும் கருமையாக இருக்கும். வெள்ளிக்கொலுசும் உள்ளங்காலின் மென்மையான சிவந்த சருமமும் எனக்கு அத்தனை துல்லியமகா நினவிலிருக்கின்றன.

விஜி என்னைவிட ஒன்றரைவருடம் இளையவள். அப்பா அவளுக்கு லட்சுமிக்குட்டி அம்மா என்றுதான் பெயரிட்டார். என் சித்தப்பாதான் அதை விஜயலட்சுமி என்று மாற்றினார். விஜிக்கு என் அப்பா சாயல். அவளுக்கு பதினாறு வயதாக இருக்கும்போது பள்ளிநிகழ்ச்சி ஒன்றுக்காக அவள் குழித்துறை சென்றிருந்தபோது அப்பாவின் அலுவலகத்தோழர் ஒருவர் அவளைக் கண்டு அருகே வந்து அவள் பாகுலேயன்பிள்ளையின் மகள்தானா என்று கேட்டார். அப்பா அவரது அம்மாவின் சாயல் என்பதனால் தோற்றம் குணம் எல்லாமே என் அப்பாவழிப்பாட்டி லட்சுமிக்குட்டியம்மாவின் சாயல்தான்.

மாநிறம். சின்ன வயதில் அவள் குண்டாக புஷ்டியான கன்னங்களுடன் இருப்பாள். நாட்டு வழக்கில் கொழுவிய கன்னங்களுக்கு ‘புட்டு’ என்று பெயர் உண்டு. விஜியை ஐந்துவயதுவரை பலரும் புட்டு என்றுதான் அழைப்பார்கள். கனத்த கூந்தல் சிறு வயதிலேயே உண்டு. முட்டைக் கண்கள். சிறிய உதடுகள். லேசாம எம்பி எம்பி துள்ளியபடித்தான் எங்கும் செல்வாள். அவள் சிறுவயதில் நடப்பதே கிடையாது. ‘ரப்பர்பந்து மாதிரி நடக்கிறாளே’ என்று அம்மாவிடம் கேட்பார்கள். அம்மா ‘அவள் மனுஷக்குட்டி இல்லை, நாய்க்குட்டியாக்கும்’ என்பாள்.

விஜிக்கு ஒரு வயதில் சோறு கொடுக்கும் சடங்குந் அடந்தது. அவள் மொட்டை போட்டு காதுகுத்தி கண்ணீர் வழிந்த தடம் உலர குமாரகோயில் முகமண்டபத்தில் அமர்ந்திருந்தாள். அவள்முன் பெரிய வாழி இலையில் சர்க்கரைப்பாயசம், வாழப்பழம் , பொன் நகை, புத்தகம், சிறிய கத்தி, நாணயம், பட்டுத்துணி என்று வாழ்க்கையின் பல்வேறு சாத்தியங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக குழந்தைகள் பாய்ந்துபோய் எதையாவது எடுக்கும். நான் வாழைப்பழத்தை எடுத்து பாயசம்மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேனாம். விஜி கடைசிவரை அப்படியே அமர்ந்திருந்தாள். அவளை நான்குபக்கமும் கைதட்டி அழைத்தார்கள். கெஞ்சினார்கள். லேசாக தள்ளிவிட்டுக்கூட பார்த்தார்கள். கூட்டத்தை அலட்சியமாகப் பார்த்துவிட்டு பிள்ளையார் பிடித்தது மாதிரி இருந்துவிட்டாள். கடைசியில் அம்மா கொஞ்சம் பாயசத்தை எடுத்து அவள் வாயில் தீற்றி அவளை தூக்கிக்கொண்டாள்

வழக்கமாக பெண்குழந்தைகள் சீக்கிரமே பேச ஆரம்பிக்கும். விஜி மூன்றுவயதானபோதுதான் ஓரளவு பேச ஆரம்பித்தாள்.அது வரை ஒற்றைச் சொற்கள்தான். அதுவும்கூட முடிந்தவரை பேசுவதில்லை. யாராவது பேசினால் அதை மிகக்கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் நெடுநேரம் கழித்து அவளுடைய முகம் கனத்து உதடுகள் பிதுங்கி இருப்பதை வைத்து அறிந்துகொண்டு, அந்தச் சூழலை வைத்து ஊகித்துக் கொள்ளவேண்டும். ‘என்னது? என்னதுடீ?’என்று எத்தனை கேட்டாலும் பதில் சொல்ல மாடாள். தலையை கனமாக குனித்து பேசாமல் நிற்பாள். பத்துபதினைந்து தடவைக்குமேல் கேட்டால் கண்களில் கன்ணீர் திரண்டு வரும். அவள் வாய்விட்டு அழும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. ஆகவே ‘கல்லுணி’ என்ற பெயரும் அவளுக்கு இருந்தது.

அம்மாவுக்குத்தான் அவளுடைய கல்லுணித்தன்மை கடுப்பைக் கிளப்பும். காலையில் ஒரு குழந்தை கண்ணீருடன் அமர்ந்திருக்கிறது, என்ன பிரச்சினை என்று கேட்டால் சொல்வதுமில்லை. எழுந்திருப்பதில்லை, பேசுவதில்லை, சாப்பிடுவதில்லை. என்ன செய்யமுடியும்? ‘வாயத்தெறந்து சொல்லுடீ சனியன்பிடிச்சவளே…வந்து வாய்ச்சிருக்கு பாரு’ என்று சொல்லி முடியைப்பிடித்து உலுக்குவாள். சில சமயம் அடிப்பாள். ஆனால் தண்டிக்கும்தோறும் அவளுடைய அழுத்தம் ஏறியேறித்தான் போகும். கடைசியில் அம்மாதான் இறங்கிவந்து ”செரிடீ…அம்மா தெரியாம அடிச்சிட்டேன்…என் கண்ணுல்ல…என் சக்கரை இல்ல…சொல்லு கண்ணம்மா…என்ன?’என்று கெஞ்சுவாள். அதற்கும் பதில் சொல்லமாட்டாள். ”டேய் சொல்லுடா..இவ எதுக்குடா இப்டி இருக்கா?”

விஜியின் வாயே நான்தான். அவள்சார்பில் பேசுவேன். சண்டைபோடுவேன். சிரிப்பதும் அவளுக்காக கதறி அழுவதும்கூட உண்டு.சென்னுடைய ஆசைகளை அவளுடைய ஆசைகளாகச் சொல்லுவேன் ‘அம்மா அப்பிக்கு கருப்பட்டி வேணும்’ என்பேன். அவள் மிகமெல்ல சப்பி தின்னும்போது நான்குசுற்றும் பார்த்துவிட்டு பிடுங்கித் தின்றுவிடுவென். ஒருமுறைகூட அவள் தனக்கு வேண்டும் என்று சத்தம் போட்டதில்லை என்று அம்மா சொல்வாள். இருவருக்கும் ஒரு பொருளை பகிர்ந்து தந்தால் விஜியை தூக்கிச்சென்று தன் கண்ணருகே வைத்துக்கொள்வாள் அம்மா.

விஜி அமைதியான சிறிய நாய்க்குட்டி போல என் பின்னாலேயே வருவாள். அபூர்வமாக என்னை தனியாகப்பார்ப்பவர்கள் ‘எங்கடா வாலெங்கே?’ என்று கேட்பார்கள். எனக்கே விஜி என்னுடைய வால்போன்ற ஓர் உறுப்புதானோ என்ற சந்தேகம் இருந்தது. நான் அவளிடம் பேசிக்கொண்டே இருப்பேன். என்னுடைய வாயில் இருந்து குழாய்போல எச்சில் வழிந்து மார்பில் கொட்டிக்கொண்டிருக்கும் அப்போதெல்லாம். நான் எதையாவது கூர்ந்து கவனித்தால் இன்னும் அதிகமாகக் கொட்டும். அதைப்போல பேச்சும் என்னை மீறிக் கொட்டிக்கொண்டிருக்கும்.

நான் என் கற்பனைகளால் பார்க்கும் காட்சிகள் மீது இன்னும் பிரம்மாண்டமான ஓர் உலகத்தை உருவாக்குவேன். அதற்குள்தன் விஜி எப்போதும் இருந்தாள். கேட்கும் பிறருக்கு அது புரிவதில்லை. ‘அவன் அளக்கிறான்னா நீ கேட்டிட்டு இருக்கியா? மடச்சாம்பிராணிய இருக்கியே?’என்று சொல்வார்கள். என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் விஜியின் உதடுகள் பிதுங்கி கண்ணீர் தளும்ப ஆரம்பித்துவிடும். நான் ஆகாயத்தில் பறப்பதற்காக சிறகுகள் செய்வதற்காக காக்கைஇறகுகளை சேர்த்து விறகுப்புரையின் இடுக்கில் வைத்திருந்தேன். காகங்களுடனும் பிற பறவைகளுடனும் பேசும் மொழியை கற்றுக்கொண்டு பேசிக்காட்டி விஜியை பிரமிக்கச் செய்தேன். கன்றுக்குட்டியை குதிரைபோல ஒடும்படி பழக்க அவளுடன் சேர்ந்து முயன்றேன். பலகைக்கு அருகே அமர்ந்துகொண்டு ‘இது இலங்கை ஒலிபிறப்பு கூட்டுத்தானம்’ என்று கம்பீரமான குரலில் சொன்னேன். நாயை மனிதமொழி பேசவைக்க முயன்றேன். எப்போதும் வியப்பில் விரிந்த கண்களுடன் அவள் என் அருகே இருப்பாள்.

அப்பாவுக்கு விஜி செல்லம். அப்பா என்னை ஒருமுறைகூட தொட்டு அணைத்ததில்லை. உயரமான எங்காவது ஏறவேண்டுமென்றால் இடுப்பைப் பிடித்து தூக்கிவிடுவார். அந்த சூடான முரட்டுக்கை என் உடலில் படுவதற்காக நான் ஏங்கினேன். அவ என்னைத்தொட்ட பின் நெடுநேரம் அந்த உணர்வு என் இடுப்பில் இருக்கும். பல தொடுகைகளை நாற்பத்தைந்து வருடம் கழித்து இப்போதும் நினைவுகூர்கிறேன். அண்ணாவிடம் அப்பா சிறு வயதிலேயே பெரிய மனிதரிடம்போலத்தான் பேசுவார். ஆலோசனைகள் கேட்பார்.

ஆனால் விஜியை அவள் வயதுக்கு வரும் காலம்வரை அணைத்துக் கொஞ்சுவார். காலையில் அவர் பல்தேய்த்து டீ குடித்து வந்து சாய்வுநாற்காலியில் அமர்ந்ததும் ‘பெண்ணே’ என்று கூப்பிடுவார். விஜி மிகவும் பிகு செய்து கால்களை அரக்கி அரக்கி தேய்த்து அருகே சென்று நிற்பாள். அப்பா அவள் இடுப்பை வளைத்துக்கொண்டு ‘எந்தெடீ?’ என்று கேட்பாள். அவள் ஒன்றுமே பேசுவதில்லை. எல்லா கேள்விக்கும் தலையாட்டல் முனகல் மட்டும்தான். அப்பா மெல்லிய குரலில் அவளிடம் கேள்விகள் கேட்பார். அவள் கன்னங்களை தடவுவார். கைகளில் முத்தம் கொடுப்பார்.

சன்னலருகே நின்று நான் அதை வேடிக்கைபார்ப்பேன். ஆனால் அப்படிப் பார்ப்பது அப்பாவுக்குப் பிடிக்காதென்பதனால் நான் அங்கே நிற்பதே அப்பாவுக்கு தெரியாது. அப்பா அவரது தோல்பையைத்திறந்து ஏதாவது தின்பண்டம் எடுத்து அவளுக்குக் கொடுக்கும்போது மட்டும் ‘டா’ என்பார். நான் ஓடிப்போய் சற்று தள்ளி நிற்பேன். ‘எடுத்தோ…மிச்சம் ரெண்டுபேருக்கும் வேணும்…எல்லாத்தையும் நீயே தின்னக்கூடாது’ என்று சொல்லிவிட்டு விஜி கையில் கொடுப்பார். விஜி அப்படியே என்னிடம் தந்துவிடுவாள். அதேபோல மாலையிலும் அரைமணி நேரம் விஜியைக் கொஞ்சுவதுண்டு.

விஜியைக் கொஞ்சுவதைக்கூட  என்னால் பொறுத்துக்கொள்ள முடியும் அப்பா பக்கத்துவீட்டு பெண்குழந்தைகளையும் அதேபோல கொஞ்சுவார். விஜியுடன் வேறுபெண்குழந்தைகள் இருந்தால் எல்லாரையும் சேர்த்துத்தான் கொஞ்சுவார். ஆண்குழந்தைகளிடம் ”எந்தெடா?’ என்ற மெல்லிய அதட்டல் மட்டும்தான். ஆநால் என் அப்பாவிடம் ஒரு மிகச்சிறந்த பண்பு இருந்தது. அந்த அதட்டல் எல்லா அப்பாக்களும் செய்வதுதான். அதற்கு அடுத்த கேள்வி ‘நீ பாகுலேயன் மகன்தானே?’ என்று இருக்கும். அப்பா அப்படிக் கேட்கமாட்டார். பையனின் பெயரைச் சொல்வார். அதற்கு அடுத்த வழக்கமான சொற்றொடர் ‘போய் படிடா, போடா’ .அப்பா அதைச் சொல்லவே மாட்டார். எத்தனாவது கிளாஸ் படிக்கிறாய் என்றுகூட கேட்க மாட்டார்.

விஜியிடம் அப்பா என்னதான் சொன்னார் என்று நான் திருப்பித்திருப்பி கேட்பேன். அவள் சொல்ல மாட்டாள். சொல்ல அவளுக்குத்தெரியாது. நான் அவளைக் குட்டுவேன். கன்னங்களில் நகம் பட்டு ரத்தம் வரும்வரை கிள்ளுவேன். அவள் அழுது கண்ணீர் சொட்ட நிற்பாளே ஒழிய என்னைப்பற்றி புகார் சொல்ல மாட்டாள். ‘வானத்தில் பறக்கும்போது கூட்டிக்கொண்டு செல்லமாட்டேன்’ என்று சொல்லுவேன். அக்காலத்தில் எனக்கு வானத்தில் பறப்பது பெரிய கனவாக இருந்தது. ஆறாம்வகுப்பில் படிக்கும்போதுகூட வினோதபதார்த்தசிந்தாமணி என்ற பழைய நூலை கற்று அதிலிருந்து ஒரு மந்திர மை செய்ய பலகாலம் முயன்றுகொண்டிருந்தேன். கண்திறக்காத கழுகுக்குஞ்சின் தூவல் அதற்கு தேவைப்பட்டது. அது எங்களூரில் கிடைக்கவில்லை.

ஒருமுறை கடும் கோபத்தில் ஒரு பீங்கான் துண்டை எடுத்து விஜியை கழுத்துக்கு கீழே மேல்மார்பில் கிழித்துவிட்டேன். அந்த அளவுக்குக் காயம் படும் என நான் எதிர்பார்க்கவில்லை. அது ஓணம். அவள் நீலநிறத்தில் வெள்ளிச்சரிகைக் கட்டம்போட்டு பளபளவென இருந்த நைலக்ஸ் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். அவள் ஒன்றாம்வகுப்பு படித்த வயது. அந்தப் பாவாடைச் சட்டையுடன் நாங்கள் எடுத்துக்கொண்ட ஒரு கறுப்பு வெள்ளைப் படம் என் சித்தப்பா வீட்டில் இருக்கிறது.

அன்று என்னுடைய நிக்கர் எனக்குப் பிடிக்கவில்லை. அப்பா அன்றெல்லாம் சீட்டித்துணி எடுத்து எனக்கும் அண்ணாவுக்கும் சட்டை நிக்கர் தைக்கக் கொடுப்பார். நிக்கர் எப்போதுமே காக்கிதான். சிலசமயம் சாம்பல் நிறம். சிறைக்கைதிகள் போடுவதுபோல கட்டம்போட்ட சட்டை. ஏன் ஆண்கள் நைலக்ஸ் துணி போடக்கூடாது?  எனக்கு அந்த பாவாடைச்சட்டையைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ‘போடீ போடீ ‘என்றேன். என் பின்னாலேயே வந்தாள்.

நான் கிழித்ததும் ரத்தம் கொட்டியது. அப்போதும் அவள் பேசாமல்தான் நின்றாள். உடைகள் முழுக்க ரத்தம்.நைலக்ஸ் ஆனதனால் பின்னர் கழுவி விடமுடிந்தது. கைகளில் ரத்தம். நான்தான் பயந்துபோய் ஓடிச்சென்று அம்மாவிடம் ‘விஜி கீழே விழுந்து காயம்…ரத்தம் வருது..’என்று சொன்னேன். அம்மாவும் ஓடிவந்து அதைப்பார்த்து நம்பிவிட்டாள். ‘அய்யய்யோ’ என்று அலறி அவளை இழுத்து வரும்வழியில் அப்பா வந்தார். ”எந்தெடா?’என்பதற்குள் என் மூளை மேலும் கூர்மையாகி ”விஜி ஒரு பீங்கான் துண்டை வச்சு இப்டியே அறுத்துக்கிட்டா’ என்றேன்

அம்மாவுக்கு உண்மை புரிந்து எட்டி என்னை ஓங்கி அறைந்தாள். ”நாயே பொய்யா சொல்றே? எதுக்குடா அவளை வெட்டினே..” நான் பாய்ந்து ஓடி தோட்டத்துக்குள் மறைந்தேன். அப்பா விஜியை கம்பவுன்டரிடம் காட்டுவதற்குக் கொண்டுசென்றார். நான் பசியுடன் திரும்பி வந்தபோது அம்மா என்னை பிடித்து மீண்டும் அடித்தாள்.” உனக்கு சோறும் கெடையாது ஒரு மண்ணும் கெடையாது. அப்பா வரட்டும்..வந்தபிறகு நீ சாப்பிட்டால் போதும்” அப்பா வந்து அடி வாங்கியபின் சாப்பிடுவதற்காக நான் திண்ணையில் காத்திருந்தேன்.

அப்பா வந்தார். விஜையை வாங்கிய அம்மா ”என்ன சொன்னார் உபதேசியார்?”என்றாள். ”ஒந்நுமில்லை”என்று சொல்லி அப்பா போய் ஈஸிசேரில் படுத்தார். நான் அடிவாங்க தயாராக நின்றேன். அம்மா என்னைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் ”இந்தச் சின்னவன் சொன்னா சொன்னபேச்சு கேக்கிறதில்லை… எதுக்கெடுத்தாலும் முரட்டுத்தனம்” என்றாள். விஜி என்னருகே வந்தாள். அவள் உடலில் டிங்க்சர் அயோடின் நெடி. மார்பில் பெரிய பஞ்சு ஒட்டவைக்கப்பட்டிருந்தது.பொரு மாத்திரைப்பெட்டியை கொண்டு வந்து என்னிடம் காட்டினாள். நான் அதை வாங்கி பார்த்தேன். மாத்திரை மணம்

”என்னான்னு கேளுங்க”என்று அம்மா சொன்னாள். அப்பா ”சரி….அவளுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னா அப்றம் உனக்கு என்ன?”என்று சொல்லிவிட்டார். என் வாழ்நாள் முழுக்க அப்பா என்னை பெரிய விஷயங்கள் எதற்கும் கண்டித்தது கிடையாது. சின்னவிஷயங்களுக்குத்தான் கோபம் கொண்டு பாய்ந்துவருவார்.பெரிய விஷயம் எனக்கே தெரியும் என்று எண்ணினாரோ என்னவோ.

நான் விஜியை என் சொத்தாகவே எண்ணினேன். அவளை பிறர் தொடுவது எனக்குப் பிடிக்காது. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அவளை சும்மா கூட்டிக்கொண்டு சென்று என் அருகே கிளாஸில் வைத்துக்கொள்வேன். அவள் நைலக்ஸ் கவுன் போட்டிருப்பதனால் என் வகுப்புத்தோழர்கள் தோழிகளுக்கெல்லாம் அவளைப் பிடிக்கும். அவளைப் பார்க்க சுற்றும் கூடுவார்கள். சாக்குகட்டி, சீனிமிட்டாய், ரோஜாப்பூ என்று பரிசுகள் கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் அவள் சார்பில் நானே வாங்கி அவளுக்குக் கொடுப்பேன். நாகம் ஆசாரி சிலேட்டில்  அற்புதமாக படம் வரைந்து காட்டியபோது அவள் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். அதன்பின் நான் ஆசாரியை அவளருகே நெருங்க விடவில்லை.

விஜி மூன்றாம் வகுப்புவரும் வரை நான் தான் அவளைக் கூட்டிவந்து கிளாஸில் அமரச்செய்துவிட்டு என் கிளாசுக்குப் போவேன். இடைவேளையில் வந்து தண்ணீர் குடித்தாயா என்றெல்லாம் கேட்டுக்கொள்வேன். அவள் தலையில் வைத்திருக்கும் பூவை வேறு பெண்கள் பறித்திருப்பார்கள். அவளுடைய சிலேட்டுக்குச்சி காணாமலாகியிருக்கும். கண்ணீர் தளும்பலை வைத்து துப்பறிந்து கிளாஸிலேயே விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுப்பேன். அதற்காக ஆசிரியரிடம் தண்டனை பெறுவேன்.

நான் படிக்கும்போது அந்த் பிராந்தியத்திலேயே விஜி வரக்கூடாது என்பது அம்மாவின் ஆணை. நான் மானசீகமாக விஜியுடன் பேசுவதுபோல உரக்கக் கத்துவேன். இரவு தூங்கப்படுக்கும்போது அருகருகே பாயில் கிடந்துகொண்டு முணுமுணுவென பேசிக்கொண்டிருப்பேன். ‘என்ன பேச்சு அங்க? விடிய விடிய பேசினா தீராத பேச்சு?”என்று அம்மா குரல் கேட்கும். காலையில் எழுந்ததுமே அங்கேயே அமர்ந்துகொண்டு மிச்சத்தைப் பேச ஆரம்பிப்பேன்.

என் மனதில் இப்போதும் எல்லா சிந்தனையும் யாரிடமாவது சொல்வது போலத்தான் ஓடிக்கொண்டிருக்கும். அதற்குக் காரணம் சின்னவயதிலிருந்த இந்தப் பழக்கம்தான். ஒருமுறை கொட்டாரம் பள்ளிக்கூடத்தில் ஒருபக்கம் முழுக்க சிலேட்டிலெ ழுதிவிட்டு என்னை மறந்து ‘விஜீ நான் ஒரு பக்கம் எழுதினேனே’ என்று கூவினேன். விஜி வீட்டில் இருந்தாள். ஆசிரியர் என்னை அடித்தார். என்னுடன் மானசீகமாக அவள் இருந்துகொண்டிருந்தாள்.

பின்னர் நான் வாசகனாக வளர்ந்தேன். விஜிக்கு வாசிக்கும்பழக்கம் ஏதுமில்லை. அவளிடம் வாசித்தவற்றை நான் என் கற்பனையைக் கலந்து விரிவாகச் சொல்வேன். நான் பேசுவதை மெல்லிய சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருப்பாள். வீட்டில் இருக்கும்போது ஏதாவது வேலைசெய்துகொண்டே இருப்பது அவள் வழக்கம். தென்னை ஓலை சீவி துடைப்பத்துக்குக் குச்சி செய்வது, புளிகுத்துவது, பனையோலையில் ஏதாவது பின்னுவது. கீழே முற்றத்தில் அவள் வேலைசெய்ய நான் திண்ணையில் அமர்ந்தபடி சாண்டில்யன் நாவல்களின் கதைகளை உணர்ச்சிப்பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருப்பேன். ‘என்ன அண்ணனும் தங்கச்சியும் கதை சொல்லுதிகளாக்கும்?’ என்று தங்கம்மை கேட்டால் அவள் கண்களில் சிரிப்பு தெரியும்.

நான் பள்ளிசெல்லும்போது நாலடி தூரத்தில் வந்தபடி விஸ்வநாதன் போன்ற நண்பர்களிடம் நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பாள். என்னுடைய ஆரம்பகாலக் கதைகளை அவளிடம் படித்துக்காட்டுவேன். முதல்கதை ரத்னபாலாவில் அச்சாகி ஐந்துரூபாய் மணியார்டர் வந்தபோது மொத்தப்பணத்துக்கும் விஜிக்கு பின்னல்குஞ்சலமும் ரிப்பனும் வளையலும்தான் வாங்கினேன்.அவளிடம் நான் விவேகானந்தர் பற்றியெல்லாம்கூட பேசியிருக்கிறேரன். அவளுக்கு ஏதாவது புரிந்ததா என்பதே சந்தேகம்தான்.

ஒருகட்டத்தில் நான் என் அரசியல் ஆன்மீக அலைக்கழிப்புகளால் அவளிடமிருந்து விலகி விலகிச் சென்றேன். அப்போதும் வீட்டில் என்னருகே அவள் வந்து அமர்ந்துகொள்வதுண்டு. எனக்கு என்ன ஆகிறதென அவளுக்குப் புரியவேயில்லை.  கல்லூரி இறுதியாண்டு படிக்கையில் நான் துறவியாக வேண்டுமென்று திடீர் எண்ணம் கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போனேன். அலைந்து திரிந்து அனைவரையும் கதிகலங்கச் செய்துவிட்டு நாற்பதுநாள் கழித்து திரும்பி வந்தேன். அப்பா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தார். அண்ணா பைத்தியம் போல இருந்தான். என்னைப்பார்த்ததுமே பாய்ந்து அடிக்க வந்தான். அம்மா என்னை அப்படியே கட்டிப்பிடித்து கதறி அழுதாள்.

ஆனால் விஜி சற்று தள்ளி சுவரில் சாய்ந்து கண்களில் ஈரப்பளபளப்புடன் நின்றாள். ஒன்றுமே சொல்லவில்லை. உணர்ச்சிக்கொந்தளிப்புகள் அடங்கியபின் ஆழ்ந்த மனச்சோர்வுடன் கொல்லைப்பக்க சாய்பப்ரையின் கட்டிலில் தனியாகப் படுத்திருக்கும்போது வந்து என் அருகே கால்மாட்டில்  அம்ர்ந்துகொண்டு என் கால்கள் மேல் கையை வைத்தாள். நான் அவளையே பார்த்தேன். அவள் கண்களில் கண்ணீர் தளும்பியிருந்தது. பின்னர் மெல்லிய குரலில் ‘இனிமேல் போவதென்றால் அம்மாவிடம் சொல்லிவிட்டுப்போ அண்ணா’ என்றாள். வீட்டில் இருக்க முடியாமல் நான் பத்துநாள்கழித்து மீண்டும் கிளம்பிச் சென்றேன். மீண்டும் செல்வேன் என அப்போது எனக்கே தெரியாமலிருந்தது, அவளுக்கு எப்படித்தெரிந்தது?

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 21, 2010

தொடர்புடைய பதிவுகள்

கோவை புதியவாசகர் சந்திப்பு

$
0
0

1

இம்மாதம் எட்டாம் தேதி  முழுக்க வெறிபிடித்ததுபோல எழுதிக்கொண்டிருந்தேன். வெண்முரசு நான்கு அத்தியாயங்கள் முன்னால் செல்லாமல் பயணம் கிளம்பமுடியாத நிலை. நடுவே பல சந்திப்புகள். எல்லாமே சினிமா. அவை நேரம் கொல்பவை. ஒருவழியாக சாயங்காலம் ஏழரை மணிக்குத்தான் வேலைகள் முடிந்தன. அவசரமாகக் குளித்துக் கிளம்பி ஓடி ரயிலைப்பிடித்தேன்.

இந்த எட்டரை மணி கோவை ரயிலை மட்டும் நான் முன்னரே வந்து அடைந்ததே இல்லை. ஐந்தரைமணி கன்யாகுமரி ரயில் என்றால் மதியத்துக்குமேல் நேரமில்லை என்னும் உணர்வு காலையிலேயே இருக்கும். இந்த ரயில் சரிதான் , ராத்திரிதானே என்னும் ஒரு ‘அசால்ட்டான’ நிலையை உருவாக்குகிறது.

2

கோவைக்கு காலை ஏழரைக்குச் சென்று சேர்ந்தேன். ஒரு கட்டு புத்தகங்களை எடுத்து வந்திருந்தேன். என் நூலகத்தில் புத்தகங்களுக்கு இடமில்லாத நிலை. பயனுள்ள, ஆனால் நான் மேற்கொண்டு வாசிக்க வாய்ப்பில்லாத நூல்களை பங்கேற்பாளர்களுக்கு அளிக்கலாமே என நினைத்தேன். அவற்றை மட்டும் கொண்டுசென்றால் நன்றாக இருக்காதே என்பதற்காக பங்கெடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒன்று என என் நூல்கள்.

பெட்டியை நைலான் கயிறால் கட்டியிருந்தமையால் கையை அறுத்தது. ஒருவழியாக வெளியே வந்தேன். எனக்காக நண்பர்கள் ‘குவிஸ்’ செந்தில், விஜய் சூரியன், அரங்கசாமி, ராதாகிருஷ்ணன்,ஷிமோகா ரவி ஆகியோர் வந்திருந்தார்கள். ரயில் நிலையத்திலிருந்தே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்றோம்

3

புதியவாசகர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை கோவை காந்திநகரிலேயே ஒர் இல்லத்தில் ஏற்பாடுசெய்திருந்தோம். கோவை இரும்புவணிகர்  பி.குப்புசாமி அவர்களின் பழைய இல்லம். அவர்கள் புது இல்லத்திற்குச் சென்றமையால்  பூட்டிக்கிடந்தது. எங்களுக்கு அளித்தனர். நண்பர் நடராஜன் ஏற்பாடு செய்திருந்தார்.  பெரிய வீடு. நூறாண்டுகள் பழையது. ஆனால் அனைத்துவசதிகளும் கொண்டது. ஒரு காலப்பயண அனுபவத்தை அளித்தது அங்கே தங்கியிருந்தது

திரு குப்புசாமி அவர்களின் தந்தையார் காங்கிரஸில் காமராஜருக்கு மிக அணுக்கமானவராக இருந்தவர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது குப்புசாமி அவர்கள் வந்து சந்தித்து நலம் விசாரித்துச்சென்றார். நிகழ்ச்சியை  செந்திலும் விஜய்சூரியனும், ராதாகிருஷ்ணனும், மீனாம்பிகையும் ஒருங்கிணைத்தனர்.

5

ஒன்பதுமணிக்குள் நண்பர்கள் வந்து கூடிவிட்டனர். இயல்பாக உரையாடலைத் தொடங்கினோம். ஒன்றிலிருந்து ஒன்றெனத் தொடர்ந்துசெல்லும் உரையாடல். கூடவே சிரிப்பும். பிற இடங்களில் சந்திப்புநிகழ்ச்சிகளில் வெம்மை ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இங்கே கோவையிலேயே வெயில் கொளுத்தியது. ஆனாலும் பேச்சு சுவாரசியமாகவே சென்றது.

கொல்லிமலையில் மாலை முழுக்க மலையுச்சி நோக்கிய பயணத்துக்காகச் செலவாகியது. இங்கே பேச்சுமட்டும்தான். மறுநாள் காலையில் அருகே இருந்த பூங்காவுக்கு ஒரு நடை சென்றுவந்தோம். அன்று புதியவாசகர்கள் கொண்டுவந்திருந்த கதை, கட்டுரைகளை விவாதித்தோம். மதியத்துடன் சந்திப்பு முடிந்தது.

6

அன்று மாலை நான் கோவையில் என் மேல் மதிப்புகொண்ட சிலரைச் சந்திக்கலாமென நடராஜன் ஒருங்கிணைத்திருந்தார். சிறுதுளி அமைப்பை நடத்தும்  வனிதா மோகன் அவர்களைச் சந்தித்தேன். நான் சந்திக்க விரும்பியிருந்த முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் அவர். தமிழகம் எதிர்காலத்தில் நினைவுகூரப்போகும் சிலரில் ஒருவர் என்று சொல்வேன்

தமிழகத்தின் அனைத்து நகரங்களும் ஆறுகளின் கரைகளில் அமைந்தவை. அல்லது ஏரிகளால் ஆனவை. அத்தனை ஆறுகளும் இன்று சாக்கடைகள். ஏரிகளில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டுவிட்டன. எஞ்சியவை சாக்கடைத்தேக்கங்கள். எந்நகரிலும் அவற்றைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அந்த விழிப்புணர்வை கோவையில் உருவாக்கவும் கோவையின் நீர்த்தேக்கங்களையும் நொய்யலையும் பாதுகாக்கவும் பெரும்பணியாற்றிவரும் அமைப்பு சிறுதுளி.

7

கோவையில் அவர்களால் மீட்படைந்த ஏரிகளின் நீலநீர்ப்பெருக்கைப் பார்க்கையில் அரசின் பொறுப்பின்மை, மக்களின் அக்கறையின்மை, சல்லி அரசியல்வாதிகளின் சுயநல இடையூறுகளைக் கடந்து மீட்புக்கு இன்னமும்கூட சாத்தியமுள்ளது என்னும் நம்பிக்கை உருவாகிறது.

நொய்யலின் நீரளிப்பு ஓடைகளை அடையாளம் கண்டு அதை மீட்கும் நோக்குடன் பெருமுயற்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள். சென்ற மார்ச் 26 அன்று அண்ணா ஹசாரே அவர்கள் வந்து அதைத் தொடங்கி வைத்தார். அம்முயற்சியைப்பற்றியும் அதன் நடைமுறை இடர்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

9

தொழிலதிபர்கள் டி.பாலசுந்தரம், சிஆர்ஐ பம்புகள் நிறுவனத்தின் வேலுமணி ஆகியோர் தொடர்ந்து வந்தனர். இயகாகோ சுப்ரமணியம் அவர்கள் வந்தார். நடராஜனின் நண்பர் வரதராஜன் வந்தார். சமகாலத் தொழில் வணிக உலகின் பல்வேறு சிக்கல்கள், சவால்கள் குறித்து உரையாடின ஒவ்வொன்றும் எனக்குத் திறப்பாக இருந்தன. குறிப்பாக டாட்டா ஸ்டீல் அமைப்பு சந்தித்துள்ள சமீபத்திய நெருக்கடி பற்றிய சித்திரம் உரையாடல்வழியாக விரிந்தது ஒரு பெரிய நாவலை வாசித்த அனுபவத்தை அளித்தது.

மறுநாள் காலை சற்றுப்பிந்தித்தான் எழுந்தேன். அஜிதன் உடனிருந்தான். முந்தையநாளே நண்பர்கள் சென்றுவிட்டிருந்தனர். விஜய்சூரியன் இருந்தார். மாலையில் நாகர்கோயில் ரயிலில் ஊருக்கு வந்தேன்.

10

இதுவரை புதியவர்களின் சந்திப்புகள் மட்டும் நான்கு நடந்துவிட்டன. மொத்தம் நூற்றுமுப்பது புதியவாசகர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் சென்ற ஒரு வருடத்திற்குள் வாசிப்புக்குள் நுழைந்தவர்கள். வாசகர்களை உள்ளே கொண்டுவந்த வழியாக இணையத்தில் அவ்வப்போது வெடிக்கும் விவாதங்கள் இருந்துள்ளன. கூடவே எஸ்.ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் என்னும் தொடரும் பெரிய பங்களிப்பாற்றியிருப்பதை உணர்ந்தேன்.

புதியவாசகர்களின் ஐயங்கள், அறிதல்முறைகளை அணுகி அறிய வாய்ப்பு கிடைத்ததை பெரிய வாய்ப்பாகவே நினைக்கிறேன்.

 

 

மேலும் படங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

பூதம்

$
0
0

6_thinker

 

கேரளத்தில் இரு கவிதைப்போக்குகள் உண்டு. ஒன்று நாட்டுப்புறத்தன்மைகொண்ட கேரளப்பண்பாட்டில் இருந்து எழும் கவிதைகள். இன்னொன்று சம்ஸ்கிருதச் செவ்வியல் மரபில் இருந்து எழுபவை. இரண்டு அம்சங்களும் எல்லா படைப்புகளிலும் இருக்குமென்றாலும் மேலோங்கியிருக்கும் அம்சங்களை வைத்து அவற்றை மதிப்பிடவேண்டும். கேரளகவிதை சம்ஸ்கிருதச் செவ்வியல் மரபின் பலவீனமான நிழலாகவே இருந்தது. அதில்  நாட்டார்ப்பண்பாட்டை கலந்து இன்றைய மலையாளத்துக்கு அடிப்படை அமைத்தவர் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன். அவரது ‘அத்யாத்ம ராமாயணம், கிளிப்பாட்டு’ ஒரு திருப்புமுனை.

துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனை நாட்டாரழகியல் மரபின் முதல்புள்ளியாகக் கொண்டால் குமாரன் ஆசான், சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ள, இடச்சேரி கோவிந்தன் நாயர், பி.குஞ்ஞிராமன் நாயர் போன்றவர்களை அம்மரபின் தொடர்ச்சியாகச் சொல்லலாம். வள்ளத்தோள் நாராயண மேனன், உள்ளூர் பரமேஸ்வர அய்யர், ஜி.சங்கரக்குறுப்பு போன்றவர்களை பண்டிதமரபின் நீட்சி எனலாம்.

அம்மாவுக்கு முதல்வரிசைக்கவிஞர்களில் மட்டுமே ஆர்வம் இருந்தது. இரண்டாம்வரிசைக் கவிஞர்களை அம்மா பொருட்படுத்தியதே கிடையாது. ”கவிதை ஆசாரிகள்” என்று வள்ளத்தோள்,உள்ளூர் முதலியவர்களை ஒரே வரியில் நிராகரித்துவிடுவாள். ”நல்ல கவிதை இளநீர் போல இருக்கும்.”என்பது அம்மாவின் வரி.

இடச்சேரி கோவிந்தன்நாயரின் ‘பூதப்பாட்டு’ கவிதையை அம்மா நன்றாக பாடுவாள். அம்மா அதைப்பாடும்போது மெல்லமெல்ல அவள் ஒரு புள்ளுவத்தியாக மாறிவிடுவதுபோல் இருக்கும். அந்தப்பாட்டு புள்ளுவப்பாட்டின் மெட்டுக்கு சரியாகப்பொருந்தி வரும். சமீபத்தில் அதை ஒரு டாக்டர் பாடி குறுவட்டாக வெளியிட்டிருந்ததைக் கேட்டேன். தேர்ந்த பாடுமுறையும் கம்பீரமான குரலும் கொண்டு இனிய மெட்டிலமைந்த அந்தப் பாடலை என் மனம் ஏற்கவில்லை. நான் அம்மா மெல்லிய கம்மிய குரலில் புள்ளுவர்குடம் விம்முவதுபோல பாடுவதையே மனதில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நாட்டுப்புறத்து ஐதீகம் ஒன்றின் விரிவாக்கம் அந்தப்பாடல். தவம்செய்து பிள்ளை ஒன்றைப்பெறுகிறாள் ஒரு அன்னை. அதை பூதம் ஒன்று தூக்கிச்சென்றுவிடுகிறது. குழந்தையைக் காணாத அம்மா பல இடங்களிலும் தேடி கடைசியில் பூதம் தூக்கிக்கொண்டுசென்ற கதையை அறிகிறாள். பூதத்தைப்பின் தொடர்ந்துசெல்கிறாள். பூதம் பயங்கரமான தோற்றம் காட்டி அவளை மிரட்டுகிறது. அவளை கொல்லவருகிறது. அவள் உயிருக்கு அஞ்சவில்லை. அஞ்சாதவர்களை பூதம் ஒன்றும்செய்யமுடியாது

ஆகவே பூதம் அவளுக்கு ஆசைகாட்டுகிறது. அந்தக்குழந்தைபோல பத்து குழந்தைகளை அளிப்பதாகச் சொல்கிறது. கட்டிகட்டியாகபொன்னும் வைரங்களும் அளிப்பதாக ஆசைகாட்டுகிறது. அன்னையின் மனத்தை இளக்க அதனால் முடியவில்லை. அதன்பின் பூதம் இறங்கிவருகிறது. சாபத்தால் பூதமாக ஆன தன்னுடைய சாபமே அந்தக்குழந்தையை மார்போடணைத்து முலைகொடுத்து வளர்ப்பதன் மூலம் தீர்ந்துவிடுமென்றும் அந்தக்குழந்தை இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்றும் கெஞ்சுகிறது. அன்னை அதற்கும் இணங்கவில்லை.

பூதம் அன்னையை உதறி குழந்தையுடன் சென்றுவிட முனைகிறது. அக்கணமே தான் நாக்கைப்பிழுதுகொண்டு உயிர்விடுவேன் என்றும் அதற்குமுன் பூதத்தை சபிப்பேன் என்றும்  அவள் சொல்கிறாள். தாயின் சாபம் பெற அஞ்சிய பூதம் குழந்தையைக் கொடுத்துவிடுகிறது. ஆனால் ஒரு நிபந்தனை வைக்கிறது. குழந்தையை தாய் ஐந்து வயதுவரை வளர்க்கலாம். அதன்பின் பூதம் தேடிவரும்போது குழந்தையை கொடுத்துவிடவேண்டும். அந்த வசந்தகாலத்தில் குழந்தை மஞ்சள் கச்சை உடுத்து காணிக்கைகளுடன் தன்னுடன் வர தயாராக நிற்கவேண்டும். அம்மா சம்மதிக்கிறாள்

ஐந்துவருடம் கழித்து குழந்தையைத்தேடி பூதம் வருகிறது. ஆனால் அதற்குள் அம்மாவின் குழந்தையைக் காக்க ஊரில் உள்ள எல்லா குழந்தைகளையும் மஞ்சள் ஆடை அணிவிக்கச்செய்து காணிக்கைகளுடன் வீட்டு முற்றத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். தன் குழந்தையை அடையாளம் காணமுடியாத பூதம் மனம்பதறி அழுதபடி ஊரெல்லாம் ஓடுகிறது. வசந்தகாலம் முழுக்க இரவெல்லாம் ஊரெங்கும் கதறியபடி அலைகிறது. மழைக்காலம் வந்ததும் தென்னையோலைகளின் ஒலியால் தேம்பி அழுதபடி திரும்பிச்செல்கிறது. பின்னர் வருடம்தோறும் வசந்தத்தில் கண்ணீருடன் பூதம் வந்து ஊரெல்லாம் குழந்தைகளைத்தேடிச் செல்கிறது. இளம்முகங்கள் தோறும் தேடிக்கொண்டே இருக்கிறது.

வருடம்தோறும் காணிக்கைபெறுவதற்காக பூத வேடமிட்ட தெய்யமாட்டக்காரன் வாளுடன் வீடு வீடாக வரும் வழக்கம் வடகேரளத்தில் உண்டு. அதற்குக் குழந்தைகள்தான் காணிக்கை வைக்கவேண்டும். அந்தப்பூதம் குழந்தைகளுக்கு அச்சமும் கவற்சியும் ஊட்டுவது. அதன் வருகையைப்பற்றி நிறைய கதைகள் உண்டு. அதிலொன்றின் மறு ஆக்கம் அக்கவிதை. சிறு வயதில் அக்கவிதையைப் படித்தபோது அம்மா அழுததாகச் சொன்னார். அப்போது அம்மாவுக்குக் கல்யாணமே ஆகியிருக்கவில்லை.

அம்மாவின் நட்டாலம் வீட்டில் ஒரு சிறு கண்ணாடி சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. நான் பெரியவனாகி நட்டாலம் சென்றபோதுகூட அதைப்பார்த்திருக்கிறேன். சின்ன வயதிலேயே அம்மா பெரிய மறதிக்காரி. எப்போதும் எதையோ தேடிக்கொண்டே இருபபள்.வீட்டுக்குள் அம்மா அலைவது போல தன் மனதுக்குள்ளும் அலைந்துகொண்டிருக்கிறாள் என்று நினைப்பேன். சின்னவயதில் தலைசீவிக்கொள்ள கண்ணாடியை தேடித்தேடிச் சலித்ததனால் வீட்டுமுன் சுவரை தோண்டி அதில் கண்ணாடியை பதித்துவைத்தாள்.

ஆனால் மூத்த அண்ணா மாலை வீடு திரும்பியபோது வீட்டுச்சுவர் தோண்டப்பட்டிருந்ததைக் கண்டார். கடும் கோபம் கொண்டு ”எடீ” என்று கூவினார். ”ஆரெடீ சுவரை தோண்டியது?” என்றார். அம்மா வந்து கதவருகே நின்று ”நான் தான் தோண்டினேன்”என்றாள். மூத்தமாமா கோபத்துடன் பாய்ந்து வந்தபின் அப்படியே நின்றார். அவரால் அம்மாவை அடிக்க முடியாது. அம்மா அப்படியே அவரது இறந்துபோன அம்மா காளிவளாகத்து பத்மாவதியம்மாவின் சாயல். ‘அகத்து போடீ ‘ என்று பெரியமாமா வேறுபக்கம் நோக்கி உறுமினார்.

ஆனால் அம்மா அதன்பின் அந்த கண்ணாடியில் ஒருமுறை கூட முகம் பார்க்கவில்லை. நாலைந்துநாள் கழித்துத்தான் பெரியம்மா அதைக் கவனித்தாள். ‘ஏண்டி…அண்ணா ஒன்றும் சொல்லவில்லையே…நீ அதில் தலைசீவிக்கொள்’ என்றாள். அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. பெரியம்மா பலமுறை சொல்லிப்பார்த்தார்கள். தோழிகள் சொன்னார்கள். இளைய அண்ணா கூப்பிட்டு ”சரிடீ…அண்ணா சும்மா ஒரு வார்த்தை சொன்னார். அவ்வளவுதானே? அண்ணாதானே? நான் சொல்கிறேன்.” என்று சொல்லிப்பார்த்தார். கடைசியில் மூத்த அண்ணாவே கூப்பிட்டு ”நீ பதிச்ச கண்ணாடிதானே…பார்த்துக்கோ…நான் ஏதோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன்” என்றார். அதன்பின்புதான் அம்மா அந்தக் கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

அம்மாவுக்குக் கொஞ்சம் தாமதமாகவே கல்யாணமாகியது. அம்மாவின் மூத்த அக்காவுக்கும் இரண்டாவது அக்காவும் நல்ல சொத்துள்ளவர்களைக் கல்யாணம்செய்து வைத்தார் மூத்த அண்ணா. ஆனால் நாயர் சொத்துக்கள் விசித்திரமான சட்டச்சிக்கல்களில் நீதிமன்றத்தில் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்த காலம். அவர்களின் வாழ்க்கை சுகப்படவில்லை. ஆகவே சின்னவளுக்கு அரசாங்க உத்தியோகம் உள்ள மாப்பிள்ளைதான் என்று அவர் முடிவுசெய்திருந்தார். அன்றெல்லாம் நாயர்களில் அரசாங்க வேலை என்றாலே போலீஸ் அல்லது ராணுவ வேலைதான். இரண்டும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.

கடைசியில் அப்பா வந்தார். அப்பாவுக்கு ஒரு கண்ணில் சிறுவயதில் சிம்பு குத்தி கலங்கிவிட்டது. முன்வழுக்கை. அம்மாவுடன் சண்டை பிடித்து தனியாகவேறு இருந்தார். ஆகவே அவருக்கும் நெடுங்காலம் பெண் கிடைக்கவில்லை. அப்பா கடும் கோபக்காரர் என்று ஏற்கனவே புகழ்பெற்றிருந்தார். அதைச்சொல்லி பெரிய மாமா தயங்கினார். ஆனால் அம்மா பெரிய அழகி. பையன் பெண்ணின் காலடியில் விழுந்து கிடப்பான் என்று பெரியம்மா சொன்னாள். கல்யாணம் நடந்தது. 1960 டிசம்பர் மாதம்.

அடுத்த வருடமே அண்ணா பிறந்தார். அதற்கடுத்தவருடம் நான். ஒன்றரை வருடம் கழித்து தங்கை. தங்கை அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது பிரசவத்துக்காக அம்மா நட்டாலம் வந்தாள். அம்மாவைபபர்க்க வந்த அப்பாவுக்கும் அம்மாவின் மூத்த அண்ணாவுக்கும் ஏதோ சிறு பிரச்சினைக்காக பேச்சு முற்றியது. அப்பா வழக்கம்போல இரண்டாவது வசனத்துக்கே பாய்ந்து பெரிய மாமாவை அடித்தார். அவர் திருப்பி அடித்தார். அப்பா மண்வெட்டி ஒன்றை எடுத்து அவரை வெட்டுவதற்காகப் பாய்ந்தார்.அவர் கீழே கிடந்த கடபபரையை எடுத்து அப்பாவின் தலையில் அடித்தார்.

அப்பா கிட்டத்தட்ட மூன்றுமாசம் மார்த்தாண்டம் மிஷன் ஆஸ்பத்திரியில் கிடந்தார். பஞ்சாயத்து பேசி போலீஸ் வரை புகார் போகாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்பாவின் அம்மா அவன் செத்தால் சொல்லியனுப்புங்கள், புலைகுளி அடியந்தரத்துக்கு வருகிறேன் என்று சொல்லியனுப்பிவிட்டார். அம்மாவின் அண்ணா அவர்கள் வீட்டிலிருந்து எவரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அப்பா அவரது அம்மாவை ஒருமுறை வீடு புகுந்து அடிக்கப்பாய்ந்ததற்குப்பின்னால் அவரது முகத்திலேயே பாட்டி விழிப்பதில்லை.ஆனால் கர்ப்பிணியான அம்மா தன்னந்தனியாக அருமனையில் இரு குழந்தைகளுடன் தங்கி தினமும் மார்த்தாண்டம் வந்து அப்பாவைப் பார்த்துக் கொண்டாள்.

படுக்கையில் கிடந்து அப்பா அம்மாவை வசைபாடினார். துணிமாற்றவோ சாப்பாடு கொடுக்கவோ அருகே செல்லும்போது அம்மாவை எட்டி அறைந்தார். அம்மாவை அடிக்கமுடியாதபோது கையில்கிடைத்தவற்றை தூக்கி வீசுவார். மெல்ல அப்பாவுக்கு உடல்நிலை சரியாகியது, ஆனால் கடைசிவரை அவருக்கு தலைவலி இருந்தது. கழுத்து மெல்ல நடுங்கிக்கொண்டிருக்கும். பிரசவம் நெருங்கியபோது அம்மாவுக்கு வேறு வழி இல்லை. பெரியம்மா வந்து அம்மாவையும் என்னையும் அண்ணாவையும் கூட்டிச்சென்றார்.

நட்டாலத்தில் விஜி பிறந்தபோது அப்பா பார்க்க வரவில்லை. பெரியம்மா அம்மாவிடம் அப்பாவுக்கு கடிதம் எழுதச்சொன்னாள். ‘விஷயம் அவருக்கு தெரியுமே, கடிதம் தேவையில்லை’ என்று அம்மா சொல்லிவிட்டாள். அப்பாவை அழைத்து கடிதம் எழுதும்படி ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் வந்து அம்மாவிடம் கெஞ்சினார்கள். அம்மா பொருட்படுத்தவில்லை. மிக இயல்பாக புத்தகம் படித்துக்கொண்டு கவிதைகளைப் பாடிக்கொண்டு இருந்தாள்.

அம்மாவுக்கு தெரியாமல் விஜிக்கு இருபத்தெட்டாம் நாள் இடுப்பில் நூல்கட்டும் சடங்குக்கு அப்பாவை அழைக்கப்போன அம்மாவின் தம்பி காளிப்பிள்ளையை அப்பா முஞ்சிறை சார்பதிவாளர் அலுவலக வாசலில் வைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்து பிடித்து வெளியே தள்ளினார். அப்பாவை அழைக்க பஞ்சாயத்துக்குச் சென்ற ஊர்பெரியவர்களுக்கெல்லாம் தென்திருவிதாங்கூரின் புகழ்பெற்ற கெட்டவார்த்தைகள் நிறையவே கிடைத்தன. சிலருக்கு அடியும் கிடைத்தது. கருங்கல் வாசுதேவன் ஆசான் பதிலுக்கு அப்பாவை அடித்து தூக்கிப் போட்டுவிட்டு வந்தார். மெல்ல எல்லாரும் பின்வாங்கினார்கள்.

அம்மா பொருட்படுத்தவேயில்லை. ஆரம்பத்தில் வீம்பாக இருந்த அம்மாவின் அண்ணாக்கள் மறைமுகமாக அம்மாவிடம் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதும்படிச் சொல்லிப்பார்த்தார்கள். அம்மா நேரடியாக மூத்த அண்ணாவின் கண்களைப் பார்த்து ‘என் சொத்து இங்கே என்னிடம்தானே இருக்கிறது? என் பிள்ளைகளை நான் வளர்ப்பேன்’ என்று சொன்னாள். பெரியமாமா சோர்ந்து பின்வாங்கினார். அம்மாவை எல்லாரும் பழி சொன்னார்கள். ”அவ யட்சியாக்குமே” என்றார்கள்.

அந்தநிலையில் அப்பாவின் அம்மா நட்டாலத்துக்கு வந்தார். அப்பா முகத்தில் விழிக்காமல் மூன்றுவருடங்களாக இருந்தவர் அவர். அப்பாவின் கல்யாணத்துக்கு வந்ததுடன் சரி. அதன்பின் அப்பா ஆபீஸ் சென்றபின்னர் ரகசியமாக வீட்டுக்கு வந்து எங்களைக் கொஞ்சிவிட்டுச் செல்வார். அப்பா ஆஸ்பத்திரியில் இருந்த நாட்களில் நாலைந்துமுறை அம்மாவைப்பார்க்க வீட்டுக்குவந்து பணம் கொடுத்துச் சென்றார். மகனைப்பார்க்க வரவேயில்லை. பாட்டி லட்சுமிக்குட்டியம்மா ஒரு மகாராணியின் தோரணை கொண்டவர். முன்னால் ஒரு கூலிக்காரன் வாழைத்தார் கருப்புகட்டி சுமையுடன் நடக்க பின்னால் வெள்ளைவேட்டியும் மேலாடையும் அணிந்து குடையை ஊன்றி  தலை நிமிர்ந்து பாட்டி வந்து நட்டாலம் வீட்டு முற்றத்தில் நின்று ‘ஆரெடா?’ என்று அழைத்தார்.

பாட்டியைப்பார்த்ததும் நட்டாலத்தில் எல்லாருக்கும் பரபரப்பு. மாமாக்கள் வந்து பாட்டிமுன் கைகட்டி நின்றார்கள். பாட்டி அம்மாவை தனியறைக்கு அழைத்துச்சென்றாள். ‘ அவன் ஒரு முரடன்…அவன் தந்தையின் குணம் அது. நீயும் அவனைக் கைவிட்டால் யாரையாவது கொலைசெய்துவிட்டு ஜெயிலுக்குப் போவான் இல்லாவிட்டால் யாராவது அவனைக் கொல்வார்கள். நீ என்னுடன் வா. நான் உன்னை அவனுடன் சேர்த்து வைக்கிறேன்’ என்று  அழைத்தாள். ‘கொண்டு விட்டவர் வந்து கூப்பிடட்டும்’ என்று அம்மா திடமாகச் சொல்லிவிட்டாள்.

அதன்பின் எந்த முயற்சியும் எவரும் எடுக்கவில்லை. அப்படியானால் சட்டப்படி விவாகரத்து செய்துவிடுவோம், வேறு திருமணம் செய்யலாமே என்று பெரிய மாமா சொன்னார். அம்மா நிறைய சொத்து  உள்ளவள் ஆதலினால் அது எளிய விஷயம். அம்மாவுக்கு மறுமணத்த்தில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாள். ஆனால் விவாகரத்துக்கு சம்மதம் என்றாள். அப்பாவுக்கு விவாகரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப்பபட்டது. சட்டப்படி நாயர் ஸ்திரீ தன் கணவனை கணவன் சம்மதம் இல்லாமல்கூட விவாகரத்து செய்துகொள்ளலாம். மேல்நடவடிக்கை தொடங்கியது

அப்பா அந்த நோட்டீசை எடுத்துக்கோண்டு நட்டாலம் வந்து கோயில் முகப்பில் நின்று தாவிக்குதித்து கெட்டவார்த்தை பொழிந்தார். வேடிக்கைபார்த்தவர்களை அறையப்போனார்.  அப்போது அம்மா எந்தக் கவலையும் இல்லாமல் திண்ணையில் அமர்ந்து பாடியபடி புளி குத்தி கொட்டை எடுத்துக்கொண்டிருந்தாள். அப்பாவை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. கோயில் திருவிழாவுக்குக் கொடி ஏறியிருந்தது. ஆகவே ஊரெல்லாம் கூட்டம். அம்மாவைத்தவிர அனைவருமே அப்பாவைப்பற்றி பேசிக்கொண்டிந்தார்கள்.

இரண்டாம்நாள் திருவிழாவில் கூட்டுப்பொங்கலிட்டபோது எனக்கு யாரோ பொங்கல் ஊட்டிவிட்டார்கள். அந்த உருளியில் களிம்பு ஏறியிருந்திருக்க வேண்டும். எனக்கு வயிற்றுப் போக்கு ஆரம்பித்தது. நாட்டுவைத்தியம் பலனளிக்கவில்லை. உள்ளூர் கம்பவுண்டரும் குணப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் ரத்தமும் சீதமும் போக ஆரம்பித்தது. கருங்கல்லில் பெரிய டாக்டர் பார்த்து ஊசிபோட்டு குணப்படுத்தினார். மூன்றாம் நாள் மீண்டும் ஆரம்பித்தது. மீண்டும் ஊசி போட்டபோது நான்குநாள் சரியாக இருந்து மீண்டும் ஆரம்பித்தது.

இருபது நாட்களில் நான் மெலிந்து துணிப்பொம்மை போல் ஆகிவிட்டேன். இளநீர் அல்லாமல் எந்த உணவும் ஒத்துக்கொள்ளவில்லை. கைகால்கள் குழைந்து எழுந்து அமரக்கூட முடியாமலாகிவிட்டது. மார்த்தாண்டம் மிஷன் ஆஸ்பத்திரியில் என்னை பல நாள் வைத்திருந்தார்கள். சற்று குணம் தெரிந்து முதல் வாய் பாலோ மாவோ உள்ளே சென்றதுமே மீண்டும் ஆரம்பித்துவிடும்.  இருபதுநாட்களுக்குப்பின் குணமடைந்து நட்டாலம் வீட்டுக்கு கொண்டுவந்து நாலைந்து நாள் சரியாக இருந்தேன். ஓரளவு நன்றாகவே சாப்பிட்டேன். மறுநாள் காலையில் நான் படுத்திருந்த பாயெல்லாம் ரத்தம் கலந்த பேதி.

என்னை துணியில் பொதிந்து தூக்கி எழுத்துக்கொண்டு பஸ்சில் மீண்டும் மார்த்தாண்டத்துக்கு கொண்டுசென்றாள் அம்மா. கூட பெரியம்மாவும் உண்டு. மார்த்தாண்டத்தில் பஸ் இறங்கியபோது எதிரே அப்பா வந்தார். துணிக்குள் உலர்ந்த கருவாடுபோல சாம்பல்பூத்திருந்த என்னைப் பார்த்து வாய் திறந்து பிரமித்து நின்றார். பாய்ந்துவந்து என்னை பிடுகினார். துணிக்குள் நான் ரத்தமும் சலமுமாக கொழகொழத்தேன். தோளில் தூக்கிக் கொண்டு அப்பா சாலைவழியாக ஓடினார். அவரது சட்டையிலெல்லாம் ரத்தமும் மலமும் வழிந்தது. அம்மா பின்னால் ஓடினாள்.

அப்பா என்னை குழித்துறை பிளட்சர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றார். குழித்துறையில் டாக்டர் பிளட்சரும் நெய்யூரில் டாக்டர் சாமர்வெல்லும் அன்று புகழ்பெற்ற மருத்துவர்கள். கிறிஸ்துவின் பொருட்டு மருத்துவ சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட வெள்ளையர்கள் அவர்கள். பிளட்சர் என்னைக் குணப்படுத்தினார். என்னுடைய நோய் ஒருவகை ஒவ்வாமை என்று உணர்ந்து அவர் ஒரு புதியசிகிழ்ச்சையை மேற்கொண்டார். பிற டாக்டர்கள் எனக்கு உணவு தருவதை நிறுத்தினார்கள். பிளட்சர் எனக்கு உணவை அளித்தார். நான் கரைத்த கஞ்சி சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன். வயிற்றுப்போக்கும் தொடர்ச்சியாக இருந்தது. பின்பு மெல்ல மெல்ல வயிற்றுப்போக்கு குறைந்தது. முழுமையாக நின்றது.

நான் குணமாகி வீடுதிரும்ப இருபதுநாள் ஆகியது. ஆஸ்பத்திரியிலேயே அம்மா அப்பாவுடன் சமாதானம் ஆனாள். மீண்டும் சண்டைபோட்டு மீண்டும் சமாதானமானாள். ஆஸ்பத்திரியில் இருந்து என்னை அப்பா அருமனை வீட்டுக்குக் கொண்டுசென்றார். அம்மாகூடவே வந்தாள். அப்பாவுடன் சேர்ந்து வாழலாமென்ற முடிவை அம்மா அப்போதுதான் எடுத்தாள். இருபத்திரண்டு வருடம் கழித்து தற்கொலைசெய்துகொள்வது வரை அந்த உறவு கசந்து கசந்து நீடித்தது.

பதினைந்து வருடம் கழித்து அதைப்பற்றிச் சொல்லும்போது அம்மா இடைச்சேரி கோவிந்தன் நாயரின் பூதப்பாட்டை நினைவுகூர்ந்தாள் ”நூறுநூறு வருடங்களாக அந்த குழந்தைக்காக ஏங்கி அழுது தேடி வந்துகோண்டிருக்கிற பூதத்தின் பாசம் பெற்ற தாயின் பாசத்தை விடப்பெரியது இல்லையா? நியாயப்படி தெய்வம் பிள்ளையை பூதத்துக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும்” அம்மா சொன்னது புரிய எனக்கு அஜிதன் பிறக்கவேண்டியிருந்தது.

 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 20, 2010

தொடர்புடைய பதிவுகள்

தெய்வ மிருகம்

$
0
0

index

 

நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் என்னால் கையைத்தூக்க முடியவில்லை. கை கனமாக இருந்தது. சற்று தூக்கியபோது அக்குளருகே ஒரு நரம்பு அழுத்தப்பட்டது போல தெறித்தது. அத்துடன் எனக்கு நல்ல காய்ச்சலும் இருந்தது. உதடுகள் காய்ந்து நாவால் தொட்டபோது சொரசொரவென்றிருந்தன.

முழுக்கோட்டில் டாக்டர்கள் யாருமில்லை. அரசு மருத்துவமனைக்குப்போக அருமனைக்குச் செல்லவேண்டும். அருமனை வரை நடப்பதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு உள்ளூரிலேயே கம்பவுண்டரிடம் காட்டி மாத்திரை வாங்குவது வழக்கம். பொதுவாக அன்றெல்லாம் உபதேசியார்கள் என்று சொல்லப்படும் கிறித்தவப் பிரச்சாரகர்கள் மருந்துகள் வழங்குவார்கள். என்னைப்பார்த்த ஏசுவடியான் உபதேசியார் எனக்கு காய்ச்சல் மாத்திரை தந்தார். சாயங்காலம் காய்ச்சல் குறைந்தது. மறுநாள் காலை மீண்டும் காய்ச்சல். மீண்டும் மாத்திரை.

மூன்றாம்நாள் காய்ச்சல் குறையாதபோது என்னை அருமனை ஆஸ்பத்திரிக்கு சைக்கிளின் பின்பக்கத்தில் அமரச்செய்து கொண்டு போனார்கள். டாக்டர் என்னை பொதுவாகப் பரிசோதனைசெய்துவிட்டு மீண்டும் காய்ச்சல் மாத்திரை கொடுத்தார். மூன்றுநாள் காய்ச்சல் மாத்திரைகளையே விழுங்கினேன். ஐந்தாம் நாள் காய்ச்சல் அதுவே நின்றது. எழுந்து அமர்ந்தேன். ஆனால் கையை அசைக்க முடியவில்லை. மெல்லிய வீக்கம் இருந்தது. மூட்டுகள் கனமாக இருந்தன. அசைப்பதைப்பற்றி நினைத்தாலே வலி கொக்கிபோட்டு இழுத்தது

அப்பா அதுவரை ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. அன்று டாக்ஸிக்கார் வரவழைத்து என்னை தூக்கிப்போட்டுக்கொண்டு அருமனை ஆஸ்பத்திரிக்குச் சென்றார். வராந்தாவில் என்னை அமர வைத்து விட்டு உள்ளே போய் டாக்டரைப்பார்த்தார். டாக்டர் வெளியே வந்து என் கையை அசைக்க நான் கதறி அழுதேன். டாக்டர் அப்பாவிடம் ”நாகர்கோவிலுக்குக் கொண்டு போகணும். இல்லேண்ணா திருவனந்தபுரம்…என்னதுண்ணு தெரியல்லை…போலியோ மாதிரி இருக்கு…”என்றார்.

”ரெட்சை உண்டுமா? வலதுகையாக்குமே”என்றார் அப்பா. டாக்டர் ”சொல்லுகதுக்கு என்ன? குணமாகி கை கிட்டுறதுக்கு வாய்ப்பு கொறைவு…நான் கண்டதில்லை”என்றார். அப்பா என்னை திரும்பி வீட்டுக்கே கூட்டிவந்தார். நான் இரவெல்லாம் முனகி முனகி அழுதுகொண்டிருந்தேன். அம்மா கொஞ்சநேரம் என்னருகே அமர்ந்து விசிறியால் வீசிக்கொண்டிருந்தாள். என் தலைமயிரை வருடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தவள் அப்படியே என் அருகில் படுத்து தூங்கிவிட்டாள். அவள் மூச்சு என் மீது பட்டுக்கொண்டிருந்தது.

வெளியே ஈஸி சேரில் அப்பா தூங்காமல் படுத்திருந்தார். செருமல்கள் விசிறி ஒலிகள். வெற்றிலை போடுவதும் எழுந்து சென்று துப்புவதும் மீண்டும் வெற்றிலைபோடுவதும். வாசலில் தென்னைமரம் சலசலத்துக்கொண்டே இருந்தது. ஏதோ பறவையின் குழறல் ஒலி. பெரிய பெண்டுலக்கடிகாரத்தின் டிக் டிக் டிக். அப்பா சிலசமயம் நீளமாக பெருமூச்சு விட்டார். சிலசமயம் ஈஸிசேர் கிரீச்சிட திரும்பி அமர்ந்தார். நானும் அப்பாவும் மட்டும் இரவெல்லாம் விழித்திருந்தோம். என் கை தனியாக கிடந்து வேறு ஒரு நபர் போல என்னிடம் வலியால் பேசிக்கொண்டிருந்தது.

பின்னிரவில் அப்பா சட்டென்று எழுந்து கொல்லைப்பக்கம் போய் கிணற்றில் தண்ணீர் இறைத்து பல்தேய்த்து விட்டு வந்தார். வேட்டியை மாற்றி சட்டையைப் போட்டுக்கொண்டு உள்ளே வந்து என்னருகே படுத்திருந்த அம்மாவை குடையால் தட்டி எழுப்பினார். அம்மா பாய்ந்து எழுந்து ”எந்தா ? எந்தா?” என்றாள். அப்பா உடனே வெளியே போகப்போவதாகச் சொன்னார். எங்கே என்று கேட்கும் வழக்கம் எங்கள் குடும்பத்தில் கிடையாது.

”தேயிலை இட்டு தரட்டா?”என்று அம்மா மென்மையாகக் கேட்க ”வேண்டா” என்று சொல்லிவிட்டு என்னைத்தொட்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார். அம்மா தொட்டுவிட்டு ”இல்ல”என்றாள். அப்பா சற்று குனிந்து என் கையைப் பார்த்தார். நான் ஏனென்று தெரியாமல் மனம் உருகி அழ ஆரம்பித்தேன். ”ச்சே… நாயுடெமோனே…நாட்டில உள்ள ரோகமெல்லாம் இவனுக்குத்தான் வரும், எரப்பாளி ..”என்று அப்பா குடையை தூக்கி என்னை அடிக்க ஓங்கினார். ”அய்யோ ”என்றாள் அம்மா.

அப்பா நேராக இறங்கி வெளியே செல்ல அம்மா கதவை மூடிவிட்டு வந்து என்னருகே அமர்ந்து என் தலையைக் கோதிவிட்டுக்கொண்டு ஆறுதல் சொன்னாள். பரவாயில்லை, அப்பாதானே? அப்பா நல்லவர்.நமக்கு அப்பா இல்லாமல் யார் இருக்கிறார்கள்? கண்ணீர் வழிய நான் பெருமூச்சு விட்டேன்.

மறுநாள் மதியம்தான் அப்பா வந்தார். அண்டுகோட்டு அன்பையன் வைத்தியரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அன்பையன் வைத்தியருக்கு அப்பா முன்பு சில பத்திரங்கள் பார்த்துக்கொடுத்திருக்கிறார். முக்கால்கை காமராஜ் சட்டையும் வேட்டியும் வளைந்த குடையுமாக அன்பையன் வைத்தியர் வந்து வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டார். ”டீ”என்று அப்பா அழைத்தார். ”வைத்தியர்க்கு மோர் எடுக்குக” வைத்தியர் அம்மாவிடம் ”ஓர்மை உண்டா? அன்¨பையனாக்கும். அண்ணனை நமக்கு நல்லா தெரியும்…வீட்டுக்கு வந்திட்டுண்டு”என்றார். அம்மா ”ஓர்மை உண்டு”என்றாள்.

வைத்தியர் சட்டையைக் கழற்றி ஆணியில் தொங்கவிட்டார். குடையையும் மாட்டினார். நல்ல தொப்பை. மாநிற உடலெங்கும் சுருள்முடி. முன்வழுக்கை. மீசை கிடையாது. வெற்றிலைக்கறைபடிந்த பற்கள். பெரிய தங்கச்சங்கிலி அணிந்திருந்தார். அதன் நுனியில் சிலுவை ஆடியது. ”எங்க கொச்சன்?” என்றார். அம்மா ”அகத்து கிடப்புண்டு”என்றாள்

அன்பையன் வைத்தியர் உள்ளே வந்து என்னை கூர்ந்து நோக்கினார். அவரைக் கண்டதுமே நான் அஞ்சி கதறி அழ ஆரம்பித்தேன். ”அய்யய்ய…என இது? வாளும் ஈட்டியும் கொண்டு சண்டைக்குப் போற படைநாயராக்குமா இப்டி கெடந்து ஊளை போடுகது?ச்சே! ஆரெங்கிலும் கேட்டா நாணக்கேடுல்லா” என்றபடி என்னருகே அமர்ந்து என் கையை தொட்டார். நான் வலியில் கண்ணை மூடிக்கொண்டு கதறினேன். அதைப்பொருட்படுத்தாமல் கையை தூக்கினார், தாழ்த்தினார். பல்வேறு இடங்களில் அமுக்கிப்பார்த்தார். பெருமூச்சுடன் எழுந்து வெளியே சென்றார்.

”எந்தா காரியம்?”என்றார் அப்பா. ”பாலவாதம். முத்தின வரவாக்கும். ஒரு வாரம் தாண்டிப்பொச்சு கண்டியளா? சதையெல்லாம் வீங்கி கட்டியாட்டு ஆகிப்போச்சு. நீரு உறைச்சுப்போச்சு” என்றார் அன்பையன் வைத்தியர் . அப்பா ”ரெட்சை உண்டா?”என்றார். ”நான் ஒண்ணும் உறப்பு தரமாட்டேன். ஏன்னா நம்ம சிகிழ்ச்சை மருந்து சிகிழ்ச்சை இல்ல. பத்திய சிகிழ்ச்சையாக்கும். பாத்த்துக்கிடுத வகையில இருக்கு காரியம். பின்ன ரொம்ப மூத்துப்போச்சு கேட்டியளா? சதையும் முட்டும் இறுகியிருக்கு. அதுகளை ஒண்ணு மயப்படுத்தி எடுக்குதது பெரிய காரியமாக்கும்…”

ஒரு வாரம்தானே ஆகியிருக்கிறது என்று அம்மா சொன்னாள். ” ஒரு வாரம் போதும் அம்மிணி. காய்ச்சலுண்ணு போனா உடனே டாக்டர் வலியுண்டான்னுல்லா கேட்டிருக்கணும்….செரி, நாம சொல்லுகதுக்கு ஒண்ணுமில்லை. இப்பம் உங்களுக்கெல்லாம் இருபது வருசம் பச்சிலை அரைச்சு படிச்ச எங்கமேல நம்பிக்கை இல்ல. ஒருமாசம் எங்கியாம் போயி நாலு மருந்தும் கொண்டு வாறவன் நல்ல டாக்டர்..நடக்கட்டு நடக்கட்டு..இங்கிலீஷ் மருந்தாக்குமே”

”ஒரு தப்பு நடந்துபோச்சு…நான் இப்டி நெனைக்கல்லை”என்று அப்பா நயமாகச் சொன்னார். ”செரி பாப்போம். ஈஸ்வரானுக்ரஹம் உண்டுண்ணாக்க எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் இந்தக் கொச்சனுக்க ஜாதகம் பாத்திருக்கேன். கீர்த்திமானாக்கும். அதனால ஒரு கொறையும் இருக்காது.”என்றார் அன்பையன் வைத்தியர்

வைத்தியம் தொடங்கியது. கண்டிப்பான ஆயுர்வேத முறை. மதியமும் இரவும் இரு வேளை கஷாயங்கள். காலையில் ஒருவேளை ஒரு லேகியம். மிகக்கடுமையான பத்தியம். காபி டீ சீனி எதுவுமே கூடாது. பால் மோர் கூடாது. எந்தப்பழங்களும் உண்ணக்கூடாது. சம்பா அரிசிச்சோறு சாப்பிடலாம். ஆனால் தேங்காயெண்ணையில் வரட்டிய முருங்கியிலை மட்டுமே தொட்டுக்கொள்ள வேண்டும். வேறு எந்தக்காய்கறியும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆனால் இவையெல்லாம் சாதாரணம் .மிகக் கடுமையான இரு பத்தியங்கள் மேலும் உண்டு. ஒன்று, உப்பே சேர்த்துக்கொள்ளக்கூடாது. இரண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. கஷாயத்தில் உள்ள தண்ணீர் மட்டும்தான் நீராக உள்ளே செல்ல வேண்டும்.

காற்றோட்டம் உள்ள கிணற்றடி வராந்தாவில் சிமிண்ட் தரையில் பாய்போட்டு படுத்திருப்பேன். காரணம் வியர்த்தால் தாகம் எடுக்கும். இரண்டு வேளை உப்பில்லாத முருங்கைக்காய் வரட்டலை சோற்றில் போட்டு பிசைந்து உண்பேன். குமட்டி வரும். ‘சாப்பிடுடா சாப்பிடுடா, என் ராஜா இல்ல , என் தெய்வமில்ல?’என்று அம்மா கெஞ்சி மன்றாடி ஊட்டுவாள். அப்பா வெளியே இருந்தாரென்றால் ”வந்தேன்ன அடிச்சு கொடலை எடுத்திருவேன்.படவா நாயே.. உள்ள ரோகமெல்லாம் வருத்தி வச்சிட்டு உயிரையா எடுக்கிறே?” என்று கத்துவார். அம்மா குரல் தாழ்த்தி ‘சாப்பிடுடா ”என்று மன்றாடுவாள்.

கடுமையாக தாகமெடுக்கும். அப்பா தொடக்கத்திலேயே சுட்டுவிரல் ஆட்டி சொல்லிவிட்டார் ”டேய் தெரியாமப்போயி ஒரு வாய் தண்ணி குடிச்சேன்னு தெரிஞ்சா அண்ணைக்கே உலக்கையல மண்டைய பேத்திருவேன்…ஞாபகம் வச்சுக்கோ” அண்னாவையும் தங்கையையும் கூப்பிட்டு தெளிவாகச் சொல்லிவிட்டார். தண்ணீர் குடிப்பதை அவர்கள் பார்த்தால் உடனே சொல்லிவிடவேண்டும். சொல்லவில்லை என்று தெரிந்தால் அவ்வளவுதான். இது போக தண்ணீர் சேந்தித்தர வரும் எஸிலி, மற்ற வேலைகளுக்கு வரும் செல்லம்மா, பக்கத்துவீட்டு விஜயன் எல்லாருக்கும் கடுமையான கட்டளைகள். ஊரே நான் தண்ணீர் குடிக்காமலிருக்க வேவு பார்த்தது.

பத்தியத்தை தாங்கிக்கொள்ளலாம். தினமும் உள்ள தடவு சிகிழ்ச்சை மாபெரும் சித்திரவதை. கையில் தினம் ஐந்துவேளை எண்ணைபோட்டு நீவிவிடவேண்டும். காலையில் அன்பையன் வைத்தியர் அவரே சைக்கிளில் வந்துவிடுவார். சைக்கிள் மணி கேட்டதுமே நான் கதறி அழ ஆரம்பிப்பேன். ”நாயம்மாரு அலமுறையிட்டு அழுதா நாடான்மாருக்கு கேக்கதுக்கு நல்ல சொகமுண்டு கேட்டியளா?’ என்று சிரித்தபடி வந்து நிதானமாக சட்டையைக் கழற்றிப்போட்டு குடையை அதன்மீது தொங்கவிட்டுவிட்டு என்னருகே கையில் எண்ணைப்புட்டியுடன் வருவார். நான் அலறி அலறி சோர்ந்துபோய் தேம்புவேன்.

அன்பையன் வைத்தியர் முதலில் என் கைவிரல்களைச் சொடுக்கு எடுப்பார். ஒவ்வொரு விரலுக்கும் நான் வீரிட்டு கால்களால் தரையை அறைவேன். அலறல் கேட்டு தாங்க முடியாமல் அம்மா ஓடிப்போய் பக்கத்து வீட்டுக்கொல்லையில் ஒளிந்துகொள்வாள். மெல்ல கையை நீவி நீவி தோள்பட்டை வரை வரும்போது வலி தாங்கமுடியாமல் நான் அரை மயக்கநிலையை அடைந்திருப்பேன். பின்பு அன்பையன் வைத்தியர் ”கொச்சன் சங்கீதம் படிக்கணும் என்ன? நல்ல நாதமாக்குமே….சீர்காழி தோற்றுபோவான்”என்றபடி சட்டையைப்போடச் செல்வார்.

அப்பா ஈசிசேரிலேயே அசையாமல் அமர்ந்திருப்பார். ”எண்ணையும் தடவலும் விடப்பிடாது…அதாக்கும் உண்மையான மருந்து”என்று அன்பையன் வைத்தியர் சொல்வார். வைத்தியருக்கு தினம் ஒரு இளநீர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதைக் குடித்தபின் சட்டையைப்போட்டுக்கொண்டு சைக்கிளில் ஏறிச் செல்வார்.

அப்பா அதன் பின் தன் காலைவேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஆபீஸ் கிளம்பும் முன்பு என்னிடம் வருவார். எண்ணைபோட்டு நீவ அன்பையன் வைத்தியர் அப்பாவுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார். என்னை நெருங்கும்போதே நான் அலற ”வாயப்பொத்துடா நாயுடெமோனே… ”என்று சீறியபின் என் கையைப்பிடித்து மீண்டும் நீவி எண்ணைபோட்டுவிடுவார். அதன்பின் குளித்து ஆபீஸ் கிளம்புவார். அப்போது நான் தூங்கிவிட்டிருப்பேன்.

மதியம் அப்பா வழக்கமாக சாப்பாடு எடுத்துச்செல்வார். எனக்கு வாதம் வந்தபின் அவர் மதியம் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து வீட்டுக்கு வருவார். வந்ததும் சட்டையைக் கழற்றி துண்டு கட்டிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வந்து எண்ணை போட்டு நீவுவார். வெயிலில் குடைபிடித்து திரும்பி நடந்துசெல்வார்.சாயங்காலம் வந்ததுமே ஒருமுறை எண்ணையும் நீவலும் உண்டு. பின்னர் இரவு பத்து மணிக்கு.

மருந்தின் மயக்கமும் தாகமுமாக நான் பகலெல்லாம் அரைமயக்கத்தில் இருப்பேன். இரவில் நல்ல தூக்கம் இருக்காது. எப்போது விழித்துக்கொண்டாலும் அப்பாவின் செருமலும், வெற்றிலை துப்பும் ஒலியும், விசிறி ஒலியும்தான் கேட்டுக்கொண்டிருக்கும். ஒன்றுக்குப் போகவேண்டுமென்றால் ”அம்மா ”என்று மெல்ல முனகுவேன். ஆனால் அம்மாவை எழுப்புவது அத்தனை எளிதல்ல. தூங்கினால் அவளுக்கு உலகமே இல்லை. அப்பாதான் எழுந்து வருவார் ”எந்தெடா?” என்பார். நான் ”புறத்து போகணும்”என்பேன்

அப்பா என்னை அம்மாவைப்போல ஆதுரமாகத் தூக்க மாட்டார். இடதுகையைப்பிடித்து எழச்செய்தபின் பின்னால் வருவார். நான் வெளியே சென்று சிறுநீர் கழிக்கும்போது சற்று தள்ளி வேறு திசையை நோக்கிக்கொண்டு நிற்பார். திருப்பிக் கூட்டிக்கொண்டு வந்து படுக்க வைத்தபின் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுவார்.

பதிநான்கு நாட்கள் கழிந்தபின்னர் சூடான தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாமென்றார் அன்பையன் வைத்தியர். அந்த சொல்லே எனக்கு பெரும் கொண்டாட்டமாக இருந்தது. ஆனந்தம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதேன். ”பண்டு காலத்திலே நீரில்லா பத்தியம் விட்டதும் கொஞ்சநாளுக்கு முத்திரம் குடிக்கணும்ணாக்கும் சொல்லுவாங்க… இப்பம் சொன்னா கேப்பானுகளா? கொச்சன் குடிக்குதா மூத்திரம்?”என்றார் அன்பையன் வைத்தியர் ” நல்ல எளநீ கணக்காட்டு இருக்கும். நாலுநாளு குடிச்சா பின்ன சாயா காப்பி ஒண்ணும் பிடிக்காது..”

பதினைந்தாம் நாள் முதல் பயிற்சிகள் ஆரம்பமாயின. அதுவரை நான் அனுபவித்த வலியெல்லாம் வலியே இல்லை என்பது போன்ற அனுபவம் அது. காலையில் அப்பா என்னை வீட்டுக்கூடத்துக்கு முன் போடப்பட்டிருந்த அழிக்கு அருகே நிறுத்துவார். நானே என் வலது கையை தூக்கி அழியின் கீழே உள்ள கட்டத்தைப் பிடிக்க வேண்டும். கையை தூக்க நினைத்தால் அந்த நினைப்பே கைக்குச் சென்று சேராது. ”கை எடுத்து வைடா”என்று அப்பா கூவுவார். கையில் முற்றிய பிரம்பு. ”எடுடா கை” என்னால் தூக்க முடியாது. படீரென பிரம்பு என் பிருஷ்டச் சதையில் விழும். அலறியபடி ஆவேசமாக கையைத்தூக்கி அழியைபிடித்துக்கொள்வேன்.

மீண்டும் தூக்கி அடுத்த கட்டத்தில் வைக்கவேண்டும். இரண்டு மூன்றுமுறை பிரம்பு சுழன்றபிறகுதான் என்னால் கையை தூக்க முடியும். கைக்குள் நரம்புகள் முறுக்கேறி ஒடியப்போவது போலிருக்கும். மீண்டும் அடி. மீண்டும் கைதூக்கி அதற்கும் மேலே உள்ள கட்டத்தில் வைப்பேன். ஒருமுறை முழுக்க கையைத்தூக்க ஆறு கட்டங்களில் கையை வைக்க வேண்டும். மீண்டும் படிப்படியாக கையை இறக்க வேண்டும்

முதல்நாள் அடிவிழுந்தபோது நான் அலறிய ஒலி கேட்டு அம்மா ஓடிவந்து பிரம்பைப்பிடித்தாள். அப்பா வெறிகொண்டு அம்மாவை பிரம்பால் விளாசினார். அம்மா கீழே விழுந்து முகத்தை மூடிக்கொண்டாள். அடித்து கை சலித்து மூச்சுவாங்க வேட்டியை சரிசெய்தபின் அப்பா என்னிடம் ”தூக்கெடா கை..கொன்னு போடுவேன்..நாயே.. ”என்று கூவினார். அம்மா அடிதாங்காமல் அரைமயக்கமாகி தரையில் கிடந்தாள்.

நான்காம்நாள் பக்கத்துவீட்டு நாராயணன் தாத்தா என் அழுகை கேட்டு வந்து கோபமும் ஆங்காரமுமாக, ”எடா பாகுலேயா…எந்தாடா இது?நீ அவனைக் கொல்லாதே”என்று சொன்னார்.அப்பா பைத்தியம்போல பிரம்பை ஓங்கியபடி எண்பது வயது கிழவரை நோக்கி பாய்ந்தார் ”கொல்லுவேன்…எல்லாரையும் கொல்லுவேன்..ஒற்ற ஒருத்தன் இந்த வழி வரப்பிடாது..போடா..போடா நாயே…” என்று கத்தினார். ”உனக்கு கிறுக்குட…முழுக்கிறுக்குடா..”என்று சொல்லியபடி பீதியுடன் தாத்தா பின்வாங்கினார்.

ஒருமாதம் தாண்டியதும் வலிமிகவும் குறைந்தது. மெல்ல மெல்ல நானே கையை தூக்கி வைக்க ஆரம்பித்தேன். முதலில் பத்துமுறை தூக்கி வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் ஆயிரம் முறையாக அது அதிகரித்தது. அப்பா அருகிலேயே பிரம்புடன் அமர்ந்து எண்ணுவார். நடுவே அவர் யாரிடமாவது ஏதாவது பேசி எண்ணிக்கையை விட்டுவிட்டால் ஆரம்பத்திலிருந்து மீண்டும் செய்யவேண்டும். நான் மனம் உடைந்து விசும்பி அழுது கொண்டே கையை தூக்குவேன்.

அறுபது நாளில் கை அனேகமாக சரியாகிவிட்டது. தொண்ணூறு நாளில் முற்றிலும் சரியாகியது. ஒருவருடம் வரை வலதுகைக்கு சற்று வலிமைக்குறைவை உணர்ந்தேன். அதன்பின் இன்று வரை எந்தப்பிரச்சினையும் இல்லை. அது பெரிய அற்புதம் என்று பேசிக்கொண்டார்கள். என் வலது கை சரசரவென மெலிந்து குச்சி போல ஆகிவிடும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அன்றெல்லாம் ஊரில் பாலவாதம் வந்து கையோ காலோ ஒல்லியாக இருப்பவர்கள் வீட்டுக்கு ஒருவர் இருப்பார்கள்.

என்னைப்பார்க்க பெரிய டாக்டர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்தார்கள். அப்பாவைப்பார்க்க யார் வந்தாலும் நான் வந்து ஜன்னல் அருகே சட்டை இல்லாமல் தயாராக நின்று கொள்வேன். அப்பா ‘டா’என்றழைத்ததுமே ஒடிப்போய் என் வலதுகையை அவர்களுக்குக் காட்டுவேன். த்ர்ர்ந்த வித்தைக்காரன் போல கைகளைச் சுழற்றியும் தூக்கியும் தாழ்த்தியும் காட்டுவேன். அவர்கள் பாராட்டுவது என்னைத்தான் என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்

அப்பாவும் அன்பையன் வைத்தியர்மாக என்னை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு சென்று பெரிய டாக்டர்களிடம் காட்டினார்கள். அவர்கள் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். நான் பத்மநாபசாமி கோயில்,மேத்தமணி, சிங்கம் புலி ஒட்டகம் எல்லாம் முதல்முறையாகப் பார்த்தது அப்போதுதான். ஒரு ஓட்டலில் நுழைந்து இலைபோட்டு சாப்பிட்டோம்.

நான் பள்ளி விட்டு வரும்போது கோயில் முன் நின்றிருந்த அன்பையன் வைத்தியர் என்னை அழைத்து ஒரு தாத்தாவுக்கு என் கையைக் காட்டினார். என் கையை பலவாறாக அமுக்கிப்பார்த்துவிட்டு, ”இனி சதை எறங்காது அன்பையா… சதை வலுக்க ஆரம்பிச்சாச்சுல்லா…” என்ற பின் என்னிடம் ”பிள்ள போகணும்..பிள்ள இனிமே பயல்வானாக்குமே”என்றார் கிழவர்.அன்பையன் வைத்தியர் ”கொச்சனுக்க ஜாதகம் நான் பாத்தேன். சரஸ்வதி கடாட்சம் உண்டு…”என்றார் .

”நான் இண்ணைக்குவரை இப்டி ஒரு பூர்ண சொஸ்தம் பாத்தது இல்ல. நல்ல சிகிழ்ச்சைன்னா சதைகள் வளரும். ஆனா இதுமாதிரி எல்லா சதையும் வளராது…”என்று என் கையை மீண்டும் பிடித்துப்பார்த்து கிழவர் ஆச்சரியப்பட்டார். ”இப்பம் பலரும் பிள்ளைகளைக் கொண்டு வாறானுக அம்மாச்சா… ஆனா இவனை கொணமாக்கினது பிள்ளைசாராக்குமே. மனுசன் ராப்பகலா இவனுக்க கூடயில்லா கெடந்தார். வேற நெனைப்பு இல்ல. ஊணொறக்கம் இல்ல….உம்மாணை ஓய், பய தப்பீருவான், ஆனா தகப்பனுக்கு கட்டை அடுக்கணுமிண்ணாக்கும் நான் நெனைச்சது…அந்த மாதிரி ஒரு ஆவேசம்…இப்டியும் உண்டுமா மனுஷனுக?”

அப்பாவுக்கு மட்டும் முழுநம்பிக்கை வரவில்லை. நான் நன்றாக வளர்ந்தபின்னரும்கூட என்னை நெருக்கத்தில் பார்த்தால் என் வலது கையைத்தான் அவரது கண்கள் நாடும். எனக்குக் காய்ச்சல் வந்தால் அவரிடம் போய் அம்மா ”எளையவனுக்கு பனி” [காய்ச்சல்] என்று சொன்னால் ”ம்” என்பார். திரும்பிப் பார்க்க மாட்டார். அண்ணாவே போய் மருந்து வாங்கி வருவான். அப்பா தன் சாய்வுநாற்காலியில் அமர்ந்து வெற்றிலை குதப்பி துப்பி வாய்கழுவி மீண்டும் வெற்றிலை போட்டுக்கொள்வார்.

ஆனால் நள்ளிரவில் அனைவரும் தூங்கியபின்னர் மெல்ல காலடி எடுத்து வைத்து இருட்டுக்குள் அப்பா வருவார். அவரது காலடி ஓசை ஒரு சருகு விழுவதை விட மெல்லிதாக இருக்கும். என்னை நெருங்கி என் நெற்றியில் தொட்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பார்ப்பார். பெருமூச்சு விடுவார். அவரது உடலின் வெப்பமும் மூச்சின் காற்றும் என்மீது படும்.ஆனால் கண்களைத் திறக்காமல் அசையாமல் படுத்திருப்பேன். அப்பா ஒவ்வொருமுறையும் என் வலதுகையை அமுக்கி அழுக்கிப் பார்ப்பார். விரல்களை இழுத்துப்பார்ப்பார். திருப்தி அடைந்து திரும்பிச் சென்றவர் மீண்டும் திரும்பி வந்து இன்னொரு தடவை அழுத்திப்பார்ப்பார்.

அன்பையன் வைத்தியர்ருக்கு அப்பா பணம் கொடுக்கவில்லை. அன்பையன் வைத்தியர் பெரும் பணக்காரர். ஊரில் பெரும்பகுதி அவரது நிலங்கள்தான். அவரது வறுமையான நோயாளிகளுக்கு மருந்து காய்ச்சும் செலவை அப்பா கொடுத்தால்போதும் என்று ஒப்பந்தம். அப்படி பலரிடம் அன்பையன் வைத்தியர் ஒப்பந்தம்போட்டிருந்தார். நான் பத்தாம் வகுப்பு தேறும் காலம் வரைக்கும்கூட அன்பையன் வைத்தியர் அனுப்பிய நோயாளிகள் வந்துகொண்டிருந்தார்கள். அப்படி வருபவர்களை அப்பா தன் சாய்நாற்காலியில் இருந்து கூப்பிய கரங்களுடன் எழுந்துபோய் வரவேற்று அமரச்செய்து, உணவு கொடுத்து, பணமும் கொடுத்தபின்பு, என்னை வரவழைத்து எனக்கு அவர்கள் ஆசீர்வாதம் செய்யச் சொல்லுவார்.

பின்பு ஒருமுறை அப்பாவைப்பற்றி கிண்டலாக ஏதோ பேசிக்கொண்டிருந்தேன். நான் இதுவரைச் கேட்டறிந்தவர்களிலேயே மிகப்பெரிய மீன்வெறியர் அவர்தான். கறிக்குழம்பு இருந்தாலும் கூட மீன் வேண்டும் அவருக்கு. என் தங்கை கல்யாணத்தின்போது சொந்த மகளின் திருமணச்சாப்பாட்டை அவர் உண்ண மறுத்துவிட்டார். ஒருவேளை மீனில்லாமல் உண்ணக்கூட அவரால் முடியாது. டிபன்பாக்ஸில் ஓட்டலில் இருந்து வரவழைத்த மீன்கறியுடன் ரகசியமாக உள் அறையில் இருந்து சாப்பிட்டார் அவர்.

அம்மா சொன்னாள் ”நீ சொல்லுவே…உனக்கு என்ன தெரியும்? நீ கைவாதம் வந்து முருங்கையிலையும் சோறும் தின்னு கிடந்த காலத்திலே அவர் ஒரு துண்டு மீனு வாயிலே வைச்சிருப்பாரா?” அன்று அன்பையன் வைத்தியர் வீட்டுக்குப் போன அப்பா அவர் கதவைத்திறந்ததும் அப்படியே முகம் தரையில் அறைபட்டு உதடு கிழியும்படியாக அவர் கால்களில் குப்புற விழுந்து பாதங்களைப் பற்றிக்கொண்டு ”என் மகனை ரெட்சிக்கணும் வைத்தியரே”என்று கதறி அழுதார். அவருடன் வைத்தியர் கிளம்பி வந்தார்.

நான் பத்திய உணவை சாப்பிட்ட முதல்நாள் அப்பா ராத்திரி சாப்பிட அமர்ந்தார். தட்டில் சோறும் சூரைமீன்கறியும் பொரித்த சாளையும் பரிமாறப்பட்டிருந்தது. ஒருகணம் தட்டை வெறித்துப் பார்த்தார். தலை நடுநடுங்கியது. அப்படியே தூக்கி தட்டோடு கொல்லைப்பக்கத்தில் விட்டெறிந்தார். ”கொண்டு போடி, எரப்பாளியுடே மோளே …அவளுடே ஒரு மீனும் கறியும்… ” என்று கத்தி எழுந்து அம்மாவை ஓங்கி ஒரு அறைவிட்டார். நேராகச்சென்று ஈஸிசேரில் படுத்துக்கொண்டார்.

அம்மா வாசலருகே நின்று அவரையே பார்த்துக்கொண்டு கண்ணீர்விட்டாள். மறுநாள் முதல் அம்மா அவருக்கும் சோறும் முருங்கையிலைப்பொரியலும்தான் கொடுத்தாள். சிலசமயம் தேங்காய்ச்சட்டினி. சிலசமாயம் சுட்ட பப்படம்மும் கஞ்சியும். அதைக்கூட அவர் சாப்பிடுவதில்லை. அளைவார் கொஞ்சம் சாப்பிடுவார். திடீரென்று தட்டோடு தூக்கி வீசிவிட்டு எழுந்து போய்விடுவார்.

” நான் நாலஞ்சுநாள்தான் பாத்தேன்.பின்ன நான் நல்லா சாப்பிட்டேன்…உன் அப்பாவுக்குத்தான் உள்ளே தீ எரிஞ்சுகிட்டே இருந்தது” என்றாள் அம்மா. ”ஊணும் இல்ல உறக்கமும் இல்ல….நல்லகாலம் நீ தப்பினே…இல்லேன்னா ரோட்டிலபோற பத்துபேரை குத்திக்கொன்னுட்டு தானும் செத்திருப்பாரு… கிறுக்கு முத்தின காட்டானையாக்குமே?”

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Apr 26, 2010

தொடர்புடைய பதிவுகள்

இரு ஈழ இளைஞர்கள்

$
0
0

At Singapore Writer's Festival

நேற்றும் முந்தினமுமாக இரு ஈழ இளைஞர்களைச் சந்தித்தேன். மொரட்டுவை பொறியியல் கல்லூரித் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த கௌதமன் நேற்று மதியம் என்னைப்பார்க்க வந்திருந்தார். அவரது கல்லூரித்தமிழ்ச்சங்கம் நிகழ்த்தும் இலக்கியப்போட்டிகள், புகைப்படப்போட்டி ஆகியவற்றைப்பற்றிய ஓர் அறிமுகக் காணொளியைக் காட்டினார். என்னைச் சந்தித்தபின் நாஞ்சில்நாடனைச் சந்திக்க கோவை செல்லப்போவதாகச் சொன்னார். முன்னரே அவரை சிங்கப்பூரில் சந்தித்திருக்கிறேன். அங்கே ஒரு பயிற்சிக்காக வந்திருந்தார். அதற்கு முந்தையநாள் கொழும்புவிலிருந்து தொண்ணூறுகளின் இறுதியிலேயே தமிழகம் வந்து இங்கே பொறியியல்கல்லூரி ஒன்றில் பயிலும் இளைஞனைச் சந்தித்தேன்.

 

இருவரும் உணர்ச்சிபூர்வமான இளைஞர்கள். இருவருமே பதின்பருவம் முடிந்த வயதில் வாழ்க்கைக்குள் நுழையவிருப்பவர்கள். இருவருமே ஈழப்போராட்டத்தின்போது பிறந்து அதன் அழிவை நேரில் அறியும் வாய்ப்பு கொண்டவர்கள். ஆனால் இருவருடைய மனநிலையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்தன.கௌதமன் இன்னமும் லட்சியவாதத்திலும் ஆக்கபூர்வச் செயல்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டவராக, எதிர்காலம் குறித்த வேட்கையும் ஈர்ப்பும் கொண்டவராக இருந்தார்.

 

மாறாக தமிழகத்தில் பயிலும் இளைஞர் அவநம்பிக்கையின் உச்சியில் சோர்வும் தனிமையும் கொண்டவராக இருந்தார்.முதன்மையான காரணம், அவர் தமிழகத்தில் பெறும் கல்வி. முக்கியமான தனியார் பொறியியல்பல்கலைக்கழகம் அது. பெரும்பணத்தையும் அங்கே செலவிட்டிருக்கிறார். ஆனால் அவரது படிப்புக்கு மதிப்பில்லை என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் நினைக்கிறார். சினிமாவுக்கு போகலாமா என்று ஆசை. அதேசமயம் சினிமாமீது பெரிய வெறி ஏதும் இல்லை. வாசிக்கிறார், ஆனால் தீவிரமாக அல்ல.

 

அவரது சோர்வுக்கு கல்விநிலையம் அளவுக்கே காரணமானது தமிழக அரசியல் பற்றி அவருக்கிருக்கும் அறிவு. இவர்களெல்லாம் மிகப்போலியானவர்கள், சுயநலவாதிகள் என்று அவர் நினைக்கிறார்.இப்போதைக்கு எப்படியாவது இந்தியாவை விட்டு ஐரோப்பாவுக்குத் தப்பிச்செல்லவேண்டும் என்பதே குறிக்கோள். அனேகமாக அங்கே சென்றபின் அங்கே ஏதாவது வேலையில் சேர்ந்து அங்குள்ள சிந்திக்காத நுகர்வியத்தின் துளியாக ஆகிவிடுவார் என நினைக்கிறேன். அவ்வாறு அவரிடம் சொன்னேன்.  ‘ஆமா அதுவும்நடக்கலாம்’ என்றார்.

 

இந்த தோல்வியும் விரக்தியும் அவருடைய உளநிலையை பாதித்துள்ளன. சரியான தூக்கமில்லை. வாசிப்பு மேலும் தூக்கமின்மையை அளிக்கிறது என்றார். அப்படியானால் கொஞ்சநாள் வாசிக்கவேண்டாம் என்றேன்.அவரது சோர்விலிருந்து ஒரு பெரிய மூர்க்கம் அவரிடம் வெளிப்படுவதைக் கண்டேன்.அவர்கள் துயரப்படும்போது இந்தியாவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக எண்ணுகிறார். ஆகவே இங்கே ஓர் கிளர்ச்சியோ அழிவோ வரவேண்டுமென நினைக்கிறார் என்று தோன்றியது.அதற்கான எல்லா ஃபேஸ்புக் சண்டைகளிலும் ஈடுபடுகிறார்.

 

ஆக்கபூர்வமான ஜனநாயகம் என்றால் என்னவென்றே அவருக்குத்தெரியவில்லை. அதன் நுணுக்கமான செயல்பாடும் சிக்கலான நிதானமான நகர்வும் பிடிகிடைக்கவில்லை. அவரது மனம்  ‘அதிரடி’ அரசியலில் ஈடுபட்டிருக்கிறது. ‘உடன்’ என்ற சொல்லை அவர் வாயில் கேட்டுக்கொண்டே இருந்தேன். அடிக்கடி கண்கள் சிவக்க கத்திப்பேசினார்.

 

சில்லறைவன்முறை சார்ந்த அரசியல் அவருடையது. ஆனால் பெரிய வன்முறை பற்றிய பயமும் உள்ளது. தான் வசதியாக ஐரோப்பாவில் ‘செட்டில்’ ஆகவேண்டும் என்றும் , அதேசமயம் தமிழகத்தில் ‘எளுச்சி’ ஏற்பட்டு ஏதாவது நடக்கவேண்டும் என்றும் நினைக்கிறார். இலங்கையை வெறுக்கிறார். அதேசமயம்  இலங்கை கிரிக்கெட் அணியை விரும்புகிறார். இந்தியாவை நொறுக்கவேண்டுமென ஆசைப்படுகிறார். இந்தியா ஒரு ‘ரொட்டன் தேசம்’ என நினைக்கிறார். கருணாநிதியை ‘துரோகி’ என்கிறார். அவரது எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆவேசமாக வெறுப்பைக் கக்கத் தொடங்கினார்.மேற்கொண்டு பேசுவதை தவிர்த்து சாப்பிடக்கூட்டிக்கொண்டு போய்விட்டேன்.

 

கௌதமன் இலங்கையில் இன்றிருக்கும் தமிழர்களிடையே பணியாற்றுகிறார். புலிகளின் அரசியல்- ராணுவ –அறப் பிழைகளைப்பற்றி மிகத்தெளிவாகவே அறிந்திருக்கிறார் அவர்களின் கனவுகள் பங்களிப்பு பற்றியும் அறிந்திருக்கிறார்.. அவருக்கு அதில் எந்த மயக்கமும் இல்லை. இன்று செய்வதென்ன என்பதைப்பற்றியே பேசினார். மறுவாழ்வுப்பணிகளில் அவரது நண்பர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். கூடவே தமிழ்ப்பண்பாட்டை அங்கே அழியாது மீட்டெடுப்பதற்கான கவலைகளையும் கொண்டிருக்கிறார்

 

என்னிடம் அவர் சில வினாக்களைக் கேட்டார். ஒன்று, இலங்கையின் இளையதலமுறை இன்று வாழ்க்கையை ‘கொண்டாடுவதில்’ ஈடுபட்டுள்ளது. அது பீர்- சினிமா என்னும் இரு சொற்களில் அடங்கும். பல இடங்களில் மக்கள் தமிழ்க்கல்வியை துறந்துகொண்டிருக்கிறார்கள். மலையக மக்கள் வேலைகிடைக்கும் என்று சிங்களம் படிக்கிறார்கள். இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டை உதறிச் செல்லவிரும்புகிறார்கள். இதுதான் புலம்பெயர்ந்தவர்களிடமும் நிகழ்கிறது. அவர்களின் அடுத்த தலைமுறைக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை.

 

ஈழப்போரையும் அதன் வலிகளையும் முழுமையாக மறக்கமுயல்கிறது இளைய தலைமுறை. ‘அதை நான் ஏன் நினைக்கணும்? நானும் ஏன் சும்மா கஷ்டப்படணும்?’ என்று கேட்கிறார்கள் இளைஞர்கள். அவர்களிடம் அவ்வரலாற்றைச் சொல்லவே முடியவில்லை. பழைய ஆட்கள்தான் அதை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை அப்படியே வரலாறு மறந்துவிடும் போல உள்ளது. அவ்வளவுதானா வரலாறு?

 

நான் என் மனப்பதிவைச் சொன்னேன். சுவை அறிதல்  என்னும் தலைப்பில் நான் ஆஸ்திரேலியாவில் ஆற்றிய உரையில் அந்தச் சாரம் உள்ளது. ஒவ்வொரு மண்ணுக்கும் அதற்குரிய சுவை என ஒன்று உண்டு.அச்சுவை சமையலில், இசையில், நாடகத்தில் ,மதத்தில் இலக்கியத்தில் எல்லாம் பரவியிருக்கும். அதுவே பண்பாட்டின் கனிவு. அச்சுவையை அழியாமல் பாதுகாப்பதே தேவையானது.  ஈழச்சுவை என ஒன்று அனைத்திலும் உள்ளது. அது அழியாமலிருக்கவேண்டும்.

 

போர் நினைவுகளை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதும், தவறுகளை அலசிக்கொண்டிருப்பதும் பயனற்றவை. ஏனென்றால் மானுடம் முன்னேறவே விரும்பும். இன்பங்களையே இளமை மனம் நாடும். சோர்வுறும் விஷயங்களைத் தவிர்க்கும். ஆகவே அது கேளிக்கையை நாடுவதில் பிழையில்லை. ஆனால் அந்த மண்ணின் சுவை அழியுமென்றால் மீட்க முடியாது. ஒரு சமூகமாக ஈழத்தவருக்குள்ள திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், கலைகள், இலக்கியங்கள் அனைத்தையும் முழுமையாக முன்னெடுத்துச்செல்வதே ஒரே வழி என்றேன். வாழ்க்கையின் இனிமைகள் வழியாக வந்தடையும் பண்பாடே நீடிப்பது. ஏனென்றால் பண்பாட்டின் நோக்கமே வாழ்க்கையை செழுமைப்படுத்துவதுதான்.

 

ஒரு சமூகத்திற்கு மூன்று தளங்கள் இருக்கும். இன அடையாளம், நிலம்சார் அடையாளம், பண்பாட்டு அடையாளம். ஈழத்தவரே பலவகை மணவுறவுகள் மூலம் பரந்துகொண்டிருக்கையில் இனத்தூய்மை எல்லாம் சாத்தியமில்லை. வரும்காலத்தில் இனத்தூய்மை ஒரு அபத்தமான எண்ணமாகவே இருக்கும். நிலம் சார்ந்த ஒருங்கிணைவு இனிமேல் முக்கியமில்லை. தமிழ்மக்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். ஆகவே பண்பாடு சார்ந்தே இனி ஒரு ஒற்றுமை சாத்தியம்.

 

உதாரணமாக, பிரெஞ்சுப் பண்பாடு இனம் சார்ந்தது அல்ல. பிரான்ஸ் சார்ந்ததும் அல்ல. அது பிரெஞ்சுப் பண்பாடு சார்ந்தது. பிரெஞ்சு  ‘சுவை’ சார்ந்தது. அதைப்போல உலகப்பண்பாட்டின் ஓர் உயரிய பங்களிப்பாக தமிழ்ப்பண்பாடு செயல்பட முடியும் என்றேன்.  அது வெகுஜன அரசியல் மூலம் அல்ல, நீடித்த சலியாத பண்பாட்டுச்செயல்பாடு வழியாகவே நிகழமுடியும் என்றேன்.

 

அது பழமைவாதத்துக்கு இட்டுச்செல்லாதா என்றார். பழமையின் ஓர் அம்சம் இல்லாமல் பண்பாடு எஞ்சாது. அது முதலில் நீடிக்கட்டும். அதன்பின் அதன் மேல் விமர்சன அணுகுமுறையை உருவாக்கிக் கொள்வோம் என்பதே என் பதிலாக இருந்தது. உண்மையில் அப்பண்பாட்டு விமர்சனங்களும் சேர்ந்ததே பண்பாடு என்பது. யாழ்ப்பாண சைவமதம் என்பது தனித்தன்மை கொண்ட் ஒன்று. ஓர் ஈழச்சுவை அது. அதன்மீதான கடும் விமர்சனங்களை இன்னொரு ஈழச்சுவை என்று கொள்ளவேண்டியதுதான்.

 

எதிர்மறை மனநிலை கொண்ட பண்பாட்டுச்செயல்பாடு என்பது காலப்போக்கில் சோர்வையும் கசப்பையும்தான் நிறைக்கும். நீடித்த பணி என்பது அதனால் சாத்தியமாகாது. எதிர்மறைச்செயல்பாடு கொண்டவர்கள் ஒருகட்டத்தில் வீண்சண்டைக்காரர்களாக மாறுவதே நாம் காண்பது. ஆக்கபூர்வமான பணியில் சோர்வுக்காலங்கள் உண்டு. பலன் கண்ணுக்குத்தெரியவில்லை என்னும் சலிப்பு. ஆனால் ஆக்கபூர்வமான பணி என்பது நம்மை அறியாமலேயே பண்பாடு என்னும் இந்த பேரியக்கத்தில் எங்கோ சென்று சேர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஒரு கட்டத்தில் திரும்பிப்பார்க்கையில் காணமுடியும்

 

நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் கனிவும் கொண்ட கௌதமின் முகம் நினைவில் நிற்கிறது. பேசும்போது அவரது கண்கள் கசிந்தன. தொண்டை அடைத்தது. உற்சாகமான தருணங்களில் கண்கள் விரிந்தன. என்றும் பிரியத்திற்குரிய, என் இளமைமுதல் ஒரு கனவாகவே இருந்துவரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய முகம் அவர்தான்.

 

இணைப்பு

 

காணொளி கௌதமன்

 

சுவை அறிதல்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

தோன்றாத்துணை

$
0
0

1

 

சென்னையில் பழைய ஜெமினி ஸ்டுடியோ அருகே பார்ஸன் காம்ப்ளெக்ஸ் என்ற பெரிய கட்டிடத்தின் நாலாவது மாடியில் மாத்ருபூமி நிருபராக அப்போது இருந்த கே.ஸி.நாராயணனின் அலுவலகமும் குடியிருப்பும் இருந்தது. நான் தருமபுரியிலிருந்து வந்து தங்கியிருந்தேன். கே.ஸி.நாராயணன் இப்போது மலையாள மனோரமா குழுமத்தின் இதழ்களுக்கான பொது ஆசிரியர். இப்போது கவிஞராகப் புகழ்பெற்றிருக்கும் மங்காடு ரத்னாகரன் அப்போது மலையாள இந்தியா டுடே இதழின் உதவி ஆசிரியர். சி.பி.எம் [மா.லெ] குழுவின் கெ.என்.ராமச்சந்திரன் குழுவின் பிரச்சாரகராக சென்னையில் பணியாற்றிய ஒரு நண்பர் வந்திருந்தார்.

ஸக்கரியா வந்திருப்பதாக மங்காடு ரத்னாகரன் சொன்னார். கே.ஸி.நாராயணன் நம்பூதிரியானாலும் மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார். அவரே மீனை கழுவி வெட்டி வாணலியில்போட்டு வறுத்து அடுக்கிக்கொண்டிருந்தார். ஒரு நண்பருடன் ஸக்கரியா வந்து சேர்ந்தார். ஸக்கரியாவை நான் நேரில் சந்திப்பது அப்போதுதான். சிரியன் கிறித்தவர்களுக்கு ஒரு அரேபிய அழகு உண்டு. கெட்டி மீசை, உருண்ட முகம். நல்ல நிறம். வழுக்கை இல்லாவிட்டால் மம்மூட்டியின் தம்பி என்று சொல்லிவிடலாம். கே.ஸி.நாராயணன் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது என்னுடைய ‘ரப்பர்’ நாவல் வெளிவந்து பரிசுபெற்றிருந்தது. ‘கதா’ விருது பெற்றிருந்தேன்

ஸக்கரியாவிடம் ”நான் உங்கள் கதைகளை எல்லாம் படித்திருக்கிறேன்”என்றேன். அவரது கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கேரள இலக்கியத்தில் அலைகளைக் கிளப்பிக்கொண்டிருந்த காலம் அது. அவரது ‘தேடிப்போகவேண்டியதில்லை’ போன்ற சில கதைகளை நான் தமிழாக்கம்செய்து ‘மஞ்சரி’ இதழில் வெளியிட்டிருந்தேன். அப்போது ஸக்கரியா இன்றுபோல அரசியல் கட்டுரைகள் எழுதி பிரச்சினைகளை கிளப்ப ஆரம்பிக்கவில்லை

ஸக்கரியா ”நீ தமிழனா மலையாளியா?”என்றார் ஐயமாக. ”இன்னும் தீர்மானிக்கவில்லை”என்றேன் ஸக்கரியா மலர்ந்து ”அது நியாயமான பேச்சு”என்றார். அதற்குள் தொலைபேசியில் ஓர் அழைப்பு. புனத்தில் குஞ்ஞப்துல்லா வந்திருப்பதாகவும் அருகே ஓர் ஓட்டலில் தங்கியிருப்பதாகவும். கே.ஸி.நாராயணன் ”இங்கே கறியாச்சன் வந்திருக்கிறார். மீனும் சரக்கும் இருக்கிறது”என்றார். புனத்தில் குஞ்ஞப்துல்லா உடனே வருவதாகச் சொன்னார்.

சக்கரியாவும் மங்காடு ரத்னாகரனும் குடிக்க ஆரம்பித்தார்கள். நான் வழக்கம் போல கொக்கோகோலாவுடன் அமர்ந்திருந்தேன். ”நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்”என்றேன். ”நீ என்னை சின்ன வயதில் பார்க்கவேண்டும்… எல்லாம் போயிற்றே. கொஞ்சநாள்முன் எம்.டி. [எம்.டி.வாசுதேவன்நாயர்] என்னைப்பார்த்தபோது ‘டேய் நீ எப்டிடா இப்டி ஆனே? தேவதூதன் மாதிரியல்லவா இருந்தாய்’ என்று கேட்டார்” என்றார் ஸக்கரியா.

நான் ”ஏன்?” என்றேன். அந்தக்காலத்தில் நான் அடிக்கடி அந்தக் கேள்வியைக் கேட்பேன். ”குடிதான்.வேறென்ன?” நான் ”எத்தனை வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?” என்றேன். ”ஒரு ஐந்து ஆறு… அதற்கு முன்னால்கூட இருக்கும். நினைவில்லை” மங்காடு ரத்னாகரன் ”கிறிஸ்தியானிகள் குழந்தை பிறந்ததுமே வாயில் நாட்டுச்சாராயம்தான் தொட்டு வைக்கிறார்கள் என்று சொல்வார்கள்”என்றார். ”அது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் சில இடங்களில் ஞானஸ்னானம் செய்யும் நீரில் கொஞ்சம் சாராயம் மணக்கும்” என்றார் சக்கரியா.

தொடர்ந்து குடிபற்றிய குட்டிக்கதைகள். டெல்லி இதழாளரான ஒரு மேனன். அவர் குடிக்காமல் இருக்கும் நேரமே கிடையாது. கண்விழித்ததுமே ஊற்றிக்கொள்வார். திருமணநாளிலும் கொஞ்ச குடித்திருந்தார். மனைவி ஒரு கிராமப்புறத்து, படிக்காத, ஆசாரகுடும்பத்துப் பெண். ஆனால் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது டெல்லியில் மது கிடைக்கவில்லை. மேனன் குடிக்காமல் வீட்டுக்கு வந்தார். அவரது வாயின் அசல் நெடி வந்ததைக் கண்ட மனைவி அலறி அழுதுகொண்டு குற்றம்சாட்டினாள் ”நீங்க குடிச்சிருக்கீங்க…”

புனத்தில் குஞ்ஞப்துல்லா வந்தார். உயர்தரமான டிசைனர் சட்டை. கற்றைமுடி, தடித்த கண்ணாடி. சற்றுகுள்ளமான உருவம். பர்மியரைப்போல இருந்தார். அவரது அம்மாவழி தாத்தா ஒரு பர்மியர் என்று பிறகு சொன்னார். அவர் வடகராவில் புகழ்பெற்ற டாக்டர். பின்னர் அரேபியாசென்று கொஞ்சநாள் வேலைபார்த்தார். அப்போதுதான் திரும்பிவந்திருந்தார். நான் என்னை அறிமுகம்செய்துகொண்டேன்.

அவருக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றுத்தந்து இந்தியாவில் மிக இளம்வயதிலேயே அவ்விருது பெற்றவராக ஆக்கிய நாவலான ‘ஸ்மாரகசிலைகளை’ மொழியாக்கம் செய்யும் ஆசையைச் சொன்னேன். ‘எந்து வேணமெந்நாலும் செய்யடோ’ என்றார். பின்னர் பல வருடங்கள் கழித்து நான் குளச்சல் மு.யூசுப்பிடம் சொல்லி அவர் அந்தநாவலை ‘மீஸான் கற்கள்’ என்ற பேரில் மிகச்சிறப்பாக மொழியாக்கம்செய்தார். காலச்சுவடு வெளியிட்டது. ஸக்கரியா கதைகளின் ஒரு அந்தரங்க தொகுப்பு கொண்டுவரும் நோக்கம் இருந்தது. அதை எம்.எஸ் மூலம் நிறைவேற்றிக்கொண்டேன்.தமிழினி வெளியிட்டது.

”நீ குடிப்பதில்லையா?”என்றார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. ”இல்லை” என்றேன். என்னுடைய கொகோகோலாவைப்பார்த்துவிட்டு ”அதைவிட நீ இதையே குடிக்கலாம். கெடுதல் குறைவுதான்”என்றார். இலக்கிய வம்புகள் வழியாக பேச்சு முன்னேறி தற்கொலை செய்துகொண்ட ஒரு இதழாளரைப்பற்றி வளர்ந்தது. ”பாவம், ரொம்பநாளாகவே தற்கொலைசெய்துகொள்ள ஆசைப்பட்டார். அதற்காக ஆராய்ச்சியெல்லாம்கூடச் செய்தார்” என்றார் ஸக்கரியா.

மங்காடு ரத்னாகரன் ”எந்த மரணத்தில் வலி குறைவு?”என்றார். ”சந்தேகமென்ன தூக்க மாத்திரைதான்” என்றார் டாக்டர் புனத்தில் குஞ்ஞப்துல்லா.”ஆனால் அதற்காக டிராங்குலைஸர்களை நாடினால் சிலசமயம் கடைசிக்கணங்கள் கொடூரமான மனவாதைகள் நிறைந்தவையாக ஆகிவிடும். பிழைத்துக்கொண்ட ஒருவரிடம் பேசியிருக்கிறேன்…”

”துப்பாக்கிக் குண்டு பட்டுச் சாவதுகூட எளிமையான மரணம்தான் என்றேன். தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலில் ஒரு இடத்தில் அதை எழுதியிருக்கிறார். சாதாரணமான ஒரு குற்றத்துக்காக ஒருவனை சுட்டுக்கொல்ல தளபதி கவனமில்லாமல் ஆணையிடுகிறான். அவனுக்கு நம்பவே முடியவில்லை. அவன் விளக்கிக் கொண்டிருக்கும்போதே சுட்டு விடுகிறார்கள். அவன் பேசியபடியே குனிந்து தன் மார்பைப் பார்க்கிறான். ஓட்டையைக் கண்டபின்புதான் ‘அய்யோ சுட்டுவிட்டார்கள்! சுட்டுவிட்டார்கள்!’ என்று அலறுகிறான்” என்றேன்.

”கிழவர் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.” என்றார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. ”ஆனால் சுடுவதில் சில விதிகள் உண்டு. நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டால் சிலசமயம் குண்டு வழுக்கிப் போகும். மண்டை ஓடு அத்தனை கெட்டியானது.” கே.ஸி.நாராயணன், ”காதில் சுடலாம்…சினிமாக்களில் அப்படித்தான் சுடுகிறார்கள்” என்றார் . ”சுடலாம். ஆனால் சரியாகப்படவேண்டும். வாய்க்குள் விட்டு சுட்டுக்கொள்வதுதான் கிளாஸிக் வழி. குறியே தவறாது. மூளை இருந்தால் கண்டிப்பாக சிதறிப்போகும்”

”ரயிலில் தலைவைப்பதுதான் மலபாரில் பிரபலம். வெள்ளைக்காரன் கேரளத்திற்குச் செய்த மிகச்சிறந்த உதவியே அதுதான். மங்காட்டில் எந்த ரயிலும் நிற்பதில்லை. யாரும் அதில் ஏறி எங்கும் செல்வதில்லை. ரொம்பநாள் தற்கொலைக்குமட்டும்தான் அது பயன்பட்டுவந்தது. அந்தக்காலத்தில் இரவு ஒன்பதரைக்கு ஒரு ரயில் மங்களூருக்குப் போகும். அது தற்கொலைக்கு ரொம்ப வசதியானது. ‘ஒன்பதரை வண்டியிலே போறவனே’ என்றாலே அந்த அர்த்தம்தான்”என்று மங்காடு ரத்னாகரன் சொன்னார்.

புனத்தில் குஞ்ஞப்துல்லா ”ரயிலில் தலைவைப்பது ஆழங்களில் குதிப்பது என்பவையெல்லாம் அவ்வளவு நல்ல வழிகள் அல்ல. சில பிணஆய்வுகளில் சாவுக்கு முன் கடும்இதயஅடைப்பு நிகழ்ந்திருப்பதைக் காணமுடிந்திருக்கிறது.”என்றார். ஸக்கரியா ”கொடுமையான சாவு என்றால் நீரில் மூழ்குவதுதான். நான் சின்னவயதில் இரண்டுமுறை மூழ்கிச்சாகப் பார்த்திருக்கிறேன். அது அடிக்கடி கனவிலும் வரும்” என்றார்.

”அப்படி முழுக்கச் சொல்ல முடியாது…”என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா சொன்னார். ”மூச்சுத்திணறல் ஒரு கொடிய அனுபவம்தான். ஆனால் நுரையீரலில் நீர் நிறைந்துவிட்ட பின் கொஞ்சநேரம் அபூர்வமான ஒரு மோனநிலை உருவாகும் என்று சொல்கிறார்கள். அது ஒரு தியானம் போல ஆனந்தமானதாக இருக்கும்…பிரம்மாவிஷ்ணுவையெல்லாம்கூட பார்க்க முடியும்..” ஸக்கரியா ”உண்மையா?” என்றார் ”எப்படி தெரியும்?”

”நிமோனியா நோயாளிகளில் நுரையீரல் சளியால் நிறையும் நிலை அபூர்வமாக வரும். அப்போது அந்த நிலைக்குப் போய் அதிசயமாக பிழைப்பவர்கள் உண்டு. ஒருநோயாளி அந்த நிலையை என்னிடம் வர்ணித்திருக்கிறார்…” புனத்தில் குஞ்ஞப்துல்லா விளக்கினார்

நான் ”தூக்குப் போட்டுக்கொண்டால்?”என்றேன் ஆவலாக. ”தூக்கு போட்டுக்கொண்டால் வலிக்குமா?” .புனத்தில் குஞ்ஞப்துல்லா என் முகத்தைப்பார்த்து ”இவனைப் பார்த்தால் தூக்குபோட்டுக்கொள்ளும் திட்டம் இருப்பது போல தெரிகிறதே…”என்றார். என் கையைப்பற்றிக் குலுக்கி, ”நல்ல திட்டம். இடப்பள்ளி ராகவன்பிள்ளை கூட தூக்குதான் போட்டுக்கொண்டார். நல்ல கலைஞர்கள் கண்டிப்பாக தூக்குபோட்டுதான் சாகவேண்டும். அப்போதுதான் ‘சமூகத்தின் முன் ஒரு கேள்விக்குறியாக அவன் நின்றான்’ என்று நம்மால் எழுதமுடியும்”என்றார்

இன்னொரு டம்ளர் ஊற்றி அருந்தியபின் ”தம்பிக்கு தூக்குபோட்டுக்கொள்ளும் திட்டம் இருந்தால் நான் சில நல்ல டிப்ஸ் தருகிறேன். சரியாக தூக்கு போட்டால் வலியே இல்லாமல் சுகமாக சாகலாம். கத்துக்குட்டித்தனமாக போட்டுக்கொண்டால் பயங்கரமான அவஸ்தைதான்…” நான், ”சரியாக எப்படி தூக்குப் போட்டுக்கொள்வது?”என்றேன். ”சர்க்கார் தூக்கு போட்டு கைதிகளைக் கொல்கிறதே அதுதான் சரியான வழிமுறை… அதற்கு மூன்று அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று , தூக்கின் முடிச்சு கழுத்துக்குப் பின்னால் முகுளத்தின் மீது இருக்கவேண்டும். இரண்டு, தூக்குக் கயிறு வழவழப்பாகவும் சட்டென்று இறுகும்விதத்திலும் இருக்க வேண்டும். தூக்கு போட்டுக்கொள்பவர் தூக்கை விட உயரமான இடத்தில் இருந்து  சட்டென்று ஆழத்தில் குதிக்க வேண்டும். அவ்வளவுதான் முகுளமும் மூளையும் தனித்தனியாகப்பிரிந்து அக்கணமே மூச்சு நின்று, பிரக்ஞை தவறிவிடும். ஒரு பிரேக் டேன்ஸ் ஆடினால் கதை சுபமங்களமாக முடியும்…”

நான் ”தப்பாக போட்டுக்கொண்டால்?”என்றேன். ”தப்பாக போடுவதென்றால் படிப்படியாக தூக்கு இறுகுவதுதான். கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து இறுகி மூச்சு திணறும். தப்பவேண்டுமென்று உடம்பு போராடும். வலியில் உடல் கிடந்து துள்ளும்… கைகளால் தொடைகளை பிராண்டிக்கொள்வார்கள்….” . நான், ”தூக்கு போட்டால் நாக்கு வெளியே வருமா?”என்றேன். ”வரலாம்…ஆனால் வந்தாக வேண்டுமென்பதில்லை…முன்கழுத்து இறுகினால் சிலசமயம் நாக்கு நீளும். சிலருக்கு மலஜலம் கழிந்திருக்கும். விந்து ஒழுகிய பையன்களைக்கூட நான் பிண ஆய்வு செய்திருக்கிறேன்”

நான் பெருமூச்சுடன் பின்னுக்குச் சாய்ந்தேன். ”எப்படிச் செத்தால் நிறைய இரங்கற்பாடல்கள் வரும் என்று பார்த்துச் சாகிறவன்தான் நல்ல கலைஞன்”என்றார் ஸக்கரியா. ”இடப்பள்ளி ராகவன் பிள்ளை பெரிய ஆள். சாகாமலிருந்திருந்தால் அவரது கவிதைக்காக நாம் அவரை தூக்கிலே ஏற்றியிருப்போம். இப்போது அழியாத புகழ் வந்துவிட்டதே. ரமணனை படிக்காத மலையாளி உண்டா?” [காதலில் தோற்ற கவிஞர் இடப்பள்ளி ராகவன் பிள்ளை தற்கொலை செய்துகொள்ள அவரது நண்பரும் கவிஞருமான சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை ‘ரமணன்’ என்ற குறுங்காவியத்தை எழுதினார். மலையாளத்தில் மிகப்பிரபலமான கவிதை இதுவே] ”மலையாளிப்பெண்கள் எல்லாருமே சின்ன வயசில் அவர்களுக்காகச் சாவதற்கு ஒரு ராகவன்பிள்ளை கிடைக்க மாட்டரா என்று ஆசைப்படுகிறார்கள்” ஸக்கரியா சொன்னார். எல்லாரும் சிரித்தார்கள்.

பிறகு ஆளுக்கொரு கருத்து சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் ”நாக்கு வெளியே வரவில்லை என்றால் அதிக வலி இருக்கவில்லை என்றுதான் அர்த்தம் இல்லையா?”என்றேன். புனத்தில் குஞ்ஞப்துல்லா என்னைக் கூர்ந்து பார்த்தார். ”ஏன் கேட்கிறாய்?” நான் கண்களை திருப்பிக்கொண்டு மெல்ல, ”என் அம்மா தூக்குபோட்டுத்தான் இறந்தாள்”என்றேன்

சட்டென்று அந்த அறையே பனிக்கட்டிபோல ஜில்லிட்டு அமைதியாகியது. எல்லாரும் என்னையே பார்த்தார்கள். அந்த அறைக்குள் அதுவரை இல்லாதிருந்த ஒருவர், அனைவருக்குமே புதிய ஒருவர் வந்து அமர்ந்துகொண்டது போல ஒரு சங்கடம் உருவானது.

கே.ஸி.நாராயணன்னுக்குக் கூட அது அதற்கு முன்பு தெரியாது. நான் யாரிடமும் சொன்னதில்லை. சற்று நேரம் கழித்து புனத்தில் குஞ்ஞப்துல்லா ”ஐ யம் ஸாரி”என்றார். ”பராவாயில்லை. அதில் என்ன இருக்கிறது?”என்றேன். ”ஹாரிபிள்”என்றார் சக்கரியா. நான் பலவீனமாகப் புன்னகைசெய்து மீண்டும் ”பரவாயில்லை”என்றேன். அதன்பின்பு அந்த அறையில் சிரிப்பு திரும்பிவரவில்லை.

அந்த அனுபவத்தை பின்னர் ஸக்கரியா ஒரு சிறுகதையாக எழுதினார். நான்தான் அதில் கதாநாயகன். சமீபத்தில் மங்காடு ரத்னாகரன் அதை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நான் அந்த நாளை மறந்து விட்டேன். அப்போதெல்லாம் அது என்னுடைய ஓர் அன்றாட தினம்.

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் May 27, 2010

பிரிவின் விஷம்

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.

சாக்கியார் முதல் சக்கரியா வரை

தொடர்புடைய பதிவுகள்


கோவை, அட்டப்பாடி, அமைதிப்பள்ளத்தாக்கு -நான்கு நாட்கள்

$
0
0

 

1

தினமலர் நாளிதழில் நான் எழுதிய ‘ஜனநாயகச் சோதனைச்சாலையில்’ என்னும் நூலை கோவையின் நன்னெறிக்கழகம் என்னும் அமைப்பு சார்பில் நிகழ்ந்த விழாவில் வெளியிட்டனர். தினமலர் தொடங்கியிருக்கும் பதிப்பகத்தின் முதல் நூல் இது. என் நண்பர் நடராஜன் ஒருங்கிணைப்பில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பு மற்றும் இயாகோ சுப்ரமணியம் ஆகியோரின் ஆதரவில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயாகோ சுப்ரமணியம் அவர்கள் தலைமை வகித்த நிகழ்வில் முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி நூலை வெளியிட்டார்.  தினமலர் செய்தி ஆசிரியர் பா. விஜயகுமார் நூலைப்பற்றிப்பேசினார். நடராஜன் நன்றி கூறினார். சுருக்கமான உற்சாகமான ஒரு விழாவாக அமைந்தது.

2

நிகழ்ச்சி மே 7 அன்றுதான் நடப்பதாக இருந்தது. அதன்படியே பயணச்சீட்டு போடப்பட்டது. ஆனால் எட்டாம்தேதிக்கு மாற்றினோம். இருந்தாலும் நான் ஏழாம்தேதி காலையிலேயே கோவை வந்தேன். அன்னபூர்ணா ஓட்டலில் தங்கியிருந்தேன்.ஒருநாள் அதிக நண்பர்கூட்டம் இல்லாமலிருக்கலாமே என்று திட்டம்

நண்பர் விஜய்சூரியன்முதன் முதலாக நான் சந்தித்தபோது எனக்கு பாதுகாப்புக்கு வந்த ’பௌன்ஸர்’ போல இருந்தார் . இப்போது தொடர் பேலியோ டயட்டால் எடைகுறைந்து எப்போதும் டி ஷர்ட்டில் சுற்றுபவர் ஆகிவிட்டார். அவருடனும் நண்பர்களுடனும் அன்றுகாலை பேரூர் ஆலயத்திற்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா குருகுலத்திற்கும் சென்றுவிட்டு வந்தேன்.

3

பேரூர் ஆலயத்தில் கல்லாலான கோபுர முகப்பை ஒட்டி கான்கிரீட்டில் முகப்பு அமைத்திருந்தனர்.கல் கட்டுமானங்களுடன் கான்கிரீட் கட்டுமானங்களை சேர்த்துக்கட்டக்கூடாதென்று பொறியாளர்கள் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். கல்கட்டுமானங்கள் மேல் மேலாக கல்லை அடுக்கி கட்டப்பட்டவை. எடையே அவற்றின் ஒட்டுவிசை. கான்கிரீட் கட்டுமானங்கள் காலப்போக்கில் சற்றே சரியும். பிளவுபடும். அப்போது கல்லையும் இழுத்துச்சரிக்கும்.

பக்தர்கள் கோயிலை இடிப்பதில் மிகுந்த ஊக்கத்துடன் இருக்கும் நாடு நம் தமிழ்நாடு. அந்த கட்டுமானத்தைக் கட்டியவர்,நிதியளித்தவர் எவரானாலும் சிவன்கோயிலை இடித்த பாவம் சேரட்டும்.

4

நான் வந்து இறங்குவதற்கு முன்னரே மழைபெய்திருந்தது. ஆகவே காற்றில் நீராவி. பளிச்சிடும் வெயில். ஈஷா செல்லும் வழியில் பசுமையான இலைகள் ஒளிவிட்டன. அந்த இடத்தின் தூய்மையும் நவீனக் கலையமைப்பும் நிறைவளிப்பவையாக இருந்தன. பைரவி சிலை மகிஷாசுர மர்த்தனியின் நவீன வடிவம்

அங்கே எனக்குத்தெரிந்த சில நண்பர்கள் உண்டு,  நான் செல்வதை அவர்கள் எவரிடம் சொல்லவில்லை.ஆகவே உற்சாகமாக, சுதந்திரமாக இருக்கமுடிந்தது. கோடையானதனால் நல்ல சுற்றுலாக்கூட்டம். முழுக்கமுழுக்கப் பெண்களால் லிங்க பைரவி ஆலயம் நிர்வாகம்செய்யப்படுவதும் மகிழ்ச்சியை அளித்தது.

மாலைநண்பர்கள் வந்திருந்தனர். இரவு பத்துமணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம்.அன்னபூர்ணா ஓட்டலின் சிறப்பு வசதியான பெரிய அறை. கீழேயே நல்ல சைவ ஓட்டல். ஆனால் ஏஸி எல்லாம் மிகப்பழையவை. பலர் அறைக்குள் அமர்ந்தால் புழுங்க ஆரம்பித்துவிடும். கோவையில் மழைக்காலம் ஆகையால் நன்றாக இருந்தது

 

 

 

மறுநாள் காலை ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் உள்பட நண்பர்கள் வந்தனர். வழக்கமாக மாலை சொற்பொழிவு இருந்தால் அதிகம் பேசமாட்டேன். ஆனால் கிருஷ்ணன் வந்தால் பேசவைத்துவிடுவார். தொண்டைகட்டிக்கொண்டது. வெந்நீர் குடித்து ஓரளவு தேற்றி எடுத்து நாற்பத்தைந்துநிமிடம் பேசிவிட்டேன்.

நிகழ்ச்சி நடக்கும்போதே மழை. மாலையிலிருந்தே மழைக்கான சாயல் இருந்தது. மழை கொட்ட, நண்பர்களுடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் கோவையில் பேசிய பெரும்பாலான விழாக்களில் மழைபெய்திருக்கிறது.

நண்பர் ராம்குமார் அவர்கள் அஸாமில் ஆட்சியராக இருக்கிறார். இணையத்தில் உள்ள என் நீண்ட பேட்டியை அவர்தான் எடுத்தார் – மாணவராக இருந்தபோது. அவர் ஷிவ்சாகரில் ஆட்சியராக இருந்தபோதுதான் நாங்கள் வடகிழக்குப்பயணம் மேற்கொண்டோம்.  ஒன்பதாம் தேதி காலை ஆறுமணிக்கு அவரது திருமணத்திற்குச் சென்றேன். ராம்குமார் நாமமும் தலைப்பாகையுமாக விஜயநகர் காலகட்டத்திற்குச் சென்று திருமணம் செய்துகொண்டிருந்தார்.

 

 

1 (2)

டாப்ஸ்லிப் அருகே ஓர் ஆன்மிக அமைப்பின் கோடைக்கூடுகை நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் செல்லும் திட்டமிருந்தது. உண்மையில் அதன்பொருட்டே நான் கோவைத்தங்குதலை நீட்டித்திருந்தேன். அவர்கள் என் இல்லத்திற்கு வந்து அழைத்தனர். எனக்கு அணுக்கமான ஒரு நண்பரின் ஏற்பாடு.

நான் கோவையில் இருந்து ஒன்பது மணிக்கு கிளம்பலாமென எண்ணியிருந்தேன். அவர்கள் பதினோரு மணிக்கு என் நிகழ்ச்சி என்றும் முன்னரே வரும்படியும் கோரினர். ஆகவே விடியலிலேயே அழைப்பான் வைத்து எழுந்து குளித்து கல்யாணத்திற்குச் சென்றேன். கல்யாணமண்டபத்திற்கு எட்டுமணிக்கு வண்டி அனுப்பும்படி கோரியிருந்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர்

ஆனால் எட்டுமணிக்கு வண்டிவரவில்லை. கூப்பிட்டுக் கேட்டபோதுதான் அவர்களுக்கே வண்டி அனுப்பவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பொள்ளாச்சியில் ஏதோ வாடகை ஓட்டுநருக்குச் செய்தி அனுப்பினர்.  அந்த ஓட்டுநர் பொள்ளாச்சியிலிருந்து கிளம்பும்போது கோவையைக் கடந்துவிட்டதாகச் சொன்னார். இதோ லட்சுமி மில் அருகே வந்துவிட்டேன் என்றார். கடந்து சென்றுவிட்டேன் மீண்டும் வருகிறேன் என்றார். அவர் வந்து சேர்ந்தது ஒன்பது இருபதுக்கு

அதுவரைக்கும் வருவார் என்று மண்டப வாயிலிலேயே நின்றிருந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்தாலும் பேசி சமாளித்துக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் இங்கே எப்போதுமுள்ள திறமையின்மை, அலட்சியம் ஆகியவற்றை இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனநிலையே எனக்கும் உள்ளது.

விசாரித்தபோது   இன்னொரு வாடகை ஓட்டுநரிடம் என்னை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் ஒன்பது மணிக்கு வந்தார். முந்தைய ஓட்டுநரிடம் இவர் பேச  அவர் தானே கொண்டுபோவதாகவும் அவர் கூட்டிச்செல்லக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே அவரே வரட்டும், நான் கூட்டிச்செல்லப்போவதில்லை என்றார் இந்த ஓட்டுநர்.

ஒருகட்டத்தில் நான் பொறுமையிழந்தேன். கல்யாணமண்டபத்தின் முன்னால் ஒருமணிநேரமாக நின்றிருந்தது மிக சங்கடமாக இருந்தது. என்னை அழைத்த நண்பரை அழைத்தேன். அவர் போனை எடுக்கவில்லை. ஆகவே நான் வரப்போவதில்லை என அவர்களுக்குத் தெரிவித்துவிட்டேன்.ஒரு கணத்தில் எடுத்த முடிவுதான், ஆனால் எப்போது எனக்கு அத்தகைய கணங்கள் முக்கியமானவை.

ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவேண்டிய விருந்தினரை அழைத்துவர வாடகை ஓட்டுநர்களிடம் செய்தி அளித்துவிட்டு மேற்கொண்டு அக்கறையே இல்லாமலிருப்பதென்பது நேரடியான அவமதிப்பு. ஏதாவது பிரச்சினை வந்தால் அது  ஓட்டுநர்களின் குளறுபடி என்று சொல்லிவிடலாம். ஆனால்  அது மிக எளிய தந்திரம்,  அனைவருக்கும் அது தெரிந்திருக்கும்.

நேர்மையாகச் சொன்னால், அவ்வமைப்பில் ஏதேனும் பொறுப்பில் இருப்பவர்தான் அழைத்துவரும் பொறுப்பை ஏற்கவேண்டும். நேரில் சென்று அழைத்துவரவேண்டும், அல்லது அதற்கு பொறுப்பேற்றுப் பதில்சொல்லும் ஒருவரிடம் அதை ஒப்படைக்கவேண்டும்.அதுவே முறை.

ஆனால்  எல்லாவற்றுக்கும் ஏதேனும் சம்பந்தமில்லாத ஒருவரை சுட்டிக்காட்டி சாக்கு சொல்வதென்பது தமிழகத்தில் மிகமிகச் சாதாரணமான ஒரு விஷயம். ‘டிரைவர் ஏமாத்திட்டான் சார்’ ‘அந்த ஓட்டல்காரன் பேர எழுதிக்கவே இல்லை சார்’  ‘டிராவல்காரனுகள நம்பவே முடியலை சார்’–இதெல்லாம் எப்போதுமே காதில் விழும் வரிகள்.

3 (2)

விஷ்ணுபுரம் அமைப்பின் விழாக்களில் எந்த விருந்தினரையும் எங்கள் அமைப்பின் உள்வட்ட நண்பர்கள் நேரடியாகச் சென்று அழைத்துவராமலிருந்ததில்லை. அவர்கள் முதியவர்கள் என்றால் சென்னையிலிருந்து அல்லது திருவனந்தபுரத்திலிருந்து அவர்கள் கிளம்பும்போதே எங்கள் அமைப்பின் நண்பர் ஒருவர் உடனிருந்து அழைத்துவருவார்.

உண்மையில் வாடகை ஓட்டுநர்களிடம் அழைத்துவரும்படி ஏற்பாடு செய்வதிலுள்ளது அமைப்பாளர்களின் பொறுப்பின்மையோ அலட்சியமோ அல்ல. அது ஒரு தரவரிசைப்படுத்தல். அவர்கள் முக்கியமானவர்கள் என நம்பும் ஒருவரை ஒருபோதும் அப்படி வாடகைக் கார் நிறுவனத்திற்கு ஃபோன் செய்து அழைத்துவரச்சொல்ல மாட்டார்கள். எவருக்கு அமைப்பின் முக்கியமானவர் செல்லவேண்டும், எவருக்கு அமைப்பைச்சேர்ந்த ஒருவர் மட்டும் சென்றால்போதும் ,எவருக்கு வாடகைக்கார் போனால்போதும் என்பதற்கு அவர்களிடம் ஒரு கணக்கு இருக்கும்.

இவ்வாறு பிறர் எனக்கு அளிக்கும் தரவரிசையை நான் ஏற்கக்கூடாதென்பதில் எப்போதும் உறுதியாகவே இருக்கிறேன். ஏனென்றால் நன் எழுத்தாளன். எழுத்து என்றால் என்னவென்றே அறியாதவர்கள் என் தரவரிசையிடத்தை முடிவுசெய்ய நான் அனுமதிக்கக்கூடாது.

என்னிடம் பேசும் பொதுவாசகர்கள் சினிமாவில் எனக்குப் போதிய மரியாதை கிடைக்கிறதா என அக்கறையுடன் , கவலையுடன் கேட்பார்கள். சினிமாவில்தான் எனக்கு எப்போதும் முதன்மை மரியாதை கிடைக்கிறது என்பேன். சினிமாவில் தயாரிப்பாளரோ, இயக்குநரோ நட்சத்திரநடிகரோ என்னை எதிர்கொண்டழைக்காத, வழியனுப்பாத ஒரே ஒருதருணம்கூட  இதுவரை அமைந்ததில்லை. தமிழகமே கொண்டாடும் உச்சநடிகர்களுக்குக் கூட நான் ஒவ்வொருதருணத்திலும் முதன்மைவிருந்தினர்தான்.

காரணம் சினிமா என்ன இருந்தாலும் கலைஞர்களின் உலகம். அங்கே கலைஞர்கள் அல்லாதவர் – கலைஞர் என்னும் நுணுக்கமான ஒரு பிரிவினை உண்டு. எழுத்தின் மேலும் கலைகள் மேலும் உண்மையான மதிப்பும் ஈடுபாடும் இல்லாத எவரையும் சினிமாவின் படைப்புலகுக்குள் நான் கண்டதில்லை. அவர்கள் உருவாக்கும் சினிமா ஆயிரம் வணிகச் சமாசங்கள் கொண்டது. ஆனால் என்றோ ஒருநாள் கலைமனத்தின் தூண்டுதலால்தான் அவர்கள் சினிமா நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

எனக்கு கிடைத்த அவமதிப்புகள் எல்லாமே கல்லூரிகளில்தான். கல்லூரிகளில் நம்மை அழைத்துச்சென்று அதன் முதல்வர் அல்லது தாளாளர் அலுவலக வாசலில் காத்து நிற்கச்செய்வார்கள். உள்ளே செல்லும்போது அந்த முதல்வர் அல்லது தாளாளர் ஏதாவது ஃபைலைப்புரட்டியபடி மிதப்பாக நம்மிடம் ஓரிரு சொற்கள் சொல்வார். நாம் முன்னாலிருக்கையில் இன்னொருவரிடம் ‘சீரியஸாக’ பேசுவார். அவர்களின் தரமென்ன, அறிவுத்திறன் என்ன என எனக்குத்தெரியுமென்பதனால் அது எரிச்சலூட்டும் ஒரு தருணம்.

பெரும்பாலும் ‘நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமுடியாது , ரொம்ப பிஸி’ என்பார்கள். ‘நீ ஒரு சாதாரண கல்லூரி முதல்வர்தானே? உனக்கு என்ன அந்த தோரணை’ என்னும் சொல் வாய் வரை ஒவ்வொருமுறையும் வரும்.   நம்மை வருந்தி அழைத்து உடனிருக்கும் வாசகரான கல்லூரி ஆசிரியரின் பொருட்டு பேசாமலிருப்பேன். இப்போது கல்லூரிகளுக்கே செல்வதில்லை என்பது என் கொள்கை.

இந்த அமைப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டதுகூட தனிப்பட்ட முறையில் தெரிந்த வாசகரான நண்பரின்பொருட்டுத்தான். இந்த ஆன்மிக அமைப்பைச் சொல்லிக்குற்றமில்லை. அவர்களுக்கு அரசு உயரதிகாரிகள். சினிமாப்பிரபலங்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள் என்ற வரிசையில்தான் தரமதிப்பு இருக்கிறது. அவர்களிடம் அதற்கு அப்பால் எதிர்பார்ப்பதும் பிழை. இலக்கியம் அல்லது கருத்துக்கள் மீது மதிப்பு எழுவதற்கு முதலில் கொஞ்சமேனும் வாசிப்பு தேவையாகிறது.

நண்பரின்பொருட்டு அழைப்பை ஏற்றுக்கொண்டது என் பிழை. நான் முதலிலேயே இக்கணிப்புகளைச் செய்திருக்கவேண்டும். பலமுறை இது நிகழ்ந்தபின்னரும் நான் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறேன். இப்போதுகூட நான் மிகையான ‘தோரணை’யுடன் இருப்பதாகவே அவர்கள் எண்ணுவார்கள்.  இங்குள்ள பெரும்பாலான பாமரர்களின் எண்ணமும் அதுவாகவே இருக்கும். அதற்குமேல் அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இந்தத்தலைமுறையில் தமிழகத்தில் எழுத்தாளனுக்குரிய இடம் இயல்பாக உருவாகாது.

ஏன் இந்த தரவரிசையை ஏற்றுக்கொள்ளக்கூடாது? ஏன் இந்த  ‘ஆணவம்?’ நான் எளிமையாக இருக்கலாம். ஆனால்  என் மரபை நான் எளிமையாக ஆக்கக்கூடாது. புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் வரையிலான ஒரு மரபின் நீட்சி நான். என்னை ஒரு தரவரிசையில் அமைப்பவர் என் மரபை அங்கே அவருக்குத்தெரிந்த ஒரு இடத்தில்  நிர்ணயிக்கிறார். அதை நான் ஏற்கமுடியாது.

எந்தமேடையிலும் எனக்கு தமிழகத்தின் எந்த பேருருவுக்கும் நிகரான இடம் அளிக்கப்பட்டாகவேண்டும். ஜெயமோகன் என்பதற்காக அல்ல, எழுத்தாளன் என்பதற்காக. நான் எளிமையானவன்தான். இலக்கியக்கூட்டங்களில் தரையில் படுக்கவோ உப்புமா சாப்பிடவோ எனக்கு பிரச்சினை இல்லை. என் மரபின் அடையாளத்துடன் நான் நின்றிருக்கையில் என் இடம் முதன்மையானது. அதை அறியாதோர், ஏற்காதோர் என்னை அழைக்கவேண்டியதில்லை. எங்கும் என் நிலைபாடு இதுவே . இனி எவரிடமும் , எங்கும் நான் பெற ஏதுமில்லை. ஆகவே எவரிடம் தாழ்ந்துநிற்கவும் தேவையில்லை.

நண்பர்கள் நால்வர் என்னுடன் இருந்தனர். ஐவர் ஈரோட்டிலிருந்து அங்கே நேரடியாக வருவதாக இருந்தனர். ஒன்பதாம்தேதி நிகழ்ச்சி முடிந்தபின் டாப்ஸ்லிப்பில் ஒரு மலையேற்றம் போக திட்டமிட்டிருந்தோம். அவர்களிடம் நான் அக்குருகுல நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதில்லை என அறிவித்தேன். உடனடியாக இன்னொரு திட்டம் போட்டோம். நண்பர் ஒருவரின் விருந்தினர் மாளிகை அட்டப்பாடியில் இருந்தது. சிறுவாணி ஆறு தொடங்குமிடத்தில்.

மதியமே அட்டப்பாடி சென்றோம். ஏற்கனவே நான் சென்ற விருந்தினர் மாளிகைதான். வசதியானது. மாலையில் ஆற்றங்கரை வழியாக ஒரு நீண்ட நடை சென்றோம். திரும்பும்போது கிட்டத்தட்ட கஷ்மீரை நினைவுறுத்தும் அளவுக்குக் காவல்கெடுபிடிகள். அங்கே மாவோயிஸ்ட் தீவிரவாதம் எழும்நிலையில் உள்ளது என்கிறார்கள்.

மறுநாள் காலையில் கிளம்பி சைலண்ட் வேலிக்கு சென்றோம். எண்பத்திநான்கில் நான் ’சைலண்ட் வேலியை காப்போம்’ போராட்டத்தின் வெற்றிவிழாவுக்காக அங்கே சென்றிருக்கிறேன் . அதன்பின் இப்போதுதான். நிறைய மாறியிருக்கிறது. ஆனால்  தூய்மையாகப் பேணுகிறார்கள்

ஐந்துமணிநேரம் காட்டுக்குள் சென்று குந்திப்புழா மீது அமைந்த பாலம் வரை நடந்தோம். இலக்கியவிழாக்கள், பூசல்கள் அனைத்தும் நினைவிலிருந்து அகன்று காடு மட்டுமே எஞ்சியிருந்தது.

மாலை திரும்பி கோவை வந்து எட்டரை மணி ரயிலில் வீடு திரும்பினேன் நான்குநாட்கள் மீண்டும் நண்பர்களுடன். மீண்டும் இயற்கையுடன்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

ஆதல்

$
0
0

 

Lohitadas_and_Bharathan

{லோகிததாஸ், பரதன் , ராமச்சந்திரபாபு. அமரம் படப்பிடிப்பில்]

2003 டிசம்பர் மாதம்  பாஷாபோஷணி மலையாள இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு லோகி தொலைபேசியில் பேசினார். ஆழ்ந்த குரல்.  “நான் லோகிததாஸ் பேசுகிறேன்” என்றபோது அது மலையாளத்தின் நட்சத்திர திரைக்கதை ஆசிரியர் என்று நினைத்துப்பார்க்க என்னால் இயலவில்லை. அதற்கு முன்பு கமல்ஹாசன் என்னை தொலைபேசியில் அழைத்தபோது நாலைந்துமுறை வரைக்கும் யாரோ குரல்போலி செய்து ஏமாற்றுகிறார்களோ என்னும் ஐயம்  இருந்தது எனக்கு.

“யார்?” என்று கேட்டேன்.  “நான் சில திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன்” என்றார். ”நாம் சந்திக்கவேண்டும். ஒரு சினிமா விஷயமாக” நான் பதட்டத்துடன்  “நான் உங்கள் ரசிகன். சமீபத்தில் கூட சதயம் என்னும் படத்தை பார்த்தேன்” என்றேன். “அது நான் எழுதியது அல்ல எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியது” என்றார்.  “மன்னிக்கவேண்டும் என் மனதில் அது நீங்கள் எழுதியதாக பதிந்துவிட்டது”  என்றேன்.

லோகி சிரித்து “அது எம்.டி.எழுதிய ஒரு லோகிததாஸ் திரைக்கதை. பலர் அதை நான் எழுதியதாகவே நினைக்கிறார்கள். சிபி மலையில் இயக்கியதும் ஒரு காரணம்” என்று சொன்னார்.என் கட்டுரையை குறிப்பிட்டு பாராட்டி, “நான் உங்களுடைய வாசகன். என்னுடைய மனைவி உங்கள் கட்டுரைகளைப்படிப்பார். நல்ல கட்டுரைகளை எனக்கு அறிமுகம் செய்வார் இன்று வந்த இந்த கட்டுரை என் விழிகளை நனைய வைத்தது” என்றார். நான் “நன்றி” என்றேன். பாராட்டும்போது என்ன பதில் சொல்வது என்று எனக்குத்தெரியவில்லை.

“உணர்வால் எழுதியிருக்கிறீர்கள்” என்றார் லோகி “நவீன இலக்கியம் வந்தபின் உணர்வுகளை தவிர்த்துவிட்டு எழுதுவது என்றொரு போக்கு உருவாகியிருக்கிறது. மலையாளத்தில் ஓ.வி.விஜயனுக்கு பிறகு இலக்கியத்தில் நம்பகமான தீவிர உணர்வுநெறிகளே வரவில்லை. உணர்வுகள் இல்லையென்றால் இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எண்ணங்கள் மேலோட்டமானவை. உணர்வுகளும் அவற்றுக்கு அப்பால் போகக்கூடிய கவித்துவ தருணங்களும்தான் இலக்கியத்துக்கு உரியவை என்று நினைக்கிறேன். திடீரென்று நான் எனக்குரிய எழுத்தாளரை கண்டுகொண்டதுபோல் உணருகிறேன்” லோகி சொன்னார். ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அதன்பிறகு பாஷாபோஷிணியில் வந்த  கட்டுரைகள் ஒவ்வொன்றையும் வாசித்துவிட்டு என்னைக் கூப்பிட்டு  பாராட்டிப் பேசி இருக்கிறார்.  நாங்கள் சில சினிமா திட்டங்களைப்பற்றிப் பேசினோம். அவரை திருவனந்தபுரம் கீத் ஓட்டலில் பார்த்துப்பேசினேன்.  முதற்சந்திப்பிலேயேயே லோகிக்கு அணுக்கமானவனாக ஆனேன்.

2003 இல்தான் கஸ்தூரிமான் படம் மலையாளத்தில் வந்து வெற்றி கண்டது. அதன் வெற்றிவிழா சற்று பிந்தி திருச்சூரில் நடைபெற்றபோது லோகி என்னை அதற்கு அழைத்திருந்தார். நான் திருச்சூரில் சென்று இறங்கியபோது ரயில் நிலையத்திற்கே வந்து என்னை அழைத்துச்சென்றார்.

சுருண்ட முடி தோளில் பரவியிருக்க அடர்ந்த தாடியுடன் பிரியமான புன்னகையுடன் வந்து என் கைகளைப்பற்றிய அந்த மனிதரைப்பற்றி நினைக்காமல் ஒருநாளும் அதன்பின் கடந்துசென்றதில்லை. அவரது குடும்பத்தினர்கூட இன்று அவரை இப்படி நினைவுகூர்கிறார்களா என்று தெரியவில்லை. அன்றைய அவரது தொடுகைதான் முதல் சந்திப்பு என இப்போது தோன்றுகிறது.

அன்று அவ்விழாவுக்கென மம்முட்டி போன்ற நட்சத்திரங்களும்,  மலையாளத்தின் முதன்மை இயக்குநர்களும் வந்திருந்தனர். ஒவ்வொருவரையும் லோகியே எதிர்கொள்ளவும் வரவேற்கவும் வேண்டியிருந்தது. அவர்களின் தங்குமிடமும் பயணம் உணவு அனைத்தையும் அவரே ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. அதன் நடுவிலும் என்னை வந்து வரவேற்றுச் சென்றது எனக்கு வியப்பை அளித்தது.

ஓட்டலில் என் அறையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். நடுநடுவே வந்து கொண்டிருந்த அழைப்புகள் அனைத்திற்கும் பதில் சொன்னபடி என் அறையின் மெத்தைமேல் கால் மடித்து அமர்ந்து ஒரு மலையாளக் காரணவரைப்போல கைகளை ஆட்டி ஆழ்ந்த குரலில் பேசினார்.

அவர் மனைவியும் மகனும் உள்ளே வந்தனர். அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்.அன்று நான் மீண்டும் சதயம் என்னும் படம் பற்றி பேசினேன். அது எம்.டி.எழுதிய லோகிதாஸ் படம் ஆனால் அதில் லோகி ஒருபோதும் எழுதாத ஒன்றுள்ளது.

“என்ன ?” என்று லோகி கேட்டார். அந்த படத்தில் பெண்களின் இயல்பு மீது ஒரு ஆழமான அவநம்பிக்கை உள்ளது. மூன்று விபச்சாரப் பெண்களின் தங்கையான கதாநாயகி தமக்கையர் தன்னை விபச்சாரத்திற்கு கொண்டுபோக முயலும்போது ஓடிவந்து கதைநாயகனாகிய மோகன்லாலை அண்டுகிறாள். அவர் அவளை பாதுகாக்கிறார். ஆனால் அவள் ஒருவனை நம்பி ஏமாந்து மனம்கசந்து தானும் விபச்சாரியாகிறாள்

மோகன்லால் மனமுடைகிறார். ஏனென்றால் அவரும் ஒரு விபச்சாரியின் மகன். அவளது மூன்று தங்கைகளும் அவளைப்போலவே எப்படியும் விபச்சாரியாகிவிடுவார்கள் என்று எண்ணுகிறார். அந்தக்காதலன் கதைநாயகியின் சிறுமியரான மூன்று தங்கைகளைத் தேடிவரும்போது அவனைக்கொலைசெய்கிறார். அந்த மூன்று தங்கைகளையும் ஒவ்வொருவராக நெரித்துக் கொலை செய்கிறார். அப்பிணங்களை தன் அருகே படுக்கையில் போட்டு மனநிலை பிறழ்ந்து  “அவர்கள் தூங்குகிறார்கள். அவர்கள் அமைதியாகத் தூங்குகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் மோகன்லாலின் நிலைதடுமாறிய விழிகள் தான் அந்தப்படத்தின் உச்சம்.

“நீங்கள் ஒருபோதும் இப்படி எழுதமாட்டீர்கள். பெண் அவளுக்கு விதி வகுக்கும் வழிகளினூடாக செல்பவள், தன் பலவீனங்களால் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவள், உறுதியான முடிவுகள் எடுத்து தன் நெறியில் தான் நிற்க ஆற்றல் அற்றவள் என்று இந்தப்படம் சொல்கிறது.  எம்டியின் அனைத்துக் கதாநாயகிகளும் அப்படித்தான். தங்கள் உணர்வுகளால் தான் அவர்கள் முடிவெடுக்கிறார்கள். மிக எளிதில் சூழலுக்கு அடிபணிகிறார்கள். எத்தருணத்திலும் வளையாமலிருக்கும் பெண்களை எம்.டி. எழுதியதில்லை அவருடைய பெண்கள் போலியான திமிர் கொண்டவர்கள் அல்லது எளிதில் முறிபவர்கள். நீங்கள் எழுதும் பெண்கள் அப்படி அல்ல” என்றேன்.

எட்டி என் தொடையில் ஓங்கி அறைந்து லோகி நகைத்தார்.  “ஆம், எம்.டி. ஒரு நாயர் தரவாட்டுக் காரணவர். அவர் அப்படித்தான் எழுத முடியும். அவர் பார்த்ததெல்லாம் உள்ளறையில் இருட்டில் புழுங்கியிருக்கும் பெண்களைத்தான். நான் வயலில் இறங்கி வேலை செய்யும் பெண்களை, கல்லுடைக்கும் பெண்களை, மண்சுமக்கும் பெண்களை பார்த்து வந்தவன். உழைக்கும் பெண் தன்னம்பிக்கை கொண்டவள். அவள் எளிதில் உடையமாட்டாள். எனது ஜாதி வேறு. ஆகவே எனது வாழ்க்கைப்பார்வையும் வேறு. நானறிந்த பெண்கள் எந்தக் கோடையிலும் வாடாத புளிய மரம் போல நிற்கக்கூடியவர்கள். சதயம் என் எழுத்தின் வகையைச்சார்ந்தது ஆனால் நான் எழுதியதல்ல”

“அப்படிப்பார்த்தால் பாதேயம் நீங்கள் எம்டியைப்போல் எழுதிய படம்” என்றேன். உரக்க நகைத்து லோகி  “ஆம் அது ஒரு முயற்சி. நான் எம்டியாக ஆகக்கூடாது என்பதற்காகவே அதை சற்று செயற்கையாக எழுதினேன் என்று இப்போது தெரிகிறது” என்றார்.

அன்று நாங்கள் இருவரும் மின்தூக்கி  நோக்கிச் செல்லும் போது லிப்டில் இருந்து வெளிப்பட்ட ஒரு பெண் லோகியிடம்  “நீங்கள் டைரக்டர் பரதன் போலிருக்கிறீர்கள். அவர் தம்பியா?” என்றார். லோகி “ஆமாம்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு மின்தூக்கிக்குள் சென்றார். பரதன் அப்போது காலமாகியிருந்தார்.

நான் உள்ளே சென்றவுடனே  “என்னது இப்படிக் கேட்கிறாள்?” என்றேன் . “ஏன்?” என்றார் லோகி.  “நீங்கள் அவரைப்போன்று இல்லையே? பரதன் நல்ல சிவப்பு நிறம் . வேறுவகையான முகம்”என்றேன்.  “தெரியவில்லை பலர் என்னிடம் பரதனா என்று கேட்பதுண்டு. குறிப்பாக காரில் நான் கடந்து சென்றேன் என்றால் பரதன் பரதன் என்றே மக்கள் சொல்வார்கள்” என்றார். அவர் முகம் மலர்ந்திருப்பதை பார்த்தேன்

பின்பு ஒன்று புரிந்து கொண்டேன். தன்னை எம்டியுடன் ஒப்பிடுவதை லோகி விரும்புவதில்லை. எம்டியிடமிருந்து எல்லாவகையிலும் தன்னை பிரித்துக் கொள்ளவே தன் எழுத்திலும் வாழ்க்கையிலும் லோகி முயன்றார். எம்டியிடமிருக்கும் நாயர்த்துவம் லோகிக்கு உவப்பானதாக இருக்கவில்லை. எம்டியின் கதாபாத்திரங்கள் பேசும் அழுத்தமான இலக்கிய மொழி, கூர் தீட்டிய வாள் போன்ற வசனங்கள் லோகியின் படங்களில் இருக்காது. அவருடைய கதாபாத்திரங்கள் அந்தத் தருணத்தில் ஒரு சாமானியன் சொல்லக்கூடியவற்றை மட்டுமே சொல்லும். ஒருபோதும் அவற்றை கடந்து அவை பேசுவதில்லை.  “செல்கிறேன் திரும்பி வருவதற்காக!” என்று பாதிராவும் பகல்வெளிச்சமும் சினிமாவின் நாயகன் சொல்வதாக எம்டி எழுதுகிறார்.  “நான் வாழணும் நான் வாழணும்” என்றுதான் லோகியின் சேதுமாதவன் கிரீடத்தில் நெஞ்சுடைந்து கூவுகிறான்.

ஆனால் லோகி மிக முயன்று தன்னை பரதனாக ஆக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறது. தாடி தலைமயிரை வளர்த்துக் கொள்வது ,தலையில் பரதனைப்போலவே துணியைக் கட்டிக்கொள்வது அல்லது தொப்பி வைத்துக் கொள்வது ,பரதனைப்போலவே சற்று உடலை அசக்கி நடப்பது என்று பல நுட்பமான நகலெடுப்புகள் லோகியிடம் இருந்தன.

இன்று யோசிக்கும் போது லோகி தொடர்ச்சியாக பரதனாக மாற முயன்று கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது அவர் உள்ளத்தில் இருந்த அந்தப்பாவனைதான் சாமான்யர்கள் பார்த்த உடனே முதலில் பரதனா என்று கேட்க வைத்தது. அந்தக் கேள்வி லோகியை மிகவும் மகிழ வைத்தது .அது ஒரு பெரிய கௌரவம் என்றே அவர் எடுத்துக் கொண்டார். பரதனில் நாயர்த்துவம் இல்லையா என்ன?  இல்லையென்றே தோன்றுகிறது. பரதனில் இருந்தது ஒரு நாயர் அல்ல. ஓவியர் .குடிகாரர். பெண்பித்தர். அந்த ஆளுமைக்கலவைமேல் தான் லோகி காதல்கொண்டிருந்தார். லோகி திரைப்படங்கள் இயகியதே பரதனைப்போல் நடிப்பதற்குத்தான் என்று இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு தோன்றுகிறது.

அடிப்படையில் லோகி பரதனல்ல. காதலன் என்றாலும் அவ ஒழுக்க நெறிகளில் நம்பிக்கை கொண்டவர். காட்சித் தன்மைகளில் நம்பிக்கையற்று மொழியைச் சார்ந்து இயங்குபவர். ஒரு பீர் அடித்தால் மறுநாள் பித்தம் கலங்குபவர். ஆகவே  ‘உயிரைப்பணயம் வைத்து’ தன் ஆதர்ச நாயகனை நோக்கி ஒவ்வொரு கணமும் சென்று கொண்டிருந்தார் லோகி. ஒருவகையில் அதை அடைந்தார். இருவருமே ஐம்பதிற்கு ஒட்டிய வயதில் இறந்தனர். லோகி முதுமை அடைந்திருந்தால் பரதனிடமிருந்து மிக விலகிச் சென்றிருப்பார். நல்ல வேளை அது அவருக்கு நிகழவில்லை. முக்கால்வாசிப் பரதனாகவே இறந்தார். அதுவே ஒரு ஈடேற்றம்.

 

 

தொடர்புடைய பதிவுகள்

கலைக்கணம்

$
0
0

SONY DSC

”தமிழ் சினிமாவிலேருந்து நான் தப்பவே முடியாது. இதுக்குள்ளதான் என் கனவுகள் இருக்கு. ஏன்னா நான் சின்ன கைக்குழந்தையா இருக்கிற காலம் முதலே எங்கம்மா என்னைய தூக்கிட்டு சினிமாவுக்குப்போவாங்க. அதுக்கு முன்னாடி என்னை எங்கம்மா வயித்துக்குள்ள வைச்சிருந்த நாளிலேயே நான் சினிமாவை கேக்க ஆரம்பிச்சிருப்பேனோ என்னமோ. எனக்கு சினிமான்னு அறிமுகமாகிறது சத்தம் வெளிச்சம் சங்கீதம் எல்லாம் கலந்து மனசுக்குள்ள ஓடிட்டிருக்கிற கனவுகள்தான். மூணுவயசு வரைக்கும் நான் சினிமாவை ஒழுங்கா பாத்ததில்லை. கொஞ்சம் பாத்துட்டு தூங்கிடுவேன். அப்றம் கனவுகளும் வெளியே ஓடுற சினிமாவோட சத்தமும் எல்லாம் கலந்து வேறு ஒரு உலகத்தில நீந்தி போயிட்டே இருப்பேன். இப்பவும் என் கனவுகளுக்கு சினிமாவோட ரீ ரிக்கார்டிங் எ·பக்ட் இருக்கு. சினிமா என்னோட சப்கான்ஷியஸிலே ஊறிப்போச்சு சார்…”

வசந்தபாலன் சொன்னார். நான் அந்த மனநிலையை எளிதாக ஊகித்துக்கொண்டேன். ஏன் என்றால் எனக்கு கதகளி அதற்கு நிகரானது. நான் இளமையில் சினிமாவை குறைவாகவே பார்த்திருக்கிறேன். நாங்கள் இருந்த சிறிய ஊர்களில் சினிமாக்கொட்டகைகள் கிடையாது. நெடுந்தூரம் நடந்துசென்று படம் பார்ப்பதும் குறைவு. சினிமா எனக்கு என் ஐந்துவயதுக்கு மேலே ஓரளவு அறிமுகமாகிய கலை. புகுமுக வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் நான் ஒருவருடம் சினிமாப்பைத்தியமாக இருந்தேன். பின்னர் தமிழ் சினிமாவை உப்பக்கம் கண்டுவிட்டதாக ஒரு எண்ணம் ஏற்பட்டது. அதன்பின் அதிகமாகப் படம் பார்த்ததில்லை. பின்னர் 1984ல் கேரளத்துக்கு வேலைக்குப்போனபோது அதே போல ஒரு மலையாள சினிமா மோகம். அதுவும் இரண்டுவருடத்தில் தணிந்தது.

ஆனால் கதகளி அப்படி அல்ல. எங்களூரில் சுற்றிவர ஏழெட்டு கோயில்களில் வருடத்தில் பத்துநாட்கள் கதகளி நடக்கும். திருவட்டார் கோயிலில் இருபதுநாள். என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும் கதகளி ரசிகர்கள். என் அம்மாவுக்கும் கதகளி பிடிக்கும். ஆகவே நான் அம்மா வயிற்றிலேயே கதகளியை அறிய ஆரம்பித்துவிட்டேன். கைக்குழந்தையாக கதகளி பார்க்கச்சென்ற நினைவு எனக்கிருக்கிறது. உயரமான ஒரு மேடைமீது சிவந்த தீப ஒளியில் பளபளவென்று ஒரு உருவம் மெல்ல மெல்ல அசைந்து கொண்டிருந்தது. பின்னணியாக செண்டையின் மேளம். இலைத்தாளமும் சேங்கிலைகளும் எழுப்பும் இசைமுழக்கம். ஒரு பிரம்மாண்டமான வண்டுபோல என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது. அதை பல இடங்களில் எழுதியிருக்கிறேன்.

நெடுங்காலம் நான் கதகளியை திரைநோட்டம் வரைதான் பார்த்திருக்கிறேன். ககதளி உண்டு என்றால் எங்கள் வீட்டில் இருந்து அம்மாவும் பக்கத்து வீட்டு மாமிகளும் வேலைகளை முடித்துவிட்டு சாயங்காலம் குளிக்கச்செல்வார்கள். அப்போதே நான் பதற்றம்மிக்க உற்சாகத்துக்கு ஆளாவேன். பிருஷ்டத்தை கீழிருந்து ஒரு விசை தள்ளிக்கொண்டே இருப்பதனால் நிற்கவோ உற்காரவோ முடியாது. துள்ளிக்கொண்டே இருக்க வேண்டும். தோளில் இருந்து நிஜாரின் கொக்கி வேறு சரிந்துகொண்டே இருக்கும். குளத்துக்குப் போனதுமே என்னை குளிப்பாட்டி தலைதுவட்டி துண்டு உடுக்கச்செய்து கரையில் நிறுத்திவிட்டு அம்மாவும் பிற மாமிகளும் நிதானமாக குளிப்பார்கள். பெரும்பாலும் அம்மா கதகளியின் கதையை சொல்லுவாள். கீசகனை பீமன் வதம்செய்யப்போகிறான். சைரந்திரியை அவன் கீசகனிடமிருந்து காப்பாற்றுகிறான். இன்று என்ன ஆனாலும் தூங்கக்கூடாது, முழுக்கதகளியையும் பார்த்துவிடவேண்டும் என்று நான் மனதில் நினைப்பேன்.

இருட்ட ஆரம்பித்த பிறகு கும்பலாக மாமிகளும் அம்மாவும் கோயிலுக்குக் கிளம்பிச்செல்வார்கள். கைகளில் சுருட்டப்பட்ட சாக்குத்துணிகள். கதகளி பார்ப்பதற்கென்றே பிரித்து விளிம்பு மடித்து தைக்கப்பட்டவை. வறுத்த வேர்க்கடலை, பெரும்பயறு போன்றவை அடங்கிய துணிப்பை. பூ¨ஜைக்கான பொருட்கள். முன்னால் ஒரு மாமி தென்னை ஓலைச்சருகை சேர்த்துகட்டிய ‘சூட்டுப்பந்தத்தை’ கொளுத்தி செக்கச்சிவந்த தீயை நைலான் ரிப்பன் போல சுழலச்செய்தபடி செல்வாள். ஒளி சுழலும்போது சுற்றியிருக்கும் தோப்புமரங்கள் சுடர்ந்து சுடர்ந்து அணையும். மரங்களின் நிழல்கள் எழுந்து பிற மரங்களில் படரும். அக்காலத்தில் கிராமத்தில் திருட்டு போன்ற குற்றங்கள் இல்லை. எல்லாருமே தெரிந்தவர்கள். தோப்புகள் வழிகாக இருட்டில் பொன்நகைகள் அணிந்த பெண்கள் எட்டு கிலோமீட்டர் நடந்துசெல்வது இப்போது கற்பனைக்கே முடியாது.

கோயிலுக்குப் போகும்போது பூஜைகளும், வெளியே அரங்கில் சங்கீதக் கச்சேரி அல்லது பாகவத பாராயணம் நடந்துகொண்டிருக்கும். சங்கீதம் அனேகமாக உள்ளூர் அய்யரின் மனைவியால் அவரால் முடிந்தவரைக்கும் பாடப்படும். பிராமணபக்தி இருந்த காலமானதனால் யாரும் எதிர்மறையாக ஒன்றும் சொல்வதில்லை. கோயிலுக்குள் சென்று பூஜைப்ப்பொருட்களைக் கொடுத்து சாமிகும்பிட்டு, சந்தனக்குறி தொட்டு, மடப்பள்ளி அருகே உள்ள திண்ணையில் அமர்ந்து பச்சரிசிப்பாயசமும் கதலிப்பழமும் சாப்பிட்டுவிட்டு அங்கே உள்ள பிற பெண்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நான் மணலில் பிற குழந்தைகளுடன் விளையாடுவேன், பெரும்பாலும் பெண் குழந்தைகளுடன்.

கேளிகொட்டு முழங்கத்தொடங்கும்போது ஊரிலிருந்து ஒவ்வொருவராக கதகளி பார்க்க வர ஆரம்பிப்பார்கள். அரைமணிமுதல் ஒருமணிநேரம் வரை முழங்கும் இரட்டைச்செண்டையின் தாளத்துக்குத்தான் கேளிகொட்டு என்று பெயர். கதகளி நடப்பதைப்பற்றிய அறிவிப்பு அது. கதகளி ஆரம்பிக்கும்போது ‘ரங்கமுற்றம்’ நிறைய ஆளிருக்கும். அதிகமும் பாட்டிகள்,தாத்தாக்கள். பெண்கள் குழந்தைகளுடன் வந்திருப்பார்கள். குழந்தைகளின் சத்தகங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்.

களியரங்கு எப்போதுமே நான்குபக்கமும் திறந்த சதுர மேடை. அதில் ஆளுயரமான களிவிளக்கு கொளுத்திவைக்கப்படும். பெரிய கோயில்களில் களிவிளக்குகள் இருக்கும். பிரம்மாண்டமான பித்தளைக் குத்துவிளக்குகள். அவற்றை தனித்தனியாகக் கழற்றி நாலைந்துபேராகத்தான் கொண்டுவரவேண்டியிருக்கும். அதன் திரிகளும் கட்டைவிரல் கனத்துக்கு இருக்கும். ஏழுதிரிகள் போட்டு அதை கொளுத்தி அரங்கின் வலது மூன்பக்கம் நிறுத்துவார்கள். பழங்காலத்தில் கதகளி அந்த வெளிச்சத்தில்தான் நடக்கும். பின்னர் கியாஸ்லைட் வந்தது. நான் சின்னப்பிள்ளையாக இருக்கும் போதுகூட கதகளி அரங்கில் மின்விளக்குகள் போடப்படவில்லை. அரங்கில் ஒரு விசித்திரமான உருவம் , தெவனோ கந்தர்வனோ,  உலோகவடிவில் வந்து நின்றுகொண்டிருப்பதுபோலிருக்கும்

காலியான கதகளிமேடை என்னை சிறு குழந்தையாக இருக்கும் காலம் முதலே கவர்ந்திருக்கிறது. கேளிகொட்டின் ஒலியில் ஏழுசுடர்களின் ஒளியில் காத்திருக்கும் மேடை. அதில் வரப்போவது யாரென்றே தெரிந்திருக்காது. அது மெல்ல துடித்துக்கொண்டிருப்பது போல் இருக்கும். அதன் மீது தோன்றப்போகும் அசுரர்களும் தெய்வங்களும் அங்கே காட்சிக்குத்தெரியாமல் வந்துவிட்டிருப்பது போல! நான் அரங்கை விட்டு கண்களை விலக்கவே மாட்டேன்.

கதகளியில் முதல் நிகழ்ச்சி திரைநோட்டம். இருவர் ஒரு செம்பட்டுத்திரைச்சீலையை கொண்டுவந்து அரங்கை மறைத்துக்கொண்டு பிடித்து நிற்பார்கள். அதில் மலையாளத்தில்  அந்தக் கதகளி யோகத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அவர்கள் பிடித்திருக்கும் விதத்தில் அது வளைந்து அலைகள் காற்றில் நெளிய, குத்துவிளக்கொளி பிரதிபலித்து அசைய, நின்றிருக்கும். கதகளியின் மையக்கதாபாத்திரம் பூர்ண வேஷத்தில் வந்து திரைச்சீலைக்குள் நிற்கும். செண்டையும் சேங்கிலைகளும் முழங்கும். திரைக்குள்ளேயே ரங்கபூ¨ஜை. குருவந்தனம் எல்லாம் நடக்கும். அதன் பின் உள்ளேயே சற்று நேரம் அவர் ஆடுவார்.  அவரது மணிமுடியின் கூம்புநுனி மட்டும் அவ்வப்போது மேலே தெரியும். என் மனம் படபடக்கும். உத்வேகத்தில் எழுந்து நின்றுவிடுவேன்.

சட்டென்று வெள்ளிநகமிட்ட விரல்கள் திரையின் நுனியைப்பிடிக்கும். ஆட்டம் அப்படியே நீடிக்கும். ஆட்ட அசைவுகளின் ஒரு கணத்தில் சட்டென்று திரையை கீழே இறக்கி முகம் மட்டும் காட்டப்படும். மேகத்துக்குள் இருந்து ஒரு முகம் மட்டும் தெரிந்து மறைவதுபோல. சிறுவயதில் என் கதகளியனுபவத்தின் உச்சம் அந்த முகம் தெரியும் கணம்தான். நான் உற்சாகமும் பயங்கர உணர்வும் கலந்து கூச்சலிடுவேன். காதுவரை நீட்டிவரைந்து சுண்டங்காய் போட்டு சிவக்க வைத்த உக்கிரமான கண்கள். இருகன்னங்களிலும் வெண்சுட்டிகள். தாமரையிதழ் வடிவில் விரிந்த வாயில் குமிழ்ச்சிரிப்பு.

பின்னர் கதகளி ஆரம்பமாகும். மெல்ல மெல்ல என் ஆர்வம் குறையும். நிதானமாக ஆடிக்கொண்டிருப்பார்கள். பாட்டும் மிக நிதானமாக, சேற்றில் கண்ணாடிவிரியன் போல வழுக்கி வழுக்கிச் செல்லும். அதிகபட்சம் அரைமணி நேரத்துக்குள் கொஞ்சம் கடலை பயறு கருப்பட்டி எல்லாம் தின்றுவிட்டு சாக்குப்படுதாவை மணலில் விரித்து அம்மா மடியில் அல்லது ஏதாவது மாமியின் மடியில் தலைவைத்து நான் தூங்கிவிடுவேன்.

ஆனால் அது அறிதுயில். கதகளியின் ஒலியில் எவராலும் முழுக்க மறந்து தூங்க முடியாது. செண்டையும் சேங்கிலைகளும் உரக்க ஒலிப்பவை.  நான் மூழ்கி அலையும் என் அந்தரங்க வெளி முழுக்க கதகளி ஒலித்துக்கொண்டிருக்கும். கதகளிவேட முகங்கள் என்னை நோக்கிச்சிரிக்கும். சினக்கும். செஞ்சாந்துபூசப்பட்ட விரல்கள் குவிந்து மொட்டுகளாகும், விரிந்து மலர்களாகும். மலர்கள் விரல்களாகும். எப்போதோ விழித்துக்கொண்டு புரண்டுபடுக்கும்போது எழுந்து பார்க்கையில் வானத்தின் அந்தர இருள்த்திரையில் செவ்வொளி தகதகக்கும் அசுர தேவரூபங்கள் மெல்ல அசைந்துகொண்டிருக்கும். சட்டென்று சுழற்றி எடுக்கும் காற்றில் அவை அரையாடை சுழல எம்பிச் சுழன்றிறங்கும்.

கதகளி பெரும்பாலும் விடியும்வரை நடக்கும். அதிகாலையில் கோயிலில் உஷத்பூஜைக்கு முரசு முழங்கும்போதுதான் ஆட்டம் முடியும். கதை முடியாவிட்டால் மறுநாளைக்கு நீட்டி வைப்பார்கள். நான் பெரும்பாலும் கிளம்புவதை அறிவதே இல்லை. கண்விழித்து எழும்போது வீட்டில் எப்போதும்போல பாயில் கிடப்பேன். அம்மா மெல்ல கதகளிப்பதத்தை முனகியபடி அவளுடைய வேலைகளைச் செய்துகோண்டிருப்பாள். என் தலைக்குள் செண்டையும் இலைத்தாளமும் சேர்ந்து முழங்கும். கண்கள் கூசி தலை சுழலும். அலையலையாக விசித்திரக்கனவுகள் கிளம்பி வந்து வெயில் சரிந்து ஒளிரும் காலையுடன் கலந்துகொள்ளும்.

கிபி பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கதகளி தோன்றியிருக்கலாம் என்பது ஒரு ஊகம். கதகளிக்கு முன்வடிவங்களாக மூன்று மரபுக்கலைகள் உள்ளன. ஒன்று தெய்யமாட்டம். வேலன் என்று சொல்லப்படும் பெருவண்ணார்சாதியால் ஆடப்படும் தெய்யம் ஒரு அனுஷ்டான கலை, அதாவது வழிபாடே கலையாக ஆன நிலை. போரில் கொல்லப்பட்ட வீரர்கள் போன்றவர்களை நடுகல்லாக்கி வழிபடும் வழக்கத்தின் ஒரு பகுதியாக, வருடத்தில் ஒருசில நாட்கள் அவர்களை எண்ணி தெய்வ வேடத்தை புனைந்துகொண்டு ஆவேச நடனமாடும் பூசாரியை தெய்வமாக எண்ணி பலிபூஜைகள் செய்து வழிபடுவது இந்த சடங்கு. ஆப்ரிக்கப் பழங்குடிகளிடம் உள்ள சடங்குகளை பலவகையிலும் நினைவூட்டுவது தெய்யம். தெய்யம் கெட்டு என்பது தெய்வம்கட்டுதல் என்ற சொல்லாட்சியின் மரூஉ.

தெய்யம் கெட்டில் கொந்தை என்று சொல்லப்படும் உயரமான மணிமுடிக்கு முக்கியமான இடம் உண்டு. அதைச்சுற்றி குருத்தோலையால் அலங்காரம் செய்திருப்பார்கள். முகத்தில் பலவகையான சாயங்கள் பூசி கன்னங்களில் மென்மையான கமுகம்பாளையால் சுட்டிகுத்தி முகத்தை அகலப்படுத்தி தெய்வத்தோற்றம் கொண்டுவரப்பட்டிருக்கும். இதேவேடத்தின் சாயல்களை புரதனமான கதைசொல்லி ஆட்டமான சாக்கியார் கூத்திலும் காணலாம். சாக்கியார் கூத்து பற்றி சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ராமனாட்டம் கிருஷ்ணனாட்டம் என்ற கலைகள் சாக்கியார்கூத்தில் இருந்து வந்தவை. இக்கலைகளின் கலவையால் உருவான செவ்வியல் கலைவடிவம்தான் கதகளி.

கதகளியென்பது காட்சி,வேடம்,நடிப்புமுறை, உணர்ச்சிநிலைகள் அனைத்திலும் நாட்டார் [·போக்] கலைகளின் இயல்புகள் கொண்ட கலைவடிவம். நாடகப்பிரதி, மெய்ப்பாடுகள், நுண்ணிய அபிநயமுறை ஆகியவற்றில் சம்ஸ்கிருத நாடக மரபை ஒட்டி உருவான மிகமிக விரிவான செவ்வியல் [கிளாஸிக்] பண்புகள் கொண்டது. இந்தக்கலவை காரணமாகவே கதகளிக்கு ஒருபோதும் தீராத புதுமை சாத்தியமாயிற்று. கதகளி பதினாறாம் நூற்றாண்டில் உருவானதனால் அதன் வேட அமைப்பில் அக்காலத்தைய உடைகள் உண்டு. பளபளக்கும் முழுக்கை அங்கி, பட்டுக்கால்சராய் போன்றவை உதாரணம். 1555- 1605 ல் கொட்டாரக்கர தம்புரான் என்னும் குறுநில மன்ன்ர் பல்வேறு கதகளிநடிகர்களை திரட்டி ஒரு சபை அமைத்து கதகளியை தொகுத்து வடிவம் கொடுத்தார். கதகளியில் படையணி களரி போன்ற சண்டைக்கலைகளின் பாதிப்பும் உண்டு.

கதகளியில் ஒரு புராணக்கதை இருக்கும். அதை ஒட்டி ஒரு கவிஞனால் எழுதப்பட்ட இசை-கவிதை-நாடகம் அதன் அடிப்படை. இது ஆட்டக்கதை எனப்படுகிறது. மலையளத்தில் இது ஒரு முக்கியமான இலக்கியவடிவம். உண்ணாயி வாரியர் என்பவரால் எழுதப்பட்ட நளசரிதம் என்ற ஆட்டக்கதை அவற்றில் ஒரு பெரும்படைப்பு. இந்த ஆட்டக்கதையை மேடையில் ஒரு தனி இசைக்குழு பாடுகிறது. இது கீதகம் எனப்படுகிறது. அத்துடன் செண்டை, இலைத்தாளம்,சேங்கிலை முதலிய தாளவாத்தியங்கள் இணைகின்றன. இவை வாத்யம் என்று சொல்லப்படுகிறன. பாடல்வரியை சங்கராபாரணம், பைரவி போன்ற பழைய ராகங்களில் மென்மையாகவும் நிதானமாகவும் பலமுறை பாடுவார்கள். அதற்கேற்ப நடிகர்கள் கைகளாலும் கண்களாலும் அபிநயம்பிடித்து ஆடுவார்கள். இது நிருத்யம் என்று சொல்லப்படுகிறது

ஒருசில வரிகள் பாடப்பட்டபின் தாளம் மட்டும் ஒலிக்கும். அதற்கேற்ப நடிகர் அந்த வரியை மிக விரிவாக தன் கற்பனை கலந்து நடிப்பார். உதாரணமாக நளன் ‘அன்னமே அழகே வருக’ என்று சொல்லி தமயந்திக்குத் தூதனுப்ப அன்ன்ப்பறவையை பிடித்தான் என்று ஒருவரியைப்பாடி முடித்ததும் நடிகர் அன்னப்பறவையை கையில் வைக்கும் சைகையுடன் நடிக்க ஆரம்பிப்பார். கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் திருவட்டாறில் ஒருமுறை இரண்டரை மணிநேரம் அந்த ஒருவரிக்கு அபிநயம்பிடித்தார் என்பார்கள். மானசரோவரில் நீந்தும் அன்னம்,தேசாடனம் சென்ற அர்ஜுனன் பார்த்த அன்னம், மேகம் போன்ற அன்னம் என்றெல்லாம் அந்த அன்னத்தை அவர் சைகையால் உணர்ச்சிகரமாக விளக்கியபடியே செல்வார். அந்த அன்னம் காதலுக்குக் குறியீடாக ஆகிவிடும். ஒட்டுமொத்த மானுடக்காதலைப்பற்றியே அவர் சொல்ல ஆரம்பித்துவிடுவார். கதகளியில் ரசிகர்கள் ரசிப்பது இதைத்தான். இது மனோதர்மம் எனப்படுகிறது.

இதில் உள்ள விரிவான சைகைகளை நாட்யம் என்கிறார்கள். கதகளிக்கு 24 அடிப்படை கைசைகைகள் உண்டு. இவை முத்ரகள் எனப்படுகின்றன. பெரும்பாலான முத்திரைகள் நம் சிற்பங்களில் உள்ளவைதான். அவை பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரப்படி அமைந்த¨வை. நவரஸங்கள் — ஒன்பது மெய்ப்பாடுகள்– பரதமுனிவரின் நிர்ணயத்தின் படி கதகளியில் நடிக்கப்படுகின்றன. இருந்தாலும் வீரம், சிருங்காரம்,கருணை [துயரம்]  ஆகிய மூன்று ரஸங்களுக்கே கதகளியில் முக்கியமான இடம்.

பெரும்பாலான செவ்வியல் நாடக வடிவங்களைப்போலவே கதகளிக்கும் அவலம்தான் மையக்கரு. அதாவது ஒரு பெரும் கதாபாத்திரத்தின் வீழ்ச்சி. ஆகவே கதகளியில் எப்போதும் கதாநயகர்கள் புராணத்தில் உள்ள எதிர்நாயகர்கள்தான். ராவணன், துரியோதனன், நரகாசுரன், கீசகன் போன்ற கதாபாத்திரங்களைத்தான் கதகளி மையமாக்கியிருக்கும். அவற்றைத்தான் பெரும் நடிகர்கள் நடிப்பார்கள். அவர்களைக்கொல்லும் கிருஷ்ணனும் ராமனும் சிறு கதாபாத்திரங்கள்தான். திரை நோட்டத்தில் திரைக்கு அப்பால் வந்து நின்று வணங்கும் கதாபாத்திரம் பெரும்பாலும் ராவணன் அல்லது துரியோதனன்தான். அவர்களைத்தான் ரசிகர்கள் கும்பிடுவார்கள்

கதகளிக்கு வேடங்களில் பலவகை உண்டு. பச்சைவேடம் என்பது முகம் பச்சைநிறமாக இருக்கும் வேடம். ராமன் கிருஷ்ணன் போன்ற கதாபாத்திரங்கள். சத்வ குணம் மேலோங்கியவை. ராவணன் போன்ற தமோகுணம் மேலோங்கிய கதாபாத்திரங்கள் சுவந்ந தாடி வேடங்கள் எனப்படும்.சிவந்த தாடியும்ச் எம்முகமும் கொண்டவை இவை. முற்றிலும் தமோ குணம் கொண்ட நரகாசுரன் போன்ற கதபாத்திரங்கள் கத்திவேடங்கள் எனப்படுகின்றன. குரங்குகள் , காட்டாளர்கள் போன்றவை கரிய நிறம் கொண்டவை. அவை கரிவேடம் எனப்படுகின்றன. பெண்வேடங்கள் மினுக்குவேடம் எனப்படுகின்றன. பெண்வேடங்கள் கொண்டை, முக்காடும், பாவாடை மேல்சட்டை போன்ரவற்றுடன் இஸ்லாமிய அல்லது மராட்டி அரசியரின் வேடத்தில் இருக்கும். இவை தவிர ரிஷிகள் போன்ற பலவகை உதிரி வேடங்களும் உண்டு.

கதகளியில் வேணாட்டு சம்பிரதாயம் எங்களூரைச்சேர்ந்தது. கல்லடிக்கோடன் சம்பிரதாயம் நடுகேரளம். கப்ளிங்காட்டு சம்பிரதாயம் வடகேரள மரபு. இப்போது இவையெல்லாம் மகாகவிஞர் வள்ளத்தோள் நராயணமேனன் நிறுவிய கேரள கலாமண்டலம் என்ற அமைப்பல் சீர்ப்படுத்தப்பட்டு நவீன வடிவமாக மறுஆக்கம்செய்யப்பட்டுவிட்டன. கதகளியை கோயில்கலை என்ற நிலையிலிருந்து மீட்டு ஒரு பொதுவான கேரளகலையாக மாற்றியவர் வள்ளத்தோள் நாராயண மேனன். அனைத்து மதத்தவராலும் கதகளி இன்று ஆடப்படுகிறது. கலாமண்டலம் ஹைதர் அலி கதகளியின் பெரும்பாடகராக அமைந்த ஒருநிலை உருவானமைக்கு வள்ளத்தோள் காரணம் எனலாம்.

ஆகவே கதகளி பிற இந்தியக் கலைகளைப்போல அழியும் நிலையில் இல்லை. தழைத்து வளர்ந்து ஒரு பெரிய தேசியகலையாக இன்று உள்ளது. ஒவ்வொரு வருடமும் பலர் அதைப் பயில்கிறார்கள். அவர்கள் பெரிய நடிகர்களாக பணத்துடனும் புகழுடனும் இருக்கிறார்கள். கதகளியை தொழிலாகக் கொள்ள முடியும் இன்று. உலகம் முழுக்க கதகளிக்கு ரசிகர்கள் உள்ளனர். கதகளி கற்பிக்கும் நிறுவனங்கள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மார்கி சேது, வேணு போன்ற மாபெரும் கலைஞர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

ஆனால் கதகளியைப் பயிற்சி இல்லாமல் பார்க்க முடியாது. முதலில் அந்தக்கதை தெரிந்திருக்க வேண்டும். அந்த ஆட்டக்கதையின் வரிகள் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது. ஒட்டுமொத்த இந்தியப்புராணமரபு  நுட்பமாகவே தெரிந்திருக்கவேண்டும். சைகையால் நடிகர் சுட்டக்கூடிய புராணக்குறிப்பு என்பது அப்போதுதான் நமக்குப்புரியும். கைமுத்திரைகள் தெரிந்திருக்க வேண்டும். ஓரளவு மரபிசை ரசனை இருக்க வேண்டும். கதகளி அதன் புதுமையால் நம்மைக் கவரும் கலை அல்ல. மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்டு ரசிக்கப்படும் கலை அது. ஒரே ஆட்டக்கதையை சிலர் ஐம்பது முறை பார்த்திருப்பார்கள். சென்ற முறை கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் நளனாக வந்து அன்னப்பறவையை இப்படியெல்லாம் காட்டினார், இம்முறை என்ன செய்கிறார் பார்க்கலாம் என்றுதான் வருவார்கள். அதாவது கதகளி அதன் நுண்ணிய வேறுபாடுகளினால் ரசிக்க வைக்கும் கலை.

ஆனால் கதகளியைப்பார்த்தே அந்தக்கலையைப் புரிந்துகொள்ள முடியும். எழுத்தே தெரியாத அம்மச்சிமார் கதகளியை நுட்பமாக ரசிப்பதைக் கண்டிருக்கிறேன். பொறுமையும் நிதானமும் கொண்ட வாழ்க்கை இருப்பது அவசியம், அவ்வளவுதான். என் பாட்டி லட்சுமிக்குட்டியம்மா ஒரு பெரும் கதகளி ரசிகை. கதகளி நடிகர்களே மறுநாள் வந்து பாட்டியின் கருத்தைக் கேட்டுத்தெரிந்துகொள்வார்கள். திருவரம்பில் இருந்து நான் திருவட்டாறு போய் பாட்டியுடன் கதகளிக்குச் செல்வேன்.

ஆனால் பத்துவயது தாண்டியபின் கதகளி சலிக்க ஆரம்பித்தது. இரவெல்லாம் ஒரே காட்சியை ஆடினால் எப்படிப்பார்ப்பது? ஆனால் அந்த விழா மனநிலை எனக்குப்பிடித்திருந்தது. கொஞ்சநேரம் கதகளி பார்த்துவிட்டு நழுவிவிடுவேன். கோயிலைச்சுற்றி பையன்களுடன் பலவிதமான சாகஸங்களில் ஈடுபடுவேன். பெண்களுக்குத்தெரியாமல் அவர்களின் தலையில் இருக்கும் பூவை கவர்ந்து செல்வது அவற்றில் முக்கியமானது. பெரும்பாலான பையன்களை விட நான் இதில் கெட்டிக்காரன். உண்மையில் பெண்களைப் பின் தொடர்ந்து போய் அக்கா அக்கா என்று கெஞ்சி கேட்டுவாங்கிக் கொண்டுவந்துவிடுவேன்.

ஒருநாள் பாட்டி நான் ஏன் கதகளிபார்ப்பதில்லை என்று கேட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றேன். பாட்டி இதில் என்ன புரிந்துகொள்வதற்கு இருக்கிறது என்று சொல்லி அன்றைய கதையை எனக்கு விளக்கினாள். கர்ணமோட்சம் கதகளி அது. குந்தி கர்ணனை கண்டு வரங்கள் பெற்றுச்செல்லும் காட்சி.அந்தக்கதையை விரிவாகச்சொன்னாள். கதகளியில் கர்ணனின் கவச குண்டலங்கள், அவன் தந்தையின் தேரும் அவரது சம்மட்டியும், துரியோதனன் கர்ணனுக்கு அளித்த அங்கநாடு போன்ற விஷயங்களைத்தான் நடிகர்கள் பெரிதாக விரிவாக்கம் செய்வார்கள் என்றாள். பல கதகளி நடிகர்கள் அந்தக்காட்சியில் எப்படியெப்படி நடித்திருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அன்று கதகளி மேடையில் பாறசாலை சிவராமன் நாயர் நடித்த கர்ணன் வந்தபோது நான் அவனை ஏற்கனவே அறிந்திருந்தேன் என உணர்ந்தேன். பரிதாபமும் பிரியமும் வழிபாட்டுணர்வும் கலந்த உணர்வெழுச்சிகளினால் என் தொண்டை அடைத்தது. எப்பேற்பட்ட மனிதன். அனைத்து தகுதிகளும் கொண்டவன். பாண்டவருக்கும் கௌரவருக்கும் மூத்தவனாக நாடாள வேண்டியவன். அவமானங்கள் வழியாக வளர்ந்தான். எல்லா அவமானங்களையும் தன் வீரத்தாலும் கொடையாலும் வென்று தலைநிமிர்ந்தான். விதிவசத்தால் அநீதியின்பால் நின்றான்.செஞ்சோற்றுக்கடனுக்காக அநீதியைச் செய்தான். ஏமாற்றப்படுவதை அறிந்தும் தன் பாசத்தால் ஏமாற ஒத்துக்கொண்டான். தீய இயல்பால் அழிந்தவர்கள் உண்டு, தன் நல்லியல்புகளினாலேயே அழிந்தவன் கர்ணன்.

அரங்கில் குந்தி தோன்றினாள். நட்டாலம் திரிலோசனன் நாயர். முதலில் ஒரு மாபெரும் பொம்மைதான் என் கண்ணுக்குத்தெரிந்தது. ஆனால் மெல்லமெல்ல நடிப்புவழியாக அன்னை ஒருத்தியை என் முன் கண்டேன். துயரத்தையே மூச்சாக சுவாசிக்க விதிக்கப்பட்ட அன்னை.  அவமதிப்பை அஞ்சும் இளம்பெண்ணின் அச்சமும் முதல்குழந்தையைப்பெற்ற அன்னையின் பரவசமும் ஒரே சமயம் கொண்டு தவித்தவள். முதல்குழந்தையை கைவிடநேர்ந்தவள். அக்குழந்தை ஆண்மையும் மிடுக்குமாக கண்முன் நிற்பதைக் கண்டு பூரிக்கும் ஆத்மாவும் உருகும் மனதுமாக நிற்பவள். இருபக்கமும் மைந்தர்கள் போடும் போரில் ஐந்து பிள்ளைகளுக்காக ஒரு பிள்ளையை இழக்க முடிவெடுத்துவிட்டதன் உக்கிரமான வலி ஆத்மாவை துடிதுடிக்கச் செய்ய, மேடையில் அவள் நின்று எரிந்துகொண்டிருந்தாள். என்னால் குந்தியைப்பார்க்கவே முடியவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

அந்த நாடகத்தருணம். அதில் சொற்களுக்குப் பொருளே கிடையாது. அங்கே பேசப்பட்ட எந்தச்சொற்களும் அவற்றின் அர்த்தங்களைக் குறிக்கவில்லை. மார்புடன் மகனைத்தழுவி ஒருபேதைப்பெண்ணாக கதறி அழ அன்னையின் உடல் துடித்த்து. கைகள் பலமுறைஎழுந்தன. முடியாமல் சோர்ந்து விழுந்தன. விம்மி எழுந்த  அழுகையை ராஜதந்திரம் மிக்க சொற்களாக மாற்றிக்கொண்டிருந்தாள் அவள். அவனோ அப்படியே அவள் காலில் விழுந்து அழுவதற்கும் அவள் மடியில் தலைவைத்துக்கொள்வதற்கும் துடித்துக்கொண்டிருந்தான். அவன் கைகள் பலமுறை கூப்பி வணங்கின். தோள் பலமுறை பணிந்தது. ஆனால் அவன் அங்கதமும் கசப்பும் நிந்தனையும் நிறைந்த சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். விதியை, தர்மங்களை, அரசர்குலத்து ஆசாரங்களை எள்ளிநகையாடிக்கொண்டிருந்தான். ரத்தம் ரத்தத்தை கண்டுகொண்டது. ஆனால் நடுவே பாவனையால் ஒரு பெரும் சுவரைக் கட்டி வைத்திருந்தது விதி.

பின்னர் அவள் உறுதிகொண்டாள், இந்தமகன் அவளுக்கு இப்பிறவியில் கிடைக்கவே போவதில்லை என. அவனை கைக்குழந்தையாக ஆற்றில் விட்ட அதே மனநிலையில் நின்று இப்போது அவன் உயிரை அவள் காணிக்கையாகக் கேட்டாள். அவன் தெரிந்துகொண்டான், இப்பிறவியில் தனக்கு அன்னைமடி இல்லை என. அவள் கேட்பதே நியாயம், அண்ணனாக அதை வழங்குவதே தன் கடமை என. இரு பெரிய மௌனமலைகளாக இருவரும் ஆனார்கள். அவன் பாண்டவர்களின் உயிரை அன்னைக்கு வாக்களித்தான். அதன் வழி தன் உயிரை இழக்க ஒத்துக்கோண்டான். அப்போது அவன் முகம் கைக்குழந்தையாக இருக்கும் ஐந்து தம்பியரையும் தோளில் ஏற்றிக்கொண்ட அண்ணனைப்போல்  இருந்தது.

ஆனால் நினைத்ததை அடைந்த அவளோ ஏக்கமும் சிறுமையும் தன்னிரக்கமும் கொண்டு குறுகி நின்றாள். நடைபிணம் போல அவனிடம் விடைபெற்றாள். வாழ்க்கையின் குரூரத்தை முழுக்க கண்டவள் அதன் உச்சத்தை அப்போது அறிந்தாள். தர்மத்தின் பாதை வாள்நுனிமீது நடப்பது போன்றதென உணர்ந்தாள். பாசம் என்பது மனிதர்களுக்கு விதி அருந்தத்தரும் கடும் விஷம் என அறிந்தாள். இனி அவளுக்கு ஒன்றுமே மிச்சமில்லை, இந்த மகணின் சிதையைக் கூட்டுவதைத்தவிர. அவனோ அண்ணனாகி விட்ட பூரிப்பில் அவளை வழியனுப்பினான். என்னென்ன சைகைகள்! குந்தியின் இருகைகளும் பொருளுடனும் பொருளில்லாமலும் தன் இருமுலைகளையே காட்டிக்கொண்டிருந்தன. அவனுடைய இருகைகளும் அவனையே அறியாமல், அவளை எள்ளிநகையாடி வசைபாடும்போதுகூட, கூப்பிவணங்கிக்கொண்டிருந்தன. மனித உறவுகளில் இத்தனை உக்கிரமா? இத்தனை பாவனைகளா? இரு எரியும் கனல்கள் மேடையில் நின்றன. இரு உடல்கள் உதிரம் வழியும் ரணங்கள் போல நின்று தவித்தன.

குந்தி விடைபெற்றுக்கிளம்பினாள். அவள் திரும்பிச்செல்லும்போது அவள் முதுகுக்குப்பின்னால் பரிதவிப்புடன் , மன்னனையும் வீரனையும் கணவனையும் கழற்றிப்போட்டுவிட்ட கர்ணன் ஒரு கைக்குழந்தை போல கைநீட்டி ஓடினான். அக்கணம் அவள் திரும்பியிருந்தால் அவள் முலைகள் மீது முகம் அமர்த்தி கதறி அழுதிருப்பான் அந்த மாமன்னன். அவள் ஒரு கணம் கழித்து மனம் பொறாது திரும்பியபோது அவன் தன்னைத்திரட்டிக்கொண்டு வேறுபக்கம் திரும்பிவிட்டிருந்தன். பின்னால் கைநீட்டி ‘சென்றுவருக’ என்று சைகை செய்தான். அவள் உடலே ஒரு பெரிய நாக்காக மாறி கூவிக்கதறியது, எனக்கு உலகமே தேவையில்லை மகனே நீ மட்டும் போதும் என. அவள் ஆத்மாவே முலைகளாக மாறி பால் சுரந்தது. கைநீட்டி அவள் தவித்தாலும் ஒரு அடி எடுத்து முன்னால் வைக்க முடியவில்லை. சோர்ந்து தளர்ந்து அவள் திரும்பிக்கொண்ட அதே கணம் ஓசையே இல்லாமல் அம்மா என்று கதறியபடி கர்ணன் அவளைத் திரும்பிப்பார்த்தான்.

மீண்டும் மீண்டும் அந்த நாடகம் அங்கே நடந்தது. மாறி மாறி இருவரும் தவித்தார்கள்.தவன் திரும்புகையில் அவள் பார்த்தாள். அவன் அவ்ளை நோக்கி அழும்போது அவள் திரும்பிவிட்டிருந்தாள். ஒரு கணம் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தால் மகாபாரதப்போரே நடந்திருக்காது.பேரழிவுகள் நடந்திருக்காது. ஆனால் அது நிகழவில்லை. இரு தவிக்கும் ஆத்மாக்களின் நடுவே விஸ்வரூபனாகிய விதி வந்து நின்று அவர்களைப் பிய்த்து இருபக்கமாக தள்ளுவதைக் கண்டேன். மானுட இனத்தை வைத்துச் சதுரங்கமாடி வரலாற்றை நிகழ்த்தும் பெருநியதியை ஒரு பத்தடிக்குப் பத்தடி மேடையில் கண்கூடாகக் கண்டேன். என் நெஞ்சைப்பற்றியபடி விம்மிக்கொண்டே இருந்தேன்.

கடைசியில் குந்தி மெல்ல இருளில் மறைந்தாள். அந்தக்கணம் கர்ணன் உடலில் வந்து அழுத்திய அந்த எடையை அந்த உடலசைவு மூலம் கண்டு நான் தளர்ந்து பாட்டியின் மடியில் சரிந்தேன். அக்கணம் கர்ணன் மொத்த மகாபாரதத்தையும் கண்டுவிட்டான் போர்களை, பேரழிவை! அந்த போரை நிகழ்த்தும் விதியின் பேருருவத்தை! அலையடங்கும் தன் நெஞ்சுக்கு ஆறுதல் கூறியபடி அவன் மேடையில் தளர்ந்து நின்றான். பின்பு மெல்ல அவன் இதழ்கள் விரிந்தன. அவன் முகம் முழுக்க பரவியது கசப்பு கலவாத ஓர் ஏளனம். விதியின் சதுரங்கக்காய் ஒன்று திரும்பி விதியை நோக்கிச் சிரிக்கிறது. இனி அவன் விதியின் அடிமை அல்ல. அவன் விடுதலை பெற்றுவிட்டான். அவன் அதேபுன்னகையுடன் அர்ஜுனனின் அம்புகளை மார்பில் வாங்கிக்கொள்வான்.

ஷேக்ஸ்பியர் என்கிறோம், காளிதாசன் என்கிறோம். அவர்களெல்லாம் என் மரபின் முன் சிறு குழந்தைகள். வாழ்க்கையென்றால் என்னவென்று அறியாத மழலைகள் அவர்கள். இந்த மண்ணில் மரவள்ளிக்கிழங்கும் மீனும் தின்று,  ஓடும்நீரில் குளித்து, அடைக்காயும் வெற்றிலையும் மென்று வாழ்ந்து மறைந்து மண்ணில் உப்பான என் மூதாதையர் அறிந்திருந்தார்கள் வாழ்க்கையை கலை வெல்லும் அந்த தெய்வத்தருணத்தை. அவர்களின் வாரிசு நான். கண்ணீர் வழிய என்னை நான் நான் நான் என உணர்ந்த கணம் அது.

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 21, 2012

தொடர்புடைய பதிவுகள்

தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்

$
0
0

12809708_10209139889043408_6380907163118444746_n

 

1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி அன்று தமிழின் மிக முக்கியமான பதிப்பாளராக இருந்த  ‘அன்னம் –அகரம்’ மீரா நூறு கவிதை தொகுதிகளை வெளியிட்டார். மிகச்சிறிய தொகுதிகள் அவை. ஆனால் தமிழ்க்கவிதை இயக்கத்தில் அந்தத் தொகுதிகள் மிகப்பெரிய பாய்ச்சலை உருவாக்கின.

ஒரே வருடத்தில் வெவ்வேறு தளத்தைச் சேர்ந்த நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரே பதிப்பகம் வெளியிட்டு சந்தைக்குக் கொண்டு வருவதென்பது தமிழ் இலக்கியத்திற்கு மிகப் புதிய செயல். அச்சும் பதிப்பும் வளர்ந்துள்ள இன்றுகூட அது மிக அரிது. அன்று அது ஒரு சாதனை. அதற்கு முன்பு வரை வருடத்திற்கு  மூன்றோ நான்கோ கவிதைத் தொகுதிகள் தான் வெளிவரும். அவையும் இருநூறு பிரதிகளே அச்சிடப்படும் அக்கவிஞரின் நட்பு வட்டாரத்தில் மட்டுமே அவை புழங்கும். கவிதை என்பதே ஒருரகசிய செயல்பாடாக இருந்த காலம் அது.

அகரத்தின் நூறு கவிதை நூல்களில் வானம்பாடிகளின் கவிதைகள் பல இருந்தன.  அன்று முக்கியமான புனைகதை ஆசிரியர்களாக அறியப்பட்டிருந்த வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களின் கவிதைத் தொகுதிகள் இருந்தன. ஆனால் கணிசமான கவிஞர்கள் புதியவர்கள். அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு தமிழின் நூறு கவிஞர்களின் பட்டியலின் இடம் பெறுவதனூடாக சங்க காலம் முதல் தொடர்ந்து வந்த ஒரு பெரிய மரபில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

எண்பத்தைந்தில் இளம் வாசகனாக இருந்த நான் அத்தொகுதிகளை சுந்தர ராமசாமியின் வீட்டிலிருந்து எடுத்து மிகுந்த மனஎழுச்சியுடன் வாசித்ததை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் முற்றிலும் புதிய உலகுக்குள் என்னைக் கொண்டு சென்றன. தமிழ் நவீனக்கவிதையின் வெளிக்குள் நான் நுழைந்தேன்.

அன்று ஓர் அதிர்ச்சி போல என்னை வந்தடைந்த தொகுதி விக்கிரமாதித்யனின் ஆகாயம் நீல நிறம். இன்று கூட என் நூலகத்தில் இருக்கும் அச்சிறிய தொகுதியை எடுத்துப்பார்க்கையில் பல கவிதைகளீல் ஒரு பண்பாட்டுச்சூழலில் எழுந்து வரும் புதிய படைப்பாளி ஒருவனின் வீரியத்தைக் காண முடிகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒன்று சொல்லத்தோன்றுகிறது முதன்மையான படைப்பாளி என்றால் அவனுடைய முதல் நூலிலேயே அவன் யாரென்று தெரிந்துவிடும். எழுதி எழுதித் தேர்ந்த படைப்பாளி என்று எவரும் இல்லை. அவன் படைப்பு முழுமையாக வெளிப்படுவதற்கான மொழிப்பயிற்சியை ஒருவேளை ஓரிரு நூல்களுக்குள் அடைந்திருக்கக்கூடும் அவ்வளவுதான்.

விக்கிரமாதித்யன் கவிதைகளில் மிக முக்கியமான படைப்புகள் ஆகாயம் நீல நிறம் என்ற தொகுதியில் உள்ளன. ஆகாயம் நீல நிறம் என்ற கவிதையே ஒரு உதாரணம்.  ‘தட்சிணாமூர்த்தியான… ‘ என்ற கவிதை இன்னொரு உதாரணம். அந்நூலின் பின்னட்டையில் முப்பது வயதாகியும் வேலை தேடும் வேலையிலேயே இருக்கும் விக்கிரமாதித்யன் என்னும் நம்பிராஜன் என்னும் குறிப்பு இருந்தது.  வேலை தேடும் வேலை என்னும் சொல்லாட்சி என்னை மிகவும் தொந்தரவு செய்தது.

1985 லேயே நான் நெல்லையில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் விக்கிரமாதித்யனை நான் நேரில் பார்த்தேன். அதற்கு அகரம் மீரா வந்திருந்தார். அப்போது விக்கிரமாதித்தன் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு பரபரப்புப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். ஓரளவுக்கு கையில் பண ஓட்டத்துடன் இருந்த காலம். கன்னங்கள் சதைப்பற்றுடன் உடல் சற்று வலுவுடன் இருந்தது. நான் விக்கிரமாதித்தன் அண்ணாச்சியை போதையில் இல்லாமல் பார்த்த அபூர்வ தருணங்களில் ஒன்று அது என்று இப்போது தோன்றுகிறது.

அவருக்கே உரித்தான முறையில் ஒவ்வொருவரிடமும் மிகுந்த பணிவுடனும் பிரியத்துடன் சிரிக்கும் விழிகளுடனும் பேசிக் கொண்டிருந்தார். குடிக்காத போது அவர் கண்களின் சிரிப்புக்கும் ராஜமார்த்தாண்டன் கண்களின் சிரிப்புக்கும் இடையே பெரிய ஒற்றுமை உண்டு என்று எனக்குத் தோன்றியது. என் கைகளை பற்றிக் கொண்டு  “என்ன எழுதுகிறாய்?” என்றார். “நான் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை” என்றேன்.   “இல்லை நீ எழுதிக் கொண்டிருக்கிறாய் உன்னைப்பார்த்தாலே தெரிகிறது” என்றார். நான் புன்னகைத்தேன். வேறு எவரெவரோ வந்து கொண்டிருந்தார்கள். அக்கூட்டத்திலிருந்து விடை பெறும்போது விக்கிரமாதித்தனுடன் சொல்லிக் கொண்டு விடை பெற முடியவில்லை.

மீண்டும் நான் அவரை சந்தித்தது 1987 இறுதியில்.பிறகு அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ஒரு அரசியல்சார்ந்த சிறுபத்திரிகையில் விக்கிரமாதித்தனைப்பற்றி ஒரு அறிமுகக்குறிப்பு எழுதியிருந்தேன். கவிதையாலேயே தன்னை விலக்கிக் கொள்ளுதல் விக்கிரமாதித்தனின் இயல்பென்றும், அவ்விலக்கமே அவருடைய கவிதைக்கு அடிப்படையாக அமைகிறது என்றும், அவருடைய ஆளுமையின் தோல்விக்கும் அதுவே காரணமாக அமைவதென்றும் எழுதியிருந்தேன். விக்கிரமாதித்தன் அக்குறிப்பை படித்துவிட்டு கோணங்கியிடம் என் விலாசத்தை தெரிந்துகொண்டு காசர்கோட்டில் என்னைப்பார்க்க வந்திருந்தார்.

1

கோழிக்கோடு வரைக்கும் வந்தவர் நன்றாகக் குடித்தநிலையில் தன் இறுதி உடைமைகளையும் விற்று சட்டையே இல்லாமல் வேட்டி மட்டும் அணிந்தவராக காசர் கோடு தொலைபேசி நிலையத்தில் வந்து எனக்காக காத்திருந்தார். விக்கிரமாதித்தனைப் பார்த்ததும் அன்று நான் அடைந்த படபடப்பை நினைவுகூர்கிறேன். என்னைப்பார்க்க எவரோ வந்திருக்கிறார்கள், சட்டை கூட இல்லாமல் வந்து நின்றிருக்கிறார்கள் என்று தோழர் ஒருவர் என்னிடம் சொன்னபோது நான் முன்பு குடியிருந்த பகுதியைச் சேர்ந்த எவரோ என்று நினைத்தேன். அது ஒரு கடற்கரைப்பகுதி.

வெளியே காத்திருப்பு அறையை அணுகியபோதும் கூட தாடியும் தலைமுடியும் வளர்ந்து வளைந்து மெலிந்திருந்த மனிதரை விக்கிரமாதித்தன் என்று எண்ணக்கூடவில்லை. என்னை நோக்கிச் சிரித்தபடி “நான் விக்கிரமாதித்தன் . நாம பார்த்திருக்கிறோம்” என்றார். முன்பக்கம் பற்கள் உடைந்திருந்ததால் பேச்சு சீறலாக வெளிவந்தது. கண்களைக் கொண்டு மட்டுமே விக்கிரமாதித்தன் என்று அடையாளம் கண்டு கொண்டேன். என் கைகால் பதறத் தொடங்கியது.

அன்று நான் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தேன். அன்று இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதற்கு எதிராக ஒரு கட்டுரையும், தாய் பத்திரிகையில் ஒரு கதையையும் என் பெயரில் நான் எழுதியிருந்தேன்.காலச்சுவடில் வெளிவந்த, [நா. அமுதசாகரன் என்னும் பேரில் ஏசுராஜா எழுதிய]  சிங்கத்தின் நகங்களும் அசோகச்சக்கரமும் என்னும் கட்டுரையை மொழியாக்கம் செய்தேன். ‘போராடும் தமிழ் தேசியம் என்னும் கட்டுரையையும் எழுதினேன். அவை ஜயகேரளம் என்னும் இதழில் வெளியாகின. அவ்விதழ்கள் மேல் உளவுத்துறைச் சோதனை நடந்தது. என் மீது துறைசார்ந்த விசாரணை நடைபெற்றது.

அன்று நான் மணிநேரத்திற்கு இரண்டு ரூபாய் எழுபத்தைந்து பைசா ஊதியம் பெறும் தற்காலிக ஊழியனாக இருந்தேன். ஆகவே வெறும் வாய்வார்த்தையாலேயே என்னை பணி நீக்கம் செய்தனர். என் பெயர் தற்காலிக பணி பெறுபவர்களின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.

அதுவரைக்கும் காசர்கோட்டில் கும்பளா என்னும்  இடத்துக்குச் செல்லும் வழியில் கடலோரமாக ஒரு இஸ்லாமியரின் தனிவீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். கோணங்கி வந்து என்னிடம் விருந்தினராகத் தங்கியிருந்ததெல்லாம் அங்குதான். வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டை காலி செய்துவிட்டு நண்பர்களுடன் சென்று  ’அகதியாக’ தங்கியிருந்தேன். மூன்று மாதங்களாக நண்பர்களே எனக்கு இலவச உணவளித்துக் கொண்டிருந்தார்கள். முற்றிலும் கையில் பணமில்லாமல் இருந்த காலம் அது.

என் அன்னையும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டு ஒருவருடம் ஆகிவிட்டிருந்தது. ஆழமான உள்ளக்கொந்தளிப்பின் நாட்கள் அவை. என் அண்ணா நேசமணி போக்குவரத்தில் வேலை செய்து பயிற்சி நிலையை முடித்தபின் பணிநிரந்தரமாகாது வருமானம் இல்லாமல் ஊரில் இருந்தார். எங்கள் கைவிடப்பட்ட வீட்டில் இருந்த பொருட்களை சிறிது சிறிதாக விற்று அவர் தன் செலவுகளைச் செய்து கொண்டிருந்தார். மொத்ததில் ஒரு கையறுநிலை.

என் நெருக்கமான நண்பனிடம் அண்ணாச்சி என் சொந்த அண்ணா என்று சொல்லி மிகச்சிறிய தொகையை கடன் வாங்கி விக்ரமாதித்தனை அன்று உபசரித்தேன். மூன்று நாட்கள் அவர் என்னுடன் தங்கினார். அவருடைய தோற்றம் காரணமாக எனக்குப் புகலிடம் தந்தவர்களுக்கு அவரை பிடிக்கவில்லை. அந்த வாடகை வீட்டை எடுத்து ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தவர் ஒரு சிரியன் கிறிஸ்தவர். அவர் என்னை அழைத்து  அண்ணாச்சி மேற்கொண்டு இங்கு தங்கக்கூடாது என்று என்னிடம் சொன்னார். அவர் தங்குவாரென்றால் நானும் தங்கக்கூடாது என்று  சொன்னார். எனது புத்தகங்களுடனும் உடைகளுடனும் செல்வதற்கு வேறு இடமிருக்கவில்லை.

அதை மெல்லத்தயங்கி அண்ணாச்சியிடம் சொன்னேன். அவர் அதை புரிந்துகொண்டார். அதைப்போல நிறையப் பார்த்திருந்தார்.  கடன் வாங்கியிருந்த பணத்தை அவருக்களித்தேன். அவர் என்னிடம் விடை பெற்று சென்றார். அவர் சென்ற பின்பு நான் நடந்தே பேக்கல் கோட்டைக்கு சென்று அலை கொந்தளித்த கடலைப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். விக்ரமாதித்யனின் கவிதையான ‘தட்சிணாமூர்த்தியான’ நினைவுக்கு வந்தது

தட்சிணாமூர்த்தியான

 மாமிசம் தின்னாமல்

சுருட்டுப் பிடிக்காமல்

பட்டையடிக்காமல்

படையல் கேட்காமல்

உக்ரம் கொண்டு

சன்னதம் வந்தாடும்

துடியான கருப்பசாமி

இடையில் நெடுங்காலம்

கொடைவராதது பொறாமல்

பதினெட்டாம்படி விட்டிறங்கி

ஊர்ஊராகச் சுற்றியலைந்து

மனிதரும் வாழ்க்கையும்

உலகமும் கண்டுதேறி

அமைதி கவிய

திரும்பி வந்தமரும்

கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்.

 

விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் வாழ்க்கையே இந்த அலைபாய்தல்தான் என இத்தனைநாட்களில் அறிந்திருக்கிறேன். நான் பார்த்த தட்சிணாமூர்த்தி கருப்பசாமியாக மாறிவிட்டிருந்தது. பின்னர் அது மீண்டும் தட்சிணாமூர்த்தியாக ஆகியது. கொஞ்சநாள்தான், மீண்டும் கருப்பசாமி.

நானும் ஓர் அந்நியனாக ஆகிவிட்டது போல் உணர்ந்தேன். உலகம் இரக்கமற்று மனிதர்களை வெளியே தள்ளி கதவடைப்பது என்று எனக்கு அப்போது தெரிந்தது. என்னுடைய கனவுகள் சிறியவை அல்ல. நாடோடியாகவோ அந்நியனாகவோ நான் வாழ்ந்து அவற்றை அடையமுடியாது. விக்கிரமாதித்தன் அண்ணாச்சியின் இயல்புப்படி மிகச்சிறிய கவிதைகள் அவருடையவை. நானோ பெருநாவல்களின் ஆசிரியனாக என்னை கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஊன்றி நிற்கும் காலடி நிலத்தை ஒருபோதும் இழக்கலாகாது என்ற உறுதியை அடைந்தேன்.

திரும்பி வந்து மேலும் நண்பர்களிடம் சிறிய தொகையை கடனாக பெற்றுக் கொண்டு திருச்சூருக்கு சென்றேன். ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பரும் மலையாளக்கவிஞரும் இந்திய உளவுத்துறையில் உயர்பதவி வகித்தவருமாகிய ஒருவர் இருந்தார். அவரிடம் சொல்லி எனது வேலையை திரும்ப அடைவதற்கான அழுத்தத்தை அளித்தேன் நூறு நாற்காலிகளின் கதாநாயகனை தொலைபேசியில் கூப்பிட்டு எனக்காக பேசும்படி செய்தேன். இருபது நாட்களில் மீண்டும் பணி கிடைத்தது. ஒருபோதும் ஒருகையில் உள்ள பிடியை விட்டுவிடக்கூடாதென்று உணர்ந்தேன். உலகியலில் எப்போதும் ஒரு கால் அழுந்த ஊன்றியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இன்றும் என்னை இரண்டாக பகுத்துக் கொண்டிருக்கிறேன் என் கனவுகளும் இலக்கியமும் ஒரு பகுதி முற்றிலும் உலகியல் சார்ந்த இன்னொரு பகுதி. இலக்கியவாதி என்பதினால் என் குடும்பத்திலோ என் வேலையிலோ ஒரு சிறு குறையும் நிகழ நான் அனுமதிப்பதில்லை. அங்கு வெற்றிக்கு மேல் வெற்றி அடையவேண்டும் என்று முயன்றதில்லை. ஆனால் மிகச்சரியானவனாக இருக்கவேண்டுமென்று எண்ணம் கொண்டிருப்பேன் அங்கு நான் அடையும் எந்தச் சஞ்சலமும் எந்தத் தோல்வியும் இங்கே என் எழுத்தை பாதிக்கும் என அறிந்திருக்கிறேன். அங்கே நான் தட்சிணாமூர்த்தி என்பதனால்தான் இங்கே கருப்பசாமி

 

 

தொடர்புடைய பதிவுகள்

எங்கே இருக்கிறீர்கள்?

$
0
0

S

 

எங்கே இருக்கிறீர்கள்? எத்தனை தூரம் தெரிகிறது எங்களை? காலமின்மையின் உயர்மேடையில் அல்லது அடியிலா புதைமணலில்
நின்றபடி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே?

ஒருவேளை கண்ணீருடன். ஒருவேளை புன்னகையுடன். ஒருவேளை வெறுமைப்பார்வையுடன். ஒருவர் கைகளை ஒருவர் பற்றிக்கொண்டு,
ஒரு சொல்கூட பேசாமல்…. எங்கள் சுற்றங்களே, அங்கிருந்தால் அனைத்தும் தெரியும்தானே?

இன்று எங்கள் இல்ல முற்றங்களில் களியாட்டங்கள், விருந்துகள், உபசரிப்புகள். நடனங்கள், பாடல்கள், போதைச்சிரிப்புகள்.ஒருவருக்கொருவர் நாங்கள் சூட்டும் புகழ்மாலைகள். ஆம், நாங்கள் வெற்றிபெற்றவர்கள் அல்லவா?

காலக் கொந்தளிப்பை கடந்துவருதலே வெற்றி என்று அறிந்திருக்கிறோம். கண்களை மூடிக்கொண்டு, எதையும் பொருட்படுத்தாமல், தாண்டியதையெல்லாம் அவ்வப்போதே மறந்து,புழுதிகளை அக்கணங்களிலேயே உதறி, காலடிச்சுவடுகள்கூட மிஞ்சாமல் இக்கரையில் எஞ்சிவிடுதல் மட்டும்தானே வெற்றி? அதைத்தான் இதோ மதுக்கிண்ணங்களாலும் மலர்மாலைகளாலும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

மரணத்துக்கு அப்பாலும் மரணங்கள் உள்ளன. நிராகரிப்பின் மரணம், கைவிடப்படுதலின் மரணம், மறக்கப்படுவதன் மரணம். மரணங்களின் அலைகள் எங்கள் கரைகளில் இருந்து உங்களை தள்ளித்தள்ளிக் கொண்டுசெல்கின்றன. இருண்ட வாள்முனையெனத்தெரியும் முடிவின்மையின் தொடுவானம் நோக்கி.

மிக அருகே நின்றிருக்கிறீர்கள் நீங்கள். உங்கள் மூச்சுக்காற்றை, உங்கள் உலர்ந்த உதடுகள் ஒட்டிப்பிரியும் ஒலியை கேட்க முடிகிற அண்மை. ஆகவேதான் நாங்கள் உரக்கப்பேசுகிறோம் , கெக்கலித்துச் சிரிக்கிறோம். தயவுசெய்து விலகிச் செல்லுங்கள். விரிந்து விரிந்து செல்லும் அந்த இடைவெளியில் நிறையட்டும் உங்கள் அமைதி, எங்கள் மௌனம்.

அதை நிரப்பட்டும் நீங்கள் கடைசியாக எங்கள் பரம்பரைகளுக்கு அளிக்கும் பொதுமன்னிப்பு.

 

[முதற்பிரசுரம் மே17, 2010]

தொடர்புடைய பதிவுகள்

Viewing all 316 articles
Browse latest View live


Latest Images